பல்வேறு சாதனைகளால் உலக அரங்கில் ஜொலிக்கும் தமிழக பெண் "டாக்டர் ஷீபா லூர்தஸ்" யார்?
உலக புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவின் கைகளால், ‘சிறந்த உலக மனிதாபிமான அடையாள விருதை' பெற்றார். இந்த விருது, அவருடைய பண்பாட்டுத் திறமைகளுக்கும், பல்வேறு சமூக பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கத்தில் செய்த சேவைகளுக்கும் கிடைத்த உயரிய அங்கீகாரமாகும்.;
ஒரு மனிதர் பல்வேறு துறைகளில் சாதிக்கலாம். ஆனால் பல்துறைகளிலும் சிறந்து விளங்கி சமூக நலனுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணிப்பது என்பது ஒரு அரிதான நிகழ்வு. அந்த அரிய ஒளிவட்டத்தில் தெளிவாக ஜொலிக்கிறார் டாக்டர் ஷீபா லூர்தஸ். தமிழின் பெருமையை உலகிற்கு உணர்த்திய மகத்தான பெண் இவர். யுனைடெட் சமாரிட்டன்ஸ் என்ற அறக்கட்டளையின் சர்வதேச தலைவரான ஷீபா, சமீபத்தில் துபாயில் நடைபெற்ற ஒரு சர்வதேச விழாவில், விளையாட்டு துறையில் உலக புகழ்பெற்ற சானியா மிர்சாவின் கைகளால் விருதையும் வென்றுள்ளார்.
யார் இந்த ஷீபா லூர்தஸ்?
டாக்டர் ஷீபா லூர்தஸ் கோயம்புத்தூரை சேர்ந்தவர் என்றாலும் இவர் ஒரு ஸ்வீடிஷ் NRI. மிஸ் தமிழ்நாடு டைட்டில் வின்னர். கூடவே கண்ணழகி மற்றும் கூந்தலழகி சவுத் இந்தியா போன்ற பட்டங்களையும் வென்றிருக்கிறார். இவர் ஒரு பாரம்பரிய பரதநாட்டிய கலைஞர், தொழில்நுட்ப வல்லுநர், அழகு போட்டியாளர், தத்துவஞானி, எழுத்தாளர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகங்களைக் கொண்டவர். சிறுவயதிலிருந்தே இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின்மீது அதீத நாட்டம் கொண்ட இவர் விளையாட்டு மற்றும் கல்வியில் சிறந்து விளங்கினார். அப்பாவிடமிருந்து சமூகத்தின் மீதான ஆர்வத்தையும், பரதநாட்டிய கலைஞரான அம்மாவிடம் இருந்து கலையின் ஆர்வத்தையும் பெற்ற இவர், பலதரப்பட்ட திறமைகளை தன்னுள் வளர்த்துக்கொண்டார். பிறகு ஐரோப்பாவின் குரோஷியாவில் வேலைக்காக சென்ற ஷீபாவின் திறமையை கண்டுகொண்ட நிறுவனம் அவருடைய திறமையை உலகுக்கு வெளிகொண்டுவர வழிவகை செய்தது. அதன்பிறகுதான் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு மேற்கூறிய பல பட்டங்களை பெற்றார் ஷீபா. மோகினியாட்டத்திலும் தேர்ச்சி பெற்றிருந்த ஷீபா, 2014 வரை பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வந்தாலும் அதன்பிறகு தொழில்நுட்ப துறையில் மட்டும் கவனம் செலுத்தியதால் பின்னர் நிகழ்ச்சிகள் நடத்துவதை நிறுத்திவிட்டார். தற்போது பலதுறைகளில் முன்னேறி யுனைடெட் சமாரிட்டன் இயக்கத்தின் இந்திய தேசிய தலைவராகவும் திகழ்கிறார். டைம்ஸ் ஆஃப் யுனைடெட் சமாரிட்டன்ஸ் இந்தியா இதழ் மற்றும் யுனைடெட் சமாரிட்டன் ஆகிய பதிப்புகளின் ஆசியரும், உரிமையாளரும் இவர்தான். மேற்கூறிய சாதனைகள் புரிந்ததோடு மட்டுமல்லாமல் 2 முறை சர்வதேச நோபல் குடிமகள் என்ற விருதை பெற்றிருக்கிறார். கடந்த ஆண்டு பத்ம பூஷண் விருதுவென்ற டாக்டர் சிவதாணு பிள்ளையின் கையால் உலகளாவிய சிறந்த பெண் பொறியாளர் விருதையும் பெற்றுள்ளார்.
டாக்டர் ஷீபா லூர்தஸ் வென்றுள்ள விருதுகளில் சில...
சானியா மிர்சா கையால் விருது
ஷீபா லூர்தஸ், அண்மையில் துபாயில் நடந்த சர்வதேச மாநாடு ஒன்றில், உலக புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவின் கைகளால், ‘சிறந்த உலக மனிதாபிமான அடையாள விருதை' பெற்றார். இந்த விருது, அவருடைய பண்பாட்டுத் திறமைகளுக்கும், பல்வேறு சமூக பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கத்தில் செய்த சேவைகளுக்கும் கிடைத்த உயரிய அங்கீகாரமாகும்.
பசுமை உலகுக்கு ஷீபாவின் அடித்தளம்
துபாய் சர்வதேச மாநாட்டில், ‘பசுமை உலகம் நோக்கி புதுமைகளும் திட்டங்களும்’ என்ற தலைப்பில் ஷீபா உரையாற்றினார். அதில் “நிலைத்தன்மை என்பது காலநிலை மட்டுமல்ல, மனிதர்களின் மனநிலையில் தொடங்கும் பரிணாமம். புதுமைகள், பசுமை நகரங்கள், சுற்றுச்சூழல் பொறுப்பு கொண்ட தொழில்கள், உயிரியல் பாதுகாப்பு, கல்வி மையமான ஒழுக்கங்கள் ஆகியவை ஒன்றிணைந்துதான் பசுமையான எதிர்காலத்தை உருவாக்கும். அரசாங்கங்கள், தனியார் நிறுவனங்கள், சமூகங்கள் மற்றும் தனிநபர்கள் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டிய காலம் இது. உணர்வுகளால் தூண்டப்படும் மன மாற்றமே நிலைத்தன்மையின் வேராக இருக்க வேண்டும். இன்று நாம் விதைக்கும் செயல் விதைகள் நாளைய சந்ததிக்கு உயிர் தந்து உலகாக மாற வேண்டும்.
சானியா மிர்சா கையால் டாக்டர் ஷீபாவிற்கு கிடைத்த சிறந்த உலக மனிதாபிமான அடையாள விருது
நமக்காக அல்ல, நம் பிள்ளைகளுக்காக, இயற்கைக்கும் மனிதத்தன்மைக்கும், இயங்கும் பசுமை உலகம் ஒன்றை உருவாக்கி விட வேண்டும்” என்று உணர்ச்சிப்பொங்க பேசினார். அந்த உரையானது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான புதிய திட்டங்களை முன்வைத்ததோடு மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சமூக மற்றும் தொழில்நுட்ப மேதைகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுற்றுச்சூழலையும், மனித வாழ்க்கையையும் இணைத்து அழகாகப் பேசக்கூடிய திறமை அவருக்கு இருப்பதாக மாநாட்டில் பங்கேற்ற பலரும் பாராட்டினர்.
மேரிலாந்து சர்வதேச பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவம்!
மனித நேயம், கலாசாரம், அறிவியல், இலக்கியம், தொழில்நுட்பம், தன்னலமற்ற சேவை – இவை அனைத்தையும் ஒரே களத்தில் கையாண்டு சாதித்த ஒரு மாமனிதி டாக்டர் ஷீபா. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக நிதி திரட்டும் நோக்கத்துடன் 250 புத்தகங்களை 20 மொழிகளில் எழுதியிருக்கிறார். இப்படி அவருடைய எழுத்துகள் வெறும் ஆக்கங்களாக மட்டுமல்லாமல் உயிர்காக்கும் எழுத்துக்களாகவே பார்க்கப்படுகின்றன. ஷீபாவின் இந்த அரிய முன்னெடுப்பை கௌரவிக்கும் விதமாக மேரிலாந்து சர்வதேச பல்கலைக்கழகம், இவருக்கு ‘இலக்கியத் தத்துவத்தில் கௌரவ டாக்டர்’ பட்டம் வழங்கியுள்ளது. இது அவரது சமூகச் சிந்தனையின் அறிவியல் அங்கீகாரமாகவும், உலக வாசகர்கள் அவரை மதிப்பது போல, கல்வி உலகமும் அவர் பங்களிப்பை மதிக்கிறது என்பதற்கும் சிறந்த சான்றாகும்.
பசுமை உலகம் குறித்து பேசிய ஷீபா லூர்தஸ்
ஷீபா லூர்தஸ் முன்னெடுத்துள்ள திட்டங்கள்
பல திறமைகளை உள்ளடக்கி, பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரரான ஷீபா லூர்தஸ் ஒரு தொழில்நுட்பத் துறை வல்லுநர். பரதநாட்டியக் கலைஞராக உலகின் பல மேடைகளில் பாரம்பரியத்தை பறைசாற்றியவர். கலை, அறிவு, உணர்வு ஆகியவற்றை தனது உயிரின் மூச்சாகக் கொண்டு வாழ்ந்துவருகிறார். குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், ஏழை மக்கள் என பல்வேறு பிரிவினருக்காக ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளார். 45 மாற்றுத்திறனாளிகளை ஒவ்வொரு ஆண்டும் தன்னம்பிக்கையுடன் வாழ வைக்கும் திட்டம், 2500 பேர் ஆண்டுதோறும் கண்களை தானமாக்கும் விழிப்புணர்வு இயக்கம், 600க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட சிறார்களுக்கு கல்வி வழங்கும் முயற்சி, HIV-ஆல் பாதிக்கப்பட்ட பெண்கள், விவசாய மரக்கன்றுகள் நடும் இயக்கம் போன்றவை அவரது உன்னத ஆழ்வுயிர் முயற்சியின் அடையாளங்கள். தனக்கென ஒரு தனிப்பட்ட வாழ்க்கையை அமைத்துக்கொள்ளாமல், நான்கு பிள்ளைகளை தத்தெடுத்து தன்னுடைய சொந்த பிள்ளைகளாகவே பாவித்து வளர்த்துவருகிறார். இப்படி தாய்மையின் ஆழத்தை வெளிக்காட்டும் ஒரு புனித பெண்ணாக திகழ்கிறார் டாக்டர் ஷீபா. இவர் இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமான மரங்களை நட்டிருக்கிறார். அதேபோல் ஆண்டுதோறும் அப்துல் கலாமின் நினைவு தினம் மற்றும் உலக சேவை தினங்களில் 6 நாடுகளில் 15 ஆயிரம் ஏழைகளுக்கு உணவளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எல்லைப்பகுதிகளில் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவுக்கரம் நீட்டிவருகிறார் ஷீபா. இதுபோன்ற எண்ணற்ற நற்செயல்களுக்காக உலகிலுள்ள பலதரப்பட்ட வல்லுநர்கள் அவரை பாராட்டிவருகின்றனர். அவர் பேசிய சொற்கள், உலகின் பல நாடுகளில் காற்றாக பரவியுள்ளன. மனிதாபிமானம் என்பது மேடைகளில் பேசப்படும் வெறும் பேச்சு மட்டுமல்ல; உயிரில் வாழும் ஒளியாக இருக்க வேண்டும் என்பதை ஷீபா தனது செயல்களால் நிரூபித்துள்ளார். தமிழின் பாசம் மற்றும் உலகத்தை முன்னேற்றும் அக்கறையோடு பின்னப்பட்டிருக்கும் ஒரு உன்னத பெண்ணான டாக்டர் ஷீபா லூர்தஸின் வாழ்க்கை உலகத்திற்கு கிடைத்திருக்கும் ஒளி!