தனி ஒருவனாக இந்திய கிரிக்கெட் அணியை தூக்கி நிறுத்திய நிதிஷ் குமார் ரெட்டி! யார் இந்த நிதிஷ் குமார்?

இந்திய அணி தற்போது பார்டர் கவாஸ்கர் கோப்பையில் விளையாடி வருகிறது. இந்த தொடரை வென்றால் தான் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கு பெற முடியும். இப்படி இக்கட்டான சூழ்நிலையில் விளையாடும் இந்திய அணி பேட்டிங்கில் படுமோசமாக சொதப்பி வருகிறது.

Update: 2024-12-30 18:30 GMT
Click the Play button to listen to article

இந்திய அணி தற்போது பார்டர் கவாஸ்கர் கோப்பையில் விளையாடி வருகிறது. இந்த தொடரை வென்றால்தான் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கு பெற முடியும். இப்படி இக்கட்டான சூழ்நிலையில் விளையாடும் இந்திய அணி, பேட்டிங்கில் படுமோசமாக சொதப்பி வருகிறது. முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா,விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோர் சொதப்பி வருகின்றனர். ஆனால் ஒருவர் மட்டும் இந்திய அணியை தூக்கி நிறுத்தியுள்ளார். அது யாரென்றால் மூன்றாவது டெஸ்டில் சதமடித்து அசத்திய ஆந்திராவை சேர்ந்த நிதிஷ் குமார் ரெட்டிதான். இந்த தொடரின் ஆரம்பித்திலிருந்தே தனது ஆதிக்கத்தை அவர் காட்டிவந்தார். தற்போது சதமடித்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். இந்த கட்டுரையில் நிதிஷ் குமார் ரெட்டியை பற்றி விரிவாக பார்ப்போம்.


தந்தை முத்யாலா ரெட்டியுடன் கிரிக்கெட் வீரர் நிதிஷ்

நிதிஷ் குமார் ரெட்டியின் ஆரம்ப காலம்

26 மே 2003 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் பிறந்தார் நிதிஷ். இவரது தந்தை முத்யாலா ரெட்டி, ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் பணிபுரிந்தார். தனது 5 வயதில் பிளாஸ்டிக் மட்டையுடன் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார் நிதிஷ். அவரின் தந்தை முத்யாலா, பணி நிமித்தமாக உதய்பூருக்கு மாற்றம் செய்யப்பட்டபோது வேலையை விட்டுவிட்டார். தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கைகாக தனது வேலையை தியாகம் செய்தார் முத்யாலா ரெட்டி. நிதிஷ் VDCA முகாம்களுக்குச் சென்று ஆரம்பத்தில் உலகத்தரம் வாய்ந்த பயிற்சியாளர்களான குமாரசாமி, கிருஷ்ணா ராவ் மற்றும் வடேகர் ஆகியோரிடம் பயிற்சி பெற்றார். அதன்பிறகு 12 வயதுக்குட்பட்ட மற்றும் 14 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளின் போது, ​​முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், தேர்வாளருமான எம்.எஸ்.கே. பிரசாத் நித்திஷால் அடையாளம் காணப்பட்டு, மதுசூதன ரெட்டி மற்றும் சீனிவாச ராவ் ஆகியோரின் பயிற்சியின் கீழ் கடப்பாவில் உள்ள ஆந்திரா கிரிக்கெட் அசோசியேஷன் (ஏசிஏ) அகாடமியில் பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடியபோது

ஐபிஎல்-லில் அசத்தல்

நிதிஷை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 2023 இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்தில் 20 லட்சம் ரூபாய்க்கு எடுத்தது . அவர் அந்த லீக்கில் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அங்கு அவர் ஒரு சில ஓவர்கள் மட்டும் பந்து வீசினார். ஆனால் பேட்டிங் செய்ய முடியவில்லை. 2024 சீசனில் நிதிஷ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 142 ஸ்டிரைக் ரேட்டுடன் 303 ரன்கள் எடுத்ததன் மூலம் ஆண்டின் வளர்ந்து வரும் சிறந்த வீரருக்கான விருதை வென்றார் . போட்டி முழுவதும் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தினார். 2025 ஐபிஎல் ஏலத்தில் ஹைதராபாத் அணியின் மூலம் ரூ. 6 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார்.


வங்கதேச அணிக்கு எதிராக டி20 போட்டியில் அறிமுகமானபோது

நிதிஷின் சர்வதேச தொடக்கம்

வங்கதேசத்திற்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2024 அக்டோபர் 6 அன்று குவாலியரில் நிதிஷ் தனது டி20 போட்டியில் அறிமுகமானார். 9 அக்டோபர் 2024 அன்று டெல்லியில் நடைபெற்ற 2வது போட்டியில், 35 பந்துகளில் 217 ஸ்டிரைக் ரேட்டுடன் 74 ரன்கள் எடுத்தார். அதே போட்டியில், அவர் 2/23 என்று சிறப்பாக பந்துவீசினார். மஹ்முதுல்லா உள்ளிட்ட முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை எடுத்து ஆட்ட நாயகன் விருது வாங்கினார். தொடரில் அவரது சிறப்பான ஆட்டத்தால், பார்டர்-கவாஸ்கர் டிராபி அணியில் இடம் பெற்றார். இந்த டெஸ்ட் தொடரின்போது பெர்த்தில் 22 நவம்பர் 2024 அன்று இந்தியாவுக்காக டெஸ்டில் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 41 ரன்கள் எடுத்த நிதிஷ் குமார், 2வது இன்னிங்ஸிலும் 38 ரன்கள் எடுத்தார். மேலும் அடிலைடில் நடைபெற்ற 2வது டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸிலும் தலா 42 ரன்கள் எடுத்தார். இதனால் இந்தியா ஃபாலோ ஆணை தவிர்த்தது.


நிதிஷை விமர்சனம் செய்த கவாஸ்கர்

கவாஸ்கரின் விமர்சனம்

மெல்பர்ன் மைதானத்தில் கூடியிருக்கும் 70000-க்கும் அதிகமான ரசிகர்களும் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறார்கள். வர்ணனையில், 'What a moment for this young man...' என விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பெர்த் டெஸ்ட்டில் இந்திய அணியின் தொப்பியை வாங்கி அறிமுகமானபோது யாருமே அதை பெரிய விஷயமாக கருதவில்லை. சொல்லப்போனால் நிதிஷ் ரெட்டியின் தேர்வை கடுமையாக விமர்சனம் செய்துகொண்டிருந்தனர். 'நான் நிதிஷ் ரெட்டியை குறைவாக மதிப்பிடுகிறேன் என நினைக்க வேண்டாம். அவர் திறமைசாலியாக இருக்கலாம். ஆனால், அவருக்கு இன்னும் சில காலம் கழித்து இந்த வாய்ப்பை வழங்கியிருக்கலாம். அவர் எத்தனை முதல்தரப் போட்டிகளில் ஆடியிருக்கிறார்?' என முதல் நாளே கவாஸ்கர் கடுமையாக விமர்சித்திருந்தார்.


சதமடித்த அசத்திய நிதிஷ் குமார் ரெட்டி

நம்பிக்கை வைத்த இந்திய அணி நிர்வாகம்

இந்திய அணிக்காக முதல் பந்தை எதிர்கொள்வதற்கு முன்பாகவே முதல் பந்தை வீசுவதற்கு முன்பாகவே அவர் மீது விமர்சனங்கள் விழ தொடங்கின. சீனியர்களின் செயல்பாடுகளையே விமர்சனங்கள் பாதிக்கும்போது நிதிஷ் ரெட்டியை பாதிக்காமலா இருக்கும். ஆனால், அதற்கெல்லாம் பெரிதாக காது கொடுக்காமல் அணிக்குள் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்வதில் கவனம் செலுத்தினார். கடந்த மூன்று போட்டிகளிலுமே அணிக்கு தேவையான இக்கட்டான சமயத்தில் பயனுள்ள ரன்களை எடுத்துக் கொடுத்திருந்தார். இதனால்தான் மெல்பர்ன் டெஸ்ட்டில் அவரின் இடத்தையும் தக்கவைத்துக் கொண்டார். கில்லை பென்ச்சில் வைத்தபோதும் நிதிஷ் மீது அணி நிர்வாகம் கை வைக்கவில்லை.


பார்டர் கவாஸ்கர் போட்டியில் அசத்திவரும் நிதிஷ் குமார்

பிரஷரை சமாளித்த நிதிஷ்

அரங்கம் நிறைந்திருந்த மெல்பர்ன் மைதானத்துக்குள் நிதிஷ் ரெட்டி பேட்டுடன் இறங்கிய போது இந்திய அணி பரிதாப நிலையில் இருந்தது. 191-6 என்ற சூழலில் ஃபாலோ ஆனை தவிர்க்க போராடிக் கொண்டிருந்தனர். அப்படியொரு இக்கட்டான கட்டத்தில் வாஷிங்டன்னுடன் கூட்டணி அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்க ஆரம்பித்தார். முழுக்க முழுக்க நிதானமான ஆட்டத்தை ஆடாமல் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து இருவருமே சிறப்பாக ஆடினர். ஏதுவான பந்துகள் சிக்கும் போது பவுண்டரிக்களை அடிப்பதையும் நிதிஷ் வாடிக்கையாக வைத்துக் கொண்டார். அணியின் சீனியர் வீரர்களிடம் என்ன மாதிரியான ஆட்டத்தை எதிர்பார்த்தோமோ அதை நிதிஷ் ரெட்டி ஆடிக்கொடுத்தார். 80 ஓவர்கள் முடிந்தவுடன் நியூ பாலில் இந்தக் கூட்டணியை பிரித்து விடலாம் என நினைத்தனர். ஆனால், நியூபாலையும் நிதிஷ் ரெட்டியும் வாஷிங்டனும் சிறப்பாக எதிர்கொண்டனர். இதன்பிறகு பீல்டை வைத்து விளையாட ஆரம்பித்தனர். டைட்டாக அட்டாக் செய்ய முயன்றனர். போலண்டே அலெக்ஸ் கேரியை ஸ்டம்புக்கு அருகே நிற்க வைத்தெல்லாம் உளவியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்தார். நிதிஷ் ரெட்டி அதற்கும் பணிந்து போகவில்லை. தொடர்ந்து அட்டாக் செய்தே ஆடினார். அவர் 80 ரன்களை கடந்திருந்த சமயத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் சீக்கிரமே டீ ப்ரேக் விட்டார்கள். மழை வேறு பெய்ததால் ஆட்டம் தொடங்க இன்னும் தாமதமானது. கடைசி செஷன் தொடங்கியபோது முன்பிருந்த மொமண்டம் இல்லை. அதை உணர்ந்து கொஞ்சம் நிதானமாக நின்றும் ஆடினார். ஒரு வழியாக 99 ரன்களை எட்டியபோது வாஷிங்டனும் பும்ராவும் அடுத்தடுத்து அவுட். இன்னும் ஒரு விக்கெட்தான் மீதமிருக்கிறது. அது ஒரு தனி அழுத்தம். ஆனால், அதையெல்லாம் போட்டு குழப்பிக் கொள்ளாமல் போலண்ட் வீசிய பந்தை மிட் ஆனின் தலைக்கு மேல் பவுண்டரியாக அடித்து சதத்தை நிறைவு செய்தார். இந்திய அணியும் ஓரளவுக்கு சரிவிலிருந்து மீண்டது.


சதமடித்தபொழுது கண்ணீர் விட்டு அழுத்த நிதிஷின் தந்தை

தந்தையின் கனவு

நிதிஷின் சதத்தை மைதானத்தில் நேரில் பார்த்த அவரின் தந்தை மனமுருகி ஆனந்த கண்ணீர் சிந்தினார். மகனுக்காக தனது அரசு வேலையை துறந்து கூடவே இருந்து கிரிக்கெட் பயிற்சி பெற உதவியவர். மகன் இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்பது அவரின் கனவு. அது நிறைவேறிய தருணத்தில் மனிதர் பூரித்துப் போய்விட்டார்!

Tags:    

மேலும் செய்திகள்