வினேஷ் போகத் உடல் எடை அதிகரிக்க யார் காரணம்? - வேண்டுமென்றே பழிதீர்க்கப்பட்டாரா?

அரையிறுதிக்குப் பிறகு அவரது உடல் எடை 52 கிலோ ஆனதாகவும் அதைக் குறைக்க இரவு முழுவதும் செய்த உழைப்பு பலனளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Update: 2024-08-12 18:30 GMT
Click the Play button to listen to article

எல்லோருக்குமே தன்னை நிரூபிக்க வெற்றி மிகவும் அவசியமானதாக இருக்கிறது. ஆனால் சிலருக்கு எளிதாக கிட்டும் வெற்றி, சிலருக்கு எவ்வளவு போராடினாலும் கிடைப்பதில்லை. அப்படித்தான், வலிமிகுந்த நீண்ட போராட்டத்திற்கு பின்னும் வினேஷ் போகத்திற்கு அந்த வெற்றி சாத்தியமாகவில்லை. பாரிஸ் ஒலிம்பிக் தொடர் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியப் பெண் என்ற சாதனையை வினேஷ் போகத் படைத்திருந்தார். அதுமட்டுமில்லாமல் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் களமிறங்கிய வினேஷ் போகத், ஒரே நாளில் 3 போட்டிகளை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார். இதனால் தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்துடன் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதி போட்டி நடைபெறவிருந்த காலை, அவரின் உடல் எடையை அளவிடும்போது, அனுமதிக்கப்பட்ட வரம்பைவிட 100 கிராம் அதிகமாக இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். எடையை குறைக்க இந்திய குழு கூடுதல் அவகாசம் கேட்டது. ஆனால் வினேஷ் போகத்தால் எடையைக் குறைக்க முடியவில்லை. எனவே அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து மொத்த இந்தியாவுமே வினேஷ் போகத்தின் பக்கம் நின்று அவருக்கு ஆறுதல் சொல்லியது. இருந்தும் வினேஷ் போகத் உடல் எடை அதிகரிக்க யார் காரணம்? வேண்டுமென்றே அவர் பழிதீர்க்கப்பட்டாரா? போன்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன.


அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேவை வீழ்த்திய வினேஷ் போகத் 

வினேஷ் போகத்தின் சாதனை

காமன்வெல்த் போட்டிகளில் 3 தங்கம், உலக சாம்பியன்ஷிப் தொடரில் ஒரு வெண்கலம், ஆசியப் போட்டிகளில் ஒரு தங்கம் மற்றும் சாம்பியன் பட்டம் என்று சாதனை படைத்தவர்தான் வினேஷ் போகத். கடந்த 18 மாதங்களில் ஏராளமான போராட்டங்களை சந்தித்த வினேஷ் போகத், ஒலிம்பிக் பதக்கம் வெல்வதில் தீவிரமாக இருந்தார். அதன் விளைவே தொடர்ச்சியாக வெற்றி பெற்று இறுதி போட்டிவரை முன்னேறினார்.

முன்னதாக, ஒலிம்பிக் மல்யுத்தத்தில் நடைபெற்ற பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன் மோதினார் இந்தியாவின் வினேஷ் போகத். முதல் நிமிடத்திலேயே வினேஷின் ஆக்ரோஷமான ஆட்டத்தால் நிலை தடுமாறிய யூஸ்னிலிஸ் எந்த ஸ்கோரும் எடுக்கவில்லை. பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஒலிம்பிக் மல்யுத்த அரையிறுதியில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் வினேஷ் போகத். இதன் மூலம், வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததுடன், ஒலிம்பில் மல்யுத்த மகளிர் பிரிவின் இறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். இதில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால் யூஸ்னிலிஸ் குஸ்மேன் இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட தோற்றதில்லை. முதல் முறையாக வினேஷ் போகத்திடம்தான் தோற்றார்.


தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தகுதி நீக்க அறிவிப்பு வெளியான நொடி 

இடியாய் இறங்கிய தகுதி நீக்க அறிவிப்பு 

50 கிலோ எடை பிரிவில் இறுதி போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத்துக்கு, அன்றைய போட்டிக்கு முன்பு இந்திய நேரப்படி காலை 9 மணியளவில் எடை தகுதி சோதனை செய்யப்பட்டது. அப்போது அவர் 50 கிலோ மற்றும் 100 கிராம் எடை இருந்தார். நிர்ணயித்த 50 கிலோவைவிட 100 கிராம் எடை அதிகம் இருந்ததால் வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக கமிட்டி அறிவித்தது. இதனால் பெண்களுக்கான 50 கிலோ எடை பிரிவில் அமெரிக்க வீராங்கனைக்கு தங்கப்பதக்கம் சென்றது. போட்டியின்றி அவர் தங்கப்பதக்கத்திற்கு தேர்வானார்.

உடல் எடையை குறைக்க, உணவை தவிர்த்து, நீர் ஆகாரமும் இல்லாமல், இரவு முழுவதும் கண்விழித்து உடற்பயிற்சி செய்து, உடலில் இருந்து அனுமதிக்கப்பட்ட அளவுக்கு ரத்தத்தை வெளியேற்றி, தலை முடியையும் வெட்டி வீசினார் வினேஷ் போகத். தன்னை வருத்தி மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் பயன் அளிக்காத நிலையில், தகுதி நீக்கம் என்ற அறிவிப்பு வினேஷ் போகத்தின் தலையில் இடியாய் இறங்கியது.


தகுதி நீக்க அறிவிப்பால் உடைந்து அழுத வினேஷ் போகத்

உடல் எடை அதிகரிக்க யார் காரணம்?

ஒட்டுமொத்த நாடும் தங்கப் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்த்த நிலையில், அதிக எடை காரணமாக வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட செய்தி, நமக்கே அவ்வளவு வருத்தத்தை தந்த நிலையில், அதனை தாங்கும் வலிமையை கடவுள்தான் அவருக்கு தர வேண்டும் என்று இந்திய ஒலிம்பிக் சம்மேளன தலைவர் சஞ்சய் சிங் கூறியுள்ளார்.

வினேஷ் போகத்தின் உடல் எடைக்கு அவரது பயிற்சியாளர் மற்றும் உதவியாளர்களே முழு பொறுப்பு என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். வினேஷ் போகத்தின் உடல் எடை எவ்வாறு அதிகரித்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், பயிற்சியாளர் மற்றும் உதவியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசை சஞ்சய் சிங் கேட்டுக்கொண்டுள்ளார். 


பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரிஜ் பூஷனுக்கு எதிராக வினேஷ் போகத் போராடிய தருணம்

பிரிஜ் பூஷன் சிங்கினால் பாதிக்கபட்ட வினேஷ் போகத்

2023-ஆம் ஆண்டு மல்யுத்த வீரர்களுக்கு கருப்பு ஆண்டு என்றுதான் சொல்லவேண்டும். பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான "பிரிஜ் பூஷன் சிங்" மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக சாக்ஷி மாலிக் உள்ளிட்ட 6 மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி இருந்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்தனர். இதையடுத்து, டெல்லி போலீசார் பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.

அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், “இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர், பல மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இன்று இந்த உண்மையை நான் வெளியே சொல்கிறேன். ஆனால், நாளை நான் உயிருடன் இருப்பேனா, இல்லையா என்பது தெரியாது. என்னுடன் அமர்ந்திருக்கும் சில மல்யுத்த வீராங்கனைகளும் இந்த கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். நாங்கள் எங்களுக்காக போராடவில்லை. மல்யுத்தத்தை காப்பாற்ற போராடுகிறோம். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரால் நான் மனரீதியாக துன்புறுத்தப்பட்டேன். எனக்கு தற்கொலை எண்ணம் வர ஆரம்பித்தது. பிரிஜ் பூஷன், நான்கு முறை எம்.பி.யாக இருந்துள்ளார். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். அவர் மீது புகார் வரும்போதெல்லாம் நேராக சென்றால் கொலைமிரட்டல் விடுக்கப்படுகிறது. அதேபோல், பயிற்சியாளர்கள் எங்களை தினமும் சித்திரவதை செய்கிறார்கள். பயிற்சியாளரின் அனுமதி இல்லாமல் மல்யுத்த வீரர்கள் தண்ணீர் கூட குடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார். வினேஷ் போகத்தின் அப்போதைய இந்த பேட்டி, தற்போதைய தகுதி நீக்க சூழலில் நிறைய கேள்விகளை எழுப்பியுள்ளது.


அரையிறுதியில் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியபோது 

வினேஷ் போகத்தின் வெளியேற்றத்தில் இருக்கும் அரசியல்

பாரிஸ் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவில் வினேஷ் போகத் ஃபைனலுக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்து இருந்தார். தகுதி சோதனையில், நிர்ணயித்த 50 கிலோவைவிட 100 கிராம் எடை அதிகம் இருந்ததால், வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. முந்தைய நாள் நடைபெற்ற மூன்று போட்டிகளின்போதும் எடை சரியாக இருந்திருக்கிறது. இன்று மட்டும் 100 கிராம் எடை கூடியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது. பயிற்சியாளர் குறித்தும் இப்போட்டியில் அவர் சந்தேகம் எழுப்பி இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன என்பது குறித்து மக்கள் கேட்கும் கேள்விகள் நியாயமானவை. கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்திற்கு விடப்பட்ட சவாலாகத்தான் இதனைப்பார்க்க வேண்டி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் வினேஷ் போகத்தின் கடந்த கால அரசியல் போராட்டங்களை மனதில் கொண்டு பழிவாங்கப்பட்டிருக்கிறார் என்று மக்கள் பேசுவதற்குப் பதில் அளிக்கும் வகையில் இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் நெறியாளர்கள், பயிற்சியாளர்கள் மீது வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இதுபோன்ற திறமைசாலிகள் ஒருபோதும் புறக்கணிக்கப்படக் கூடாது. வினேஷ் போகத் ஒலிம்பிக் பதக்கத்தைத் தவற விட்டிருந்தாலும் மக்கள் மனங்களைவென்று இருக்கிறார் என்பது நிதர்சனமான உண்மை” என அதில் தெரிவித்துள்ளார்.


வலிமையுடன் மீண்டு வாருங்கள் - பிரதமர் ஆறுதல்

பிரதமர் மோடி ஆறுதல்

வினேஷ் போகத் தகுதி நீக்கம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “வினேஷ் நீங்கள் சாம்பியன்களுக்கெல்லாம் சாம்பியன். நீங்கள் இந்தியாவின் பெருமிதம். ஒவ்வொரு இந்தியருக்குமான உத்வேக அடையாளம் நீங்கள். இந்த பின்னடைவு வலியைத் தருகிறது. நான் அனுபவிக்கும் விரக்தியை வார்த்தைகளால் விவரிக்க முயற்சிக்கிறேன். அதேவேளையில், நீங்கள் மீண்டெழுதலின் அடையாளம். சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளுதல் எப்போதுமே உங்களது இயல்பாக இருந்துள்ளது. வலிமையுடன் மீண்டு வாருங்கள். உங்களுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம்” என்று பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்