கோவாவை மிஞ்சும் வகையில் ஓர் அழகிய தீவு! நர்மதையின் கரையில் ரம்மிய பயணம்!
மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் நகரம், நர்மதா நதியின் கரையில் அமைந்த அழகிய இடமாக விளங்குகிறது.;
மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் நகரம், நர்மதா நதியின் கரையில் அமைந்த அழகிய இடமாக விளங்குகிறது. இயற்கை அழகு, அருவிகள், பண்டைய கோட்டைகள் மற்றும் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தால் பிரசித்தி பெற்ற இடமாக இது திகழ்கிறது. முந்தைய காலங்களில் இந்நகரம் “ஜபாலிபுரி” என்ற பெயரில் அழைக்கப்பட்டது. மரபியல் தொழில்கள், உயர்தர கல்வி நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்புத் துறை உற்பத்திகள் இங்கே முக்கிய மையங்களாகக் காணப்படுகின்றன. குறிப்பாக, ராணி துர்காவதி பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பெடர்னா மரபணு ஆய்வகம், இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் துப்பாக்கி வண்டித் தொழிற்சாலை ஆகியவை இந்த நகரத்தின் முக்கியத்துவத்தை இன்னும் எடுத்துக்காட்டுகின்றன. இது தவிர பல்வேறு கலாச்சாரங்களின் சங்கமமாகத் திகழும் ஜபல்பூர், பல்லவப் பாரம்பரியத்தின் அடிப்படையில் அமைந்த கலை நிகழ்ச்சிகள் மற்றும் இசை நாடகங்களுக்குப் பெயர் பெற்ற நகரமாகவும் விளங்குகிறது. இப்படிப்பட்ட புகழ் பெற்ற இந்நகரத்தில் காண வேண்டிய மிக முக்கியமான இடங்களை கீழே விரிவாக பார்க்கலாம்.
பேடாகாட் மற்றும் துவாந்தார் அருவி
பார்வையாளர்களை கவரும் துவாந்தார் அருவி
பேடாகாட், மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் நகருக்கு அருகே அமைந்திருக்கும் ஓர் அற்புத நிலப்பரப்பு. இந்த இடம், நர்மதை நதியின் தனித்துவமான பயணத்தால் உருவாகும் இயற்கை எழிலுக்குப் பெயர் பெற்றது. இங்கு நர்மதை நதி வெண்மையான, மிருதுவான பளிங்குக் கற்கள் கொண்ட மலைகளுக்கிடையே அமைதியாகவும், ஆழமாகவும் செல்கிறது. அந்த பளிங்குக் கற்கள் சூரிய ஒளியில் வெண்மையாக மின்னும் போது, நதியின் நீருடன் சேர்ந்தே ஒரு அழகான காட்சியை உருவாக்குகிறது. இந்த அமைதியான ஓட்டத்துக்குப் பிறகு, நதி திடீரென ஒரு பள்ளத்தாக்கில் விழுகிறது. சுமார் 30 அடி உயரத்திலிருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சியே "துவாந்தார் அருவி" என்று அழைக்கப்படுகிறது. துவாந்தார் என்ற சொல்லுக்கு "புகைச்சலை போன்ற அருவி" என்று பொருள். இந்த பெயர் இந்த அருவிக்கு மிகவும் பொருத்தமானது. ஏனெனில், அருவி கீழே விழும்போது ஏற்படும் நீர்த்துகள்கள் காற்றில் கலந்து ஒரு பெரிய புகைமூட்டத்தைப் போல காட்சியளிக்கின்றது. இந்த புகைமூட்டம் அருவியின் மேலே எப்போதும் படர்ந்து இருப்பது ஒரு அபூர்வமான இயற்கை நிகழ்வாக பார்க்கப்படுகிறது. மேலும் பேடாகாட் வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த அருவியின் அழகை பல கோணங்களில் இருந்து ரசிக்கலாம். அருவியின் அருகே சென்று அதன் சீற்றத்தையும், உருவாகும் புகைமூட்டத்தையும் நேரடியாக உணரலாம். மேலும், படகுகளில் சென்று பளிங்குக் கற்களின் அழகையும், நதியின் அமைதியான போக்கையும் கண்டு மகிழலாம். குறிப்பாக, பௌர்ணமி நிலவொளியில் படகு சவாரி செய்வது ஒரு தனித்துவமான அனுபவமாக பார்க்கப்படுகிறது.
கச்சனார் நகர சிவன் கோவில்
கச்சனார் நகர கோவிலில் உள்ள உயரமான சிவபெருமான் சிலை
ஜபல்பூரில் அமைந்துள்ள கச்சனார் நகர சிவன் கோவில் சுற்றுலா பயணிகளுக்கும் பக்தர்களுக்கும் பிரபலமான ஒரு புனித தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் அமைந்துள்ள சிவபெருமானின் உயரமான சிலையால் உலகளாவிய கவனத்தை இத்தலம் பெற்றுள்ளது. இந்த மாபெரும் சிவன் சிலையின் கட்டுமானம், 2004-ஆம் ஆண்டு தொடங்கி, 2006-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ஆம் நாள் பொதுமக்களின் தரிசனத்திற்காகத் திறக்கப்பட்டது. இந்தச் சிலையின் உயரம் ஏறத்தாழ 76 அடி (சுமார் 23 மீட்டர்) ஆகும். இது திறந்த வெளியில் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையின் அடியில் ஒரு ஆழ்ந்த குகை உள்ளது. அதில் பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்த ஜோதிர்லிங்கங்கள் இந்தியா முழுவதும் உள்ள பன்முகமான சிவன் திருத்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டவை. இந்த லிங்கங்களின் உருவங்களோடு சிவபெருமானின் உயர்ந்த சிலை அமைந்திருப்பது இத்தலத்தின் தனி சிறப்பாக பார்க்கப்படுகிறது. பொதுவாகவே மத்தியப் பிரதேசம் வரும் இறை பக்தர்கள் இக்கோவிலுக்கு தவறாது வருகை தந்து, சிவபெருமானின் பேரருளைப் பெறுவதோடு, பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்களையும் தரிசித்து ஆன்மிக நிறைவு கொள்கின்றனர்.
ஜபல்பூரில் ஒரு தீவு!
கோவாவுக்கு சவால் விடும் அழகில் காட்சியளிக்கும் பயலி தீவு
கோவாவுக்கு சவால் விடும் வகையில் ஜபல்பூரில் ஒரு அழகிய தீவு உள்ளது. பயலி என்று அழைக்கப்படும் இது, நர்மதா ஆற்றின் மீதுள்ளது. மலைக்கும் ஆற்றுக்கும் இடையே இயற்கையின் அற்புத காட்சியை அளிக்கிறது. ஜபல்பூருக்கு சுற்றுலா வரும் மக்களில், இளைஞர்களின் ஃபேவரட் ஸ்பாட்டாக பயலி இருக்கிறது. குடும்பத்துடன் நேரத்தை செலவிட இந்த இடம் சிறந்ததாக கருதப்படுகிறது. ஜபல்பூர் ரயில் நிலையத்திலிருந்து சதர் பாண்டினாகா சாலை வழியாக, கோரா பஜாரில் இருந்து நேராகச் சென்று பார்கி அணையை அடையலாம். பார்கி அணையிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இந்த பயலி தீவு அமைந்துள்ளது.
மதன் மஹால் கோட்டை
மதன் மஹால் கோட்டை மற்றும் சமநிலை பாறை காட்சிகள்
மத்தியப் பிரதேசத்தின் மையத்தில் உள்ள ஜபல்பூரில், காலத்தைக் கடந்து நம் பாரம்பரியத்தை நினைவூட்டும் மதன் மஹால் கோட்டை எனும் புகழ்பெற்ற கட்டிடம் இருக்கிறது. இது 11ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர்களின் வாழ்க்கையையும், அவர்களது வீரம் மற்றும் கலாச்சார மரபுகளையும் எடுத்துரைக்கும் ஒரு வரலாற்றுச் சின்னம். இந்த கோட்டை, நகரத்தின் பரபரப்பான பகுதிக்கு சில கிலோமீட்டர் தூரத்தில், ஒரு சிறிய மலையின் உச்சியில் அமைந்திருக்கிறது. இதை பொறியியலோடு கட்டியவர் ராஜா மதன் சிங். அவரது தாயார் ராணி துர்காவதி, கோண்ட்வானா என்ற நாட்டின் துணிவான அரசியாக இருந்தவர். அவர் நினைவாகவே இந்த கோட்டை கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று இந்த கோட்டை சற்றுக் சிதைந்திருந்தாலும், அதில் காணப்படும் ஒவ்வொரு பகுதியும் அந்தக் காலத்து அரச குடும்பம் வாழ்ந்த அறைகள், போராளிகள் தங்கியிருந்த இடங்கள், ஒரு சிறிய குளம் மற்றும் குதிரைகள் பராமரிக்கப்பட்ட பகுதி என அக்கால வாழ்க்கையை நமக்கு நினைவூட்டுகின்றன.
அதேபோல் இக்கோட்டையின் அடிவாரத்தில் உள்ள டியோட்டா பகுதியின் ஷைல்பர்னா என்ற இடத்தில் ஒரு அபூர்வமான இயற்கை நிகழ்வான சமநிலை பாறையை காணலாம். இது ஒரு காலத்தில் இருந்த எரிமலையின் சிதைந்த பாறைகளில் ஒன்றாகும். இதில், ஒரு பெரிய பாறையின் மேல் இன்னொரு ராட்சதப் பாறை தொட்டு நின்று சீராக சமநிலையுடன் இருக்கும் வகையில் அமைந்திருக்கிறது. பார்ப்பதற்கு அது எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் போல தோன்றினாலும், அது அசையாமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. ரிக்டர் அளவில் 6.5ஆக பெரிய நிலநடுக்கம் ஒன்று வந்தபோதும் அந்த பாறையின் நிலை சிறிதளவுகூட மாறவில்லை என்பது இன்னும் வியப்பை ஏற்படுத்துகிறது. அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்த பாறையை யாராலும் நகர்த்த முடியாது என்ற நம்பிக்கையையும் வைத்திருக்கின்றனர். இவைகள் தவிர மஜோலியில் உள்ள விஷ்ணு வராஹர் கோவில், நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பர்கி அணை, ஜபல்பூர் அருகே உள்ள தும்னா இயற்கை பாதுகாப்பு பூங்கா போன்ற பல்வேறு சுற்றுலா தலங்களை கொண்டுள்ள இந்நகரம், சுற்றுலா பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய வரலாற்றுப் பொக்கிஷமாக திகழ்கிறது.