கோலி, ரோஹித் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா ஓய்வு! சாதனை படைக்குமா இளம் இந்திய கிரிக்கெட் அணி?

டி20 உலகக்கோப்பையை இரண்டாவது முறையாக வென்று சாதனை படைத்த இந்திய அணி அடுத்ததாக ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி ஜூலை 6ஆம் தேதி ஹராரேவில் தொடங்குகிறது. தொடர்ந்து ஜூலை 7, 10, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மற்ற நான்கு டி20 கிரிக்கெட் போட்டிகளும் நடைபெற உள்ளன. இதில் பல இளம் வீரர்கள் இந்திய அணியில் அறிமுகமாக காத்திருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய ஜாம்பவான்கள் விராட் கோஹ்லி, ரோஹித் ஷர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா அவர்களின் இடத்தை நிரப்புவதற்கு மாற்று வீரர்களை இப்பொழுது தேர்வு செய்ய வேண்டும்.

Update: 2024-07-08 18:30 GMT
Click the Play button to listen to article

டி20 உலகக்கோப்பையை இரண்டாவது முறையாக வென்று சாதனை படைத்த இந்திய அணி, அடுத்ததாக ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், முதலாவது போட்டி கடந்த 6ஆம் தேதியும், இரண்டாவது போட்டி 7ஆம் தேதியும் நடைபெற்றன. வரும் 14-ம் தேதிவரை போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பல இளம் வீரர்கள் இந்திய அணியில் அறிமுகமாகியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய ஜாம்பவான்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் இடத்தை நிரப்புவதற்கு மாற்று வீரர்களை இப்பொழுது தேர்வு செய்ய வேண்டும். அதற்கு இந்த ஜிம்பாப்வே தொடர் அடித்தளமாக இருக்கும் என நம்பப்படுகிறது. 


சீனியர் பிளேயர்கள் இல்லாத இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சுப்மன் கில் 

புதிய கேப்டன் சுப்மன் கில் :

ஜஸ்பிரீத் பும்ரா, அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் எதிர்பாராதவிதமாக இந்திய அணியின் இளம் ஒப்பனர் சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சன்தான் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது, இந்திய அணி ரசிகர்களை சற்று ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ஏனென்றால் இதற்குமுன் ஐபிஎல்-லில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்திய சுப்மன் கில், சிறப்பாக செயல்படவில்லை. அதனால் தீடீரென்று இவரை கேப்டனாக நியமித்திருப்பது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.


ரோஹித், கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணி விளையாடும் முதல் டி20 போட்டி

களமிறங்கியது இளம் இந்தியா :

டி20 உலகக்கோப்பை தொடரில் 17 ஆண்டுகளுக்கு பின் சாம்பியனான இந்திய அணி, அதே குஷியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக களமிறங்கியுள்ளது. இந்த நிலையில் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார். ரோஹித், கோலி மற்றும் முன்னணி வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணி விளையாடும் முதல் டி20 போட்டி இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அனுபவம் வாய்ந்த வீரர்களோடு களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்களை சேர்த்தது. கடைசி நேரத்தில் மடான்டே அதிரடியாக 4 பவுண்டரிகளை விளாசி கவுரவ இலக்கை எட்ட காரணமாக அமைந்தார். சிறப்பாக பந்துவீசி ரவி பிஷ்னாய் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்பின் இந்திய அணி 116 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது.


ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சொதப்பிய இந்திய அணி 

அதிர்ச்சி கொடுத்த ஜிம்பாப்வே :

116 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, அறிமுக வீரர் அபிஷேக் சர்மா - கேப்டன் சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தனர். ஜிம்பாப்வே அணி தரப்பில் முதல் ஓவரை பிரையன் பென்னட் வீசினார். முதல் 3 பந்துகளை ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் வீசிய பென்னட், 4வது பந்தை லெந்தை மாற்றி உடலை நோக்கி வீசினார். இதனால் முதல் சிக்சரை அடிக்கும் ஆசையில் அபிஷேக் சர்மா பந்தை தூக்கியடிக்க, அது நேராக மசகட்ஷா கைகளில் சென்று விழுந்தது. இதனால் அறிமுகப் போட்டியிலேயே அபிஷேக் சர்மா டக் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து சுப்மன் கில் - ருதுராஜ் கெய்க்வாட் கூட்டணி இணைந்தது. ருதுராஜ் கெய்க்வாட் ஒரு பவுண்டரி அடித்திருந்த நிலையில், முசாரபாணி வீசிய ஸ்விங்கை அடிக்கலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் பேட்டை வீசினார். அது நேராக ஸ்லிப் திசையில் நின்ற கையா கைகளில் சென்றது. இதனால் ருதுராஜ் 7 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த அறிமுக வீரர் ரியான் பராக் சட்டாரா பவுலிங்கில் 2 ரன்களிலும், ரிங்கு சிங் டக் அவுட்டாகியும் வெளியேறினர். கண்மூடி திறப்பதற்குள் இந்திய அணி 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியிலேயே சொதப்பியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


முதல் போட்டியில் அபார வெற்றியை பெற்ற ஜிம்பாப்வே அணி 

முதல் போட்டியில் வென்ற ஜிம்பாப்வே :

ஆரம்பத்தில் இருந்து போராடிய கேப்டன் சுப்மன் கில் 31 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் இந்திய ரசிகர்களின் நம்பிக்கையும் சுக்குநூறாகியது. இதனால் உற்சாகமடைந்த ஜிம்பாப்வே ரசிகர்கள் ஒவ்வொரு டாட் பாலுக்கும் கோஷம் எழுப்பி கொண்டாடினர். பின்னர் வந்த ரவி பிஷ்னாய் 9 ரன்களில் ஆட்டமிழக்க, வாஷிங்டன் சுந்தர் - ஆவேஷ் கான் கூட்டணி சிறிது நேரம் தாக்கு பிடித்தது. வாஷிங்டன் சுந்தர் நிதானம் காட்டிய போது, ஆவேஷ் கான் அதிரடியில் இறங்கினார். மசகட்ஷா வீசிய 16வது ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசிய ஆவேஷ் கான், ஃபுல் டாஸ் பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று 16 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த முகேஷ் குமார் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் இந்திய அணி 86 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி 18 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது. அடுத்த 2 ஓவர்களில் 14 ரன்கள் சேர்க்கப்பட, கடைசி 6 பந்தில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரின் முதல் 4 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட, இந்திய அணியின் தோல்வி உறுதியானது. 5வது பந்தில் வாஷிங்டன் சுந்தர் 27 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி 102 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் மூலமாக ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் முதல் போட்டியில் அபார வெற்றியை பெற்றது. 


இரண்டாவது போட்டியில் 46 பந்துகளில் 100 ரன்கள் அடித்து அசத்திய இந்திய வீரர் அபிஷேக் சர்மா 

அதிரடி காட்டிய இந்திய அணி :

முதல் ஆட்டத்தின் தோல்வி எதிரொலியாக, டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது இந்தியா. அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் அபிஷேக் ஷர்மா களம் இறங்கினார்கள். இதில் 4 பந்துகளுக்கு மட்டுமே களத்தில் நின்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 2 ரன்களில் நடையைக் கட்டினார். இவரின் விக்கெட்டை தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்தார் ருதுராஜ் கெய்க்வாட். மறுபுறம் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய அபிஷேக் ஷர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துகளை சிக்ஸரும் பவுண்டரியுமாக பறக்கவிட்டார். அதன்படி மொத்தம் 7 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் விளாசி 46 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து தன்னுடைய சதத்தை பதிவு செய்தார். இதனைத்தொடர்ந்து அடுத்த பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார். களத்தில் நின்ற ருதுராஜ் கெய்க்வாட்டுடன் ஜோடி சேர்ந்தார் ரிங்கு சிங். இவர்கள் இருவரும் அருமையான பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினார்கள். இவ்வாறாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்தது. கடைசி வரை களத்தில் நின்ற ருதுராஜ் கெய்க்வாட், 47 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உட்பட 77 ரன்கள் எடுத்தார். அதேபோல் ரிங்கு சிங் 22 பந்துகள் ஆடி, 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை விளாசினார். 


இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 

தொடரை சமன் செய்த இந்தியா :

235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் இன்னசெண்ட் கையா 4 ரன்களில் நடையைக் கட்டினார். அதன்பிறகு வெஸ்லியுடன் ஜோடி சேர்ந்தார் பிரையன் பென்னட். இவர்களது ஜோடி அதிரடியாக விளையாடி ஜிம்பாப்வே அணிக்கு வேகமாக ரன்களை சேர்த்தது. அந்தவகையில் பிரையன் பென்னட் 9 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை விளாசி 26 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதனை தொடர்ந்து அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா 4 ரன்களில் நடையைக்கட்டினார். பின்னர் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் 18.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களை மட்டுமே எடுத்தது ஜிம்பாப்வே . இதன் மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தொடரை தற்போது 1-1 என்று சமன் செய்திருக்கிறது. அடுத்த போட்டியில் ஜிம்பாப்வே கடும் போட்டி தரும் என்பதால் இந்த தொடர் இன்னும் சூடு பிடிக்கும். கத்துக்குட்டி அணி என்று அனைவராலும் ஜிம்பாப்வே அணி கூறப்பட்டாலும் இந்தியாவை முதல் போட்டியில் தோற்கடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆதலால் ஜிம்பாப்வே அணியை வென்று இந்திய அணி சாதனை படைக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags:    

மேலும் செய்திகள்