கந்த சஷ்டி விரதம் இருப்பதால் என்ன பலன்கள் கிடைக்கும்?

Update: 2023-11-13 18:30 GMT
Click the Play button to listen to article

முருகப்பெருமானின் அம்மா, பார்வதி தேவி தான் என்றாலும், அவரை வளர்க்கும் பொறுப்பு 6 கார்த்திகை பெண்களுக்கு தரப்பட்டது. இந்த பெண்களால் வளர்க்கப்பட்டு திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை என்று ஆறுபடை வீடு கொண்டு பல திருவிளையாடல் புரியும் முருகப்பெருமானின் திருவிளையாடலால் இயற்றப்பட்ட கந்த சஷ்டி கவசத்தின் வரலாறு என்ன? கந்த சஷ்டி விரதம் பின்பற்றுவது எப்படி? விரதத்தினால் ஏற்படும் நன்மைகள் என்ன? என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

கந்த சஷ்டி வரலாறு

கந்த புராணத்தின் படி சிவனின் மூன்றாம் கண் திறக்கப்பட்டு அக்னி சுவாலைகள் சரவணப்பொய்கை ஆற்றில் விழ அசுரர்களை வதம் செய்வதற்காகவே 6 குழந்தைகள் பிறக்கின்றன. அந்த 6 குழந்தைகளும் கார்த்திகை பெண்களால் வளர்க்கப்படுகின்றன. இந்த 6 குழந்தைகளையும் பார்வதி தேவி ஒருசேர இணைத்த போது ஆறுமுகனானக உருவானான் தான் இந்த முருகன் என்று புராணம் கூறுகிறது. காசியப்ப முனிவருக்கும் மாயை என்ற பெண்ணுக்கும் பிறந்தவர்கள் தான் சூரபத்மன், தாரகன் மற்றும் சிங்கமுகன். இவர்கள் மூவரும் ஈசனிடம் அழியாத வரத்தை பெற்று தேவர்களுக்கும், மக்களுக்கும் பல கொடுமைகளை செய்துள்ளார்கள். இவர்களை அழிப்பதற்காகவே முருகப்பெருமான் தனது சேனை படைகளுடன் வீற்றிருந்தது முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடான திருச்செந்தூர் ஆகும். இந்த கொடுமைக்காரர்களை அவ்வளவு எளிதாக அழித்துவிட முடியாது என்பதை அறிந்த பார்வதி தேவி தனது மைந்தனுக்கு அழகான வைர வேலை கொடுத்து அனுப்பியுள்ளார். வேலை கொண்டு ‘வெற்றிவேல் வீரவேல்..’ என்று ஆரவாரத்துடன் அந்த அசுரர்களை அழிக்கப் போருக்குச் சென்றார் முருகப்பெருமான். இந்த போரானது 6 நாட்களுக்கு முற்றியது. இதற்கு மேல் முருகனின் அடியை தாங்க முடியாமல் சூரபத்மன் மாமரமாக மாறி அதனுள் ஒளிந்து கொண்டார்.


முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடான திருச்செந்தூர்

இதை அறிந்த முருகப்பெருமான் தனது தாய் பார்வதி தேவி அளித்த வேலினால் அந்த மாமரத்தை தாக்கி சூரனை மயிலாகவும் சேவலாகவும் மாற்றி சேவலை தனது கொடியிலும் மயிலை தனது வாகனமாகவும் ஆக்கிக்கொண்டார். இந்த சூரனை ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி நாளில் வைரவேல் கொண்டு வதம் செய்த இந்த நாளையே வருடாவருடம் முருகப்பெருமானின் கந்த சஷ்டியாக 6 நாட்களுக்கு வழிபடுகிறோம். இந்த போரில் வெற்றி கண்ட முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது மகளான தேவயாணையை திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இதன் காரணமாகவே திருச்செந்தூரில் மாமரமானது எங்கும் காணப்படாமலும் வளராமலும் இருக்கிறதாம். நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் என்ற பகுதியிலிருந்து தான் பார்வதி தேவியிடம் இருந்து முருகன் வேல் வாங்கி வந்தாராம். இதையே ‘சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம்’ என்று சொல்கிறார்கள். இதன் பழக்கமாகவே இன்றளவும் கந்த சஷ்டியின் போது அந்த சிக்கல் என்ற பகுதியிலிருந்து வேல் பெறப்பட்டு சூரசம்ஹாரமானது நடத்தப்படுகிறது. வியப்பூட்டும் விதமாக சிக்கல் என்ற இப்பகுதியிலிருக்கும் சிங்காரவேலனுக்கு சஷ்டியில் நடக்கும் சூரசம்ஹாரத்தன்று இடைவிடாமல் துடைக்க துடைக்க வியர்வை கொட்டுகிறதாம். அதிர்ச்சியும் ஆச்சரியமும் நிறைந்த முருகனின் திருவிளையாடல் இன்றளவும் வெவ்வேறு ரூபத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

கந்த சஷ்டி கவசம் உருவான கதை

முருகனின் தீவிர பக்தரான பாலதேவராய சுவாமிக்கு ஒரு நாள் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதாம். ஆனால் எவராலும் அவரின் வயிற்று வலியை போக்க முடியவில்லை. வலியை தாங்க முடியாத அந்த பக்தன் தனது உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி திருச்செந்தூருக்கு வந்திருக்கிறார். அப்போது திருச்செந்தூர் முருகன் கோவிலில் சஷ்டியானது தொடங்கி நடைபெற, சாகலாம் என முடிவெடுத்து வந்த அந்த முருக பக்தர், முருகனை இந்த 6 நாட்களுக்கும் நன்றாக வழிபட்டு சஷ்டிக்கு பிறகு உயிரை மாய்த்து கொள்ளலாம் என்று முடிவு செய்து திருச்செந்தூர் ஆற்றில் குளித்து முடித்து கோவில் மண்டபத்தில் வந்து அமர்ந்து முருகனை நோக்கி தனது தியானத்தை தொடங்கியுள்ளார். அப்போது முருகப் பெருமானே அந்த பக்தனின் கண்முன் தோன்ற, இதை கண்டு பரவசமடைந்த அந்த முருக பக்தர் முருகனை நோக்கி ‘சஷ்டியை நோக்க சரவணபவ…’ என்ற கவசத்தை எழுதியுள்ளார். திருச்செந்தூர் வீடு மீது எழுதப்பட்ட இந்த கவசத்தை இயற்றிய பாலதேவராய சுவாமியின் கடுமையான வயிற்றுவலி இந்த கவசம் எழுதிய பின்னர் சிறிதும் இல்லாமல் போய்விட்டது. இதை தொடர்ந்து முருகனின் 6 படை வீடுகளில் மற்ற வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை வீடுகளுக்கும் கந்த சஷ்டி கவசத்தை எழுதியுள்ளார். இந்த கவசம் எழுதுவதற்காகவே முருகன் தனது பக்தனிடம் இது போன்ற திருவிளையாடலை ஆடியிருக்கிறார். இந்த கவசத்தை மனமுருக பாடிய மற்றொரு முருக பக்தரான பாம்பன் சுவாமிகள் தானும் முருகனை நோக்கி இதுபோன்ற கவசத்தை ஒன்று எழுத வேண்டும் என்று விரும்பி எழுதப்பட்டதே சண்முக கவசமாகும்.


முருகப்பெருமான் மற்றும் கந்த சஷ்டியை எழுதிய பாலதேவராய சுவாமி

 கந்த சஷ்டி விரதம்

இந்த ஆண்டு கந்த சஷ்டி ஆனது தீபாவளிக்கு அடுத்த நாள் நவம்பர் 13 ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி நிறைவு பெறுகிறது. பல விதமான விரதங்கள் இருந்தாலும் இந்த கந்த சஷ்டி விரதமானது ஒரு கடுமையான விரத முறை என்றே சொல்லலாம். இந்த கந்த சஷ்டி விரதமானது 6 நாள் விரதமாக பின்பற்றுவது வழக்கம். ஆனால் உண்மையில் சொல்லப்போனால் முழு விரதம் 7 நாள் ஆகும். சஷ்டி அன்று தொடங்கி சூரசம்ஹாரம் முடிந்த அடுத்த நாள் வரை இந்த விரதமானது தொடருகிறது. இந்த விரதத்தை வெறும் பாலை மட்டும் குடித்து விரதம் இருப்பது, பாலுடன் சேர்த்து பழங்களும் உண்பது, ஒரு நாளைக்கு ஒரு இளநீர் குடிப்பது, துளசி தீர்த்தம் மட்டும் குடிப்பது, இன்னும் கடுமையாக ஒரு நாளைக்கு ஒரு மிளகு என்ற கணக்கில் 7 நாட்களுக்கு 7 மிளகு மட்டும் உண்பது, வெறும் கீரையை மட்டும் உண்பது, சிலர் மதியம் ஒருவேளை மட்டும் சாப்பிடுவது அல்லது இரவு ஒரு நேரம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பது என்று இந்த கந்த சஷ்டி விரதத்தில் பல முறைகள் இருக்கின்றன. இன்னும் சிலர் 7 நாட்களும் முழு உபவாசம் கடைபிடித்து முழு பயபக்தியோடு முருக பெருமானை வழிபடுவோரும் உண்டு. இந்த பலவிதமான வழி முறைகளில் எந்த உபவாசம் நம்மால் கடைப்பிடிக்க முடியும் என்பதை கருத்தில் கொண்டு இடை நாட்களில் விரதத்தை இடைவிடாமல் அந்த 7 நாட்களும் உபவாசம் இருந்து கந்தனை உளமார வழிபட்டால் நிச்சயம் அறுபடை வீரரின் அருள் கிடைக்கும். குறிப்பாக எவ்வித கடுமையான விரதத்தை கடைப்பிடிப்பதாக இருந்தாலும் தண்ணீர் மட்டும் நிச்சயம் குடிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இந்த விரதங்களை தாண்டி இன்னும் சிலர் காலை முதல் மாலை வரை 7 நாட்களுக்கு மௌன விரதத்தையும் கடைபிடிக்கின்றனர். அதேபோல் விரதம் இருக்கக்கூடிய இந்த 7 நாட்களும் பச்சை நிற உடை அல்லது காவி நிற உடையை அணிவது சிறப்பு. குறிப்பாக இந்த 7 நாட்களும் கந்த சஷ்டி கவசத்தை படிப்பது மிக மிக சிறப்புடையதாகும்.


 கந்த சஷ்டி விரதத்தில் 7 நாட்களும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்  

சஷ்டியின் முதல் நாள்

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிறைத்து வாசனை திரவியம் கலந்து எலுமிச்சை பழம் போட்டு தரையில் சிறிது பச்சரிசி வைத்து அதன் மேல் வாழை இலை அல்லது ஒரு சிறிய தட்டை வைத்து அதன் மேல் இந்த கலசத்தை வைத்து தர்ப்பை, மாவிலை மற்றும் தேங்காய் வைக்க வேண்டும். கலசம் வைத்த பிறகு ‘ஓம் சரவணபவ’ என்ற நாமத்தை 108 முறை அல்லது 1008 முறை உச்சரிக்க வேண்டும். இப்படி உச்சரிப்பதன் மூலம் அந்த கலசத்தில் முருகப்பெருமான் எழுந்தருளுவார் என்று நம்பப்படுகிறது. கலசம் வைத்து வழிபடும் வழக்கம் இல்லாதவர்கள் முருகப்பெருமானின் உருவப்படத்தை வைத்து முருகப்பெருமானின் ‘ஓம் சரவணபவ’ எனும் திருமந்திரத்தை கூறி போற்றி துதிக்கலாம். அதற்கடுத்ததாக அரிசி மாவினால் ஷட்கோணம் கோலம் வரைந்து அதில் சரவணபவ என்றெழுதி ஒவ்வொரு எழுத்தில் ஒவ்வொரு தீபம் என்ற கணக்கில் 6 நெய் தீபங்களையும் பஞ்சு திரி அல்லது தாமரை தண்டு திரி அல்லது வாழைத்தண்டு திரி போட்டு அறுபடை வீரனின் திருமந்திரத்தை வாய்மொழித்தவாரே தீபத்தை ஏற்ற வேண்டும். பின்னர் நமக்கு வேண்டியதை முருகப்பெருமானிடம் மனதார வேண்டி பிரார்த்தனை செய்ய வேண்டும். இந்நாளில் கோதுமையை பயன்படுத்தி ஏதேனும் இனிப்பு ஒன்றை நைவேத்தியமாகப் படைத்து வழிபடுவது சிறந்தது. அதேபோல் இந்த முதலாவது நாள் விரதத்தில் ஏதேனும் ஒரு சந்நியாசிக்கு உணவு வழங்குவது மிக சிறப்புடையது. குறிப்பாக குழந்தை வரம் வேண்டி விரதம் இருப்பவர்கள் இந்த நாளில் ஒரு பாலாடையில் சிறிது பால் ஊற்றி முருகனை வழிபட்டு அந்த பாலாடையை புதிதாக பிறந்த குழந்தையின் தாய்மாருக்கு தானமாக வழங்கினால் விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்த முதல் நாளில் கந்தர் அலங்காரத்தில் அருணகிரிநாதர் அருளிச்செய்த ‘சேல்பட் டழிந்தது செந்தூர்…’ என்ற பாடலை பாடி முருகப்பெருமானை மனதுருக வழிபடலாம்.


கலசம் மற்றும் நெய் தீபம் 

சஷ்டியின் இரண்டாம் நாள்

சஷ்டியின் இரண்டாம் நாளில் விரதம் இருப்பவர்கள் கலசத்திற்கு பூக்கள் போட்டு காலையும் மாலையும் ‘ஓம் சரவணபவ’ என்னும் திருமந்திரத்தை 108 முறை போற்றி கூற வேண்டும். விரதத்தின் முதல் நாளில் செய்தது போல இன்றும் புதிய ஷட்கோணம் கோலம் வரைந்து அதில் ஓம் சரவணபவ என்று எழுதி அதின் மேல் பஞ்சு திரி அல்லது வாழைத்தண்டு அல்லது தாமரை தண்டு திரி போட்டு நெய் விளக்கை ஏற்ற வேண்டும். இந்த இரண்டாம் நாளில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட சுமங்கலிகளுக்கு மனதார உணவு பரிமாறி அவர்களுக்கு தாம்பூலம் வழங்கி ஆசீர்வாதம் பெறுவது சிறப்பு. அதேபோல் இந்த நாளில் பருப்பு பாயாசமும் தேங்காய் சாதமும் நெய்வேத்தியமாக செய்து முருகப்பெருமானுக்கு படைக்க வேண்டும். இந்நாளில் அருணகிரிநாதர் சுவாமிகள் மயில் விருத்தத்தில் எழுதிய ‘சந்தான புஷ்பபரி மளகிண் கிணீ முகச்…’ என்ற பாடலை பாடி போற்றி வழிபடலாம். இந்த நாளில் இப்படி வழிபட்டால் மாங்கல்ய பாக்கியமும், கணவன் ஆயுசும் நீளும்.


ஷட்கோணம் கோலம் மற்றும் பருப்பு பாயாசம் 

சஷ்டியின் மூன்றாம் நாள்

விரதத்தின் இரண்டு நாட்கள் செய்தது போல மூன்றாம் நாளும் கலசத்திற்கு புதிய பூக்கள் போட்டு ஷட்கோணம் கோலம் வரைந்து ஓம் சரவணபவ என்ற மந்திரத்தை எழுதி நெய் விளக்கை ஏற்றி வழிபட வேண்டும். இந்த வழிமுறையை விரதத்தின் 7 நாட்களும் பின்பற்ற வேண்டும். இந்த ஷட்கோணமானது முருகப்பெருமானின் காக்கும் எந்திரமாக இருக்கிறது. இக்கோலத்தில் நாம் நெய் விளக்கு ஏற்றுவதன் மூலம் அந்த முருகப்பெருமான் நம்மை எதிரிகளிடமிருந்து காப்பார் என்றும் செய்யும் காரியங்களில் வளர்ச்சி கிடைக்கும் என்றும் நினைத்ததை நடத்துவார் என்றும் நம்பப்படுகிறது. இந்த மூன்றாம் நாளில் எலுமிச்சை சாதத்தை நெய்வேத்தியாமாக படைப்பது சிறந்தது. அதேபோல் இந்த நாளில் அருணகிரிநாதர் சுவாமிகள் இயற்றிய கந்தர் அனுபூதி என்ற பதிக தொகுப்பில் ‘உருவாய் அருவாய்…’ என்ற பாடலை பாடி முருகப்பெருமானை இந்த மூன்றாம் நாளில் வழிபடுவது சிறந்தது. விரதத்தின் மூன்றாம் நாளில் எறும்புகளுக்கு உணவு அளிக்க வேண்டும். இந்த முறைகளை நாம் பின்பற்றுவதன் மூலம் நாம் இழந்த செல்வத்தை மீண்டும் பெறுவோம் என்றும் வருவாய் பெருகும் என்றும் முருகப்பெருமான் நம்மை செல்வ நலன்களுடன் வழிநடுத்தார் என்றும் நம்பப்படுகிறது.


எலுமிச்சை சாதம் மற்றும் எறும்புகளுக்கு உணவு அளிக்கும் காட்சிகள் 

சஷ்டியின் நான்காம் நாள்

இந்த நான்காம் நாளில் வழக்கம் போல செய்யக்கூடிய வழிமுறைகள் செய்து தேங்காய் சாதம் அல்லது புதினா சாதம் அல்லது கொத்தமல்லி சாதத்தை நெய்வேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். அதேபோல் இந்த நாளில் ஏதேனும் 4 ஜீவராசிகளை தேர்ந்தெடுத்து உணவளிப்பது சிறப்பு. இப்படி செய்வதன் மூலம் மலை போல இருக்கும் கடனும் பனி போல குறையும் என்று நம்பப்படுகிறது. இது தவிர இந்த நாளில் தானத்திலே மிக உயர்ந்த தானமான விபூதி அல்லது நெய்யை ஏதேனும் ஒரு நபருக்கு தானமாக வழங்குவதும் இந்நாளுடைய சிறப்பாகும். இன்று பாடக்கூடிய பாடல் அருணகிரிநாதர் சுவாமி எழுதிய ‘விழிக்குத் துணைதிரு மென்மலர்ப்…’ என்ற பாடலாகும்.

சஷ்டியின் ஐந்தாம் நாள்

வரலாற்றின்படி முருகப்பெருமான் வேல் பெரும் இந்த ஐந்தாம் நாளில் வழக்கமான வழிமுறைகளை செய்து முடித்து பல வகையான பழங்களை நெய்வேத்தியமாக படைத்து அறுபடை வீரனை வழிபட வேண்டும். இன்றைக்கான தானமாக வழங்க கூடிய பொருட்கள் தேன் மற்றும் தினையாகும். இதை தேன் கலந்து செய்யப்பட்ட தினை புட்டாக அல்லது தினை உருண்டையாக வழங்கலாம். வேலுக்கு சிறப்பிற்குரிய நாளான இன்று வேல் வழிபாடு செய்ய வேண்டும். வீட்டில் வேல் இருப்பவர்கள் பால் அபிஷேகம் செய்து வழிபடலாம். வேல் இல்லாதவர்கள் முருகப்பெருமானின் திருவுருவ படத்திலிருக்கும் வேலுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து வழிபடலாம். இப்படி வழிபாடு செய்வதன் மூலம் முருகன் நம்மை பகைவனின் சூழ்ச்சி செயல்களிலிருந்தும், எதிலும் தோல்வியின்றி வெற்றி காண செய்வார் என்றும் நம்பப்படுகிறது.


தேங்காய் சாதம் மற்றும் முருகனுக்கு பால் அபிஷேகம் 

சஷ்டியின் ஆறாம் நாள்

முருகப்பெருமான் சூரசம்ஹாரம் செய்யும் நாளான இந்த ஆறாம் நாளில் சர்க்கரை பொங்கல் அல்லது தயிர் சாதத்தை நெய்வேத்தியமாக படைத்து வழிபடலாம் அல்லது சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், எலுமிச்சை சாதம், புளி சாதம், புதினா சாதம், தேங்காய் சாதம் என 6 வகையான சாதங்களையும் நெய்வேத்தியமாக படைக்கலாம். கந்த சஷ்டி விரதத்தை இந்த 6 வது நாளில் முடிக்கும் பக்தர்கள் இலை போட்டு படையல் போட்டு வழிபடலாம். இந்த ஆறாவது நாளில் கோவிலில் சூரசம்ஹாரம் நடந்த பின்னர் குளித்து முடித்து மீண்டும் ஷட்கோணம் கோலம் வரைந்து 6 நெய்விளக்கேற்றி நெய்வேத்தியத்தை படைத்து ‘சஷ்டியை நோக்க சரவண பவன…’ என்ற பாடலை பாடி முருகனை கற்பூரம் காட்டி ஆராதனை செய்து விரதத்தை முடித்து கொள்ளலாம். 7 நாள் அதாவது முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடக்கும் வரை விரதம் இருப்பவர்கள் இந்த 6வது நாளில் காய்ச்சிய பாலில் தேன் அல்லது நாட்டு சர்க்கரை கலந்து முருகனுக்கு படைத்து அதை குடிக்கலாம். 6வது நாளில் விரதம் முடிப்பவர்கள் வழிபாடு முடிந்தவுடன் காப்பு அணிந்திருந்தாள் காப்பை கழற்றி கலசத்திலிருக்கும் தீர்த்தத்தை தெளித்து விரதத்தை முடித்து கொள்ளலாம். இந்த ஆறாவது நாளில் முருகனுக்கு சிவப்பு மலர்கள் அல்லது வில்வ இலை போட்டு வழிபட வேண்டும். இதிலும் சிறப்பாக இந்த சஷ்டி நாளில் வில்வ அர்ச்சனை செய்வதும் எலுமிச்சை மாலை போடுவதும் அவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. இன்றைய நாளுக்கான தானமாக அமைந்திருப்பது விரதத்தை முடிக்கும் பக்தர்களுக்கு உணவு வழங்குவதாகவும்.


சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், எலுமிச்சை சாதம், புளி சாதம், புதினா சாதம், தேங்காய் சாதம்

சஷ்டியின் ஏழாம் நாள்

திருக்கல்யாண நாளாக இருக்கும் கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று நாம் முருகனிடம் எதை வேண்டினாலும் அது நமக்கு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த இறுதி நாளில் வேலனை வண்ணமான வாசனை மலர்களால் அலங்கரித்து சர்க்கரை பொங்கல், தயிர் சாதம் அல்லது பால் பாயாசம் அல்லது இலை போட்டு விருந்து படைத்து திருப்புகழ் பாடி ‘ஓம் சரவணபவ’ மந்திரத்தை 108 முறை போற்றி கூறி ஷட்கோணம் கோலத்தில் 6 நெய் தீபங்களை ஏற்றி மனமுருக வேண்டினால் வேண்டியதை நிறைவேற்றுவார் அறுபடை வேலன். மேலும் இந்த திருநாளில் கந்த சஷ்டி கவசத்தையும், ‘சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்…’ என்ற திருப்புகழையும் பாடி போற்றுவது அத்தகு சிறப்பாகவும். வழிபாடு முடித்துவிட்டு விரதத்தை முடித்த பின்னர் கலசம் வைத்தவர்கள் அந்த கலச தண்ணீரை வீடெல்லாம் தெளித்து மீதம் இருந்தால் கால் படாத இடத்தில் ஊற்றி எலுமிச்சை பழத்தை வீட்டு வாசலில் கட்டலாம். கலசத்திற்கு அடியில் வைத்த அரிசியை சர்க்கரை பொங்கலாக செய்து உண்ணலாம். இந்த கடைசி நாளில் குழந்தைகள் மற்றும் வயதானோருக்கு தானம் வழங்குவது மிக சிறப்பான ஒன்றாகும். எதை வேண்டி நாம் முருகனுக்கு விரதம் இருந்தோமோ அதை முருகப்பெருமான் நிச்சயம் நிறைவேற்றி நமக்கு ஆசியும் அருளும் புரியுவார்.



வயதானோருக்கு தானம் வழங்கும் காட்சி

 கந்த சஷ்டியின் நன்மைகள்

சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையில் குழந்தை வளரும் என்பதை காலம் காலமாக நம் முன்னோர்கள் நம்பிக்கையுடன் வழிபட்டு வரும் விரத நாட்களில் விசேஷமான விரத நாள் தான் இந்த கந்த சஷ்டி விரதம். புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இந்நாளில் விரதம் இருந்தால் நிச்சயம் முருகப்பெருமான் புத்திர பாக்கியத்தை கொடுப்பார் என்று பெரிதும் நம்பப்படுகிறது. 1 வருடம் 2 வருடம் மட்டும் விரதம் இருந்து பலன் கிடைக்கவில்லை என்று அவநம்பிக்கை கொள்ளாமல் இடையூறாது வருடம் வருடம் விரதம் இருந்து முருகப் பெருமானை மனதார வழிபட்டால் நிச்சயம் அவர் புத்திர பாக்கியத்தை அருளுவார்.


புத்திர பாக்கியம் , திருமணம், பணவரவு, துன்பங்கள் நீங்குதல் 

அதேபோல் வாழ்க்கையில் எண்ணிலடங்கா துன்பம் உடையவர்கள், கடன் தொல்லை உள்ளவர்களும் இந்த சஷ்டி விரதத்தை பின்பற்றினால் வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து துன்பங்களும், கடன்களும் நீங்கி ஒளி விளக்காக வாழ்க்கை மாறும் என்றும் நம்பப்படுகிறது. அதேபோல் திருமணம் ஆகாதவர்களும் நினைத்த காரியங்கள் நடக்க வேண்டும் என்று எண்ணுபவர்களும் இந்த விரதத்தை கடைபிடித்தால் அவர்கள் பிரார்த்தித்தது நிச்சயம் அறுபடை வீரனால் நிறைவேற்றப்படும். ‘நம்பினார் கைவிடப்படார்’ என்பதை போல வேலனை நம்புவர்களை வேலன் என்றும் கைவிடுவதில்லை. மனதார பிரார்த்தியுங்கள் வேலனை நம்புங்கள். ஓம் சரவணபவ….

Tags:    

மேலும் செய்திகள்