யோகா பயிற்சியை யாரெல்லாம் செய்யலாம்? - விளக்குகிறார் யோகா கலைமாமணி கிருஷ்ணன் பாலாஜி

8 படிகளையும் நம் அன்றாட வாழ்க்கையில் பின்பற்றினால் 120 வயது வரை ஆரோக்கியமாக வாழ முடியும் என்பதனை அக்காலத்திலேயே முதன் முதலாக 196 யோக சூத்திரங்களாக மாமுனி பதஞ்சலி மகரிஷி உலகிற்கு பறை சாற்றியிருக்கிறார்.

Update:2023-08-15 00:00 IST
Click the Play button to listen to article

உள்ளமும் உடலும் ஆரோக்கியமாக இருக்க உணவுமுறை எவ்வளவு முக்கியப்பங்கை வகிக்கிறதோ அதேபோல் உடற்பயிற்சியும் பெரும் பங்கை வகிக்கிறது. அவ்வகையில் உடற்பயிற்சியின் ஒரு வடிவம்தான் யோகா. இந்த யோகாவிற்கென பள்ளிக்கூடங்களிலும் தனி வகுப்புகள் இருக்கின்றன. யோகா செய்வதனால் உடல் சீராகவும், ஃபிட்டாகவும் இருக்கும் என்றும், 90% நோய்களுக்கு யோகாவினால் தீர்வு காணலாம் என்றும் குறிப்பிடுகிறார் யோகா கலைமாமணி கிருஷ்ணன் பாலாஜி.

யோகாவின் வரலாறு என்ன?

யோகா (யோகம்) என்றால் இணைதல் என்று பொருள். உடல் மனம் இரண்டும் ஆன்மாவோடு இணைவது என்பது ஒரு அற்புதமான கலை. இந்த யோகக் கலையின் தந்தை மாமுனி பதஞ்சலி மகரிஷி. இவர் யோகாவை `அஷ்டாங்க யோகம்’ என்று 8 படிகளாகக் கொடுத்துள்ளார். யமம் (மனரீதியாக), நியமம் (உடல்ரீதியாக), ஆசனம் (நிலையான ஈர்க்கை), பிராணயாமம் (மூச்சுக் கட்டுப்பாடு), பிரத்தியாகாரம் (மனதை புறப்பொருளிலிருந்து உள்புறமாகத் திருப்புதல்), தாரணை (மனதை ஒரு நிலையில் குவியச் செய்தல்), தியானம் (ஒரே சிந்தனை), சமாதி (எண்ணமற்ற நிலை) என்று 8 படிகளாக வகை செய்யப்பட்டுள்ளது. இந்த 8 படிகளையும் நம் அன்றாட வாழ்க்கையில் பின்பற்றினால் 120 வயது வரை ஆரோக்கியமாக வாழ முடியும் என்பதனை அக்காலத்திலேயே முதன் முதலாக 196 யோக சூத்திரங்களாக மாமுனி பதஞ்சலி மகரிஷி உலகிற்கு பறை சாற்றியிருக்கிறார்.


யோகாசனம்

எந்த வயதிலிருந்து யோகா செய்யத் தொடங்கலாம்?

பொதுவாக குழந்தை பிறக்கும்பொழுது குழந்தையின் தலை முன்பும் கால்கள் பின்னரும் வரும். இதனை சிரசாசனம் என்பார்கள். அதேபோல் பச்சிளம் குழந்தை அழும்போது முதலில் ஒரு காலை தூக்கியும் பின்னர் மற்றொரு காலை தூக்கியும் இறுதியாக இரண்டு கால்களையும் தூக்கி அழும். இது அர்த்த ஹாலாசனம் எனப்படும். சில மாதங்களுக்குப்பின் குழந்தை குப்புற விழுந்து கைகளை தரையில் ஊன்றி தலையை உயர்த்தி பார்க்கும். இது புஜங்காசனம் ஆகும். குழந்தை இரு கால்களை மடக்கி அமர்வது வஜ்ராசனம். அப்படியே மெல்ல மெல்ல நிற்க முயற்சிக்கும்போது கைகளை நீட்டிக்கொள்வது உட்கட்டாசனம். குழந்தை எழுந்து நின்றபின், குனிந்து கால்களின் பெருவிரலைத் தொடுவது பாதஹஸ்தாசனம். அதேபோல் குழந்தை தூங்கும்பொழுது கைகளின் விரல்களை மடக்கி தூங்கும். இது ஆதி முத்திரை. இப்படி பிறக்கும்போதிருந்தே ஆசனங்கள் செய்துகொண்டுதான் பிறக்கிறோம். ஆனால் 6 வயதிலிருந்துதான் குழந்தைகளுக்கு கேட்கும் திறனும் கேட்டதை செயல்படுத்தும் திறனும் இருக்கும். அதனால் 6 வயதிலிருந்தே யோகா பயிற்சிகளை செய்யத் தொடங்கலாம்.

ஒரு நாளில் எத்தனை முறை யோகா செய்வது சிறந்தது?

பொதுவாக காலை மாலை என இருவேளையும் சுமார் ஒரு மணி நேரம் யோகா செய்வது சிறந்தது. ஆனால் இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் யோகா செய்ய ஒரு மணி நேரம்கூட செலவழிக்க முடியாது என்பவர்கள் காலை மாலை என்று இரண்டு வேளையும் குறைந்தது அரை மணி நேரமாவது பயிற்சி செய்வது நல்லது. இதிலும் முக்கியமாக காலைவேளையில் பயிற்சி மேற்கொள்வது உகந்ததாக இருக்கும்.


யோகாவின் நன்மைகள்

யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

யோகா செய்வதால் உடலில் இருக்கும் கழிவுகள் அனைத்தும் வெளியேறும். ஒவ்வொரு மனிதனின் உடலிலிருந்தும் கழிவுகளானது சிறுநீர், மலம், சுவாசம், வியர்வை என்று 4 வழிகளில் வெளியேற வேண்டும். இந்த நான்கும் சுலபமாக வெளியேறினால் உடலில் எந்தவொரு நோயுமின்றி ஆரோக்கியமாக வாழலாம். ஆனால் அதுவே கடினமானால் நோயாக மாறிவிடும். யோகா செய்வதால் உடலுக்கு நல்ல பிராண ஆற்றல் கிடைக்கும். அதாவது ராஜ உறுப்புகள் என்று சொல்லப்படுகிற இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், சிறுநீரகப்பைகள் நல்ல பிராண ஆற்றல் பெற்று சிறப்பாக செயல்படும். அதிலும் மிக முக்கியமாக யோகா செய்வதால் நுரையீரல் நல்ல காற்றை உள்வாங்கி அசுத்த காற்றை வெளியிடும் செயலை சிறப்பாகச் செய்யும். சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை சரியாக யோகா பயிற்சியை செய்தால் நோயற்ற வாழ்க்கை வாழலாம். மனஅமைதி கிடைக்கும். நமக்குள் இருக்கும் ஆற்றலை உணரலாம். ‘உடம்பினைப் பெற்ற பயனாவது எல்லாம் உடம்பினில் உத்தமனைக் காண்’ என்னும் ஔவையின் வரிகளுக்கேற்ப உடலின் ஐந்தாவது அடுக்கில் இருக்கும் உயிர்சக்தியை உணரலாம். எல்லாவற்றிற்கும் மேலாக யோகாவினால் தன்னம்பிக்கை கிடைக்கும்.

யோக பயிற்சியை யார் வேண்டுமானாலும் மேற்கொள்ளலாமா?

நார்மலாக இருப்பவர்கள் தாராளமாக யோகா பயிற்சியை மேற்கொள்ளலாம். ஆனால் குறைந்த ரத்த அழுத்தம், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கடினமாக உடலை வளைத்துச் செய்யும் ஆசனங்களை மேற்கொள்ளக்கூடாது. அவர்கள் அர்த்த பத்மாசனம், எளிமையான வஜ்ராசனம் போன்ற ஆசனங்களை செய்யலாம். முதுகுத்தண்டில் அறுவைசிகிச்சை செய்தவர்கள் அல்லது இதய அறுவைசிகிச்சை செய்தவர்களும்கூட தியானம், முத்திரைகள் செய்யலாம். ஒவ்வொரு மனிதனின் வயது மற்றும் உடல்நல பிரச்சினைகளின் தன்மைக்கேற்ப என்னென்ன ஆசனங்கள் செய்யலாம் என்னென்ன செய்யக்கூடாது என்று தனி விதிமுறைகள் இருக்கிறது. எனவே ஆசான் மூலமாக பயின்று, பிறகு பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.


யோகா செய்வோருக்கான டயட்

யோகா செய்பவர்கள் குறிப்பிட்ட உணவு முறையை பின்பற்ற வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறதா?

நிச்சயமாக. யோகா செய்பவர்களுக்கென தனி உணவு முறையே இருக்கிறது. முடிந்தவரை கீரை வகைகள், பழ வகைகளை அதிகளவில் சாப்பிடலாம். அதிக காரம், அதிக புளிப்பு, அதிக உப்பு சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது. அதேபோல் மைதாவால் செய்யப்பட்ட உணவுகளைத் தவிர்க்கலாம். இரவு நேரத்தில் பால் குடிப்பதையும் தவிர்க்கலாம். குறிப்பாக, இரவில் உண்ணும்போது அரை வயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காற்று செல்லும் அளவிற்கு வயிற்றில் இடம் இருக்க வேண்டும். முடிந்த அளவிற்கு இரவில் 7.30 மணி முதல் 8 மணிக்குள் இரவு உணவை முடித்துக்கொள்வது சிறந்தது. யோகா செய்வதற்கு முன் பாட்டில் ஜூஸ், ஐஸ்கிரீம் போன்றவற்றையும் தவிர்க்கலாம்.

யோகாவில் மொத்தம் எத்தனை ஆசனங்கள் இருக்கின்றன?

நேராக படுத்து செய்யக்கூடிய ஆசனங்கள் (அர்த்த ஹலாசனம்), குப்புறப்படுத்து செய்யக்கூடிய ஆசனங்கள் (புஜங்காசனம், சலபாசனம்), அமர்ந்து செய்யக்கூடிய ஆசனங்கள் (பத்மாசனம், வஜ்ராசனம், சசாங்காசனம்), நின்ற நிலையில் செய்யக்கூடிய ஆசனங்கள் (உட்கட்டாசனம்), குனிந்து செய்யக்கூடிய ஆசனங்கள் (பாதகசாசனம்) என்று ஒவ்வொரு நிலையிலும் செய்யக்கூடிய ஆசனங்கள் லட்சக்கணக்கிற்கும் மேல் இருக்கிறது.


யோகாசனங்கள்

அனைத்து வயதினரும் செய்யக்கூடிய ஆசனங்கள் என்னென்ன?

மிக எளிமையான ஆசனங்களான சுகாசனம், சாந்தி ஆசனம், அர்த்த பத்மாசனம் போன்றவற்றை அனைத்து வயதினரும் செய்யலாம்.

முத்திரை (முத்ராஸ்) என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

யோகாசனங்களை பொதுவாக அனைவராலும் செய்யமுடியாது. வயதானவர்கள், அறுவை சிகிச்சை செய்தவர்கள் பெரும்பாலும் யோகா செய்வது கடினமே. ஆனால் அனைவராலும் இந்த முத்திரைகளை செய்யலாம். முத்திரை என்பது கைகளின் விரல்களை உபயோகித்து செய்யக்கூடிய ஆசனங்களாகும். நம் உடல் பஞ்சபூதத்தினால் ஆனது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்று சொல்லக்கூடிய ஐம்பூதங்களும் நம்முடைய ஒவ்வொரு அணுக்களிலும் இருக்கிறது. இந்த அணுக்களின் ஐம்பூதங்களின் கட்டுப்பாடும் நம் கை விரல்களில்தான் இருக்கிறது. இது நமது சித்தர்கள் கண்டுபிடித்த அருமையான ஒரு பயிற்சியாகும்.


`முத்ராஸ்’ என்கிற முத்திரைகள்

நம் கைகளின் பெருவிரல் நுனி நெருப்பையும் (இதயம், பெருங்குடல்), ஆள்காட்டி விரல் காற்றையும், (நுரையீரல், சிறுகுடல், பெருங்குடல்), நடு விரல் ஆகாயத்தையும் (பித்தப்பை, காது), மோதிர விரல் நிலத்தையும் (மண்ணீரல்), சுண்டு விரல் நீரினையும் (சிறுநீரகம், சிறுநீரகப்பை, சிறுகுடல், பெருங்குடல்) குறிக்கிறது. முத்திரைகளை செய்யும்போது நேராக நிமிர்ந்து உட்கார்ந்து 2 நிமிட பயிற்சி செய்தாலே போதுமானது. இந்த முத்திரைகள் மூலம் 90% நோய்களை குணப்படுத்தலாம். சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், கோபம், மன அழுத்தம், மனச்சோர்வு, முதுகு வலி, கழுத்து வலி என்று அனைத்திற்குமே முத்திரைகள் செய்வதால் தீர்வு உண்டு. இப்படி முத்திரைகளும் லட்சக்கணக்கிற்கும் மேல் எண்ணற்று இருக்கின்றன.

யோகா செய்யும்போது யோகா மேட் உபயோகிப்பதற்கான காரணங்கள் என்ன? வெறும் தரையில் யோகா செய்யக்கூடாதா?

பொதுவாகவே பூமிக்கு ஈர்க்கும் தன்மை இருக்கிறது. நாம் வெறும் தரையில் அமர்ந்து யோகா செய்யும் பொழுது நம் உடலிலிருக்கும் ஆகர்ஷன சக்தியை பூமி எடுத்துக்கொள்ளும். அதனால்தான் யோகா செய்யும்போது யோகா மேட் நம் உடம்புக்கும் இந்த பூமிக்கும் ஒரு தடுப்பாக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்