பாகிஸ்தானை வொயிட் வாஷ் செய்த வங்கதேசம்! அடுத்த இலக்கு இந்தியா?
முன்னணி அணிகளுக்கு அடிக்கடி அதிர்ச்சி அளிக்கக்கூடிய அணிகளில் வங்கதேசம் அணி மிகவும் முக்கியமான அணியாகும். அந்த அணி தற்போது பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தள்ளது. வங்கதேசம், பாகிஸ்தானை டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் முழுமையாக வீழ்த்தியுள்ளது. பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் டெஸ்டில் இவ்வளவு பெரிய தோல்வியைத் தழுவியது இதுவே முதல் முறை. வங்கதேசம் முதல் முறையாக ஒரு ஆசிய அணியை அதன் சொந்த மண்ணில் முழுமையாக வீழ்த்தியுள்ளது. இந்தத் தோல்வியை பாகிஸ்தானும், உலக கிரிக்கெட் ரசிகர்களும் இன்னும் பல ஆண்டுகளுக்கு நினைவில் வைத்திருப்பார்கள்.
சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணி அணிகளுக்கு அடிக்கடி அதிர்ச்சி அளிக்கக்கூடிய அணிகளில் வங்கதேசம் மிகவும் முக்கியமான அணியாகும். அந்த அணி தற்போது பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. பாகிஸ்தானை டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் முழுமையாக வீழ்த்தியுள்ளது. பாகிஸ்தான் அதன் சொந்த மண்ணில் டெஸ்டில் இவ்வளவு பெரிய தோல்வியைத் தழுவியது இதுவே முதல் முறை. வங்கதேசம் முதல் முறையாக ஒரு ஆசிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியதும் இதுவே முதல்முறை. இந்தத் தோல்வியை பாகிஸ்தானும், உலக கிரிக்கெட் ரசிகர்களும் இன்னும் பல ஆண்டுகளுக்கு நினைவில் வைத்திருப்பார்கள்.
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேசம் அணி
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேசம்
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேசம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. இரு அணிகளும் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நிலையில் முதல் முறையாக வங்கதேசம் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் தோற்றதன் மூலமாக பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் முதல் முறையாக தோற்றது. இதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது.
வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹஸன் மற்றும் முஷ்பிகுர் ரஹ்மான்
மழையால் தாமதமாக தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் :
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 30ஆம் தேதி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. ஆனால் மழை காரணமாக இப்போட்டியின் முதல் நாள் ஆட்டமானது முழுவதுமாக கைவிடப்பட்டது. இதையடுத்து தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியானது, முதல் இன்னிங்ஸில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக சைம் அயூப் 58 ரன்களையும், கேப்டன் ஷான் மசூத் 57 ரன்களையும், அகா சல்மான் 54 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். வங்கதேச அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மெஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியானது லிட்டன் தாஸின் சதத்தின் மூலமும், மெஹிதி ஹசனின் அரைசதத்தின் மூலமாகவும் 262 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 138 ரன்களையும், மெஹிதி ஹசன் 78 ரன்களையும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய குரம் ஷஸாத் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து 12 ரன்கள் முன்னிலையுடன், இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷஃபிக், குராம் ஷஸாத் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணியானது 46.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹசன் மஹ்முத் 5 விக்கெட்டுகளையும், நஹித் ரானா 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனால் வங்கதேச அணிக்கு 184 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பாகிஸ்தான் அணியை விமர்சித்த வாசிம் அக்ரம்
தொடரை வொயிட் வாஷ் செய்த வங்கதேசம் :
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணிக்கு ஜாகிர் ஹசன் மற்றும் ஷாத்மன் இஸ்லாம் இணை அதிரடி தொடக்கத்தை அளித்தனர். அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இதன்மூலம் வங்கதேச அணியானது நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணியில் ஜாகிர் ஹசன் 31 ரன்களுடனும், சாத்மான் இஸ்லாம் 9 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் 40 ரன்களை எடுத்திருந்த ஜாகிர் ஹசன் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீரரான ஷாத்மான் இஸ்லாம் 24 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ - மொமினுல் ஹக் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் கேப்டன் நஜ்முல் ஹொசைன் 38 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து 34 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் மொமினுல் ஹக்கும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்து அணியின் மூத்த வீரர்கள் ஷாகிப் அல் ஹசன் - முஷ்ஃபிக்கூர் ரஹிம் இணை நிதானமாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் ஷாகிப் அல் ஹசன் 21 ரன்களையும், முஷ்ஃபிக்கூர் ரஹிம் 22 ரன்களையும் சேர்க்க, வங்கதேச அணியானது 56 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணியானது 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வொயிட் வாஷ் செய்தது.
தொடரை வென்ற வங்கதேசம்
பாகிஸ்தான் கிரிக்கெட்டின் பின்னடைவு - வாசிம் அக்ரம்
பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் பேசுகையில், பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாகும். நாம் பயணிக்கும் பாதை மாறிவிட்டதாக நினைக்கிறேன். நாம் முன்னேறி செல்லாமல், தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறோம். ஒரு முன்னாள் வீரராக, கிரிக்கெட் ரசிகராக அவமானமாக இருக்கிறது. ஏனென்றால் நல்ல நிலையில் இருந்து தோல்வியை சந்தித்துள்ளோம். இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. சொந்த மண்ணில் நடந்த போட்டிகளை தொடர்ச்சியாக இழந்திருக்கிறோம். இதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தரத்தை வெளிப்படையாக புரிந்து கொள்ள முடிவதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், உள்நாட்டு கிரிக்கெட்டிலும் போதுமான திறமையான வீரர்கள் பாகிஸ்தான் அணியில் இல்லை என்று கருதுகிறேன். எந்த வீரருக்காவது காயம் ஏற்பட்டால் கூட, அவர்களுக்கான பேக் அப் கூட நம்மிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் தொடரில் அசத்திய வங்கதேச வீரர்கள்
அடுத்த டார்கெட் இந்தியா - வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹசன் ஷான்டோ :
இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியம். அதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். நாங்கள் இங்கு வெற்றி பெற வேண்டும் என நினைத்தோம். அனைவரும் தங்கள் வேலையை செய்து முடித்ததில் மிகவும் மகிழ்ச்சி. எங்கள் பந்துவீச்சாளர்களின் பணி ஒழுக்கம் வியக்கத்தக்க வகையில் இருந்தது. அதனால்தான் எங்களுக்கு இந்த முடிவு கிடைத்துள்ளது. ஒவ்வொருவரும் வெற்றி பெற வேண்டும் என உண்மையாக உழைத்தார்கள். அது இனியும் தொடரும் என நம்புகிறேன். "முதல் டெஸ்ட் போட்டியில் ஷாத்மன் அபாரமாக பேட்டிங் செய்தார். இந்த டெஸ்ட் போட்டியில் ஜாகீர் நன்றாக விளையாடினார். அது எங்களுக்கு நல்ல விஷயமாக அமைந்தது. இந்தியாவுக்கு எதிரான அடுத்த தொடர் எங்களுக்கு முக்கியமானது. இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக கிடைத்த இந்த வெற்றி எங்களுக்கு அதிக தன்னம்பிக்கையை அளித்துள்ளது. எங்கள் அணியில் முஷ்பிகுர் ரஹீம் மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகியோர் அதிக அனுபவங்களை கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவில் அவர்கள் முக்கியமானவர்களாக இருப்பார்கள்."மெஹிதி ஹாசன் மிராஸ் இந்த 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது அற்புதமாக இருந்தது. அவர் அதை இந்தியாவுக்கு எதிராகவும் செய்வார் என நம்புகிறேன். வாய்ப்பு கிடைக்காதவர்கள் கூட எங்கள் அணியில் தங்கள் பணியை சிறப்பாக செய்தார்கள். பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காத நான்கு வீரர்கள் கூட ஃபீல்டிங்கில் நன்றாக செயல்பட்டார்கள். இந்த கலாச்சாரம் தொடரும் என நம்புகிறேன்." என்றார் நஜ்முல் ஹசன் ஷான்டோ.
விமர்சிக்கும் ரசிகர்கள்:
பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களான கேப்டன் மசூத், பாபர் அசாம், ரிஸ்வான் என யாருமே ஜொலிக்கவில்லை. இதனால், பாகிஸ்தான் அணியை அந்த நாட்டு ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். டி20 உலகக்கோப்பைத் தொடரில் அமெரிக்க அணியுடன் தோல்வி அடைந்தது முதலே கடும் விமர்சனங்களைச் சந்தித்து வரும் பாகிஸ்தான் அணிக்கு இந்த தோல்வி மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.