ஐபிஎல் சீசன் 2024 - அணிகளின் பலம் மற்றும் பலவீனம் ஓர் பார்வை

நூர் அஹ்மத், ஜோஷுவா லிட்டில், மொஹித் சர்மா, சாய் கிஷோர், அஸ்மதுல்லா ஒமர்ஸாய், உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோரும் பந்துவீச்சை வலிமைப்படுத்துகின்றனர். இதில் பெரும்பாலோரின் எதிர்பார்ப்புகள் ரஷித் கான் மற்றும் நூர் அஹ்மத் பக்கம்தான் உள்ளது.

Update:2024-03-26 00:00 IST
Click the Play button to listen to article

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இந்தியாவில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்பும், ஆவலும் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோப்பையை வெல்ல அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், எந்த அணி இம்முறை கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது? அணிகளின் பலம் மற்றும் பலவீனம் என்ன என்பது குறித்தெல்லாம் இந்த கட்டுரையில் காணலாம்.

சிஎஸ்கே அணியின் பலம்:

சென்னை அணியின் முதல் பலம் மகேந்திர சிங் தோனி. அவர் கேப்டன் பொறுப்பில் இல்லை என்றாலும் அவரின் அனுபவம் வாய்ந்த வழிநடத்தல், சென்னை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் என நம்பப்படுகிறது. அடுத்து தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்தரா, மிடில் ஆர்டருக்கு டேரில் மிச்சல் மற்றும் இந்திய இளம் வீரர் சமீர் ரிஸ்வி ஆகியோர் வலு சேர்க்கிறார்கள். மேலும் பேட்டிங்கும் செய்யக்கூடிய வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் அணிக்கு கிடைத்துள்ளார். இதனால் சிஎஸ்கே அணியின் பேட்டிங் நீளம் இப்போதைக்கு குறைந்தபட்சம் ஒன்பதாவது இடம் வரை இருக்கிறது. அவர்கள் விரும்பினால் 11 பேரும் பேட்டிங் செய்யக்கூடிய வகையில் அணியை அமைக்க முடியும் என்பது மிகப்பெரிய பலம். மேலும் சேப்பாக்கம் மைதானத்திற்கு ஏற்ற வகையில் சுழற் பந்துவீச்சாளர்கள் இருப்பதும், அதில் மதிஷா தீக்சனா தவிர எல்லோரும் பேட்டிங் செய்வார்கள் என்பதும் மற்றொரு பலமாக பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கே அணியின் பலவீனம்:

தற்போது மதிஷா பதிரனா காயம் அடைந்திருக்கின்ற காரணத்தினால் இறுதிக்கட்ட ஓவர்களுக்கு சரியான பந்துவீச்சாளர் இல்லை. முஸ்தஃபிசூர் ரஹ்மான் இருந்தாலும், அவர் பதிரனாபோல வருவது கடினம். இதேபோல் ஆசியாவில் சுழற்பந்து வீச்சை திறமையாக விளையாடக்கூடிய ஒரு சில வெளிநாட்டு வீரர்களில் கான்வே முக்கியமானவர். ஆடுகளம் மற்றும் ஆட்டத்தின் சூழ்நிலையை உணர்ந்து வேகப்பந்து வீச்சிலும், சுழற் பந்துவீச்சிலும் சிறப்பாக விளையாடக்கூடியவர். ரச்சின் ரவீந்தரா இருந்தாலும் கூட, கான்வே இல்லாதது ஒரு சிறிய பின்னடைவை உருவாக்குகிறது. அதுமட்டுமில்லாமல் புதிய கேப்டன் ருதுராஜ் எப்படி அணியை வழிநடத்த போகிறார் என்று தெரியவில்லை.


புதிய கேப்டனை நியமித்து இருக்கும் சிஎஸ்கே

ஆர்சிபி அணியின் பலம் :

காயம் குணமடைந்து ரஜத் பட்டிதார் அணிக்குத் திரும்பி இருப்பதும், டிரேடிங் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வேகப்பந்து வீச்சு பேட்டிங் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீனை வாங்கி இருப்பதும், பேட்டிங் யூனிட்டில் டூபிளெஸ்ஸிஸ், விராட், மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் என பெரிய அனுபவ வீரர்கள் இருப்பதும் பெரிய பலமாக அமைகிறது.

ஆர்சிபி அணியின் பலவீனம் :

முதலில் பெங்களூர் சின்னசாமி மைதானத்திற்கு ஏற்ற வகையிலான வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை. முகமது சிராஜ் மட்டுமே பந்தை ஸ்விங் செய்து, மேலும் சில கட்டர்கள் வீசி பந்துவீச்சில் பலம் சேர்ப்பார். அல்சாரி ஜோசப் மற்றும் பெர்குஷன் இருவரும் அதி வேகமாக பந்தை வீசக்கூடியவர்கள் என்றாலும், அவர்கள் அடித்து வீசுவதற்கு ஏற்ற மைதானம் பெங்களூர் மைதானம் கிடையாது. மேலும் ஆகாஷ் தீப் மற்றும் வைசாக் விஜயகுமார் இருவரும் டி20 கிரிக்கெட்டில் பெரிய அனுபவம் இல்லாதவர்கள். இதற்கு அடுத்து சாகல் போன்ற விக்கெட் டேக்கிங் ஸ்பின்னர்கள் யாரும் கிடையாது. லெக் ஸ்பின்னர் கரன் சர்மா மற்றும் ஆர்த்தடாக்ஸ் ஸ்பின்னர் மயங்க் டாகர் மட்டுமே இருக்கிறார்கள். எனவே அவர்களுடைய பவுலிங் யூனிட் பெங்களூர் சின்னசாமி மைதானத்திற்கும், சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கும் ஏற்ற வகையில் இல்லாதது பின்னடைவாக இருக்கிறது.


பேட்டிங்கில் பலம் வாய்ந்த ஆர்சிபி

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பலம் :

கடந்த இரண்டு சீசன்களிலும் இறுதிப்போட்டிவரை முன்னேறிய குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு சீசனிலும் அதே உத்வேகத்துடன் களமிறங்கவுள்ளது. அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா வேறு அணிக்கு சென்றாலும், அவரது இடத்தை நிரப்பும் வீரர்களை தங்கள் வசம் வைத்திருப்பது அந்த அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு ஐபிஎல் மினி ஏலத்தில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய், ஷாருக் கான், ஸ்பென்சர் ஜான்சன், ராபின் மின்ஸ் போன்ற வீரர்களையும் வாங்கி தங்கள் அணியின் பலத்தை கூட்டியுள்ளது. அதுபோக இளம் அதிரடி வீரர் ஷுப்மன் கில்லின் கேப்டன்ஸியின் கீழ் குஜராத் அணி சிறப்பாக செயல்படும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. நடப்பு சீசனுக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியில் பேட்டிங்கை பொறுத்தவரையில் நட்சத்திர பட்டாளங்கள் உள்ளன. ஷுப்மன் கில், டேவிட் மில்லர், கேன் வில்லியம்சன், மேத்யூ வேட், ராகுல் திவேத்தியா ஆகியோர் தொடர்ச்சியாக தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர்கள். இவர்களுடன் தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர், ஷாருக் கான், சாய் சுதர்சன், சாய் கிஷோர் ஆகியோரும் பேட்டிங்கில் கூடுதல் பலம் சேர்க்கக்கூடியவர்களாக பார்க்கப்படுகின்றனர். கடந்த சீசனில் ஷுப்மன் கில் 890 ரன்கள் குவித்திருந்தார்.

அதேபோன்றதொரு செயல்திறனை தொடரச் செய்வதில் ஷுப்மன் கில் முனைப்பு காட்டக்கூடும். டேவிட் மில்லர், மேத்யூ வேட் ஆகியோர் ஒரு சில பந்துகளில் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர்கள். இதையடுத்து அணியின் பந்துவீச்சு துறையை நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் வழிநடத்தவுள்ளார். அவருடன் நூர் அஹ்மத், ஜோஷுவா லிட்டில், மொஹித் சர்மா, சாய் கிஷோர், அஸ்மதுல்லா ஒமர்ஸாய், உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோரும் பந்துவீச்சை வலிமைப்படுத்துகின்றனர். இதில் பெரும்பாலோரின் எதிர்பார்ப்புகள் ரஷித் கான் மற்றும் நூர் அஹ்மத் பக்கம்தான் உள்ளது.


பந்துவீச்சில் பலவீனமாக இருக்கும் குஜராத் அணி

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பலவீனம் :

முந்தைய சீசன்களில் குஜராத் அணியின் வெற்றியில் பந்துவீச்சும் பிரதான பங்கைக் கொண்டிருந்தது. ஆனால் இம்முறை அந்த அணியின் பந்துவீச்சு துறைதான் அணியின் பலவீனமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா வேறு அணிக்கு சென்றுவிட்ட நிலையில், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்தே விலகிவிட்டார். கடந்த இரண்டு சீசன்களிலும் குஜராத் அணி இறுதிப்போட்டிக்கு சென்றதில் ஹர்திக் மற்றும் ஷமியின் பங்கு முக்கியமானதாகும். ஆனால் இந்த சீசனில் இருவருமே இல்லை என்பது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கானும் தனது அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தற்போதுதான் கிரிக்கெட் விளையாட தொடங்கியுள்ளார். இதனால் அவர், உடனடியாக சிறந்த ஃபார்மை எட்டுவது சவாலாக இருக்கும். மேற்கொண்டு ஜோஷுவா லிட்டில், மோஹித் சர்மா, உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோர் அணியில் உள்ள போதிலும் இவர்கள் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுவார்களா என்பது சந்தேகமே. இதனால் நடப்பு ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சு பிரச்சினையை எவ்வாறு சமாளிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பலம் :

கடந்த இரண்டு சீசன்களிலும் எலிமினேட்டர் சுற்றுவரை முன்னேறிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நடப்பு சீசனில், முதல் கோப்பையை வெல்லும் உத்வேகத்துடன் களமிறங்கவுள்ளது. கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக பாதியிலேயே விலகிய கேப்டன் கேஎல் ராகுல் நடப்பு ஐபிஎல் தொடரில் முழு உடற்தகுதியுடன் விளையாடவுள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. அவருக்கு துணையாக அணியின் துணைக்கேப்டனாக அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் அணியில் நியமிக்கப்பட்டுள்ளது கூடுதல் உத்வேகமளிக்கிறது. மேலும் அணியின் தலைமை பயிற்சியாளராக ஜஸ்டின் லங்கர் நியமிக்கப்பட்டுள்ளது அணிக்கு கூடுதல் பலத்தை வழங்கியுள்ளதாக பார்க்கப்படுகிறது. நடப்பு சீசனுக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் பேட்டிங்கை பொறுத்தவரையில் நட்சத்திர பட்டாளங்கள் உள்ளன. குயின்டன் டி காக், நிக்கோலஸ் பூரன், கேஎல் ராகுல், தேவ்தத் படிக்கல், ஆஷ்டன் டர்னர், தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி, கைல் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டொய்னிஸ் போன்ற அதிரடி வீரர்கள் நிறைந்துள்ளனர். இதில் கடந்த சீசனில் குயின்டன் டி காக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் பேட்டிங் துறையை வழிநடத்தினார். அவருடன் நடப்பு சீசனில் தேவ்தத் படிக்கல் அல்லது மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோர் தொடக்க வீரராக களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களைத் தொடர்ந்து அணியின் பந்வீச்சை எடுத்துக்கொண்டால் ரவி பிஷ்னோய், குர்னால் பாண்டியா போன்ற சிறப்பான சுழற்பந்து வீச்சாளர்களுடன் மொஷின் கான், யாஷ் தாக்கூர், ஷிவம் மாவி, மணிமாறன் சித்தார்த் போன்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பது அணிக்கு கூடுதல் வலிமையை சேர்த்துள்ளது. இவர்களைத் தவிர்த்து நடப்பு ஐபிஎல் தொடருக்கான லக்னோ அணியில் இளம் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப் அணியில் இருப்பது அணியின் பலத்தை கூட்டியுள்ளது.


அதிரடி வீரர்கள் நிறைந்த லக்னோ அணி

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பலவீனம் :

நடப்பு சீசனுக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் வீரர்களின் காயம்தான் பெரிய பலவீனமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் சமீபத்தில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின்போது காயமடைந்து தொடரிலிருந்து வெளியேறினார். அதன்பின் லண்டன் சென்று சிகிச்சைப் பெற்று நாடு திரும்பிய அவர், தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது உடற்தகுதியை நிரூபித்து இத்தொடரில் விளையாடவுள்ளார். மேலும் அவரது காயம் காரணமாக சில போட்டிகளில் அவரை விக்கெட் கீப்பிங் செய்ய வேண்டாம் என் என்சிஏ தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அவர் மீண்டும் காயமடைய கூடும் என்ற அச்சம் அந்த அணி நிர்வாகத்திடம் உள்ளது. அதன்பின் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப் கடந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின்போது எலும்பு முறிவை சந்தித்து சிகிச்சைப் பெற்று வருகிறார். இதனால் அவரும் நடப்பு ஐபிஎல் சீசனில் தொடக்கத்தில் இருந்தே விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவர்களைத் தாண்டி அணியின் ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டொய்னிஸும் காயம் காரணமாக சமீபத்தில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை தவறவிட்டுள்ளார். இப்படி நட்சத்திர வீரர்கள் காயத்தை சந்தித்துள்ளதால், இந்த ஐபிஎல் சீசனில் லக்னோ அணியின் மிகப்பெரும் பிரச்சினையாக வீரர்களின் காயம் பார்க்கப்படுகிறது. 

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பலம் :

நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் மிகவும் பலமிக்க அணிகளில் ஒன்றாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக கடந்தாண்டு கார் விபத்தில் சிக்கி ஐபிஎல் தொடரை தவறவிட்ட கேப்டன் ரிஷப் பந்த் ஓராண்டுக்கு பிறகு காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து அணிக்கு திரும்பியதுடன் அணியின் கேப்டனாகவும் செயல்படவுள்ளார். இது அந்த அணிக்கு மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் எந்த நேரத்திலும் ஆட்டத்தை திசை மாற்றும் வீரராக ரிஷப் பந்த் பார்க்கப்படுவதால் அவரது வருகை அணிக்கு உத்வேகத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அணியின் பேட்டிங் வரிசையை எடுத்துக்கொண்டால் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், பிரித்வி ஷா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஜேக் ஃபிரெசர் மெக்கூர்க் போன்ற வீரர்கள் இருப்பது பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு எப்போதும் சவாலாகவே இருந்து வருகின்றனர். இதில் டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை அடித்த வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியை வென்று சாதனை படைத்துள்ளார் என்பதும் கூடுதல் சிறப்பு. இதைத்தவிர்த்து பந்துவீச்சாளர்களை எடுத்துக்கொண்டால் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, ஜெய் ரிச்சர்ட்சன் ஆகியோரும் இஷாந்த் சர்மா, கலீல் அஹ்மத், முகேஷ் குமார், பிரவீன் தூபே போன்ற வேகப்பந்து வீச்சாளர்களும், எதிரணி பேட்டர்களுக்கு எப்போதும் அச்சத்தைக் கொடுக்கும் குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் போன்ற சுழற்பந்து வீச்சாளர்களும் இருப்பது அணியின் மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. அதிலும் குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் ஆகியோரது சமீபத்திய ஃபார்ம் அபாரமாக இருப்பதால் இது அந்த அணிக்கு கூடுதல் உத்வேகமளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.


காயத்திலிருந்து மீண்டுவரும் ரிஷப் பந்த்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பலவீனம் :

நடப்பு சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பலவீனமாக பார்க்கப்படுவது அந்த அணி வீரர்களின் காயம்தான். ஏனெனில் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கி கடந்த ஓராண்டு காலமாக கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்து வருகிறார். இதையடுத்து பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது முழு உடற்தகுதியை ரிஷப் பந்த் நிரூபித்தாலும் அவரால் முழுநேர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாட முடியுமா என்பது சந்தேகம்தான். அதிலும் குறிப்பாக முதல் சில போட்டிகளில் ரிஷப் பந்தை பேட்டராக மட்டுமே பயன்படுத்த டெல்லி அணி முடிவு செய்துள்ளதால் இது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் பிரித்வி ஷா, ஆண்ட்ரிச் நோர்ட்ஜே போன்ற நட்சத்திர வீரர்களும் சமீப காலங்களில் பல காயங்களைச் சந்தித்துள்ளது டெல்லி அணிக்கு மிகப்பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது. ஏற்கெனவே அணியில் இடம்பெற்றிருந்த ஹாரி ப்ரூக், லுங்கி இங்கிடி போன்ற வீரர்கள் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில், மேற்கொண்டு யாரேனும் காயத்தை சந்தித்தால் அது அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை உண்டாக்கும் என்பதில் சந்தேகமில்லை. டெல்லி அணியின் அடுத்த பலவீனம் என்றால் அது வேகப்பந்து வீச்சு துறைதான். காரணம் கலீல் அஹ்மத், இஷாந்த் சர்மா, ஆண்ட்ரிச் நோர்ட்ஜே போன்ற வீரர்கள் ரன்களை வாரி வழங்கக் கூடியவர்களாக உள்ளனர். ஒருபக்கம் முகேஷ் குமார், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் போன்ற வீரர்கள் ரன்களை கட்டுப்படுத்தினாலும் மற்ற வீரர்களின் செயல்பாடுகள் நிச்சயம் டெல்லி அணிக்கு தலைவலியை உண்டாக்கும்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம் :

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியானது கடந்த சில ஆண்டுகளில் அபாரமான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக அந்த அணியின் பேட்டிங், பந்துவீச்சு வரிசையானது மற்ற அணிகளை காட்டிலும் மிகவும் வலிமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. காரணம் பேட்டிங்கில் இந்திய நடத்திரங்கள் ரோஹித் சர்மா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோருடன் இந்த சீசனில் ஹர்திக் பாண்டியாவும் இணைந்துள்ளது மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. காரணம் மும்பை இந்தியன்ஸ் அணியின் பெரும்பாலான நட்சத்திர வீரர்கள் இந்தியர்கள் என்பதால் அந்த அணிக்கு பிளேயிங் லெவன் பேட்டிங் வரிசையில் பெரிதளவில் மாற்றங்களைச் செய்யத் தேவையில்லை. இவர்களைத் தவிர்த்து வெளிநாட்டு வீரர்களில் டிம் டேவிட், முகமது நபி, டெவால்ட் ப்ரீவீஸ் மட்டுமே பேட்டர்களாக இடம்பெற்றுள்ளது அணியின் பிளேயிங் லெவனின் குழப்பத்தை ஏற்படுத்தாது. மறுபக்கம் பந்துவீச்சாளர்களை எடுத்துக்கொண்டால் ஜஸ்ப்ரித் பும்ரா பந்துவீச்சு யூனிட்டை வழிநடத்துகிறார். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஜஸ்ப்ரித் பும்ரா தவிர்க்க முடியாத வீரராக இருப்பதால், மற்ற வீரர்களில் யார் யார் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார்கள் என்பதே கேள்விக்குறியாக உள்ளது.


பேட்ஸ்மேனாக மட்டும் களமிறங்கும் ரோஹித் ஷர்மா - கேப்டனாக ஹர்திக் பாண்டியா

மும்பை இந்தியன்ஸ் அணியின் பலவீனம் :

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 முறை கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியதே அந்த அணியின் பெரும் பலவீனமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் மும்பை இந்தியன்ஸ் அணியைத் தாண்டியும் ரோஹித் சர்மாவிற்கான ரசிகர்கள் பட்டாளத்திற்கு இது மிகப்பெரும் ஏமாற்றமாக இருந்தது. இதன் காரணமாக பெரும்பாலான ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூகவலைதள பக்கங்களை பின் தொடர்வதை நிறுத்தியது பெரும் அடியாக பார்க்கப்பட்டு வருகிறது. அதுபோக ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக கடந்த இரு சீசன்களாக வழிநடத்தி அதில் இருமுறையும் இறுதிப்போட்டிக்கு ஹர்திக் பாண்டியா அழைத்துச்சென்றுள்ளார். ஆனாலும் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள வீரர்களை எவ்வாறு வழிநடுத்துவார்? அவரது கேப்டன்சி எவ்வாறு இருக்கும்? சக வீரர்களுடன் எவ்வாறு ஒத்துழைப்பார்? என்ற கேள்விகளும் மும்பை இந்தியன்ஸ் அணியை சூழந்துள்ளன. மேலும் அவருக்கும் ரோஹித்திற்குமான ஒத்துழைப்பு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதுதவிர அணியின் மிடில் ஓவர்களில் மும்பை அணியின் பந்துவீச்சு எவ்வாறு இருக்கும் என்பது அந்த அணியின் பலவீனங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஜஸ்ப்ரித் புர்மா, ஜெரால்ட் கோட்ஸி ஆகியோர் தொடக்கம் மற்றும் டெத் ஓவரில் அபாரமாக செயல்பட்டாலும், மிடில் ஓவர்களில் அந்த அணி எவ்வாறு எதிரணியை கட்டுப்படுத்தும் என்பது கேள்விக்குறிதான்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பலம் :

நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் மிகவும் பலமிக்க அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுவது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிதான். ஏனெனில் உலகின் பல மேட்ச் வின்னர்களை அந்த அணி தன்வசம் வைத்துள்ளது. குறிப்பாக ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸை ரூ.20.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்து அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்திய சன்ரைசர்ஸ் அணி, நடப்பு சீசனுக்கான அணியின் புதிய கேப்டனாக அவரையே நியமித்து அதிரடி காட்டியுள்ளது. அதுதவிர மாயாஜால சுழற்பந்துவீச்சாளார் வநிந்து ஹசரங்கா, உலகக்கோப்பை நாயகன் டிராவிஸ் ஹெட் ஆகியோரையும் ஏலத்தில் எடுத்து அதிரடி காட்டியுள்ளது. அணியின் பேட்டிங் ஆர்டரை எடுத்துக்கொண்டால் ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் ஆகியோரது சமீபத்திய ஃபார்ம் அனைத்து பந்துவீச்சாளர்களுக்கும் சிறிது தயக்கத்தை கொடுக்கும் அளவில் உள்ளது. இதில் ஒருவர் நங்கூரம் போல் களத்தில் நின்று பின் அதிரடியாக விளையாடும் திறன் கொண்டவர், மற்றொருவர் முதல் பந்தில் இருந்தே சிக்சர்களை பறக்கவிட்டு அணியின் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்தும் திறன் கொண்டவர். அவர்களுடன் இந்திய வீரர்கள் மயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி போன்ற வீரர்களும் இருப்பது அதிரடி மற்றும் நிதான ஆட்டத்தை சமமாக்கியுள்ளது. அணியின் பந்துவீச்சை எடுத்துக்கொண்டால் ‘ஸ்விங் கிங்’ புவனேஷ்வர் குமார், எக்ஸ்ட்ரா பவுன்ஸோடு மிரட்டும் பாட் கம்மின்ஸ், மின்னல் வேகத்தில் வீசும் உம்ரான் மாலிக், யார்க்கர் நாயகன் நடராஜன் என வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசைக்கட்டி நிற்கின்றனர். அவர்களுடன் மார்க்கோ ஜான்சென், ஃபசல்ஹக் ஃபரூக்கி ஆகியோரது சமீபத்திய ஃபார்மும் சிறப்பாக இருப்பது கூடுதல் பலமே. இப்படி பேட்டிங்கில் அதிரடி, நிதானம் காட்டும் பேட்டர்கள், பந்துவீச்சில் வேகம், சுழல், ஸ்விங், யார்க்கர் என ஒவ்வொரு பிரிவிலும் சிறந்துவிளங்கும் வீரர்கள் இருக்கும் அணியாக ஹைதராபாத் அணி இந்த சீசனை எதிர்கொள்ளவுள்ளதால் அந்த அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துள்ளனர்.


உலகக்கோப்பையை வென்ற கேப்டனை கொண்ட ஹைதராபாத் அணி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பலவீனம் :

அசுர பலத்துடன் விளங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பலவீனம் என்று சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பலம் :

நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் மிகவும் பலமிக்க அணிகளில் ஒன்று என்றால் அதில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பெயரும் நிச்சயமாக இடம்பெறும். நடப்பு சீசனுக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஏற்கனவே இருந்த பெரும்பாலான வீரர்கள் ரீடைன் செய்யப்பட்டு, வீரர்கள் ஏலத்திலும் சிறப்பான குறிப்பிட்ட சில  வீரர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்ள அதே அணிதான் இந்த சீசனிலும் விளையாடவுள்ளது அந்த அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் நீங்கள் பெரும்பாலான வீரர்களை அணியிலிருந்து நீக்கி, புதிய வீரர்களை தேர்வுசெய்வது என்பது அணிக்குள் இருக்கும் பிணைப்பை பலவீனமாக்கும் என்பதை உணர்ந்து, இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில் அணியின் பேட்டிங் வரிசையில் ஜானி பேர்ஸ்டோவ், ரைலீ ரூஸோவ், ஷிகர் தவான், சிக்கந்தர் ஆகியோர் பேட்டிங்கில் அசத்தக்கூடிய வீரர்களாக இருக்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து அணியின் ஃபினிஷிங் ரோலை செய்ய இளம் வீரர் ஜித்தேஷ் சர்மாவுடன் அனுபவ அதிரடி வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் இருப்பது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.


இளம்வீரர்கள் படை கொண்ட பஞ்சாப் கிங்ஸ் அணி

அவர்களுடன் அணியின் வேகப்பந்துவீச்சு கூட்டணியை காகிசோ ரபாடா வழிநடத்த, அவருடன் அர்ஷ்தீப் சிங், சாம் கரண், ஹர்ஷல் படேல், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இருப்பது எதிரணிக்கு பெரும் தலைவலியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதில் ஜானி பேர்ஸ்டோவின் வருகையானது அந்த அணிக்கு கூடுதல் பலத்தை வழங்கியுள்ளது. ஏனெனில் கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி சரியான தொடக்கத்தை பெறமுடியாமலேயே ஒருசில போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தது. அந்த குறையை ஜானி பேர்ஸ்டோவ் தீர்ப்பார் என நம்பப்படுகிறது. மேலும் அணியில் இடம்பெறும் நான்கு வெளிநாட்டு வீரர்களில் ஜானி பேர்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டோன், காகிசோ ரபாடா மற்றும் சாம் காரண் ஆகியோர் நிச்சயம் இருப்பார்கள்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பலவீனம் :

நடப்பு சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பலவீனமாக பார்க்கப்படுவது அந்த அணியின் சுழற்பந்துவீச்சு துறைதான். ஏனெனில் அந்த அணியில் ராகுல் சஹாரைத் தாண்டி சொல்லிக்கொள்ளும் அளவு இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லை. அணியில் லிவிங்ஸ்டோன் மற்றும் சிக்கந்தர் ரஸா ஆகியோர் இருந்தாலும் அவர்களால் அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியுமா என்பதே சந்தேகம் எனும் நிலையில், அவர்களின் பந்துவீச்சும் இந்திய மண்ணில் பெரிதளவில் எடுபடவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இதனால் இந்த பிரச்சினையை பஞ்சாப் கிங்ஸ் அணி எவ்வாறு சமாளிக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


உள்நாட்டு, வெளிநாட்டு பேட்டர்களைக்கொண்ட பலம் வாய்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பலம் :

நடப்பு சீசன் ஐபிஎல் தொடருக்கான பலமிக்க அணிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அந்த அணியின் பேட்டிங் வரிசையில் சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிம்ரான் ஹெட்மையர், டொனவன் ஃபெரீரா, ரியான் பராக் என உள்நாட்டு, வெளிநாட்டு பேட்டர்கள் இருப்பது அணிக்கு மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. இவர்களைத் தவிர்த்து ரோவ்மன் பாவெல், டாம் கொஹ்லர் காட்மோர் போன்ற வீரர்களையும் சமீபத்திய வீரர்கள் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது. அணியின் பந்துவீச்சை எடுத்துக்கொண்டால் ரவிச்சந்திரன் அஸ்வின், ஆடம் ஸாம்பா, யுஸ்வேந்திர சஹால் என உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்துவீச்சு கூட்டணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் உள்ளது. அவர்களுடன் டிரெண்ட் போல்ட், நந்த்ரே பர்கர், சந்தீப் சர்மா, ஆவெஷ் கான், நவ்தீப் சைனி, குல்தீப் சென் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பது அணியின் பலத்தை மேலும் கூட்டியுள்ளது

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பலவீனம் :

இந்தாண்டு ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் அணி பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்பட்டாலும், அணியில் பெரும்பாலான நட்சத்திர வீரர்கள் இருப்பதால் இதில் யார் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஏனெனில் ஒவ்வொரு ஐபிஎல் அணியிலும் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இடம்பெற முடியும் என்பதால் இது ராஜஸ்தான் அணியின் பிளேயிங் லெவனில் பெரும் குழப்பத்தை வரவழைக்கும் என்பது அந்த அணியின் பலவீனங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அவர்களைத் தாண்டி, அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் முக்கியமானவராக பார்க்கப்பட்ட பிரஷித் கிருஷ்ணா காயம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளது ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

Tags:    

மேலும் செய்திகள்