இந்தியாவின் அடுத்த விராட் கோலி சுப்மன் கில்?
கே.எல் ராகுலின் காயம் காரணமாக அணியில் சேர்க்கப்பட்ட கில் அதன்பிறகு இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடித்தார். பின் தொடர்ச்சியாக ரன்களை குவித்து அசத்தி வருகிறார். யார் இந்த சுப்மன் கில்?
2021 பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் முதல் டெஸ்டில் இந்திய அணியை 36 ரன்களில் சுருட்டி அதிர்ச்சி அளித்தது ஆஸ்திரேலியா அணி. அதன்பிறகு இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்ற இந்தியா, 3 ஆவது டெஸ்ட்டை ட்ரா செய்தாலும், அணிக்கு வீரர்களின் காயம் பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. முக்கிய வீரர்களான அஸ்வின், ஜடேஜா, பும்ரா ஆகியோர் காயம் காரணமாக வெளியேறினர். இருந்தும் இந்திய அணி இளம் வீரர்களை கொண்டு கோப்பையை கைப்பற்றியது. அந்த வெற்றிக்கு மிக முக்கியமானவர் இந்திய அணியின் இளம் ஓபெனர் சுப்மன் கில். அந்த இன்னிங்சில் 90 ரன்கள் அடித்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். கே.எல் ராகுலின் காயம் காரணமாக அணியில் சேர்க்கப்பட்ட கில் அதன்பிறகு இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடித்தார். பின் தொடர்ச்சியாக ரன்களை குவித்து அசத்தி வருகிறார். யார் இந்த சுப்மன் கில் ? அவரின் கிரிக்கெட் பயணம் எப்படி தொடங்கியது? என்பதை பற்றியெல்லாம் இக்கட்டுரையில் காணலாம்.
தந்தை மற்றும் சகோதரியுடன் சுப்மன் கில்
சுப்மன் கில்லின் ஆரம்ப காலம்
செப்டம்பர் 8 , 1999 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாஸிகா நகரில் பிறந்தார் கில். இவரது தந்தை லக்விந்தர் சிங் விவசாயம் செய்து வருகிறார். ஆனால் இவரது தந்தைக்கு கிரிக்கெட்டர் ஆக வேண்டும் என்பது கனவாக இருந்ததாம். அதனாலேயே கில்லை கிரிக்கெட் அகாடெமியில் சேர்த்துள்ளார். கில்லிற்கும் போக போக கிரிக்கெட்டின் மீது ஆர்வம் ஏற்பட ஆரம்பித்துள்ளது. கிரிக்கெட் முன்னேற்றத்திற்காக பஞ்சாபிலுள்ள கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடக்கும் பயிற்சியில் இணைந்தார். தனது 14 வயதில் மாநில அளவிலான விஜய் மெர்ச்சண்ட் U-16 தொடரில் இரட்டை சதம் அடித்தார். அதை தொடர்ந்து மாநில அளவிலான U-16 போட்டியில் 351 ரன்கள் குவித்து தேர்வு குழுவினரின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார்.
சுப்மன் கில்லின் ஆரம்பகால கிரிக்கெட்
கில்லின் முதல்தர போட்டி அறிமுகம்
2016-2017 விஜய் ஹசாரே தொடரில் விதர்பா அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார் சுப்மன் கில். அதில் சொதப்பலாகவே ஆடினார் கில். பிறகு 2017 ஆம் ஆண்டு ரஞ்சி தொடரில் செர்விக்ஸ் அணிக்கு எதிராக 129 ரன்கள் குவித்து முதல்தர போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். பிறகு டியோதார் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் 100* ரன்களும், 2018-2019 ரஞ்சி தொடரில் தமிழ்நாட்டிற்கு எதிராக 268 ரன்களும் அடித்து இந்திய அணியின் கதவை விடாமல் தட்டினார். ஒரே வருடத்தில் முதல்தர போட்டியில் 1000 ரன்கள் கடந்து அசத்தினார்.
டெஸ்ட் - ஓடிஐ - டி20 போட்டிகளில் சதம் அடித்த தருணங்கள்
சர்வதேச தொடக்கம்
2017 ஆம் ஆண்டு இந்திய U-19 அணிக்கு தேர்வானார். அதுமட்டுமில்லாமல் 2018 U-19 உலகக்கோப்பையில் வைஸ் கேப்டனாகவும் செயல்பட்டார். அந்த தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியது. குறிப்பாக 372 ரன்கள் குவித்து இந்திய அணி கோப்பையை வெல்ல உதவினார். 2019 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் தேர்வானாலும் அந்த தொடரில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் 2 ஆவது டெஸ்டில் அறிமுகமான கில் ஆரம்பத்தில் சொதப்பினாலும் 4 ஆவது டெஸ்டில் 90 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு கோப்பையை வெல்ல உதவினார். இங்கிருந்துதான் கில்லின் எழுச்சி ஆரம்பித்தது. நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்டில் சதமும் அடித்து மூன்று ஃபார்மட்டிலும் சதமடித்த 5 ஆவது இந்திய வீரரானார். அதுமட்டுமில்லாமல் 38 இன்னிங்சில் 2000 ரன்களை கடந்த முதல் இந்தியர் என்கிற பெருமைக்கும் சொந்தக்காரரானார்.
சுப்மன் கில் மற்றும் சாரா டெண்டுல்கர் காதல் கிசுகிசு
சச்சினின் மகளுடன் காதலா?
சுப்மன் கில்லும், சச்சின் டெண்டுல்கரின் மகளான சாராவும் காதல் செய்து வருவதாக சமீப காலமாக பல வதந்திகள் பரவி வந்தன. எதனால் அந்த வதந்தி பரவியது என்றால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் ஒரே ஹோட்டலில் இருப்பது போல ஃபோட்டோ வெளியானது. வெளியான ஒரு சில மணி நேரங்களிலேயே இணையவாசிகள் கிசுகிசுக்க ஆரம்பத்தினர். சமூகவலைத்தளத்திலும் அந்த ஃபோட்டோ வேகமாக பரவியது. இந்த விஷயம் வதந்தியாக பேசப்பட்டாலும் இருவருமே வாய் திறக்காமல் இருந்தது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
கொல்கத்தா மற்றும் குஜராத் அணிக்காக விளையாடிய தருணங்கள்
ஐபிஎல்லில் ஆதிக்கம்
U-19 உலகக்கோப்பை முடிந்த கையோடு கொல்கத்தா அணிக்காக ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டார் சுப்மன் கில். 1.8 கோடிக்கு வாங்கிய கொல்கத்தா அணி, ஆரம்ப போட்டிகளில் சுப்மன் கில்லை இறக்கிவிடவில்லை. கடைசி கட்டத்தில் 4 ஆவது, 5 ஆவது ஆளாக களமிறங்கி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார் கில். 3 ஆண்டுகள் விளையாடிய கில், கொல்கத்தா அணியில் பெரிதாக சோபிக்கவில்லை. 2019 ஆம் ஆண்டு சர்வதேச வாய்ப்பு கிடைத்தது. 2022 ஆம் ஆண்டு குஜராத் அணிக்காக ரீட்டைன் செய்யப்பட்டார். ரீட்டைன் செய்யப்பட்ட வருடத்தில் 480 ரன்களும், 2023 ஐபிஎல்லில் 852 ரன்களும் அடித்து அசத்தினார் கில். ஆனால் 2017 ஆம் ஆண்டு விராட் கோலி அடித்த 977 ரன்களை கில் முறியடிப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.