பெண்களுக்கான ஐபிஎல்லில் மீண்டும் ஒரு தமிழக வீராங்கனை!

லெக்ஸ்பின் ஆல்ரவுண்டரான கீர்த்தனாவை நடப்பு சாம்பியன் மும்பை அணி அடிப்படை தொகை 10 லட்சம் கொடுத்து வாங்கியது. யார் இந்த கீர்த்தனா பாலகிருஷ்ணன்? அவரது வரலாறு மற்றும் ஏன் மும்பை அணி அவரை வாங்கியது என்பதை பற்றியெல்லாம் இக்கட்டுரையில் காணலாம்.

Update:2023-12-19 00:00 IST
Click the Play button to listen to article

கடந்த வருடம் கோலாகலமாக தொடங்கிய பெண்களுக்கான பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி, ரசிகர்களிடம் பெரும் ஆதரவை பெற்றது. 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதைத்தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசனுக்கான ஏலம் கடந்த 9 ஆம் தேதி மும்பையில் நடந்தது. இந்த ஏலத்தில் 165 கிரிக்கெட் வீராங்கனைகளின் பெயர்கள் ஏலத்தில் இடம்பெற்றன. இதில் 104 இந்திய வீராங்கனைகளும், 61 வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்றனர். பல பெயர்கள் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், சில பிரபலமான பெயர்கள் ஏலத்தில் எடுக்கப்படாமலும் இருந்தன. அதுமட்டுமில்லாமல் இந்த ஏலத்தில் பல முதல்தர வீராங்கனைகள் அதிக கவனத்தை ஈர்த்தனர் அதில் மிக முக்கியமானவர் தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா பாலகிருஷ்ணன். லெக்ஸ்பின் ஆல்ரவுண்டரான கீர்த்தனாவை நடப்பு சாம்பியன் மும்பை அணி அடிப்படை தொகை 10 லட்சம் கொடுத்து வாங்கியது. யார் இந்த கீர்த்தனா பாலகிருஷ்ணன்? அவரது வரலாறு மற்றும் ஏன் மும்பை அணி அவரை வாங்கியது என்பதை பற்றியெல்லாம் இக்கட்டுரையில் காணலாம்.


டாக்ஸி ஓட்டுநரின் மகள் கீர்த்தனா 

யார் இந்த கீர்த்தனா பாலகிருஷ்ணன்

ஆகஸ்ட் 10, 2000 ஆம் ஆண்டு பிறந்தவர் கீர்த்தனா பாலகிருஷ்ணன். இவரது தந்தை சென்னையில் டாக்ஸி ட்ரைவராக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் கீர்த்தனா கிரிக்கெட்டின் மீது பெரிதாக ஆர்வமில்லாமல்தான் இருந்திருக்கிறார். தனது உடல் எடையை குறைக்கவே கிரிக்கெட்டில் சேர்ந்துள்ளார். தனது சகோதரருடன் இணைந்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்தின் அகாடெமியில் அவரது தந்தை T.S முகுந்திடம் பயிற்சி பெற ஆரம்பித்தார். தினமும் கீர்த்தனாவையும், அவரது சகோதரரையும் பயிற்சிக்கு இறக்கிவிட்டுதான் வேலைக்கு போவாராம் அவர்களது தந்தை. ஆரம்பத்தில் மைதானத்தில் அமர்ந்து அனைவரையும் நன்கு கவனிப்பாராம். அதன்பிறகுதான் கீர்த்தனா கிரிக்கெட் விளையாட ஆரம்பித்திருக்கிறார். ஆர்வமும் அப்பொழுதுதான் வந்திருக்கிறது. ஆரம்பத்தில் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்திய கீர்த்தனா பின்பு லெக்ஸ்பின் போடவும் கற்றுக்கொண்டார். இங்கிருந்துதான் இவரது வாழ்க்கை தலைகீழாக மாறியது.


பயிற்சியாளர் டி.எஸ். முகுந்த் - கீர்த்தனா

முதல்தர போட்டியில் அசத்திய கீர்த்தனா

தொடர்ந்து அசத்திய கீர்த்தனா உள்ளூர் போட்டிகளில் நன்றாக செயல்பட்டு வந்தார். எப்பொழுதும் லெக்ஸ்பின் ஆல்ரவுண்டருக்கு என்று தனி மவுசு உண்டு. அதுபோல் தொடர்ந்து அசத்தி வந்த கீர்த்தனாவை செதுக்கியது டி.எஸ். முகுந்த் அவர்கள்தான். கீர்த்தனாவை லெக்ஸ்பின் பௌலிங்கில் கவனம் செலுத்த சொன்னார். அதுதான் அவரது கிரிக்கெட் பயணத்தில் திருப்புமுனையாகவும் அமைந்தது. அதன்பிறகு தமிழ்நாடு பெண்கள் அணிக்கு தேர்வானார். அங்கு நன்கு விளையாடிய கீர்த்தனா படிப்படியாக முன்னேற ஆரம்பித்தார். அதன்பிறகு சவுத் சோன் அணிக்கு தேர்வாகி அசத்தினார். சவுத் சோனில் சிறப்பாக செயல்பட்ட கீர்த்தனாவிற்கு இந்தியா கிரீன் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் தொடர்ச்சியாக மும்பை இந்தியன்ஸ் அணி நடத்தும் ட்ரயல்ஸில் கலந்துகொண்டே வந்தார். பிறகு பெண்களுக்கென நடத்தப்படும் பிரியேர்ஸ் கோப்பையில் 102 ரன்கள் அடித்ததோடு மட்டுமில்லாமல் 3 விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தினார். அதன்விளைவாக தற்போது மும்பை அணியில் இடம்பிடித்துள்ளார் கீர்த்தனா பாலகிருஷ்ணன்.


ஐபிஎல் ஏலத்தில் கீர்த்தனாவை எடுத்த மும்பை அணி

மும்பை அணியில் கீர்த்தனா

தற்போது நடந்து முடிந்திருக்கும் பெண்களுக்கான ஐபிஎல் ஏலத்தில் கீர்த்தனாவை அடிப்படை தொகையான 10 லட்சம் கொடுத்து வாங்கியது மும்பை. கடந்த சீசனில் மிடில் ஆர்டரில் பிரச்சினை இருந்து வந்ததை சரி செய்யவே மும்பை அணி கீர்த்தனாவை ஏலத்தில் எடுத்தது. லெக்ஸ்பின் ஆல்ரவுண்டரான கீர்த்தனா மிடில் ஆர்டரை சரி செய்யவும் இரண்டு மூன்று ஒவர்களை வீசவும் பயனாக இருப்பார். ஏற்கனவே பலம் வாய்ந்த மும்பை அணியில் பேட்டிங்கில் நாட் ஸ்கிவேர் பிரண்ட், ஹர்மன் ப்ரீத் கவுர், யாஷிகா ஆகியோர் உள்ளனர். பந்துவீச்சில் இஸி வோங், அமெலியா கேர், பூஜா வஸ்திரக்கர் ஆகியோர் உள்ளனர். மும்பை அணியில் இஷாக் மட்டுமே இந்தியன் ஸ்பினராக உள்ளார். அதை சரிகட்டவே இப்பொழுது கீர்த்தனா மும்பை அணியில் இணைந்துள்ளார்.


தமிழ்நாடு அணி மற்றும் மும்பை அணியில் இடம்பெற்ற கீர்த்தனா

இந்திய அணிக்கு முன்னேறுவாரா கீர்த்தனா?

தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் அசத்திய கீர்த்தனா தற்போது மும்பை அணிக்கு தேர்வாகியிருப்பது தமிழக மக்களிடையே சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல்லில் மட்டும் நன்றாக விளையாடிவிட்டால் இந்திய அணியில் கண்டிப்பாக தேர்வாகிவிடுவார். லெக்ஸ்பின்னில் அசத்தும் கீர்த்தனா, கூடிய விரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags:    

மேலும் செய்திகள்