கிருஷ்ண ஜெயந்தி - என்ன மந்திரம் சொல்லி கண்ணனை வழிபடுவது?

விஷ்ணு சஹஸ்ரநாமம் தெரியும் என்றால் அதனை சொல்லி பாராயணம் செய்யலாம். இல்லையென்றால் ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ என்று சொன்னால் போதும். "ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹர ஹரே... ஹரே ராம, ஹரே ராம, ராம ராம ஹர ஹரே"என்று 108 முறை சொல்லியும் வழிபடலாம்.

Update: 2024-08-19 18:30 GMT
Click the Play button to listen to article

அதர்மம் வீழ்ந்து தர்மம் தழைத்தோங்க கண்ணன் அவதரித்த திருநாள், கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி என்று பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தில் தேய்பிறை அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நேரத்தில் கண்ணன் அவதரித்ததாக கூறப்படுகிறது. தேவகியின் வயிற்றில் அவதரித்து சிறையில் பிறந்து, யசோதையிடம் ஒப்படைக்கப்பட்டு, தயிரும் வெண்ணெய்யும் திருடி தின்று குறும்புகள் பல புரியும் பாலகனாக வளர்ந்தான் கண்ணன். குதூகலமும் துள்ளலும் நிறைந்த இளைஞனாக, வாலிப பருவத்தில் ராதையை காதலித்து காதலின் மகத்துவத்தை தனது லீலைகள் மூலம் உணர்த்தினான். மீராவும், ருக்மணியும் கண்ணனுக்காக உருகினர். இதனால் காதல் கடவுளாக கண்ணன் ஆராதிக்கப்படுகிறான். குழந்தையாகவும், காதலனாகவும் இருந்து பெண்களின் மனம் கவர்ந்த கண்ணன், கீதையை உரைத்தபோது ஞானியாக காட்சி தந்தான். உலகை இயக்கும் மாயவிரலோன் தானே என உரைத்தான் கண்ணன்.


சிறையில் பிறந்த கிருஷ்ணனை யசோதையிடம் கொண்டுசெல்லும் வசுதேவர்

சிறையில் அவதரித்த கண்ணன்

யாதவ குலத்தில் உக்கிரசேனன் என்ற தலைவர் ஒருவர் இருந்தார். உக்கிரசேனனின் மகன்தான் கம்சன். கம்சனின் சகோதரி தேவகி. உக்கிரசேனன் முதுமையடைந்தபோது, அவரிடம் இருந்து அதிகாரத்தை கைப்பற்ற நினைத்த கம்சன், தனது தந்தையையே சிறைப்படுத்திவிட்டு, தலைமைப்பொறுப்பை ஏற்றுக்கொண்டான். மதுராவைத் தலைநகராகக் கொண்ட விருசினி ராஜ்ஜியத்தின் மன்னனாக முடிசூடிக்கொண்டான். 

தனது சசோதரி தேவகியை மற்றொரு யாதவகுலத் தலைவன் வசுதேவருக்கு திருமணம் செய்துவைத்த கம்சன், புதுமணத் தம்பதியரை தனது தேரில் அமரவைத்து தேரோட்டிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென ஒலித்த அசரீரி, "கம்சனே, உன் சகோதரிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தை உன்னை வதம் செய்யும் எனக் கூறி ஓய்ந்தது". உடனே கோபமடைந்த கம்சன், தனது சகோதரி தேவகியை அந்த நிமிடமே கொல்ல வாளை எடுத்தான். அப்போது தேவகியை மணம்முடித்திருந்த வசுதேவர், கம்சனின் அந்த நேர கோபத்தை கட்டுப்படுத்த ஒரு உடன்படிக்கை வழங்கினார். "எங்களுக்குப் பிறக்கும் எல்லாக் குழந்தைகளையும் உன்னிடமே கொடுத்துவிடுகிறோம். நீயே அவற்றை கொன்றுவிடு. ஆனால் என் மனைவியைக் கொல்லாதே" என்று கேட்டுக்கொண்டார். 


மாடு மேய்த்துக்கொண்டும், வீரத்துடனும் வளர்ந்த கிருஷ்ணன்

இதற்கு சம்மதம் தெரிவித்த கம்சன், தேவகியையும், வசுதேவரையும் வீட்டுக்காவலில் அடைத்து முழு கண்காணிப்பில் வைத்தான். வசுதேவருக்கும், தேவகிக்கும் முதல் குழந்தை பிறந்த நிலையில், எட்டாவது குழந்தைதானே உன்னைக் கொல்லப்போகிறது, இந்தக் குழந்தையை உயிரோடு விட்டுவிடேன் என்று கெஞ்சினார் வசுதேவர். ஆனால் எதற்கும் நான் வாய்ப்பளிக்க விரும்பவில்லை என்று கூறிய கம்சன், அந்த குழந்தையின் கால்களைப் பிடித்து, ஓங்கிப் பாறையில் மோதி கொன்றான். இவ்வாறே, தொடர்ந்து பிறந்த குழந்தைககளையும் கொன்றான். 

எட்டாவது குழந்தை பிறக்க இருந்தபோது, கம்சன் மிகவும் பதற்றமடைந்தான். ஏதாவது அசம்பாவிதம் நிகழக்கூடும் என்பதால், இருவரையும் சிறையில் அடைத்து, பூதனை என்ற மருத்துவச்சியை அங்கு பணியில் அமர்த்தினான். குழந்தை பிறந்தவுடனேயே தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என கம்சன் அவளிடம் உத்தரவிட்டான். பூதனையும் காத்துக்கிடந்தாள். பிரசவ நாள் நெருங்கி, வலி அவ்வப்போது வந்துபோனது. ஆனால் பிரசவம் நிகழவில்லை. அப்போது மிக அவசரகதியில் தன் வீட்டிற்கு சில நிமிடங்கள் பூதனை சென்ற நேரத்தில், பெருமழை ஆரம்பித்து வீதியெங்கும் வெள்ளம் சூழ்ந்தது. பூதனையால் சிறைக்குத் திரும்பிச்செல்ல இயலவில்லை. அப்போது கொட்டும் மழை மற்றும் பலத்த இடிகளுக்கு மத்தியில் பிறந்தார் கிருஷ்ணர்.


காதல் கடவுளாகவும், கீதையின் நாயகனாகவும் திகழும் கண்ணன்

கிருஷ்ணன் அவதரித்தபோது நிகழ்ந்த அதிசயம்

கிருஷ்ணன் பிறந்த நேரத்தில் சிறையின் கதவுகள் தாமாக திறக்க, அனைத்து காவலாளிகளும் உறக்கத்தில் ஆழ்ந்துபோக, வசுதேவர்-தேவகியின் சங்கிலிகள் உடைந்துபோயின. உடனே, பிறந்த சிசுவை கையில் ஏந்தி, உள்ளுணர்வின் வழிகாட்டுதலுடன் யமுனை நதியை கடந்தார் வசுதேவர். அப்போது நதி தாமாக வழிவிட, நதியை கடந்து நந்தன் மற்றும் அவரது மனைவி யசோதாவின் வீட்டுக்குச் சென்றார் வசுதேவர். அப்போதுதான் யசோதைக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது. கடினமான பிரசவம் என்பதால், யசோதை மயக்கத்தில் இருக்க, அப்பெண் குழந்தையை கையில் ஏந்திக்கொண்டு, அந்த இடத்தில் கிருஷ்ணனை கிடத்திவிட்டு, சிறைச்சாலைக்கு திரும்பினார் வசுதேவர். 

கொஞ்ச நேரத்தில், சிறைச்சாலையில் பெண் குழந்தையின் அழுகுரல் கேட்டது. காவலாளிகள் கம்சனிடம் செய்தியை அறிவித்தனர். அதற்குள் வீட்டிற்கு சென்றிருந்த பூதனையும் சிறைக்கு திரும்பிவிட்டாள். கம்சன் அங்குவந்து பெண் குழந்தையை கண்டதும் குழம்பிவிட்டான். பூதனையிடம் கேட்டான், பெண் குழந்தைதான் பிறந்ததா? குழந்தை பிறந்தபோது நீ இங்குதான் இருந்தாயா? என்றான். உயிருக்கு அஞ்சிய பூதனை, "நான் இங்கேதான் இருந்தேன். இந்தக் குழந்தை என் கண்முன்னேதான் பிறந்தது" என்று உறுதியாக கூறிவிட்டாள்.


கோகுலாஷ்டமியன்று கிருஷ்ணன் பிஞ்சு பாதங்களால் வீட்டுக்குள் தத்தித்தத்தி நடந்து வருவதாக ஐதீகம்

அந்த நேரம், தேவகியும்-வசுதேவரும், எப்படி ஒரு பெண் குழந்தை உன்னை கொல்லும்? ஆண் குழந்தையாக இருந்தால், அவன் உன்னைக் கொல்பவனாக இருந்திருப்பான். எனவே இக்குழந்தையை உயிருடன் விட்டுவிடு என்று மன்றாடினர். ஆனால் "எந்த ஆபத்துக்கும் நான் வாய்ப்பு கொடுக்க விரும்பவில்லை" என்று கூறிய கம்சன், குழந்தையின் கால்களைப் பற்றி எடுத்து, தரையில் மோதிக்கொல்ல எத்தனித்தான். அப்போது அந்தக் குழந்தை அவனது கைகளிலிருந்து நழுவி, சிரித்துக்கொண்டே சிறை ஜன்னலுக்கு வெளியே பறந்தது. மேலும், உன்னைக் கொல்லப் பிறந்தவன் வேறெங்கோ இருக்கிறான் என்று கூறி சென்றது. உடனே, தன் ராஜ்ஜியம் முழுவதும் ஆட்களை அனுப்பி, கிருஷ்ணனை கொல்ல உத்தரவிட்டான் கம்சன். இதற்கிடையே, யசோதையின் மகனாக மாடு மேய்க்கும் சமூகத்தில் பல்வேறு குறும்புகளுடன் வளர்ந்துவந்த கிருஷ்ணன், தனது தாய் மாமன் கம்சனைக் கொன்று துவாரகையை ஆட்சி புரிந்தான். 

கிருஷ்ணனின் பல்வேறு காட்சிகள்

யசோதையின் மடியில் சந்தான கோபாலனாகவும், தவழும் வயதில் பாலகிருஷ்ணனாகவும், நாகத்தின் மீது நர்த்தனம் புரியும் காளிய கிருஷ்ணனாகவும், சுண்டுவிரலால் மலையை தூக்கும் கோவர்த்தனதாரியாகவும், ராதையுடன் குழல் ஊதும்போது ராதாகிருஷ்ணனாகவும், ருக்மணி, சத்யபாமா சமேதராக முரளீதரனாகவும், அஷ்டபுஜங்களுடன் மதன கோபாலனாகவும், கீதா உபதேசம் செய்யும்போது பார்த்தசாரதியாகவும் 8 விதமாக காட்சியளிக்கிறார் கண்ணன். பாரதப் போரில் பாண்டவர்களுக்கு உறுதுணையாக இருந்து, போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு தேரோட்டியாக வந்து அவனுக்கு உபதேசித்த அறிவுரைகள்தான் இந்து மக்களின் புனித நூலாக உள்ள பகவத் கீதை.


பூஜைக்கு நெய்வேத்தியமாக கண்ணனுக்கு பிடித்த பால் பொருட்களை படைக்கலாம்

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் ஏன்?

தீமையை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பிறந்த கிருஷ்ணனை, அவனது பிறந்தநாளில் நம் வீட்டிற்கு அழைத்து அருளை பெறவேண்டியே ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணன் அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமியின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. எனவேதான், கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை சுத்தம் செய்து, மாவிலை தோரணங்கள் கட்டி, வாசல் தொடங்கி பூஜை அறைவரை குழந்தையின் கால் தடங்களை அரிசி மாவால் பதிக்கிறோம். அதற்கு காரணம் கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடிவைத்து வீட்டுக்குள் தத்தித்தத்தி நடந்து வருவதாக ஐதீகம். பிருந்தாவனத்தில் ஒவ்வொரு வீட்டிலும் கிருஷ்ணன் ஆடிப்பாடிய காட்சியை சிவபெருமானே தரிசித்ததாக புராணங்கள் கூறுகின்றன.

கிருஷ்ண ஜெயந்தி எப்போது?

இந்தாண்டு, வரும் ஆகஸ்ட் 26ம் தேதி காலை 3.39 மணிமுதல் ஆகஸ்ட் 27ம் தேதி காலை 2.20 மணிவரை அஷ்டமி திதி வருகிறது. அதேநேரம் ரோகிணி நட்சத்திரம், வரும் ஆகஸ்ட் 26ம் தேதி மாலை 3.55 மணிக்கு தொடங்கி 27ம் தேதி மாலை 3.38 மணி வரை வருகிறது. அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் ஆகஸ்ட் 26ம் தேதியே இணைந்து வருவதால் அன்றைய தினமே கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.


கோகுலாஷ்டமி நாளில் பசுக்களுக்கு உணவளிப்பது உன்னதமான செயல்

வழிபாட்டு முறை

கிருஷ்ணன் இரவில் பிறந்தான் என்பதால் மாலை நேரமே கிருஷ்ணனை வழிபட ஏற்ற நேரம். கிருஷ்ணனின் படத்தையோ அல்லது திருவுருவ சிலையையோ வைத்து வழிபாடு நடத்தலாம். பூஜைக்கு நெய்வேத்தியமாக கண்ணனுக்கு பிடித்த பால், தயிர், வெண்ணெய், அவல், முருக்கு, சீடை,  இனிப்பு சீடை, அதிரசம், தேன்குழல் போன்ற பலகாரங்களை படைக்கலாம். கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் இருந்து வழிபட்டால், 3 ஜென்ம பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை. எனவே சிலர் நாள் முழுவதும் தண்ணீர் கூட குடிக்காமல் விரதத்தை கடைப்பிடிக்கிறார்கள். ஆனால், அனைவரும் அப்படி விரதம் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. முடிந்தவர்கள் இதுபோன்று முழு விரதமும், முடியாதவர்கள், கண்ணனை மனதார வழிபட்டு பழங்களையோ, கஞ்சி உணவுகளையோ உட்கொண்டு விரதம் மேற்கொள்ளலாம். மேலும், அன்றைய தினம், உணவு மற்றும் தண்ணீர் தானம் செய்வது உன்னதமான செயல் என்று முன்னோர்கள் கருதுகிறார்கள். அத்துடன், பகவான் கிருஷ்ணனுக்கு பசுக்கள் மிகவும் நெருக்கமானவை என்பதால், கோகுலாஷ்டமியன்று பசுக்களுக்கு உணவளிப்பதும் உன்னதமானதாகக் கருதப்படுகிறது.

என்ன மந்திரம் சொல்லி வழிபடுவது?

விஷ்ணு சஹஸ்ரநாமம் நன்கு தெரியும் என்றால் அதனை சொல்லி பாராயணம் செய்யலாம். இல்லையென்றால் ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ என்று சொன்னாலே போதும். அல்லது "ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹர ஹரே... ஹரே ராம, ஹரே ராம, ராம ராம ஹர ஹரே... என்று 108 முறை சொல்லி வழிபடலாம்.


கண்ணனை புல்லாங்குழலுடன் வழிபடுவதே சாலச் சிறந்தது

புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணரை வீட்டில் வைத்து வழிபடலாமா?

கண்ணனை வழிபட விரும்புவோர் அவரை புல்லாங்குழலுடன் வழிபடுவதே சாலச் சிறந்ததாகும். அதுவே அவரது பூரண ரூபம். ஆனால் சிலர், புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணரை வீட்டில் வைத்து வழிபட்டால் நம் செல்வம் ஊதிக்கொண்டு சென்றுவிடும் என்று புலம்புவார்கள். அது வெறும் புலம்பலே அன்றி உண்மை இல்லை. குழலூதும் கிருஷ்ணரை வீட்டில் வைக்கக் கூடாது என்று யாரேனும் கூறினால், அவர்களிடம் எந்த சாஸ்திரம் அவ்வாறு சொல்கிறது? என்று கேட்க வேண்டும். ஏனென்றால், அவரே அனைத்து செல்வத்தின் அதிபதியாக திகழ்கிறார். புல்லாங்குழல் கொண்ட கிருஷ்ணரை தினமும் தரிசிக்காவிடில் கண்கள் இருந்தும் பயனில்லை என்று ஸ்ரீமத் பாகவத ஸ்லோகம் உரைக்கிறது. எனவே புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணரை வீட்டில்வைத்து மனதார வழிபட்டு மாயக் கண்ணனின் அருளை பெறுவோம்.


குழலூதும் கிருஷ்ணரை தினமும் தரிசிக்காவிடில் கண்கள் இருந்தும் பயனில்லை - ஸ்ரீமத் பாகவத ஸ்லோகம் 

Tags:    

மேலும் செய்திகள்