மருந்து, மாத்திரை இல்லாமல் நோயை குணப்படுத்த முடியுமா? அக்குபஞ்சர் மருத்துவத்தை நம்பலாமா?

அக்குபஞ்சரை பொருத்தவரை வியாதிகளுக்கு பெயரே கிடையாது, எப்பேர்பட்ட பெரிய வியாதி என்று பிற மருத்துவங்களில் கூறப்பட்டாலும் அதை குளிர் மற்றும் சூடு சம்பந்தப்பட்ட வியாதி என இரண்டே முறைகளுக்குள் கொண்டுவந்து சிகிச்சை அளிக்கமுடியும்.

Update:2024-11-12 00:00 IST
Click the Play button to listen to article

கடந்த 50 ஆண்டுகளில் பெயரே தெரியாத அளவிற்கு நோய்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. அவற்றில் பலவற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் அதனால் தற்காலிக தீர்வுதான் கிடைக்கிறதே தவிர நிரந்தர தீர்வு என்பது கிடைப்பதில்லை. ஆனால் அக்குபஞ்சர் மருத்துவத்தின்மூலம் வியாதியை ஆரம்பகட்டத்திலேயே முழுமையாக குணப்படுத்த முடியும் என்கிறார் டாக்டர் லூர்து சேத். குறிப்பாக, அக்குபஞ்சரை பொருத்தவரை வியாதிகளுக்கு பெயரே கிடையாது, எப்பேர்பட்ட பெரிய வியாதி என்று பிற மருத்துவங்களில் கூறப்பட்டாலும் அதை குளிர் மற்றும் சூடு சம்பந்தப்பட்ட வியாதி என இரண்டே முறைகளுக்குள் கொண்டுவந்து சிகிச்சை அளிக்கமுடியும் என்கிறார் அவர். மேலும் உணவு கட்டுப்பாடு இருந்தாலே எந்த வியாதியையும் வரமால் தடுக்கமுடியும் எனக் கூறும் அவர் அக்குபஞ்சர் சிகிச்சைமுறைகள் குறித்தும், அதிலிருக்கும் சிறப்புகள் குறித்தும் நம்முடன் விளக்கமாக உரையாடுகிறார்.


சீனாவில் கண்டறியப்பட்ட அக்குபஞ்சர் மருத்துவம்

அக்குபஞ்சர் இந்தியாவிற்கு பொருந்தகூடிய மருத்துவமுறையா?

நாடுகளுக்கும் இந்த மருத்துவமுறைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மனிதர்களுக்கு வியாதிகள் ஏற்படுவது இயற்கைதான். கடந்த நூறு வருடங்களில் நிறைய வியாதிகள் உருவாகியிருக்கின்றன. அவற்றில் சிலவற்றை என்ன வியாதி என்றே கண்டுபிடிக்க முடியாமல் நிறையப்பேர் இறந்துபோயுள்ளனர். நீண்டகாலங்களுக்கு முன்பு இயற்கை மருத்துவத்தால்தான் வியாதிகளை குணப்படுத்திவந்தனர். ஆனால் காலபோக்கில் அறிவியல் வளர வளர பல்வேறு மருத்துவமுறைகள் வந்துவிட்டன. அக்குபஞ்சர் மருத்துவமுறை 1988இல் இந்தியாவில் அறிமுகமானது. உலகில் வேறு சில இடங்களில் இந்த மருத்துவமுறை பின்பற்றப்பட்டாலும் சீனாவில்தான் இந்த மருத்துவமுறை தோன்றியதாக சொல்கிறார்கள். இப்போது இந்த மருத்துமுறை பெரும் வளர்ச்சியடைந்து, இந்தியாவில் நிறைய மருத்துவர்கள் இருக்கிறார்கள். காலபோக்கில் அரசு இந்த சிகிச்சைக்கான அங்கீகாரத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக சில கட்டுப்பாடுகளை அரசு விதித்துவருகிறது. குணப்படுத்தவே முடியாத பல வியாதிகளை அக்குபஞ்சர் மருத்துவத்தின்மூலம் குணப்படுத்தியுள்ளனர். 


நாடித்துடிப்பை வைத்து பிரச்சினைகளை கண்டறியலாம்

அக்குபஞ்சர் மருத்துவத்துக்கும் மற்ற மருத்துவத்துக்குமுள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை கூறுங்கள். மேலும் இந்த சிகிச்சையில் மருந்து, மாத்திரைகளை பயன்படுத்தாமல் ஊசி மூலமே நோய்களை குணப்படுத்துவது சரியான தீர்வா?

இயற்கை மருந்துக்கும் உடலுக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. கீழாநெல்லியை சாப்பிட்டால் அது கல்லீரல் செல்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல் ஒவ்வொரு மூலிகைக்கும் ஏற்றவாறு உடலின் ஒவ்வொரு உறுப்புகள் எதிர்வினையாற்றுகின்றன. ஆனால் ரசாயனங்களுக்கு உடல் எப்படி எதிர்வினையாற்றும் என்பது குறித்து நிறையப்பேருக்கு தெரியாவிட்டாலும் அந்த மருத்துவ முறைகளைத்தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். அக்குபஞ்சர் மருத்துவமுறைப்படி ரசாயனங்கள் உடலில் எதிர்மறையான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். ஊசி குத்துவதால் எப்படி வியாதி குணமாகும் என்பதுதான் முக்கிய கேள்வியாக இருக்கிறது. உடல் மட்டுமல்லாமல் உலகமே எனர்ஜிதான். எதை எடுத்துக்கொண்டாலும் அது பஞ்சபூதத்திற்குள்தான் இருக்கும். ஒரு இடத்தில் எனர்ஜி குறைந்தாலும் அதிகமானாலும் அங்கு பிரச்சினைதான். அக்குபஞ்சரை பொருத்தவரை எனர்ஜியை, அதிகமாக இருக்கும் இடத்திலிருந்து குறைவாக இருக்கும் இடத்திற்கு கடத்துவதுதான். உடலிலுள்ள மொத்தம் 12 உறுப்புகளுக்கும் சக்தி ஓட்ட பாதைகள் இருக்கின்றன. அந்த பாதைகளில் பஞ்சபூதங்கள் எங்கெல்லாம் அடைபட்டிருக்கிறதோ அவற்றை தூண்டிவிட்டு, சரியான உறுப்புகளுக்கு சென்றுசேர வழி ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது. இதனால் அந்தந்த உறுப்புகளில் இருக்கும் பிரச்சினை சரிசெய்யப்படுகிறது. சக்தி குறைபாட்டால் ஒரு உறுப்பு அதன் வேலையை சரிவர செய்யாததுதான் வியாதி எனப்படுகிறது. ஆனால் உடலில் பிரச்சினை குறைவாக இருக்கும்போதே நிறையப்பேர் அதற்கான மருத்துவர்களை அணுகுவதில்லை. எப்போது பிரச்சினை தீவிரமடைகிறதோ அப்போது தீவிர சிகிச்சையளிக்கும் மருத்துவர்களை தேடிச் செல்கின்றனர்.


அக்குபஞ்சர் சிகிச்சைக்கும் உணவுக்கும் இடையேயான தொடர்பு

அக்குபஞ்சரை பொருத்தவரை உணவு கட்டுப்பாடு அவசியம் என்கிறது. பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும் என வலியுறுத்துகிறது. உடலில் இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகள் இயங்கிக்கொண்டே இருக்கவேண்டும். ஆனால் வயிறு அப்படியல்ல. அதை நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துகொள்ள முடியும். 50 வருடங்களுக்கு முன்பெல்லாம் இப்போது கிடைக்கும் அளவிற்கு உணவுகளே கிடையாது. நிறையப்பேர் வயல்களில் வேலை செய்வார்கள். அதனால் மூன்று வேளை சாப்பிட்டாலும் வேலை செய்யும்போது அது செரித்துவிடும், நன்றாக தூக்கமும் வரும். அவர்களுக்கு வியாதிகள் வரவில்லை. ஆனால் இப்போது வேலையே செய்யாமல் சாப்பிட்டுக்கொண்டே இருப்பதால் வியாதிகளும் வருகின்றன. இப்போதுதான் கொஞ்சம்பேர் உணவுக் கட்டுபாட்டின்மீது கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். விழிப்புணர்வு வர தொடங்கியுள்ளதால் மற்ற மருத்துவமுறைகளிலும் வருங்காலங்களில் மக்கள் கவனம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோயாளிகள் சிகிச்சைக்கு வரும்போது அலோபதியில் ஸ்டெதஸ்கோப் வைத்து பார்க்கிறார்கள். அதேபோல் ஆயுர்வேதம் மற்றும் சித்தாவில் நாடித்துடிப்பை பார்க்கிறார்கள். அதுபோல் அக்குபஞ்சரில் எப்படி நோயை கண்டறிந்து சிகிச்சையளிக்கிறீர்கள்?

ஏற்கனவே சொன்னதுபோல் உடலில் 12 முக்கிய உறுப்புகள் இயங்கி கொண்டிருக்கின்றன. அவை அனைத்தையுமே நாடித்துடிப்பில் கண்காணிக்க முடியும். 6 உறுப்புகளை ஒரு நாடியிலும் மற்ற 6 உறுப்புகளை மற்றொரு நாடியிலும் பார்த்துவிட்டு அந்த உறுப்புகள் செயல்படுவதை பொருத்து, எந்த உறுப்பில் எனர்ஜி அதிகமாக இருக்கிறதோ அதை எனர்ஜி குறைவாக இருக்கும் உறுப்பிற்கு திசை திருப்பிவிட்டாலே சீராக இயங்க ஆரம்பித்துவிடும். ஆனால் அதற்கு நாடி பிடித்து பார்க்க பழகவேண்டும். ஒவ்வொரு உறுப்பின் நாடித்துடிப்பும் எப்படி இருக்கும் என்பதை முதலில் தெரிந்துகொண்டால்தான், அதில் இருக்கும் மாற்றங்களை கண்டறியமுடியும். உடல் உறுப்புகள் குறித்து நன்கு தேர்ந்த நிபுணர்களாக இருந்தால் நாடித்துடிப்பை பார்க்காமலேயே அறிகுறிகளை வைத்தேகூட பிரச்சினையை கண்டறிய முடியும். உதாரணத்திற்கு, பசியே இல்லை என்பவர்களுக்கு மண்ணீரல் பிரச்சினை இருக்கலாம், ரத்த வாந்தி எடுப்பவர்களுக்கு பித்தப்பை அல்லது கல்லீரல் பிரச்சினை இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.


சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளும் அக்குபஞ்சர் சிகிச்சை முறைகளும்

அக்குபஞ்சரில் பத்தியமுறைகள் உள்ளதா? அல்லது எல்லா நோயாளிகளும் எல்லாவிதமான உணவுகளையும் சாப்பிடலாமா?

அக்குபஞ்சரில் உணவு முறை என்று எதுவும் இல்லை. ஆனால் பொதுவான உணவு முறை இருக்கிறது. வயிறை பாதிக்கும் உணவுகளை தவிர்ப்பது நல்லது. உதாரணத்திற்கு, வயிறு என்பது நிலம் என்ற பஞ்சபூதத்துடன் தொடர்புடையது. வறுத்த பொருட்களை சாப்பிடும்போது அது வயிற்றிலிருக்கும் நீரையெல்லாம் உறிஞ்சிவிடும். நிலத்திலிருக்கும் நீர் உறிஞ்சப்பட்டு வறண்டுபோனால் அந்த நிலம் சரியாக இருக்காது. அதுபோலத்தான் வயிறும். ஒருசிலருக்கு வாயுத்தொல்லை இருந்தால் அவர்கள் அது தொடர்பான உணவுகளை சாப்பிடக்கூடாது. பசித்தால் மட்டுமே சாப்பிடவேண்டும், எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளை சாப்பிடவேண்டும் என்பது அடிப்படையானது. மற்ற உயிரினங்களை பொருத்தவரை சில அசைவம் மட்டும் சாப்பிடும், சில சைவம் மட்டும் சாப்பிடும். ஆனால் மனிதன் மட்டும்தான் இரண்டையும் சாப்பிடும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறான். அசைவம் எளிதில் செரிமானமாகாது என்பதால் அதை இரவில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.


வறுத்த / பொரித்த உணவுகளால் உடலில் ஏற்படும் நீர் வறட்சி

அலோபதியில் எந்த நோய் இருக்கிறதோ அது சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் போகச்சொல்கிறார்கள். ஆனால் அக்குபஞ்சரில் எல்லா வியாதிகளையும் குணப்படுத்த முடியும் என்று சொல்கிறார்கள். அது எப்படி?

அக்குபஞ்சரில் எல்லா வியாதிகளையும் குணப்படுத்த முடியும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. இருப்பினும் இதற்கான கல்விமுறைகளை சரியாக கொண்டுவர வேண்டும். அக்குபஞ்சர் மருத்துவத்தை பொருத்தவரை வியாதி என்பதற்கு பெயரே இல்லை. ஒரு வியாதி சூடு சம்பந்தப்பட்டது, குளிர் சம்பந்தப்பட்டது என்றுதான் மருத்துவர்கள் பிரித்துப் பார்க்கிறார்கள். உதாரணத்திற்கு, ஒருவருக்கு கேன்சர் என்று சொல்வார்கள். அதை அக்குபஞ்சரில் குளிர் வியாதி என்று சொல்கிறார்கள். குளிர் என்பது நீர் சம்பந்தப்பட்டது. அப்படியென்றால் அது சிறுநீரகம் சம்பந்தப்பட்டது. அதை சரிசெய்தால் போதும். அதாவது அங்கு சூடு கிடைக்கும்போது குளிர் போய்விடும். இதய நோய்களும் சிறுநீரகம் சம்பந்தப்பட்டவைதான். வியாதிகளுக்கு பல பெயர்கள் வைக்கப்பட்டாலும் அவை முழுமையாக குணமடைவதில்லை.

Tags:    

மேலும் செய்திகள்