இந்தியாவின் அடுத்த கங்குலி யஷஸ்வி ஜெய்ஸ்வால்? - இளம் கிரிக்கெட்டர் குறித்த சுவாரஸ்ய கட்டுரை

ஒரு கட்டத்தில் அந்த இடமும் இவருக்கு மறுக்கப்பட யாருமற்ற அந்த பெரும் நகரத்தில் தனியாய் தவித்திருக்கிறார் ஜெய்ஸ்வால். இவரது நிலை அறிந்து மும்பையிலுள்ள ஒரு இஸ்லாமிய கிளப் இவருக்கு டென்ட் கொடுத்துள்ளது.

Update: 2024-02-12 18:30 GMT
Click the Play button to listen to article

இந்திய மக்களை பொருத்தவரையில் கிரிக்கெட் என்பது அவர்களது வாழ்வோடு கலந்து விட்ட ஓர் விஷயமாகவே இருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிரிக்கெட் பற்றியும், அதை விளையாடும் வீரர்களைப் பற்றியும் தங்களுக்கென்ற ஓர் அபிப்ராயத்தை வைத்துக் கொண்டு அதில் அளவுக்கு அதிகமான ஆர்வத்தை செலுத்தி வருகிறார்கள். இந்திய அணியில் சேர வேண்டும் என்கிற பெரும் கனவோடு ஏராளமான வீரர்கள் தொடர்ந்து வாய்ப்புக்காக போராடி வருகிறார்கள். அப்படி பெருங்கனவோடு பல இடையூறுகளை கடந்து இன்றைக்கு இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் ஒரு வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். தன்னுடைய இந்த லட்சியக் கனவை அடைவதற்கு ஜெய்ஷ்வால் பல தியாகங்களை செய்திருக்கிறார். குட்டி கங்குலியைப் போல காட்சியளிக்கும் ஜெய்ஸ்வால் ஏறக்குறைய கங்குலி எதிரணியினருக்கு எந்தளவுக்கு பயத்தை கொடுப்பாரோ அதே அளவுக்கான பயத்தை கொடுத்திருந்தார். ஐ.பி.எல் எனும் பெரும் வெளிச்சத்தில் இன்று மிளிரும் ஜெய்ஸ்வாலின் பின்னணி அத்தனை பிரகாசமானது கிடையாது. இந்த இடத்தை அவர் அடைய கடந்து வந்த பாதை கரடு முரடானது. மிகவும் எளிமையான பின்னணியிலிருந்து வந்த ஜெய்ஸ்வால், கிடைக்கும் வாய்ப்புகளை உறுதியாக பற்றிக்கொண்டு தன்னம்பிக்கையுடனும் பெரும் உந்துதலுடனும் இந்த இடத்திற்கு வந்துள்ளார். அவரது கிரிக்கெட் பயணத்தை பற்றியும், சாதனைகளை பற்றியும், இந்த கட்டுரையில் காணலாம்.


ஜெய்ஸ்வாலின் குடும்பம் மற்றும் ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கை

ஜெய்ஸ்வாலின் ஆரம்பகாலம்

28 டிசம்பர் 2001 அன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பதோஹியில் சூரியவான் என்ற ஊரில் பிறந்தார். இவர் பிறக்கும்பொழுது இவரின் தந்தை பூபேந்திர ஜெய்ஸ்வால் ஒரு சிறிய ஹார்டுவேர் கடையை நடத்தி வந்துள்ளார். இவரது தாயார் கஞ்சன் ஜெய்ஸ்வால். இத்தம்பதியினருக்கு ஆறு குழந்தைகளில் நான்காவது குழந்தையாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் பிறந்தார். உத்தரப்பிரதேசத்திலிருந்து ஜெய்ஸ்வாலின் குடும்பம் அவரது தந்தையின் வேலை நிமித்தமாக மும்பைக்கு குடிபெயர்ந்தது. மும்பை வந்திறங்கிய ஜெய்ஸ்வாலுக்கு மும்பை முதலில் காட்டியது வறுமையைத்தான். கிரிக்கெட்டில் ஆர்வமாக இருந்த ஜெய்ஸ்வால் பானிபூரி கடையில் வேலை பார்த்து கொண்டே தனது கிரிக்கெட் பயிற்சியையும் தொடர்ந்து வந்தார். கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் மும்பையில் கிரிக்கெட் கனவுடன் அதற்குரிய வேலைகளுடனேயே சுற்றியிருக்கிறார். வறுமையின் உச்சத்தால் மீண்டும் இவரது குடும்பம் ஜெய்ஸ்வாலை மட்டும் மும்பையில் அவரது மாமா வீட்டில் தங்கசொல்லிவிட்டு உத்தரப்பிரதேசத்திற்கே சென்றது. ஆரம்பத்தில் மாமா வீட்டில் தங்கிவந்த ஜெய்ஸ்வால் அங்கு அவர்களுக்கு தொந்தரவாக இருப்பதாக எண்ணி அங்கிருந்து வெளியில் சென்றார். தங்குவதற்கு கூட வழியின்றி நடைபாதையில் உறங்கியிருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த இடமும் இவருக்கு மறுக்கப்பட யாருமற்ற அந்த பெரும் நகரத்தில் தனியாய் தவித்திருக்கிறார் ஜெய்ஸ்வால். இவரது நிலை அறிந்து மும்பையிலுள்ள ஒரு இஸ்லாமிய கிளப் இவருக்கு டென்ட் கொடுத்துள்ளது. பிறகு சிறு சிறு தொழில் செய்து தனது கிரிக்கெட் பயிற்சியை தொடர்ந்துள்ளார் ஜெய்ஸ்வால்.


பயிற்சியாளர் ஜ்வாலா சிங்குடன் மற்றும் ஆரம்பகால முதல்தர போட்டிகளில்...

உள்ளூர் தொடர்களில் அசத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால்

இவரது கிரிக்கெட் திறமையை பயிற்சியாளர் ஜ்வாலா சிங் கண்டறிந்தார். மும்பையில் உள்ள இவர் நடத்தும் கிரிக்கெட் அகாடமியில்தான் ஜெய்ஸ்வால் எனும் வைரம் பட்டை தீட்டப்பட்டது. ஜ்வாலா சிங், தனது பராமரிப்பின் கீழ் பயிற்சி கொடுத்ததுடன் தங்குவதற்கான இடத்தையும் வழங்கியுள்ளார். ஜ்வாலா சிங், இந்த சிறுவனுக்கு கிரிக்கெட் வழிகாட்டியாக மாறினார். ஜெய்ஸ்வால், முதன்முதலில் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கில்ஸ் ஷீல்ட் போட்டியில் 319 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும், இதே போட்டியில் 99 ரன்களை விட்டுக் கொடுத்து 13 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினார். ஆல்-ரவுண்டராக இவர் படைத்த இச்சாதனை, லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றது. பிறகு இவர், 16 வயதிற்குட்பட்ட மும்பை அணியில் சேர்க்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டு, ஜனவரி 7 ஆம் தேதியன்று 2018-19 ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக தனது முதல் அறிமுகப் போட்டியில் விளையாடினார். அதே 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பை தொடரிலும் மும்பை அணிக்காக விளையாடினார். இதில் ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 154 பந்துகளில் 203 ரன்கள் அடித்து வியக்கவைத்தார். இதன் மூலம், இரட்டை சதம் அடித்த இளம் கிரிக்கெட் வீரர் என்கிற சாதனையை படைத்தார். 2019-20 ஆண்டுக்கான தியோதர் டிராஃபி தொடரில் இந்தியா B அணியில் இடம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


U-19 உலகக்கோப்பை மற்றும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய தருணங்கள்

U-19 உலகக்கோப்பையும், ஐபிஎல் அறிமுகமும்

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற U-19 உலகக் கோப்பை தொடரில் விளையாடினார். இந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் சதம் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். உலகக்கோப்பை தொடரில் கலக்கிய இவருக்கு ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பும் கிடைத்தது. 2020 ஐபிஎல் ஏலத்தில் 2.40 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது. முதன் முதலில் முன்மொழியப்பட்ட அடிப்படை விலையை விட 12 மடங்கு அதிகமான விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டார். நான் நீ என்று அனைத்து அணிகளும் போட்டி போட்டு இறுதியில் ராஜஸ்தான் அணி 2.40 கோடி ரூபாய்க்கு யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஏலத்தில் எடுத்தது. செப்டம்பர் 22ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அறிமுக வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கினார். ஆனால் இந்த தொடரில் பெரிதாக சோபிக்கவில்லை. 2020 ஐபிஎல் தொடரில் வெறும் 3 போட்டியில் மட்டுமே களமிறங்கி 40 ரன்கள் அடித்தார். பிறகு 2021 ஐபிஎல் தொடரில் அதே விலைக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்டார். இந்தத் தொடரில் 10 போட்டிகளில் களமிறங்கி 249 ரன்கள் அடித்தார். இவரின் சிறப்பான ஆட்டம் 2022 ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்தது. 2022 ஐபிஎல் ஏலத்தில் 4 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியே வாங்கியது. இத்தொடரிலும் தனது சிறந்த பங்களிப்பை அணிக்கு வழங்கினார். இதில் 10 போட்டிகளில் விளையாடிய இவர், 258 ரன்களை எடுத்திருந்தார். அதன்பிறகு 2023 ஐபிஎல் சீசனில் இவர் எடுத்த விஸ்வரூபம் வேறு. 14 ஆட்டங்களில் 625 ரன்கள் அடித்தார். இதில் இரண்டு சதங்களும் அடங்கும். பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு  எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.


சர்வதேச இந்திய டெஸ்ட் போட்டிகள் மற்றும் டி20 அணிகளில் விளையாடியபோது

சர்வதேச தொடக்கம்

2023 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். முதல் போட்டியிலேயே 179 ரன்கள் குவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். பிறகு அவர் விளையாடும் ஒவ்வொரு தொடரிலும் தனது தனித்துவத்தை காட்டி வருகிறார். தற்போது இங்கிலாந்திற்கு எதிராக நடந்து வரும் தொடரிலும் இரட்டை சதமடித்து அசத்தியிருக்கிறார். அதன்படி குறைந்த வயதில் அதிக டெஸ்ட் சதங்களை பதிவுசெய்த வீரர்கள் பட்டியலில் சுனில் கவாஸ்கருக்கு (4 சதங்கள்) அடுத்த இடத்தை யஷஸ்வின் ஜெய்ஸ்வால் (2 சதங்கள்) பிடித்துள்ளார். மேலும் 22 வயதிற்குள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சதமடித்த வீரர்கள் பட்டியலிலும் யஷஸ்வி ஜெஸ்ய்வால் இடம்பிடித்துள்ளார். இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 637 ரன்கள் எடுத்து, சராசரி 57.90 என வைத்துள்ளார். 17 T20 போட்டிகளில் விளையாடி 502 ரன்கள் குவித்திருக்கிறார். தொடர்ந்து சர்வதேச உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியில் ஷிகர் தவானின் இடத்தை நிரப்புவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags:    

மேலும் செய்திகள்