1000 மடங்கு புண்ணியம் தரும் சக்திவாய்ந்த மகாளய அமாவாசை! பெண்களும் தர்ப்பணம் கொடுக்கலாம்!

மற்ற மாதங்களில் அமாவாசை விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள்கூட, தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகிய 3 திதிகளை கடைபிடித்தாலே அதன் முழு பலனையும் பெறலாம் என்று கூறப்படுகிறது. அதிலும் மகாளய அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Update:2024-09-30 17:15 IST

ஆண்டிற்கு 12 அமாவாசைகள் வந்தாலும், தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை ஆகிய மூன்றும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. மற்ற மாதங்களில் அமாவாசை விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள்கூட, மேற்கூறிய 3 மாதங்களில் வரும் அமாவாசை திதிகளை கடைபிடித்தாலே அதன் முழு பலனையும் பெறலாம் என்று கூறப்படுகிறது. அதிலும் மகாளய அமாவாசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஏன் அமாவாசை வழிபாடு?

தெய்வ வழிபாட்டைக் காட்டிலும் முன்னோர் வழிபாடே முக்கியம் என்று சொல்லப்படுவதுண்டு. முன்னோர் வழிபாடே நம்மை சகல துன்பங்களில் இருந்தும் காக்கும் என்பது நம்பிக்கை. முன்னோர்களின் ஆசி இருந்தால்தான் இறை அருள் கிடைக்கும் என்பதால், அமாவாசை, முன்னோர்களின் அருளை பெறுவதற்கான நாளாக வழிபடப்படுகிறது. 

விஷ்ணு புராணம், மச்ச புராணம் மற்றும் கருட புராணத்தின்படி, ஒவ்வொரு மாதமும் தேய்பிறையின் இரண்டாம் நாள் தொடங்கி, சதுர்த்தசிவரை அனைத்து தேவர்களும் சந்திரனில் இருந்து அமிர்தத்தை அருந்துகிறார்கள். அதன்பிறகு சந்திரன், சூரிய மண்டலத்திற்குள் சென்றுவிடுகிறது. அந்த சமயத்தில் சூரியன் வெளிப்படுத்தும் கதிர்களுக்கு "அமா" என்று பெயராம். இதன் காரணமாகவே தேய்பிறை சதுர்த்தசிக்கு அடுத்துவரும் திதியை அமாவாசை திதி என்கிறோம். இந்த நாளில் பித்ருலோகத்தில் இருக்கும் நம்முடைய முன்னோர்கள், நாம் கொடுக்கும் பிண்ட தானம், தர்ப்பணம் போன்றவற்றிலிருந்து தங்களுக்கு தேவையான உணவை எடுத்து பசியாறி, மாதம் முழுவதும் திருப்தி அடைகிறார்கள். அதுமட்டுமில்லாமல், அமாவாசை நாளில், சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு காற்று ரூபத்தில் தங்களின் வீடுகளுக்கு வரும் முன்னோர்கள், அச்சமயத்தில் தங்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது சந்ததியினர் தங்களை நினைத்து, தங்களுக்காக தர்ப்பணம், பித்ரு பூஜை போன்றவற்றை செய்திருப்பதை கண்டு மனம் மகிழ்ந்து, தங்களின் குடும்பத்தினர்களுக்கு ஆசி வழங்குவதாக நம்பப்படுகிறது. இவ்வாறு முன்னோர்களின் ஆத்மா மகிழ்ச்சியும், சாந்தியும் அடையும்போது, அவர்களின் குடும்பம் செழித்து வளர்ந்து, மகிழ்ச்சி நிறைந்ததாக மாறுமாம். இதனால்தான் அமாவாசையில் முன்னோர்களை வழிபட வேண்டும் என சொல்லப்படுகிறது.

மகாளய அமாவாசை ஏன் முக்கியம்?

நம் முன்னோர்கள் பித்ரு லோகம் எனப்படும் தென்புலத்தில் இருப்பார்களாம். அங்கிருந்து ஆடி அமாவாசையின்போது கிளம்பி நாம் வசிக்கும் பூமியை நோக்கி வருவார்கள். அப்படி பயணம் மேற்கொள்பவர்கள், சரியாக ஆவணி மாத பௌர்ணமிக்கு அடுத்த நாள் பூமிக்கு வந்து சேருவார்கள். அடுத்த பதினைந்து நாட்களும் அவர்கள் நம்மோடு பூமியிலேயே தங்கியிருந்து நாம் அளிக்கும் நீரையும் உணவையும் ஏற்றுக்கொண்டு திருப்தியாகி மகாளய அமாவாசை முடிந்ததும் மீண்டும் பித்ருலோகத்திற்கு புறப்படுவார்கள் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு நம் முன்னோர்கள் நம்மோடு இருக்கும் இந்த 15 நாட்களில் நாம் அவர்களை நினைத்து வழிபடுவதைக்கண்டு அவர்கள் மகிழ்ந்து நமக்கு நல்லாசி வழங்குவார்கள் என்பது நம்பிக்கை. எனவே மகா புண்ணியகாலமான மகாளயபட்சத்தின் 15 நாட்களும் நாம் நம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் தந்து வழிபட்டால் குடும்பம் தழைத்தோங்குமாம். ஆனால் அனைவருக்கும் இது சாத்தியம் இல்லை. எனவே மகாளய அமாவாசை அன்று தவறாமல் தர்ப்பணம் தரவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. அப்படிச் செய்தால் ஆண்டு முழுவதும் அமாவாசை நாளில் வழிபட்ட பலன் கிடைக்குமாம்.

2024 மகாளய அமாவாசை

இந்த ஆண்டு மகாளய அமாவாசை, அக்டோபர் 2 (புதன்கிழமை) உத்திர நட்சத்திரத்தோடு வருகிறது. உத்திரம் என்பது சூரியனுடைய நட்சத்திரம். எனவே முறையான மகாளயபட்சத்தை கடைபிடித்தால் வெற்றி உறுதி என நம்பப்படுகிறது. அதேநேரம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும்போது இடம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஓடும் நீர் பகுதியில்தான் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பதால், ஆற்றங்கரை அல்லது கடற்கரை பகுதிகளை தேர்ந்தெடுக்கலாம். மேலும், நம் தாய்மொழியிலேயே முனோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம்.

மகாளய அமாவாசை வழிபாடு 1000 மடங்கு புண்ணியத்தையும், பலனையும் தரும் என்பதால், இந்த நாளில் பித்ருக்களை வழிபடுவதை மறக்கவே கூடாது. ஒருவேளை சூழ்நிலை காரணமாக அன்றைய தினம் முடியாவிட்டால் மகாளய அமாவாசைக்குப் பிறகு வரும் பஞ்சமி திதிக்குள் செய்யலாம்.

பூஜை நேரம்

சூரியன் உதயமாகும் காலை நேரம் மிகவும் விசேஷம். எனவே அதிகாலையில் தர்ப்பணம் கொடுத்து, சூரியனுக்கு நன்றி செலுத்திட வேண்டும். அதன்பிறகு கோயிலுக்கு சென்று அகத்திக்கீரை, மஞ்சள், வாழைப்பழம் மற்றும் அச்சு வெல்லம் கொடுத்து பூஜை செய்யலாம். பின்னர் வீட்டிற்கு வந்து பித்ருக்களின் படத்தினை வைத்து அகல் தீபத்தில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி, அவர்களுக்கு பிடித்த பொருட்களை படைத்து தீபாராதனை காண்பிக்க வேண்டும். பிறகு, படையல் உணவை முதலில் காக்கைக்கு வைத்து, பிறகு ஏழ்மை நிலையில் இருப்பவருக்கு கொடுத்துவிட்டு, பின் குடும்பத்தில் இருப்பவர்கள் சாப்பிட வேண்டும்.

நமக்கு பிடித்த யாருக்கு வேண்டுமானாலும் தர்ப்பணம் கொடுக்கலாமா?

நமக்கு பிடித்தவர், அதேநேரம் நமக்கு அவர் சொந்தக்காரர் இல்லையென்றாலும், அவருக்கு நாம் தாராளமாக தர்ப்பணம் கொடுக்கலாம். அதற்கு விதி ஒரு தடை இல்லை.

பெண்களும் தர்ப்பணம் கொடுக்கலாம்!

பெண்களும் தங்களுடைய தாய், தந்தைக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். பெண்கள் தர்ப்பணம் கொடுத்தால், கணவரின் ஆயுட்காலம் குறையும் என்று சொல்லப்படுவதெல்லாம் வெறும் கட்டுக்கதை என்று ஆன்மிகவாதிகள் கூறுகின்றனர். அவ்வாறு தர்ப்பணம் கொடுக்கும் பெண்களுக்கு நல்லதுதான் அதிகமாக நடைபெறுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இறந்து போன அந்த ஆத்மா தர்ப்பணம் கொடுக்கும் பெண்களின் குடும்பத்தை நின்று காக்குமாம். எனவே பெண்கள் கண்டிப்பாக செய்யலாம்!

Tags:    

மேலும் செய்திகள்