பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இயங்கும் இந்தியாவிலுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்?

இந்தியாவை பொருத்தவரை கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டும் அல்ல, அது ஒரு உணர்வு. மகிழ்ச்சி, ஆர்வம், கோபம், சோகம், ஆரவாரம் என இந்தியர்களின் உணர்வுகளில் கிரிக்கெட் ஒன்றிருக்கிறது. க. அந்த வகையில் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான சர்வதேச கிரிக்கெட் மைதானங்களை கொண்ட நாடும் இந்தியா தான்! அதே போல உலகின் மிகப்பெரிய மற்றும் அதிநவீன வசதிகளைக் கொண்டுள்ள கிரிக்கெட் மைதானமும் இந்தியாவில் தான் இருக்கின்றன. ஆம் இந்த கட்டுரையில் உலகின் மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி மைதானத்தை பற்றி தான் பார்க்க போகிறோம்.

Update:2024-05-28 00:00 IST
Click the Play button to listen to article

இந்தியாவை பொருத்தவரை கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டும் அல்ல, அது ஒரு உணர்வு. மகிழ்ச்சி, ஆர்வம், கோபம், சோகம், ஆரவாரம் என இந்தியர்களின் உணர்வுகளில் கிரிக்கெட் ஒன்றியிருக்கிறது. அந்த வகையில் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான சர்வதேச கிரிக்கெட் மைதானங்களை கொண்ட நாடும் இந்தியாதான்! அதே போல உலகின் மிகப்பெரிய மற்றும் அதிநவீன வசதிகளைக் கொண்டுள்ள கிரிக்கெட் மைதானமும் இந்தியாவில்தான் இருக்கிறது. ஆம் இந்த கட்டுரையில் உலகின் மிகப்பெரிய மைதானமான குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தை பற்றிதான் பார்க்க போகிறோம்.

பழைய பெயர் "மோத்ரா மைதானம்"  (தற்போது "நரேந்திர மோடி மைதானம்") :

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அம்மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான கிரிக்கெட் மைதானம்தான் இந்த மோத்ரா மைதானம். இங்கு பல்வேறு உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்தியாவின் பேட்டிங் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், டெஸ்ட் போட்டிகளில் பத்தாயிரம் ரன்களைக் கடந்தது இங்கேதான். அதேபோல ஹரியானா சிங்கம் கபில்தேவ், நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹேட்லியின் 434 டெஸ்ட் விக்கெட் சாதனையை முறியடித்ததும்கூட இங்கேதான். 1987, 1996, 2011 உலகக் கோப்பைகளின்போது இங்கே போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் 2011ல் காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.


குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான மோத்ரா கிரிக்கெட் மைதானம்

மறுசீரமைப்பு செய்யப்பட்ட மைதானம் :

மோத்ரா மைதானம், 2015ஆம் ஆண்டு இடிக்கப்பட்டு ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் மைதானத்திற்கு நிகராக மறுசீரமைக்கப்பட்டது. சுமார் 800 கோடியில் கட்டப்பட்ட இம்மைதானத்திற்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் அமரும் வகையில் அமைந்துள்ள மைதானத்தில், 11 சென்டர் பிட்ச்கள் உள்ளன. அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப், இந்தியா வந்தபோது இங்கே அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


மறுசீரமைக்கப்பட்டபோது மோத்ரா மைதானம் 

உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் நரேந்திர மோடி மைதானம் :

இந்த வளாகத்தில் 9 பிட்ச்களுடன் கூடிய இரண்டு பயிற்சி மைதானங்களும் உள்ளன. அத்துடன் இரண்டு ஜிம்கள், வாம்-அப் பகுதியுடன் கூடிய 4 ட்ரெஸ்ஸிங் ரூம்களும் இங்கு உள்ளன. கடுமையான மழை பெய்தாலும் 30 நிமிடங்களில் வடியும் வகையில் மைதானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 3டி மினி தியேட்டருடன் கூடிய 55 க்ளப் அவுஸ்களுடன் ஒலிம்பிக் அளவு நீச்சல் குளம், ஜிம்னாஸ்டிக் பயிற்சி களம், ஸ்குவாஷ் கோர்ட் உள்ளிட்டவையும் வளாகத்தில் உள்ளன. கோச்களுக்கு தனியான பகுதிகள் இருக்கின்றன. ஒரே நேரத்தில் 3000 கார்களையும், 10,000 இரு சக்கர வாகனங்களையும் பார்க் செய்யும் வகையில் பெரிய பார்க்கிங் ஏரியாவும் இருக்கின்றது.


மெல்போர்ன் மைதானத்திற்கு நிகரான நரேந்திர மோடி மைதானம் 

மைதானம் எப்படிப்பட்டது?

அதிக பாரம் கொண்ட ரோலர் உருட்டப்பட்டு, பந்து மெதுவாக திரும்பும் வகையில் பிட்ச் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஆரம்பத்தில் மட்டுமே இந்த மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்தது. போகபோக இந்த மைதானம் வேகப்பந்து வீச்சாளருக்கு ஒத்துழைத்தது. தற்போது இந்த மைதானம் பேட்ஸ்மேன்கள் ரன்குவிக்கும் கோட்டையாக மாறியுள்ளது. நட்நதுமுடிந்த ஐபிஎல் தொடரில் கூட ஒவ்வொரு அணியும் சராசரியாக 170 ரன்களுக்கு மேல் இங்கு அடித்தன. அதுமட்டுமில்லாமல் இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த அணியே அதிகமுறை வெற்றி பெற்றுள்ளது.


உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவாக்கப்பட்ட "நரேந்திர மோடி" மைதானம் 

1,30,000 ரசிகர்களை அனுமதிக்கலாம் :

உலகின் பெரிய மைதானமாக நரேந்திர மோடி மைதானம் காணப்படுகிறது. மைதானத்தில் 1,30,000 ரசிகர்கள் அமரலாம். இதையடுத்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் 1,00,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும்வகையில் உள்ளது. இந்தியாவில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் 40,000 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டிகளை கண்டு ரசிக்கலாம். இதற்கு அடுத்ததாக, சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் 33,500 பார்வையாளர்களும், மும்பை வான்கடே மைதானத்தில் 32,000 ரசிகர்களும் அமரலாம்.

நரேந்திர மோடி மைதானம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் :

இந்த மைதானத்துக்கு ஜனவரி 2018ல் அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் கட்டமைப்புகளுக்கு பாப்புலஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிடப்பட்டது. அப்பொழுது உலகின் மிகப்பெரிய மைதானமாக இருந்த மெல்பெர்ன் மைதானத்தை கட்டமைக்க உதவியதும் இந்த பாப்புலஸ் நிறுவனம்தான். இந்தத் திட்டம் பிரதமர் மோடியின் கனவு திட்டமாக இருந்தது. அதனை குஜராத் கிரிக்கெட் வாரியம் செயல்படுத்தியது. மைதானத்தை கட்டிமுடிக்க 700 கோடி செலவானது. அதுமட்டுமில்லாமல் இதற்கு முன் மோத்ரா மைதானத்தில் 54,000 பேர் மட்டுமே அமர்ந்து ஆட்டத்தை ரசிக்க முடியும் என்று இருந்தது. இதனை மேம்படுத்த, குஜராத் கிரிக்கெட் வாரியம் 2016ம் ஆண்டு மைதானத்தை இடித்து சீரமைப்பு கட்டுமான பணியை தொடங்கியது. அதன்பிறகு இந்த மைதானத்தில் 4 பெவிலியன்கள், 50 அறைகள் மற்றும் 76 கார்ப்பரேட் பாக்ஸ்கள், ஒரு நீச்சல்குளம் ஆகியவை கட்டப்பட்டன. 


நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 2023 உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்ற தருணம்  

நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியாவின் புள்ளிவிவரங்கள் (சர்வதேச போட்டிகள் மட்டும்) :

நரேந்திர மோடி மைதானத்தில் இதுவரை 15 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இந்த மைதானத்தில் இந்திய அணி 9 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. 3 போட்டிகள் ட்ரா செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக இலங்கைக்கு எதிராக இந்திய அணி 760/7 ரன்கள் குவித்துள்ளது. அதன்பிறகு இங்கு 20 ஓடிஐ போட்டிகளில் விளையாடிய இந்திய அணி, 14 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. அதிகபட்சமாக இந்திய அணி 365/2 ரன்கள் குவித்திருக்கிறது. அதே நேரத்தில் இங்கு வெறும் 10 டி20 போட்டிகளே நடந்துள்ளன. இதில் இந்திய அணி நியூஸிலாந்திற்கு எதிராக 234/4 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக இருக்கிறது. குறிப்பாக இந்திய அணி ரசிகர்களுக்கு இந்த மைதானம் மறக்க முடியாத அனுபவத்தை தந்துள்ளது. அதில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக்கோப்பை இறுதி போட்டியை யாராலும் மறக்க முடியாது.

நரேந்திர மோடி மைதானத்தை சுற்றும் சர்ச்சைகள் :

நரேந்திர மோடி மைதானம் என்று பெயர் மாற்றம் செய்ததிலிருந்தே இந்த மைதானத்தின் மீது பல சர்ச்சைகள் எழுந்து கொண்டே இருக்கின்றன. முதன்முதலில் இந்த மைதானத்திற்கு சர்தார் வல்லபாய் படேல் மைதானம் என்று பெயர் வைப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில்தான் நரேந்திர மோடி மைதானம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதுமட்டுமில்லாமல் மைதானத்தில் இருக்கும் ஒரு பெவிலியனுக்கு அதானியின் பெயர் சூட்டப்பட்டது. எப்பொழுதும் பெவிலியனிற்கு பிரபல கிரிக்கெட் வீரர்களின் பெயரே சூட்டப்படும். ஆனால் இந்த மைதானத்தின் பெவிலியனுக்கு ஒரு தொழிலதிபரின் பெயர் வைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதுமட்டுமில்லாமல் பல முக்கியமான போட்டிகள் இங்குதான் நடத்தப்படுகின்றன. இதற்கு பின்னணியில் பெரிய அரசியல் இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. உலகக்கோப்பை போட்டிகள் என்றாலும், டெஸ்ட் போட்டிகள் என்றாலும், அத்தொடரின் பெரும்பான்மையான போட்டிகள் இந்த மைதானத்தில்தான் நடத்தப்படுகின்றன. இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த மைதானத்திற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும், மற்ற மைதானங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்