நவராத்திரி நாள் 6 - அன்னை காத்யாயனி வழிபாடு

நவராத்திரி விழாவின் ஆறாம் நாள், அன்னை துர்க்கா தேவி, மாதா காத்யாயனியாக ஆராதிக்கப்படுகிறார். காத்யாயனி தாயே மகிஷாசுர மர்த்தினி என்று போற்றப்படுகிறார்.

Update:2024-10-08 15:14 IST

நவராத்திரி விழாவின் ஆறாம் நாள், அன்னை துர்க்கா தேவி, மாதா காத்யாயனியாக ஆராதிக்கப்படுகிறார். காத்யாயனி தாயே மகிஷாசுர மர்த்தினி என்று போற்றப்படுகிறார். அன்னைக்கு ஏன் காத்யாயனி என்று பெயர் வந்தது? அவர் மகிஷாசுரனை எவ்வாறு வதம் செய்தார்? அன்னையை எவ்வாறு வழிபட வேண்டும்? என்பது குறித்தெல்லாம் நவராத்திரியின் ஆறாம் நாளான இன்று பார்ப்போம்.

அன்னை காத்யாயனி தேவிக்கு உரிய பாடல்

அபிராமி அந்தாதி (பாடல் 8)

சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரையெல்லாம்

வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்

அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்

கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே

காத்யாயனி யார்?

மஹிஷாசுரனை வதம் செய்து புவனத்தை காப்பாற்றிய கருணை வடிவம் காத்யாயனி. நம்முள் உள்ள தமோ குணம் எனும் சோம்பல் தன்மையை நீக்கி, செயல்படும் ஆற்றலை அருள்பவள். உலகாளும் அன்னை தன் மகளாய்ப் பிறக்கவேண்டும் என வேண்டினார் காத்யாயன மாமுனிவர். அவர் எண்ணம் ஈடேற அவர் மகளாய் பூவுலகில் அவதரித்தாள் அன்னை. காத்யாயன மாமுனியின் மகள் என்பதால் காத்யாயினி என்று அழைக்கப்படுகிறாள். 

பிரபஞ்சம் முழுவதிலும் அழிவை ஏற்படுத்திய அரக்க மன்னன் மஹிஷாசுரன் எருமை வடிவத்தை கொண்டவன். எருமை என்பது சோம்பல் எனும் தமோ குணத்தை குறிக்கும். எந்த ஆணும் தன்னை கொல்ல முடியாது என்ற வரத்தை பெற்றிருந்த மகிஷாசுரன், மக்களுக்கு பெரும் துன்பத்தை தர துவங்கினான். இதையடுத்து அனைத்து தேவ கணங்களும், முனிவர்களும் மஹிஷாசுரனைக் கொல்லும் ஒரு தெய்வத்தை உருவாக்க முடிவு செய்தனர். அவர்கள் அனைவரும் தங்கள் ஆற்றலை ஒருங்கிணைத்து ஒரு மலையை உருவாக்கினர். மலைபோல் நிறைந்த அந்த அருள்நிலை தேவியாக உருவெடுத்தாள். அவளே காத்யாயன மாமுனிவரின் மகளான மாதா காத்யாயனி. 

காத்யாயனி தேவிக்கு அனைத்து இறை வடிவங்களும் வெவ்வேறு ஆயுதங்களை பரிசாக வழங்கினர். சிவன் தனது திரிசூலத்தையும், விஷ்ணு தனது சுதர்சன சக்கரத்தையும் வழங்கினர். வருணன் சங்கையும், அக்னி கதையையும், வாயு வில்லையும், சூரியன் அம்புகளையும் , இந்திரன் இடிமுழக்கத்தையும், குபேரன் கழுதையையும், பிரம்மன் ஜெபமாலையையும், விஸ்வகர்மா போர்க் கோடாரி மற்றும் பிற ஆயுதங்களையும் கொடுத்தனர்.

அந்த ஆயுதங்களுடன் மைசூர் மலைகளை நோக்கிச் சென்றாள் அன்னை. மைசூர் என்பதை எருமை ஊர் எனும் பெயரால் அழைப்பர். அங்கு அசுரர்கள் அம்மா காத்யாயனியை தேடி வந்தனர். அவர்கள் அவளுடைய அழகை கண்டு மயங்கி, அதை மஹிஷாசுரனிடம் விவரித்தனர். இதனால் அன்னையை திருமணம் செய்துகொள்ள மஹிஷாசுரன் ஆசைபட்ட நிலையில், போர் தொடங்கியது. மஹிஷாசுரன் எருமையின் வடிவத்தை எடுத்தான். காத்யாயனி தேவி சிம்மவாகனத்தில் வந்தாள். அவள் தனது மென்மையான கால்களால் மகிஷனின் தலையில் பலமாக அடித்தார். இதனால் அவன் தரையில் விழுந்தான். அப்போது அன்னையின் வாள்வீச்சில் மஹிஷாசுரனின் தலை உருண்டது. இதையடுத்து அன்னை காத்யாயனி, மஹிஷாசுர மர்த்தினி என்று அழைக்கப்பட்டார்.

காத்யாயனி தேவியை வழிபடும் முறை :

மூன்றாம் கண் எனும் அஃஞா சக்கரத்தை ஆட்சி செய்யும் அன்னை காத்யாயனி, நான்கு, பத்து அல்லது பதினெட்டு கைகளுடன் சித்தரிக்கப்படுகிறாள். தேவையற்ற சோம்பலை நீக்கி வெற்றி தருபவள். கோபத்தை குறைத்து தியானத்தை மேற்கொண்டால் அன்னை அருளால் எதையும் சாதிக்கலாம் என்பது பலரின் அருள் அனுபவம். அம்மா காத்யாயனிக்கு தேன் படைத்து வழிபாடு செய்தால் பெரும் செல்வமும் கிடைத்து, வியாபாரத்தில் வெற்றியும் கிடைக்கும். அத்துடன், கோகுலத்து கோபியர்கள் கண்ணனை அடைய இவளையே தெய்வமாய் வழிபட்டு விரதம் இருந்தனர் என்பார்கள். கன்னியர் மனம் விரும்பும்படி மணாளனை அடைய காத்யாயளி தேவி அருள் புரிவாள் என்பது நம்பிக்கை.

- பவானி ஆனந்த், ஆன்மிக ஜோதிடர்

Tags:    

மேலும் செய்திகள்