கிரிக்கெட் உலகின் எதிரிகள்! இந்தியா-பாகிஸ்தான் மோதிக்கொண்ட விறுவிறுப்பான T20 உலகக்கோப்பை போட்டிகள்!
உலகில் எந்த அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடந்தாலும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுவதை போல் இருக்காது. கிரிக்கெட் போட்டியை விரும்பாதவர்கள் கூட இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதினால் டிவி முன் அமர்ந்து பார்ப்பார். அந்த அளவிற்கு இரு அணிகள் மோதும் போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கும். அப்படி 2007 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடந்து வரும் T20 உலகக்கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் பல போட்டிகளில் மோதியுள்ளன
உலகில் எந்த அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடந்தாலும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுவதை போல் இருக்காது. கிரிக்கெட் போட்டியை விரும்பாதவர்கள்கூட இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதினால் டிவி முன் அமர்ந்து பார்ப்பார்கள். அந்த அளவிற்கு இரு அணிகளும் மோதும் போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கும். அப்படி 2007 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடந்து வரும் T20 உலகக்கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் பல போட்டிகளில் மோதியுள்ளன. இதுவரை 7 போட்டிகளில் நேருக்கு நேர் களம் கண்டுள்ளன. இதில் இந்தியா 5 போட்டிகளிலும், பாகிஸ்தான் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி, இம்முறை T20 உலகக்கோப்பையிலும் ஆதிக்கம் செலுத்துமா? இதுவரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன? என்பது குறித்தெல்லாம் இந்த கட்டுரையில் விரிவாக காணலாம்.
இந்திய கிரிக்கெட் அணி முதல் டி20 உலகக்கோப்பையை வென்றபொழுது
2007 T20 உலகக்கோப்பை
முதல்முறையாக T20 போட்டிகளுக்கான உலகக்கோப்பை 2007 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பலரும் எதிர்பார்த்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி தென் ஆப்ரிக்காவின் டர்பன் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் குவித்தது. அதிகபட்ச ரன்னாக, ராபின் உத்தப்பா 50 ரன்கள் அடித்தார். அதன்பின் களமிறங்கிய பாகிஸ்தானும் 141 ரன்கள் குவித்தது. இதனால் போட்டி ட்ரா ஆனது. வெற்றியை முடிவு செய்வதற்கு போட்டி, பௌல் அவுட் முறைக்கு சென்றது. பௌல் அவுட் முறையில் 5 பந்துகளில் 3 விக்கெட் எடுத்து பாகிஸ்தான் அணியை இந்தியா தோற்கடித்தது. T20 உலகக்கோப்பை வரலாற்றில் மிகச்சிறந்த போட்டிகளில் ஒன்றாக இன்றளவும் இது இருக்கிறது. அதன்பிறகு இறுதி போட்டியில் இரு அணிகளும் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் குவித்தது. அதன்பிறகு களமிறங்கிய பாகிஸ்தான் அணி கடைசி பந்துவரை வெற்றிக்கு போராடியது. 1 பந்தில் 2 ரன்கள் தேவை என்கிற நிலைமையில் ஸ்ரீசாந்த்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் பாகிஸ்தான் வீரர் மிஸ்பா உல்-ஹக். இந்தியா தனது முதல் T20 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது.
2012 T20 உலகக்கோப்பையில் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்ற விராட் கோஹ்லி
2012 T20 உலகக்கோப்பை
2009, 2010 உலகக்கோப்பையில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதிக்கொள்ளவில்லை. இரண்டு வருடங்களுக்கு பிறகு 2012 ஆம் ஆண்டு இலங்கையின் கொழும்பிலுள்ள பிரேமதாச மைதானத்தில் இரு அணிகளும் சந்தித்தன. இரண்டு வருடங்கள் கழித்து இரு அணிகளும் மோதி கொள்வதால் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் இந்த போட்டிக்கு காத்திருந்தனர். டாஸ் வென்று இந்திய அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி தட்டு தடுமாறி 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அந்த அணியின் ஷோயிப் மாலிக் 28 ரன்கள் அடித்தார். அதன்பின் களமிறங்கிய இந்திய அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக விராட் கோஹ்லி 78 ரன்கள் அடித்தார். அதுமட்டுமில்லாமல் ஆட்டநாயகன் விருதையும் அவர் தட்டிச்சென்றார்.
2014 போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான் அணி
2014 T20 உலகக்கோப்பை
முதல் முறையாக பங்களாதேஷில் T20 உலகக்கோப்பை நடத்தப்பட்டது. இந்தியாவில் பாகிஸ்தான் விளையாட தடை விதிக்கப்பட்ட பிறகு இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் முதல் ஆட்டம் இதுவாகும். பரபரப்பாக ஆரம்பித்த இந்த ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் அணி பேட் செய்தது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி திணறியது. இறுதியில் 7 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்களில் பாகிஸ்தான் சுருண்டது. அதன்பின் களமிறங்கிய இந்திய அணி 18.3 ஓவர்களில் 130 ரன்னை சேஸ் செய்தது. ஆட்டநாயகனாக சிறப்பாக பந்துவீசிய அமித் மிஸ்ரா விருதை தட்டி சென்றார்.
2016 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது ஆதிக்கத்தை காட்டிய விராட் கோஹ்லி
2016 T20 உலகக்கோப்பை
இந்தியாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று இந்திய அணி பௌலிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான், எப்பொழுதும் போல இந்திய அணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. 20 ஓவரின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு களமிறங்கிய இந்திய அணி, பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை முழுவதும் துவம்சம் செய்தது. 15.4 ஓவர்களில் எளிதாக இலக்கை சேஸ் செய்தது. இந்த முறையும் விராட் கோஹ்லி பாகிஸ்தானுக்கு எதிராக தனது ஆதிக்கத்தை காட்டினார். 34 பந்துகளில் 55 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார்.
முதன்முறையாக T20 உலகக்கோப்பையில் 2021-ல் இந்திய அணியை தோற்கடித்த பாகிஸ்தான்
2021 T20 உலகக்கோப்பை
2018 ஆம் ஆண்டு இரு அணிகளும் மோதிக்கொள்ளவில்லை. கொரோனா தொற்றுக்கு பிறகு இரு அணிகளும் 2021 உலகக்கோப்பையில் யுஏஇ-ல் சந்தித்தன. இம்முறையும் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்த்த நிலையில், இந்திய அணி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. டாஸ் வென்று பாகிஸ்தான் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோஹ்லி 57 ரன்கள் அடித்தார். அதன்பிறகு களமிறங்கிய பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 151 ரன்னை 17 ஓவர்களில் சேஸ் செய்து அசத்தியது. அதிகபட்சமாக பாகிஸ்தானின் முகமத் ரிஸ்வான் 79 ரன்கள் குவித்தார். முதன்முறையாக T20 உலகக்கோப்பையில் இந்திய அணியை தோற்கடித்து சாதனை படைத்தது பாகிஸ்தான்.
2022 T20 உலகக்கோப்பையில் தனி ஆளாக நின்று இந்திய அணியை வெற்றி பெற வைத்த விராட் கோஹ்லி
2022 T20 உலகக்கோப்பை
உலகக்கோப்பை வரலாற்றில் மிகசிறந்த ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்த ஆட்டமும் ஒன்று. முதலில் டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்தது இந்திய அணி. சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, பாகிஸ்தானை 151 ரன்களில் சுருட்டியது. அதன்பின் களமிறங்கிய இந்திய அணியும் ஆரம்பத்தில் தடுமாறியது. ஆனால் தனி ஆளாக நின்று இந்திய அணியை வெற்றி பெற வைத்தார் விராட் கோஹ்லி. 85 ரன்கள் குவித்து தன் மீது அப்பொழுது விழுந்த அனைத்து விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். குறிப்பாக ஹாரிஸ் ராபின் பந்தை நேராக சிக்ஸர் அடித்து அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். பல சுவாரஸ்யங்கள் இந்த ஆட்டத்தில் நடந்தன. ஹர்திக் பாண்டியாவின் அற்புதமான கம்பேக் மற்றும் அஷ்வினின் புத்திசாலித்தனமான ஆட்டம் என்று இந்திய அணி ரசிகர்களுக்கு இந்த ஆட்டம் விருந்தாக அமைந்தது என்றே சொல்லலாம்.