நீளமான முடி, நீளம் குறைவான முடி என இரண்டுக்கும் பொருந்தும் சூப்பர் ஹேர் ஸ்டைல்!
சிலருக்கு முடியின் நீளம் குறைவாக இருக்கும். அவர்கள் கீழுள்ள முடியை பேக் கோம்ப் செய்து மேலே நெட் வைத்தும் இந்த ஹேர்ஸ்டைலை செய்யலாம்.;
மணப்பெண்கள் மட்டுமல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக தெரிய ஆசைப்படும் யார் வேண்டுமானாலும் செய்துகொள்ளக்கூடிய ஹேர் ஸ்டைல்தான் இந்த வாரம் பார்க்கப்போகிறோம். குறிப்பாக, நீளமான முடி இருப்பவர்களுக்கு இந்த ஹேர் ஸ்டைல் பார்க்க மிகவும் அழகாக இருக்கும். அதேசமயம் நீளம் குறைவான முடியில் போட்டாலும் இந்த மெஸ்ஸி ஹேர் ஸ்டைல் நன்றாகத்தான் இருக்கும் என்கிறார் அழகுக்கலை நிபுணர் லலிதா.
முன்பகுதியில் பிடித்த ஹேர் ஸ்டைலை செய்து கொள்ளலாம். வேண்டுமானால் ட்விஸ்டிங் ஸ்டைல் செய்து அதிலிருந்து கீழ்பகுதி ஹேர் ஸ்டைலை தொடங்கலாம். அதற்கு மேல்பகுதியில் ஒரு கற்றை முடியை எடுத்து ட்விஸ்ட் செய்து அதற்கு அடுத்து ஒரு சிறு கற்றையை எடுத்து அதையும் சேர்த்து ட்விஸ்ட் செய்ய வேண்டும். இதனால் வகிடு எடுத்தது போன்ற தோற்றம் உருவாகும். இப்படி அடுத்தடுத்து ட்விஸ்ட் செய்து ஹேர்பின் பயன்படுத்தி குத்திக்கொள்ள வேண்டும்.
ஹேர் ஸ்டைலை தொடங்கும் முன்பு தலை முடியை நன்றாக சீவி செட் செய்தல்
இப்போது கீழே விட்டிருக்கும் முடியில் ஒரு லேயரை மட்டும் எடுத்து அதை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து சிறு சிறு பின்னல்களை போடவேண்டும். கீழுள்ள முடியுடன் சேராமல் இருக்க அடிப்பகுதி முடியை பின் செய்துகொள்ள வேண்டும்.
இந்த ஹேர் ஸ்டைலில் முக்கியமானதே கீழே விட்டிருக்கும் முடிதான். அந்த முடியில்தான் மேலே போட்டிருக்கும் பின்னலை பின் செய்து ஸ்டைல் செய்யமுடியும். சிலருக்கு முடியின் நீளம் குறைவாக இருக்கும். அவர்கள் கீழுள்ள முடியை பேக் கோம்ப் செய்து மேலே நெட் வைத்தும் இந்த ஹேர் ஸ்டைலை செய்யலாம்.
கீழ்பகுதி முடியில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து பின்னல் போட்டு வரிசையாக பின் செய்தல்
முதலில் வலது காதின் பக்கவாட்டில் ஒரு சிறு பின்னலை போட்டு அதை நன்றாக இழுத்துவிட்டு, அந்த பின்னலை இடதுகாது பகுதிக்கு கொண்டுசென்று ஹேர்பின் பயன்படுத்தி குத்திவிட்டு, மீதமுள்ளதை மீண்டும் வலதுபகுதிக்கு கொண்டுவந்து பின்செய்ய வேண்டும். முடியின் நீளத்தை பொருத்து இது மாறுபடும்.
இப்போது ஹேர்பின் குத்தியதற்கு கீழ்பகுதியில் இடது பக்கத்தில் முடியை எடுத்து பின்னல் போட்டு, வெளியே இழுத்துவிட்டு வலதுபகுதிக்கு கொண்டுவந்து ஹேர்பின்னால் குத்திக்கொள்ள வேண்டும்.
இப்படி ஒவ்வொரு வரிசையாக பின்னல் வருமாறு அடுத்தடுத்து முடியை எடுத்து பின்னல் போட்டு ஹேர்பின்னால் குத்திக்கொண்டே வரவேண்டும். ஒவ்வொரு வரிசைக்கும் நடுவே இடைவெளி விழுந்தால் யு-பின் பயன்படுத்தி அடுக்கடுக்காக இருக்கும்படி சீராக குத்திக்கொள்ளலாம்.
ஹேர் ஸ்டைல் முடித்தபிறகு பீட்ஸ் மற்றும் பூக்கள் வைத்து அலங்கரித்தல்
கீழே கொஞ்சம் முடியை விரித்துவிட ஆசைப்படுபவர்களுக்கு 4 அல்லது 5 பின்னல் போட்டு கீழுள்ள முடியை விட்டுவிடலாம். சிலருக்கு முடியின் அடிப்பகுதி வரைக்கும் பின்னல் போடவேண்டுமென ஆசைப்படுவார்கள். அவர்களுக்கு மேலே போட்டதுபோன்றே கொஞ்சம் கொஞ்சமாக பின்னல் போட்டு கீழ்பகுதி வரை ஹேர்பின்னால் குத்தி வரிசையாக பின்னலை செட் செய்தாலும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
முழுவதும் பின்னல் போட்டு முடித்தபிறகு பீட்ஸை ஆங்காங்கே குத்தினால் பார்க்க அழகாக இருக்கும். வேண்டுமானால் செயற்கை பூக்கள் அல்லது ஸ்டோன்கள் கொண்டும் அலங்கரிக்கலாம். கீழே விரித்து விட்டிருக்கும் முடியை ஸ்ட்ரெய்ட்டனிங் அல்லது கர்ளிங் வேண்டுமானால் செய்துகொள்ளலாம். இதே ஹேர் ஸ்டைலை கொண்டை போட்டும் அதன்மீது செய்யமுடியும்.