மீண்டும் சென்னை அணியில் களமிறங்கும் தோனி! உற்சாகத்தில் ரசிகர்கள் - ஐபிஎல் ஸ்பெஷல்

ஐபிஎல் 2025-ஆம் ஆண்டு சீசனுக்கு முன்பு ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தங்கள் அணியில் தக்க வைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை தற்போது அறிவித்திருக்கின்றன. சில அணிகள் அதிகபட்சமாக 6 வீரர்களையும், குறைந்தபட்சம் 2 வீரர்களையும் தக்க வைத்து கொண்டுள்ளன.

Update: 2024-11-04 18:30 GMT
Click the Play button to listen to article

ஐபிஎல் 2025-ஆம் ஆண்டு சீசனுக்கு முன்பு ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தங்கள் அணியில் தக்க வைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை தற்போது அறிவித்திருக்கின்றன. சில அணிகள் அதிகபட்சமாக 6 வீரர்களையும், குறைந்தபட்சம் 2 வீரர்களையும் தக்க வைத்து கொண்டுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(KKR), மும்பை இந்தியன்ஸ் (MI), லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் LSG), சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH), குஜராத் டைட்டன்ஸ் (GT) ஆகிய அணிகள் 5 வீரர்களை தக்க வைத்துள்ளன. பஞ்சாப் 2, ஆர்சிபி 3, டெல்லி 4, ராஜஸ்தான் ரோயல்ஸ் 6  என வீரர்களை தக்க வைத்துள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தல தோனியை சிஎஸ்கே அணி அன்கேப்ட் வீரராக ரீடெயின் செய்துள்ளது. இதன்மூலம் வரும் ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாடுவார் என்ற சிக்னல் வெளிப்பட்டுள்ளது. அணி வாரியாக ரிடென்ஷன் வீரர்கள் விவரம் பின்வருமாறு...


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் மற்றும் முன்னாள் கேப்டன் தோனி 

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் அவர்களின் வீரர் தக்கவைப்பு யுக்தி. சென்னை அணியின் தக்கவைப்பு தத்துவம் என்னவென்றால் முதலில் அனுபவம் வாய்ந்த வீரர்களை முன்னுரிமைப்படுத்துதல். அதன்பிறகு நீண்டகால திட்டமிடல் மற்றும் வீரர்களுக்கு நம்பிக்கை அளித்தல். பின்னர் முக்கிய வீரர்களை பல சீசன்களாக தக்கவைத்தல். இதுதான் சென்னை அணியின் பலம். 2025-ஆம் ஆண்டு சீசனிற்கு 5 வீரர்களை சிஎஸ்கே தக்கவைத்துள்ளது. முதலில் சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜை 18 கோடிக்கும், அனுபவம் வாய்ந்த ஆல்ரவுண்டர் ஜடேஜாவை 18 கோடிக்கும், பதிரானாவை 13 கோடிக்கும், சிவம் துபேவை 12 கோடிக்கும், அன்கேப் பிளேயராக முன்னாள் கேப்டன் தோனியை 4 கோடிக்கும் தக்கவைத்துள்ளது. தற்போது மீத ஏலத்தொகையாக சிஎஸ்கே அணியிடம் 55 கோடி ரூபாய் உள்ளது. 


கேப்டன் சஞ்சு சாம்சனுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் 

ராஜஸ்தான் ராயல்ஸ் 

ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணி 2008-ல் முதல் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது. இளம் திறமைகளை கண்டறிவதிலும், வெளிநாட்டு வீரர்களை திறம்பட பயன்படுத்துவதிலும் சிறந்து விளங்குகிறது. ராஜஸ்தான் ராயல்ஸின் தக்கவைப்பு முறை எப்படியென்றால், இளம் இந்திய வீரர்களுக்கு முன்னுரிமை அளிப்பார்கள். அதன்பிறகு சர்வதேச அனுபவ வீரர்களை ஏலத்தில் எடுப்பார்கள். குறிப்பாக விலை குறைவான வீரர்களை ஏலத்தில் எடுத்து திறமையாக பயன்படுத்துவார்கள். 2025-ஆம் ஆண்டு சீசனிற்கு 5 வீரர்களை தக்கவைத்துள்ளது. முதலில் சஞ்சு சாம்சனை 18 கோடிக்கும், ஜெய்ஸ்வாலை 18 கோடிக்கும், ரியான் பராக்கை 14 கோடிக்கும், துரூவ் ஜூரலை 14 கோடிக்கும், ஷிம்ரன் ஹெட்மயரை 11 கோடிக்கும், அன்கேப் பிளேயராக சந்தீப் சர்மாவை 4 கோடி ரூபாய்க்கும் தக்கவைத்துள்ளது. அஸ்வின், சஹால், புட்டலர் உள்ளிட்ட முக்கிய வீரர்களை கழட்டிவிட்டுள்ளது. தற்போது ராஜஸ்தான் அணியிடம் 41 கோடி மட்டுமே மீத ஏலத் தொகை உள்ளது.


மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா 

மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ், 2025 சீசனுக்கான தங்கள் அணி வீரர்களின் தக்கவைப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்த அணி, முக்கிய மாற்றங்களுடன் புதிய சீசனை எதிர்கொள்கிறது. ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியும், அனுபவமிக்க வீரர்களின் தொடர்ச்சியும் அணியின் எதிர்கால வெற்றிக்கு வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025-ஆம் ஆண்டு சீசனிற்கு 5 வீரர்களை மும்பை அணி தக்கவைத்துள்ளது. தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா 18 கோடிக்கும், சூர்யகுமார் யாதவ் 16.35 கோடிக்கும், ஹர்திக் பாண்டியா 16.35 கோடிக்கும், ரோஹித் சர்மா 16.30 கோடிக்கும், திலக் வர்மா 8 கோடிக்கும் தக்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தற்போது மீத ஏலத் தொகை 45 கோடி உள்ளது.


கொல்கத்தா அணியின் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரசலும் - முன்னாள் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரும் 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

மூன்று முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 2025 சீசனுக்கான தங்களது அணி வீரர்களின் தக்கவைப்பு பட்டியலை அறிவித்துள்ளது. ஷாருக்கான் உரிமையாளராக உள்ள இந்த அணி, புதிய சீசனில் மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்லும் நோக்கத்துடன் முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. கேகேஆர் அணி தரப்பில் ரிங்கு சிங் ரூ.13 கோடி, வருண் சக்கரவர்த்தி ரூ.12 கோடி, சுனில் நரைன் ரூ.12 கோடி, ரஸல் ரூ.12 கோடி, ஹர்சித் ராணா ரூ.4 கோடி, ரமன்தீப் சிங் ரூ.4 கோடிக்கு தக்க வைக்கப்பட்டுள்ளனர். இன்னொரு அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால் கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரரை வெளியே விட்டுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் மீதம் இருக்கும் தொகை ரூ.51 கோடி.

டெல்லி கேபிட்டல்ஸ்

டெல்லி கேபிடல்ஸ், 2025 ஐபிஎல் சீசனுக்காக முக்கிய வீரர்களை தனது அணியில் தக்கவைத்துள்ளது. ஆனால் கேப்டன் ரிஷப் பந்த்தை கழட்டிவிட்டுள்ளது. கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை மீண்டும் தேர்வு செய்துள்ளது. 2025 சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணி தங்களது முதல் ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கான முயற்சியில் தீவிரமாக உள்ளது. அனுபவமிக்க வீரர்களையும், இளம் திறமைகளையும் சமநிலையில் வைத்திருப்பது அணியின் முக்கிய உத்தியாக உள்ளது. வரும் ஏலத்தில் சில முக்கிய வீரர்களை சேர்ப்பதன் மூலம் அணியை மேலும் வலுப்படுத்த நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 2025 சீசனுக்கான தங்களது அணி வீரர்களின் தக்கவைப்பு பட்டியலை அறிவித்துள்ளது. அக்சர் பட்டேல் 16 கோடியே 50 லட்சத்துக்கும், குல்தீப் யாதவ் 13 கோடியே 25 லட்சத்துக்கும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 10 கோடிக்கும், அபிஷேக் போரெல் 4 கோடிக்கும் தக்கவைத்துள்ளனர்.


குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் 

குஜராத் டைட்டன்ஸ்

குஜராத் டைட்டன்ஸ் அணி 2025 ஐபிஎல் சீசனுக்கான தங்களது வீரர்களை அறிவித்துள்ளது. ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற்றிய பிறகு, ஷுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த மூன்று சீசன்களில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்திய இந்த அணி, ஹர்திக் பாண்டியாவின் வெற்றிடத்தை நிரப்ப முடியாமல் தவித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் மீண்டும் கோப்பையை வெல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இளம் கேப்டன் ஷுப்மன் கில்லின் தலைமையில் அணி புதிய உத்வேகத்துடன் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது  2025 சீசனுக்கான தங்களது அணி வீரர்களின் தக்கவைப்பு பட்டியலை அறிவித்துள்ளது. ரஷித் கான் 18 கோடிக்கும், சுப்மன் கில் 16.50 கோடிக்கும், சாய் சுதர்சன் 8.50 கோடிக்கும், ராகுல் தேவாட்டியா 4 கோடிக்கும், ஷாரூக்கான் 4 கோடிக்கும் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இப்பொழுது குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் மீதம் இருக்கும் தொகை ரூ.69 கோடி.


பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ரீடைன் செய்யப்பட்ட வீரர்கள் 

பஞ்சாப் கிங்ஸ்

பஞ்சாப் கிங்ஸ் அணி 2024 சீசனில் சிறப்பான செயல்திறன் காட்டியதைத் தொடர்ந்து, 2025 சீசனுக்கான தக்கவைக்கப்பட்ட வீரர்களை அறிவித்துள்ளது. இதில் ஷிகர் தவான், அர்ஷிதீப் சிங் உள்ளிட்ட முக்கிய வீரர்களை கழட்டிவிட்டுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி, இளம் வீரர்கள் மற்றும் அனுபவ வீரர்களின் கலவையை சரியான விகிதத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளது. ப்ரப்சிம்ரன் சிங் போன்ற இளம் வீரர்கள் அணியின் எதிர்காலத்தை வலுப்படுத்துகின்றனர். 2025 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கான அடித்தளத்தை அமைத்துள்ளது. தற்போது 2025 சீசனுக்கான தங்களது அணி வீரர்களின் தக்கவைப்பு பட்டியலை அறிவித்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி இரண்டு அன்கேப் பிளேயர்களை, அதாவது, ஷாசாங் சிங்கை 5.5 கோடிக்கும், பிராப்சிம்ரன் சிங்கை 4 கோடி ரூபாய்க்கும் தக்கவைத்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் மீதம் இருக்கும் ஏலத் தொகை ரூ.110.5 கோடி.


21 கோடிக்கு பெங்களூரு அணியால் ரீடெய்ன் செய்யப்பட்ட விராட் கோலி 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 2025 ஐபிஎல் சீசனுக்கான தங்களது வீரர்களை அறிவித்துள்ளது. ஆர்சிபி அணி தனது முக்கிய பேட்ஸ்மேன்களான விராட் கோலியை மட்டும் தக்கவைத்துள்ளது. அதன்பின் இளம் வீரரான ரஜத் பாடிடார் மற்றும் யாஷ் தயாலை தக்கவைத்துள்ளது, அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்ட முடிவாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஆர்சிபி ரசிகர்கள் இந்த முடிவுகளை வரவேற்றுள்ளனர். வரும் சீசனில் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் ஏலத்தில் சரியான வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது 2025 சீசனுக்கான தங்களது அணி வீரர்களின் தக்கவைப்பு பட்டியலை அறிவித்துள்ளது. ஆர்சிபி அணியில் விராட் கோலி, ரஜத் பட்டிதர், யாஷ் தயாள் ஆகிய மூவரும் ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக விராட் கோலிக்கு ரூ.21 கோடி ஒப்பந்தமும், ரஜத் பட்டிதருக்கு ரூ.11 கோடி ஒப்பந்தமும், யாஷ் தயாளுக்கு ரூ.5 கோடி ஒப்பந்தமும் அளிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது ஆர்சிபி அணியிடம் மீதம் இருக்கும் தொகை ரூ.83 கோடி.


ஹைதராபாத் அணிக்காக விளையாடிய நடராஜன் மற்றும் பேட் கம்மின்ஸ்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணி 2025 ஐபிஎல் தொடருக்கான தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஹைதராபாத் அணி இளம் வீரர்களை மையமாக கொண்டு தனது அணியை உருவாக்கியுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வரும் ஏலத்தில் பெரிய முதலீடுகள் செய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக பேட்டிங் பிரிவை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. 2016ல் கோப்பை வென்ற இந்த அணி, மீண்டும் வெற்றி பெற புதிய உத்தியுடன் களமிறங்க உள்ளது. ரசிகர்கள், அணியின் புதிய உத்தியை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக நிதிஷ் ரெட்டி மற்றும் அபிஷேக் ஷர்மா போன்ற இளம் வீரர்களின் செயல்பாடு முக்கியமானதாக இருக்கும். தற்போது 2025 சீசனுக்கான தங்களது அணி வீரர்களின் தக்கவைப்பு பட்டியலை அறிவித்துள்ளது. பாட் கம்மின்ஸ் 18 கோடிக்கும், அபிஷேக் சர்மா 14 கோடிக்கும், நிதிஷ் ரெட்டி 6 கோடிக்கும், ஹென்ரிச் கிளாசன் 23 கோடிக்கும், டிராவிஸ் ஹெட் 14 கோடிக்கும் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இப்பொழுது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் மீதம் இருக்கும் தொகை ரூ.45 கோடி.


21 கோடிக்கு லக்னோ அணியால் தக்கவைக்கப்பட்ட நிக்கோலஸ் பூரான் 

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 2025 ஐபிஎல் சீசனுக்கான தங்களது வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. முக்கிய வீரர்களை தக்கவைத்துக்கொண்ட அதேவேளை, சில முக்கியமான வீரர்களையும் அந்த அணி கழட்டிவிட்டுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தனது முக்கிய வீரர்களை தக்கவைத்துக்கொண்டதன் மூலம் 2025 சீசனில் வலுவான போட்டியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் கே.எல் ராகுல், ஸ்டாயினிஸ் மற்றும் குருனாள் பாண்டியா ஆகியோரை கழட்டியும் விட்டுள்ளது. இதனால் லக்னோ அணியின் ரசிகர்கள் கொஞ்சம் குழப்பம் அடைந்துள்ளனர். அதேவேளை அணியின் சமநிலை மற்றும் இளம் திறமைகளின் கலவை வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. தற்போது 2025 சீசனுக்கான தங்களது அணி வீரர்களின் தக்கவைப்பு பட்டியலை லக்னோ அறிவித்துள்ளது. நிக்கோலஸ் பூரான் 21 கோடி ரூபாய்க்கும், ரவி பிஸ்னாய் 11 கோடி ரூபாய்க்கும், மாயங் யாதவ் 11 கோடி ரூபாய்க்கும்,மோஷின் கான் 4 கோடி ரூபாய்க்கும், ஆயுஷ் பதோனி 4 கோடி ரூபாய்க்கும் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இப்பொழுது லக்னோ அணியிடம் மீதம் இருக்கும் ஏலத் தொகை ரூ.69 கோடி.

Tags:    

மேலும் செய்திகள்