துவண்ட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி - இந்தியாவின் செயலால் நெகிழ்ந்த நாடுகள்!

எங்கிருந்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் எழுச்சி தொடங்கியது? எப்படி கிரிக்கெட் உலகில் கால் தடம்பதித்தது? என்பதை பற்றியெல்லாம் இக்கட்டுரையில் காணலாம்.

Update:2023-11-07 00:00 IST
Click the Play button to listen to article

பல போர்கள், உள்நாட்டு பிரச்சினைகள், தாலிபான்களின் ஆக்கிரமிப்பு, நிலநடுக்கம் என்று தினம் தினம் பல பிரச்சினைகளை சந்தித்துக்கொண்டு வருகிறது ஆப்கானிஸ்தான். இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியில் 2023 ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் விளையாட வந்துள்ளது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி. தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் செயல்பாடுதான். ஓடிஐ போட்டிகளில் முன்னணி அணிகளை வீழ்த்தி டாப் 8 அணிகளில் இடம்பிடித்து நேரடியாக உலகக் கோப்பைக்கு சென்றது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி. இதன் மூலம் கிரிக்கெட் உலகில் தாங்கள் கத்துக்குட்டி அணியில்லை என்பதை நிரூபித்திருக்கிறது ஆப்கானிஸ்தான் அணி. எந்த ஒரு பெரியத் தொடரிலும் சோபிக்காத ஆப்கானிஸ்தான் அணி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2023 கிரிக்கெட் உலகக்கோப்பையில் முன்னாள் சாம்பியன்களான இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகளை தோற்கடித்து புள்ளிப்பட்டியலில் வலுவான இடத்தில் இருக்கிறது. எங்கிருந்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் எழுச்சி தொடங்கியது? எப்படி கிரிக்கெட் உலகில் கால் தடம்பதித்தது? என்பதை பற்றியெல்லாம் இக்கட்டுரையில் காணலாம்.


பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அறிமுகம்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்த அளவிற்கு வளர்ந்ததற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும் மிகப்பெரிய பங்குண்டு. 1995 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் உருவாக்கப்பட்டதுதான் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம். அங்கு முதல் தர போட்டியில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி, பின்பு 2001 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் சேர்ந்த பிறகு தனியாக பல சர்வதேசப் போட்டிகளில் விளையாடத் தொடங்கியது. அதன்பிறகு 2003 ஆம் ஆண்டு ஆசிய கிரிக்கெட் வாரியத்தில் இணைந்தது. தொடர்ச்சியாக ACC டிராபி, சேலஞ்சர்ஸ் டிராபி மற்றும் வெளிநாடுகளில் பல முதல்தர போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தது. 2010 ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிப்பயணம் தொடங்கியது.


ஆப்கானிஸ்தானின் முதல் வெற்றி 

T20-ஐ போட்டிகளில் அறிமுகம்

2010 ஆம் ஆண்டு தனது முதல் சர்வதேச T20-ஐ போட்டியில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி, தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை சந்தித்தது. ஆனால் ஆவலுடன் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 5 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்திடம் தோற்றது ஆப்கானிஸ்தான். ஆனால் அந்த தோல்விக்கு பிறகுதான் ஆப்கானிஸ்தான் அணியின் எழுச்சித் தொடங்கியது. அதன்பின் தொடர்ச்சியாக சின்ன சின்ன அணிகளுடன் மோத ஆரம்பித்து 2010 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை தகுதிச்சுற்றுக்கு தயாரானது. வெஸ்ட் இண்டீஸில் நடந்த இந்த தகுதிச்சுற்றில் இறுதி போட்டிவரை முன்னேறி அசத்தியது ஆப்கானிஸ்தான் அணி. இறுதிப்போட்டியிலும் தனது முதல் T20 சர்வதேசப் போட்டியில் விளையாடிய அயர்லாந்துடன் மோதியது. இந்தப் போட்டியில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் வென்றது ஆப்கானிஸ்தான் அணி. இங்கிருந்துதான்ஆப்கானிஸ்தான் அணியின் எழுச்சி ஆரம்பித்தது.


உலகக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான்

ஓடிஐ அந்தஸ்து பெற்ற ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி

2010 ஆம் ஆண்டு T20 கிரிக்கெட் உலகக் கோப்பைக்குப் பிறகு இந்தியாவில் நடந்த 2011 ஆம் ஆண்டிற்கான ஓடிஐ கிரிக்கெட் உலகக் கோப்பையில் பங்கேற்றது ஆப்கானிஸ்தான் அணி. தகுதிச்சுற்றில் பல முன்னணி அசோஸியேட் அணிகளுடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி தகுதிச்சுற்றோடு வெளியேறியது. இந்த தகுதிச்சுற்றில் ஸ்காட்லாந்து அணியை மட்டும் வீழ்த்தி ஆறுதல் அளித்தது. ஆனால் இன்னொரு நல்ல விஷயமும் இந்த தகுதிச்சுற்றில் நடந்தது. அது என்னவென்றால் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஓடிஐ அந்தஸ்து பெற்றது. அதன் தொடர்ச்சியாக அசோஸியேட் அணிகளான ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு நாடு, நேபால் மற்றும் ஸ்காட்லாந்து நாடுகளுடன் ஓடிஐ போட்டிகளில் விளையாட ஆரம்பித்தது. பின் தொடர்ச்சியாக வெற்றிபெற்று 2015 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் விளையாடியது. ஆசியா கண்டத்திலிருந்து மிகச்சிறந்த அசோஸியேட் அணி என்கிற அந்தஸ்துடன் களமிறங்கியது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி. 2015 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பைக்கு சென்றுவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் முதல் ரவுண்டிலே தோற்று தகுதிச்சுற்றிலிருந்து வெளியேறியது. இருந்தாலும் 2013-2015 ஆண்டிற்கு இடையில் T20-ஐ போட்டிகளில் மிக சிறப்பாக செயல்பட்டிருந்தது ஆப்கானிஸ்தான் அணி.


பிசிசிஐ ஆப்கானிஸ்தானுக்கு கொடுத்த மைதானங்கள்

கை கொடுத்த இந்தியா

ஆப்கானிஸ்தான் நாட்டில் பல போர்கள் மற்றும் உள்நாட்டு பிரச்சினைகளால் அங்கு சர்வதேசப் போட்டிகளும் மற்றும் முதல்தர போட்டிகளும் நடத்தமுடியாத சூழல் நிலவியது. அதுமட்டுமில்லாமல் பல நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் விளையாட தயங்கின. சில மாதங்களாக ஆப்கானிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் விளையாட முடியாமல் இருந்தது. இதனால் பல பொருளாதார பிரச்சினைகளையும் சந்தித்தது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம். இந்த பிரச்சினைகளை அறிந்த பிசிசிஐ ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு உதவ முன்வந்தது. இந்தியாவிலுள்ள லக்னோ, நொய்டா மற்றும் டேராடூன் நகரிலுள்ள மைதானங்களை இரண்டாவது ஹோம் கிரவுண்டாக ஆப்கானிஸ்தான் அணிக்கு கொடுத்தது. இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணியின் கிரிக்கெட் பயணம் மீண்டும் துவங்கியது. அதுமட்டுமில்லாமல் பிசிசிஐ-இன் இந்த செயலை பல நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் பாராட்டின. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி பல போட்டிகளை அந்த மூன்று நகரிலுள்ள மைதானங்களில் நடத்தியது. போக போக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஹோம் கிரவுண்டாகவே இந்தியா மாறியது.


முதல் டெஸ்ட் போட்டியில்...

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆப்கானிஸ்தான்

ஓடிஐ மற்றும் T-20 போட்டிகளில் மாறி மாறி விளையாடி வந்த ஆப்கானிஸ்தான் அணி, 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அயர்லாந்து அணியுடன் இணைந்து டெஸ்ட் அந்தஸ்தை பெற்றது. அதன்பின் 2018 ஆம் ஆண்டு ஜூலை 22 அன்று இந்தியாவுடன் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அந்த டெஸ்ட் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான இந்திய அணியுடன் மோதியது. இதில் இந்திய அணி 262 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக ஷிகர் தவான் 122 ரன்களும், முரளி விஜய் 109 ரன்களும் அடித்தனர். ஆனால் ஆப்கானிஸ்தான் அணியின் முதல் டெஸ்ட் போட்டி என்பதால் இந்திய கேப்டன் அஜிங்கியா ரஹானே ஆப்கானிஸ்தான் அணியுடன் கோப்பையை பகிர்ந்துகொண்டார். இது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதன்பிறகு முதன்முறையாக பங்களாதேஷ் அணியுடனான போட்டியில்தான் வெற்றிபெற்றது ஆப்கானிஸ்தான் அணி. அந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தானின் ரஹ்மத் ஷா முதல் சதத்தை அடித்தார். பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான ரஷீத் கான் 11 விக்கெட்டுகளை அள்ளினார். அதன்பிறகு 2019 உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்று அசத்திய ஆப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பையில் ஒரு வெற்றியைக்கூட ருசி பார்க்காமல் நாடு திரும்பியது.


இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானை ஆப்கானிஸ்தான் அணி தோற்கடித்த தருணங்கள்

அரையிறுதிக்கு முன்னேறுமா ஆப்கானிஸ்தான்

2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆப்கானிஸ்தான் அணி மிக சிறப்பாக செயல்பட்டது. குறிப்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தூண்களான ரஷீத் கான், முகமத் நபி, முஜீப் சட்ரான் மற்றும் ரஹ்மத் ஷா உள்ளிட்டோர் பல தொடர்களை வென்று கொடுத்து புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடம் பிடித்து நேரடியாக 2023 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்றது. அதே உத்வேகத்தோடு உலகக் கோப்பையில் நுழைந்த ஆப்கானிஸ்தான் அணி, தற்போதைய சாம்பியனான இங்கிலாந்தை துவம்சம் செய்தது. அதோடு நிற்காமல் முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான் மற்றும் இலங்கையை வென்று புதிய சாதனை படைத்தது. தற்போது அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் ஆப்கானிஸ்தான் அணி இந்த முறை உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags:    

மேலும் செய்திகள்