இளம்வயதில் "உலக செஸ் சாம்பியனான குகேஷ்" - செஸ் விளையாட்டில் கலக்கும் தமிழகம்!

சமீப காலங்களில் செஸ் விளையாட்டில் உலக சாதனை படைத்தது வருகிறது இந்தியா. பிரக்ஞானந்தா, அவரது சகோதரி வைஷாலி என்று உலக செஸ் அரங்கில் பல சாதனைகளை செய்து வருகின்றனர். இவர்கள் ஒரு புறம் ஆதிக்கத்தை செலுத்த மறுமுனையில் 17 வயதில் உலக சாம்பியனாகி இருக்கிறார்

Update:2024-12-17 00:00 IST
Click the Play button to listen to article

சமீப காலங்களில் செஸ் விளையாட்டில் உலக சாதனைகளை படைத்து வருகிறது இந்தியா. பிரக்ஞானந்தா, அவரது சகோதரி வைஷாலி என்று உலக செஸ் அரங்கில் பல சாதனைகளை செய்து வருகின்றனர் தமிழக வீரர்கள். இவர்கள் ஒரு புறம் ஆதிக்கத்தை செலுத்த, மறுமுனையில் 17 வயதில் உலக சாம்பியனாகி இருக்கிறார் சென்னையை சேர்ந்த குகேஷ். இவரது குடும்பத்தில் சதுரங்கம் சொல்லித்தரவோ, முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளவோ சதுரங்க வீரர்கள் யாரும் இல்லை. சதுரங்கத்தின் மீது இயல்பாக உருவான தனது ஆர்வத்தின் காரணமாக தற்போது சர்வதேச அரங்குகளை எட்டியுள்ளார் குகேஷ். இந்த கட்டுரையில் குகேஷின் சாதனைகளையும், அவர் கடந்து வந்த பாதையை பற்றியும் விரிவாக பார்ப்போம்.


சிறுவயதில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றபோது 

எதிர்பாராமல் சதுரங்க விளையாட்டிற்குள் நுழைந்த குகேஷ்

வீட்டில் பொழுதுபோக்காக குடும்பத்தினருடன் சதுரங்க ஆட்டத்தை விளையாடத் தொடங்கினார் குகேஷ். சதுரங்க ஆட்டத்தின் அடிப்படை நகர்வுகள், விதிகளை இப்படித்தான் அவர் கற்றுக் கொண்டார். தந்தை தன் அன்றாடப் பணியை முடித்து வரும் வரை பள்ளியில் தனியாக அமர்ந்திருக்க வேண்டாம் என்பதற்காக சதுரங்கப் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டார் குகேஷ். ஓரிரு மாதங்களிலேயே அவருக்கு இருக்கும் சதுரங்க ஆர்வத்தை அவரது பயிற்சியாளர் அறிந்து கொண்டார். அவரை சிறப்புப் பயிற்சிகளுக்கு அனுப்ப பெற்றோரிடம் வலியுறுத்தினார். அவரது ஆர்வம் சதுரங்கத்தில் அதிகரிக்கவே, அதிக நேரத்தை சதுரங்கம் ஆடுவதில் செலவழித்தார். அவரது பெற்றோர்களும் பள்ளியும் குகேஷின் ஆர்வத்தை அங்கீகரித்து அதற்கான ஒத்துழைப்பை வழங்கினர்.


11 வயதில் செஸ் போட்டிகளில் வென்றபோது 

மருத்துவ பணியை கைவிட்ட குகேஷின் தந்தை

மேலும் கடந்த 2017ஆம் ஆண்டு, சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் (FIDE) ரேட்டிங் அவருக்கு முதல்முறையாக கிடைத்தது. அது குகேஷை மிகவும் ஊக்கப்படுத்தியது. அதன்பிறகு குகேஷ் உடன் போட்டிகளில் விளையாடுபவர்கள் அவரைவிட வயதில் மூத்தவர்களாகவும், அதிக ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்களாகவும் இருந்தனர். எனினும் குகேஷ் தனது ஆர்வம் மற்றும் திறமையின் காரணமாக போட்டிகளை எளிதாக வென்றார். குகேஷின் தந்தை ரஜினிகாந்த், காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை மருத்துவராக இருந்தார். சதுரங்கத்தில் குகேஷின் ஆர்வம் அதிகமாக இருப்பதைப் பார்த்து, கடந்த 2017ஆம் ஆண்டு தனது மருத்துவர் பணியைக் கைவிட்டார். எல்லா நாடுகளுக்கும் குகேஷை பத்திரமாக அழைத்துச் சென்று அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்துக் கொள்வது குகேஷின் தந்தைதான். இதற்காக தனது பணியைக்கூட ஆறு ஆண்டுகளுக்கு முன் அவர் கைவிட்டுவிட்டார்.


நேஷனல் ஸ்கூல்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற குகேஷ்

குகேஷின் முதல் வெற்றி 

2015-ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற நேஷனல் ஸ்கூல்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் குகேஷ். 2015ஆம் ஆண்டு மட்டுமல்லாமல் அடுத்த இரண்டு ஆண்டுகளும் தொடர்ந்து அந்தப் பட்டத்தை வென்றார். 


மேக்னஸ் கார்ல்சனுடன் மோதிய குகேஷ் 

கிராண்ட் மாஸ்டரான குகேஷ்

சதுரங்க வீரர்கள் அனைவருக்கும் இருக்கும் கனவு கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்பதுதாக். குகேஷுக்கு இந்த கனவு 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறைவேறியது. அவர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற இளம் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். அது மட்டுமல்லாமல், சதுரங்க வரலாற்றில் இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற மூன்றாவது நபர் என்ற பெயரையும் இவர் பெற்றுள்ளார்.


செஸ் தொடர்களில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் குகேஷ் 

குகேஷின் சாதனைகள்

ஸ்பெயினில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் அவர் உலக சாம்பியன் பட்டம் வென்றது அவரது சதுரங்க பயணத்தில் ஒரு முக்கியமான மைல் கல். அதற்கு முன்பாக, 2016ஆம் ஆண்டில் காமன்வெல்த் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். ஐரோப்பிய கிளப் கோப்பை எனப்படும் சதுரங்க வீரர்கள் முக்கியமாக கருதும் போட்டிகளில் 2021ஆம் ஆண்டு தங்கப் பதக்கம் வென்றார். அந்தப் போட்டிகளின் போது, மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டுள்ளார். குகேஷ் தனது வயதுக்கு உட்பட்டோர் விளையாடும் போட்டிகளில் மட்டுமல்லாமல் அனைத்து வயதினரும் கலந்து கொள்ளும் ஓபன் போட்டிகளிலும் பங்கேற்று சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார். அதன்பிறகு பிரான்ஸில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் ஓபன் போட்டிகள், 2021ஆம் ஆண்டு நார்வே மாஸ்டர்ஸ் போட்டிகள், 2022ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்ற சாம்பியன் மெனார்கா போட்டிகள், 2023ஆம் ஆண்டு நடைபெற்ற எலைட் நார்வே போட்டிகள் உட்பட 10 ஓபன் போட்டிகளில் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றுள்ளார்.


உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தருணத்தில்...

உலக சாம்பியனான குகேஷ் 

14 சுற்றுகளைக் கொண்ட இந்த போட்டியில் 7.5 புள்ளிகளை பெறும் வீரர் சாம்பியன் பட்டத்தை வெல்வார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றிருந்தார். 2-வது சுற்று டிராவில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 3-வது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் பின்னர் நடைபெற்ற அடுத்த 6 சுற்றுகளும் தொடர்ச்சியாக டிராவில் முடிவடைந்தன. இதனால் இருவரும் 4.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற 11வது சுற்றில் குகேஷ், 12வது சுற்றில் டிங் லிரெனுடன் வெற்றி பெற, 13வது சுற்று டிராவில் முடிந்தது. இதன் காரணமாக 6.5 புள்ளிகளுடன் இருவரும் சமநிலையில் இருந்தனர். இதனால் இந்த தொடரில் வெற்றி பெறப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் 14வது சுற்று தொடங்கியது. இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த டி.குகேஷ் 7.5 புள்ளிகளுடன் வெற்றி பெற்று உலக சாம்பியனானார்.

குகேஷிற்கு குவியும் வாழ்த்து

இதன்மூலம் இளம் வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றவர் என்ற பெருமையை தன்வசப்படுத்தியுள்ளார் டி.குகேஷ். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்