இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஓப்பனரின் விளையாட்டு முடிவுக்கு வந்தது!

இந்திய அணியின் தலைசிறந்த தொடக்க ஆட்டக்கார்களில் ஷிகர் தவானும் ஒருவர் களத்திலோ அல்லது வெளியிலோ, ஷிகர் தவான் அணியினருடன் பழகும் விதத்தில் எப்போதும் எளிமை இருக்கும் . பேட்டிங்கில் கிரீசுக்குல் இருந்தால் அதிரடியாக ஆடுவர் , எப்பொழுதும் அணியின் ரன்ரேட்டை சீராக வைத்திருப்பார்.

Update:2024-08-27 00:00 IST
Click the Play button to listen to article

இந்திய அணியின் தலைசிறந்த தொடக்க ஆட்டக்கார்களில் ஷிகர் தவானும் ஒருவர். களத்திலோ அல்லது வெளியிலோ, ஷிகர் தவான் அணியினருடன் பழகும் விதத்தில் எப்போதும் எளிமை இருக்கும் . பேட்டிங்கில் கிரீசுக்குள் இருந்தால் அதிரடியாக ஆடுவார். எப்பொழுதும் அணியின் ரன்ரேட்டை சீராக வைத்திருப்பார். 38 வயதான முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரரும், 50 ஓவர் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு அவ்வப்போது கேப்டனாக இருந்தவருமான ஷிகர் தவான், சமூக ஊடக வீடியோ மூலம் கடந்த 24-ம் தேதி (24.08.24) காலை தனது ஓய்வை அறிவித்தார். இத்தொகுப்பில் ஷிகர் தவானின் வாழ்க்கை வரலாறு குறித்தும், அவர் கடந்துவந்த பாதை குறித்தும் காணலாம்.


 பயிற்சியாளர் தாரக் சின்ஹா மற்றும் ஷிகர் தவான் 

தவானின் ஆரம்பகால கிரிக்கெட் :

ஷிகர் தவான் சுனைனா மற்றும் மகேந்திர பால் தவான் ஆகியோருக்கு டிசம்பர் 5, 1985-ஆம் ஆண்டு, இந்திய தலைநகர் டெல்லியில் பிறந்தார். டெல்லி மீராபாக்கில் உள்ள செயின்ட் மார்க்ஸ் சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளியில் தனது கல்வியை முடித்தார். தவானின் 12 வயது முதல், தொழில்முறை கிரிக்கெட் பயிற்சியாளரான தாரக் சின்ஹா, சோனட் கிளப்பில் அவருக்கு பயிற்சி அளித்தார். தவான் முதலில் அணியில் சேர்ந்தபோது விக்கெட் கீப்பராகதான் இருந்தார். அதன்பிறகு முதன்முதலில் 1999-2000 விஜய் மெர்ச்சன்ட் டிராபியில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான டெல்லி அணியில் விளையாடினார், மேலும் 2000-01 விஜய் மெர்ச்சன்ட் டிராபியில் அதிக ரன்கள் எடுத்தவர் என்கிற பெருமைக்கு சொந்தகாரர் ஆனார். இந்த தொடரில் டெல்லி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. 2000-01ல் U-17 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் தவான் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக ஆடினார். அவர் விளையாடிய போட்டிகளில் மூன்று ஆட்டங்களில் 85 சராசரியுடன் தனது திறமையை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தினார்.



U-17 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் தவான்

U-19 இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட தவான் :

2002-ஆம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற கூச் பெஹார் டிராபியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான டெல்லி அணிக்காக விளையாட தவான் மீண்டும் ஒருமுறை தேர்வு செய்யப்பட்டார். அந்த போட்டியில் ​​அவர் 8 இன்னிங்ஸ்களில் 55.42 சராசரியில் இரண்டு சதங்கள் உட்பட 388 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு 2004-ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்தியாவிற்காக அறிமுகமாகி, அந்த தொடரில்  505 ரன்களை குவித்தார் தவான். இதன்மூலம் அந்ததொடரில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற பெயரையும் பெற்றார். 84.16 சராசரி ரன்கள், மூன்று சதங்கள், ஒரு அரைசதம் என தவான் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டு ஜனவரியில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளில் 69, 18 மற்றும் 41 ரன்கள் எடுத்தார்.


ரஞ்சி டிராபியில் ஆந்திராவுக்கு எதிராக டெல்லி அணியில் அறிமுகமானபோது

முதல்தர போட்டிகளில் சாதனை :

2004-05 ஆண்டுக்கான ரஞ்சி டிராபி சீசனில், ஆந்திராவுக்கு எதிராக டெல்லி அணிக்காக தவான் தனது முதல் தர போட்டியில் அறிமுகமானார். தனது தொடக்க இன்னிங்ஸில் 49 ரன்கள் எடுத்தார். 6 போட்டிகளில் விளையாடி மொத்தம் 461 ரன்களுடன், அந்த ரஞ்சி சீசனில் டெல்லியின் சிறந்த ரன் சேர்ப்பாளராக இருந்தார். மேலும் அஜய் ஜடேஜா மற்றும் ஆகாஷ் சோப்ரா போன்ற அனுபவமிக்க வீரர்களையும் அப்போது மிஞ்சினார். பிப்ரவரியில், சேலஞ்சர் டிராபியில் பங்கேற்கும் இந்திய சீனியர்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். எம்எஸ் தோனியுடன் இந்தியா பி அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடினார். அந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா வருகை தந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான 50 ஓவர் போட்டியில் பங்கேற்க இந்தியா ஏ அணியால் தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு 2005-06 சேலஞ்சர் டிராபியில் தவான் இந்தியா B அணிக்காக விளையாடினார். அங்கு அவரது பேட்டிங் செயல்திறன் குறைவாக இருந்தது. ஆனால் 2006-ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அபுதாபியில் நடைபெற்ற இந்தியா ஏ, அயர்லாந்து ஏ, நெதர்லாந்து ஏ, பாகிஸ்தான் ஏ மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான 50 ஓவர் போட்டியான யூரேசியா கிரிக்கெட் தொடரில், தவான் இந்தியா ஏ அணிக்காக விளையாடினார். 3 அரைசதம் உட்பட 72 சராசரியில் 5 போட்டிகளில் 288 ரன்கள் எடுத்து அசத்தினார். அதன்பிறகு டெல்லி வென்ற 2007-2008 ரஞ்சி டிராபி சீசனில், தவான் 8 போட்டிகளில் 200 ரன்கள் உட்பட 43.84 சராசரியில் 570 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு வந்த துலீப் டிராபியில் அவர் வடக்கு மண்டலத்திற்காக மூன்று ஆட்டங்களில் விளையாடினார். அதில் சராசரியாக ஒரு ஆட்டத்திற்கு 42.25 புள்ளிகளும், 2008ல் நடந்த விஜய் ஹசாரே டிராபியில் (முன்பு ரஞ்சி ஒருநாள் டிராபி என அழைக்கப்பட்டது) 6 போட்டிகளில் 97.25 சராசரியுடனும், 200 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 389 ரன்களைக் குவித்தார். போட்டியில் இரண்டாவது அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பெருமையையும் அவர் பிடித்தார். இருப்பினும், மார்ச் மாதம் நடந்த தியோதர் டிராபியில் வடக்கு மண்டலத்திற்காக 0, 1, மற்றும் 5 என்ற ஸ்கோரைப் பதிவு செய்தபோது தவான் தனது ஃபார்மை இழந்தார். செப்டம்பரில் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ அணிக்காக நடந்த நான்கு நாள் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட தவறினார்.


சர்வதேச தொடர்களில் அசத்திய ஷிகர் தவான் 

சர்வதேச போட்டிகளில் அறிமுகம் :

2010-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 14 பேர் கொண்ட இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார் தவான். மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் ஒரு டி20 சுற்றுப்பயணத்திற்காக இந்திய அணி கடந்த ஜூன் 2011-ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சென்றது. இந்தியாவின் வழக்கமான 50 ஓவர்கள் தொடக்க ஆட்டக்காரர்களான சேவாக் மற்றும் கம்பீர் ஆகியோர் தோள்பட்டை காயங்களால் பயணிக்க முடியவில்லை. அந்த நேரத்தில் டெண்டுல்கர், உலகக்கோப்பை வெற்றி மற்றும் ஐபிஎல்லைத் தொடர்ந்து ஓய்வுக்கு தயாரானார். இந்த சூழலில், முந்தைய உள்நாட்டு சீசனில் தவான் மோசமான செயல்திறனை வெளிப்படுத்தியிருந்த போதிலும், ஐபிஎல்லின் போது அவர் தனது ஃபார்மிற்கு வந்ததால், தவானை 50 ஓவர்கள் அணிக்கு தேர்வாளர்கள் தேர்வு செய்தனர். 2012-13 உள்நாட்டுப் பருவத்தில் நிலையான வேலைகளைச் செய்த பின்னர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய டெஸ்ட் அணிக்கு பிப்ரவரி 2013ல் தவான் அழைக்கப்பட்டார். இதுவரை 34 டெஸ்டுகளில் விளையாடி 2315 ரன்களும், 142 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5977 ரன்களும், 65 டி20 போட்டிகளில் 1673 ரன்களும் அடித்து சாதனை படைத்திருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்