கை அல்லது காலில் கரண்ட் ஷாக் அடிப்பதுபோன்று வலிக்கிறதா? அதற்கு காரணம் இதுதான்! - விளக்குகிறார் மருத்துவர் அமரேஷ் நாராயண்

நரம்பு செயலிழந்தபிறகு வெறும்காலில் நடந்தால் காலில் ஆணி அல்லது கல் ஏதாவது குத்தினால்கூட தெரியாது. கோயில் போன்ற இடங்களில் வெயிலில் வெறும்காலில் நடக்கும்போதுகூட அவர்களுக்கு சூட்டை உணரமுடியாது. சர்க்கரை அதிகமாக இருக்கும்பட்சத்தில் வெயிலால் காலில் கொப்புளம் ஏற்பட்டு தொற்றாக மாறிவிடும்.

Update:2024-04-09 00:00 IST
Click the Play button to listen to article

தலைவலி, பல்வலி போன்றவை பொதுவானவை என்றாலுமே அந்த வலியை அனுபவிப்பவர்களுக்கு மட்டும்தான் வேதனை தெரியும் என்பார்கள். அதுவே உள்ளுறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளால் உருவாகும் வலி என்பது எவ்வளவு கொடுமையானதாக இருக்கும். அப்படிப்பட்ட வலியை கட்டுப்படுத்துவது என்பது சற்று சிரமமானது. குறிப்பாக, கேன்சர் நோயாளிகளுக்கு எந்த பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதோ அதனால் கடுமையான வலியை அனுபவிப்பார்கள். அந்த வலியை கட்டுப்படுத்த நிறைய மருந்துகளை எடுத்துக்கொள்ள நேரிடுவதுடன் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளையும் சந்திக்க நேரிடும். அறுவைசிகிச்சையின்போது உருவாகும் வலியை எப்படி அனஸ்தீசியா மூலம் கட்டுப்படுத்துவது? நரம்பு பிரச்சினைகளுக்கான காரணங்கள் என்னென்ன? கேன்சர் நோயாளிகளுக்கு வலியை கட்டுப்படுத்த என்ன சிகிச்சை கொடுக்கப்படுகிறது? என்பது குறித்தெல்லாம் விளக்குகிறார் Interventional pain specialist, மயக்க மருந்து நிபுணர் மற்றும் கிரிட்டிக்கல் கேர் கன்சல்டன்ட் அமரேஷ் நாராயண்.

அனஸ்தீசியா (மயக்க மருந்து) எப்படி வேலை செய்கிறது?

நோயாளிக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ளும்போது வலியில்லாமல் சௌகர்யத்தை ஏற்படுத்தி சிகிச்சை அளிக்கவேண்டும் என்பதற்காகவும், அதேபோல் அறுவைசிகிச்சை செய்யும் மருத்துவரும் பதற்றமில்லாமல் ரிலாக்ஸாக செய்யவேண்டும் என்பதற்காகவும்தான் அனஸ்தீசியா முதலில் கொடுக்கப்பட்டது. ஆனால் இப்போது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியால் அனஸ்தீசியாவில் பல்வேறு முன்னேற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நோயாளியை பொருத்தவரை ஒரு ஊசி போட்டால் குறிப்பிட்ட பகுதி மரத்து போய்விடும், மயக்கம் வந்துவிடும். அதன்பிறகு அறுவைசிகிச்சை மேற்கொண்டனர் என்பது மட்டும்தான் தெரியும்.

ஆனால் மயக்கம் கொடுப்பது மட்டும் அனஸ்திட்டிக்கின் வேலை இல்லை. அறுவைசிகிச்சை மேற்கொள்ளும்போது ரத்த இழப்பு, பிபி குறைதல், ஆக்சிஜன் அளவு மாறுதல் போன்ற உடலில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தையும் கையாள்வதுதான் அனஸ்திட்டிக்கின் வேலையாக இருக்கும். இவை அனைத்தையும் அறுவைசிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவரால் கவனித்துக்கொண்டே இருக்கமுடியாது. வலியால் பிபி அளவு 160 - 180 என அதிகரித்தால் அறுவைசிகிச்சையை மேற்கொள்ள முடியாமல் போய்விடும்.

உதாரணத்திற்கு, சாதாரணமாக இதயத்துடிப்பானது 65 முதல் 70 சதவீதம் இருக்கவேண்டும். ஆனால் இதய நோயாளிக்கு, 35 சதவீதம்தான் இதயத்துடிப்பு இருக்கும்போது அறுவைசிகிச்சையையும், மயக்கமருந்தையும் தாண்டி உயிருடன் மீண்டு வருவதென்பது கடினமான ஒன்று. பலவீனமான இதயத்திற்கு நிறைய மருந்துகள் கொடுத்து பராமரித்து வரும் சமயத்தில் மயக்கமருந்து செலுத்தினால் இதயத்துடிப்பிலும் ரத்த அழுத்தத்திலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. 10 முதல் 15 நொடிகள் மாற்றங்கள் ஏற்பட்டாலே அந்த நோயாளியின் இதயம் செயல்படாமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. எனவே அனஸ்தீசியா செலுத்தும்போது மிகவும் கவனமுடன் செயல்படுவது அவசியம்.


அறுவைசிகிச்சையின்போது அளிக்கப்படும் அனஸ்தீசியா மற்றும் அனஸ்திட்டிக்கின் வேலை

ஒருவருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருப்பதை எந்தெந்த அறிகுறிகளின்மூலம் தெரிந்துகொள்ளலாம்?

பொதுவாக இருக்கக்கூடிய நரம்பு பிரச்சினைகளில் ஒன்று கழுத்துப்பகுதியில் ஏற்படுவது. மற்றொன்று பின் இடுப்புப்பகுதியில் ஏற்படுவது. கழுத்துப்பகுதியில் நரம்பு பிரச்சினை இருப்பவர்களுக்கு இரவில் தூங்கி காலை எழுந்திருக்கும்போது முதுகுத்தண்டானது இறுக்கமாக இருக்கும். அந்த வலியானது விரல் நுனிவரை பரவும். இதை சர்விக்கல் ரேடிக்ளோபதி (cervical radiculopathy) என்பார்கள். ஆனால் அந்த நோயாளி கையில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்றுதான் நினைப்பார்கள். உண்மையில் கழுத்து டிஸ்க் வீக்கத்தால் சர்விக்கல் நரம்பில் அழுத்தம் ஏற்பட்டு வலி உருவாகும். இதுபோல் கழுத்து வலி, அடிக்கடி பின் முதுகில் தசைபிடிப்பு, குறிப்பாக, தூங்கி எழுந்திருக்கும்போது காலையில் அதீத வலி, கையில் அடிக்கடி கரண்ட் ஷாக் அடிப்பது போன்று இருத்தல் போன்ற அறிகுறிகள் தென்படும். இதேபோலத்தான் இடுப்புப்பகுதியில் பிரச்சினை ஏற்பட்டால் முதுகு வலி, பின் கீழ்ப்புற (buttocks) இடுப்பில் வலி, தொடையில் இழுப்பது போன்ற வலி, நீரிழிவு நோயாளிகளுக்கு பாதத்தில் எரிச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும். எரிச்சல் நிலையை கடந்துவிட்டால் எது குளிர்ச்சியாக இருக்கிறது எது சூடாக இருக்கிறது என்றே வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது. சர்க்கரை நோயாளிகளுக்கு பெரும்பாலும் கால்களில் புண்கள் ஏற்பட காரணம் நரம்பு பிரச்சினைகள்தான். நரம்பு செயலிழந்தபிறகு வெறும்காலில் நடந்தால் காலில் ஆணி அல்லது கல் ஏதாவது குத்தினால்கூட தெரியாது. கோயில் போன்ற இடங்களில் வெயிலில் வெறும்காலில் நடக்கும்போதுகூட அவர்களுக்கு சூட்டை உணரமுடியாது. சர்க்கரை அதிகமாக இருக்கும்பட்சத்தில் வெயிலால் காலில் கொப்புளம் ஏற்பட்டு தொற்றாக மாறிவிடும். அந்த தொற்றை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விடும்போது காலையே அகற்றவேண்டிய சூழல் ஏற்படும். இதுபோன்ற பிரச்சினைகள் அனைத்துமே நரம்பு பிரச்சினையிலிருந்துதான் ஆரம்பிக்கிறது.

நரம்புகளை பாதுகாக்க என்னென்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்?

நரம்பின்மீதான அழுத்தம் அதிகமாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு உணவைவிட உடல் அமைப்பில் (posture)தான் அதிக கவனம் செலுத்தவேண்டும். கழுத்து, முதுகு, கால் போன்றவை அந்தந்த விதத்தில்தான் இயங்கவேண்டும். முதுகுவலியைவிட கழுத்து வலி அதிகரித்திருப்பதற்கு காரணம், செல்போன் பயன்பாடுதான். செல்போன் இல்லாத காலத்தில் அதிக நேரம் குனிந்து பார்க்கவேண்டிய வேலை இருக்காது. ஆனால் இப்போது நிறையநேரம் குனிந்தே இருக்கிறோம். அப்படி குனிந்தே இருக்கும்போது கழுத்தின்மீது தொடர் அழுத்தம் செலுத்தப்படுகிறது. அதேபோல் நிற்கும்போதும் உட்காரும்போதும் முதுகெலும்பு நேராக இருக்கும்படி நிமிர்ந்து இருக்கவேண்டும். இந்த முக்கியத்துவத்தை சொல்லிக்கொடுப்பதுதான் யோகா. மூளை மற்றும் உடல் செயல்பாடு, எனர்ஜி என அனைத்துமே நன்றாக இருக்கவேண்டுமானால் முதுகெலும்பு நேராக இருக்கவேண்டும்.


நரம்பு மண்டலத்தை வலிமையாக்க எடுத்துக்கொள்ள வேண்டிய நுண் ஊட்டச்சத்துக்கள்

எனவேதான் அந்த காலத்திலிருந்தே முதுகெலும்பை நேராக வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தி வருகிறார்கள். அடிப்படை பயிற்சிகளான cat and camel, lumbar stretch போன்ற பயிற்சிகளை மேற்கொண்டாலே முதுகெலும்பு வலிமைபெறும். இதுபோன்ற பயிற்சிகளை பிஸியோதெரபிஸ்டிடம் கேட்டு கற்றுக்கொள்ளலாம் அல்லது பக்கத்திலிருக்கும் யோகா நிலையத்திற்கு சென்று மூச்சுப்பயிற்சி மற்றும் முதுகெலும்பை வலிமையாக்கும் பயிற்சிகளை கற்றுக்கொள்ளலாம். மூச்சு பயிற்சிகளை செய்யும்போது மூச்சை இழுத்துவிடுவதால் முதுகிலிருக்கும் தசைநார்கள் வலுப்பெறும். நரம்பு நலத்தை மேம்படுத்த இந்தந்த உணவுகளைத்தான் சாப்பிடவேண்டும் என்று குறிப்பிட்டு சொல்லமுடியாது. உதாரணத்திற்கு வைட்டமின் டி தேவையென்றால் காலை வெயிலில் அரை மணிநேரமாவது நடக்கவேண்டும். அதேபோல் ஜிங்க், அயர்ன், மக்னீஷியம் போன்ற மைக்ரோ நியூட்ரியன்களின் அளவானது சரியாக இருக்கவேண்டும். அதற்கு முறையான டயட் முறையை பின்பற்றினாலே போதுமானது.

எந்தெந்த உணவுகள் நரம்பின் நலத்தை பாதிக்கும்?

நரம்பு என்பது நுணுக்கமான கட்டமைப்பைக் கொண்டது. மற்ற உறுப்புகளைப் போன்று தினசரி சாப்பிடும் உணவுகளால் பாதிப்பு ஏற்படும் என்று சொல்லமுடியாது. நரம்பின் வளர்ச்சியும் ஆரோக்கியமும் உடலின் மெட்டபாலிசம் அளவை பொருத்துதான் இருக்கும். அதற்கு பாய்சன் என்பது குளுக்கோஸ். சர்க்கரையானது நரம்பின்மீது உறை போன்று இருக்கும் மெய்லின் என்ற லேயரை அழித்துவிடும். இதனால் நரம்பால் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்தை தொடர்புகொள்ள முடியாது. மேலும் நரம்புக்கும் தசைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. உடல் எடை ஏறிக்கொண்டே போனால் தசையால் எடையை தாங்கமுடியாது. அது நரம்பின்மீது அழுத்தம் கொடுக்கும் அல்லது சுருக்கத்தை ஏற்படுத்தும் அல்லது சுற்றி பிடித்துவிடும். இப்படி நரம்பின்மீது தொடர் அழுத்தம் செலுத்தப்படும்போது அதில் மாற்றங்கள் ஏற்படும். மெக்கானிக்கல் மற்றும் மெட்டபாலிச காரணிகளால் மட்டுமே பிரச்சினை ஏற்படலாமே தவிர, உணவினால் பிரச்சினைகள் ஏற்படாது. கண், சிறுநீரகம், கல்லீரல், ஜீரணம் மற்றும் எனர்ஜி அளவிற்கு எப்படி உணவு முக்கியப் பங்காற்றுகிறதோ அதுபோல் நரம்பியல் சம்பந்தப்பட்டவைகளில் அத்தகைய மாற்றங்களை உணவு ஏற்படுத்தாது.

கேன்சர் நோயாளிகளுக்கு Palliative care கொடுக்கப்படுவதாக சொல்கிறார்களே! அப்படி என்றால் என்ன?

கேன்சர் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் பராமரிப்பானது Therapeutic care மற்றும் Palliative care என இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. ஆரம்பகட்ட நிலையில் இருந்து பூரணமாக குணப்படுத்த முடியும் என்றால் அதற்கு Therapeutic care அளிக்கப்படுகிறது. அதுவே அட்வான்ஸ் நிலையில் இருப்பவர்களுக்கு Palliative care அல்லது comfort care அளிக்கப்படுகிறது. அதாவது குணப்படுத்த முடியாது; ஆனால் நாட்களை சற்று தள்ளிப்போடலம் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு சரியான நேரத்தில் உணவு கொடுப்பது, அவர்களுடைய பிரச்சினைகளை கேட்டு சரிசெய்வது, தொற்றுக்கள் ஏற்படும்போது சிகிச்சை அளிப்பது, ஆக்சிஜன் குறையும்போது ஆக்சிஜன் கொடுப்பது என மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும் சிகிச்சைதான் இது. இதுபோக கல்லீரல் மற்றும் கணையம் போன்ற உறுப்புகளில் கேன்சர் இருப்பவர்களுக்கு பயங்கர வலி இருக்கும்.


அட்வான்ஸ் நிலையை தாண்டிய கேன்சர் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் Palliative care

உறுப்பு சம்பந்தப்பட்ட வலி என்பதால் அந்த வலியை ஊசி அல்லது மாத்திரைகளால் கட்டுப்படுத்த முடியாது. இவர்களுக்கு Opioid என்ற ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. Opioid என்பது போதைப்பொருள் போன்றது. அதேசமயம் மருத்துவரீதியாக அங்கீகரிக்கப்பட்டதும்கூட. இது நோயாளிக்கு வலியை கட்டுப்படுத்தி மயக்கநிலை போன்ற நிலையிலேயே வைத்திருக்க உதவுகிறது. இதுவும் ட்ரைஜெமினல் நியூரால்ஜியா போன்றதுதான். நோயாளி பேசாவிட்டாலும் பரவாயில்லை; தெளிவாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை; வலியில்லாமல் இருந்தால் மட்டுமே போதும் என்ற நிலைதான். ஆனால் வலியை கட்டுப்படுத்தும் துறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருவதால் Opioid -இன் பயன்பாடானது மிகவும் குறைந்துவிட்டது. அதற்கு பதிலாக எக்ஸ்-ரே அல்லது சி.டி ஸ்கேனின் உதவியுடன் வலி இருக்கும் பகுதிகளில் மட்டும் ஊசி போட்டு பாதிக்கப்பட்ட உறுப்பு சம்பந்தப்பட்ட நரம்பை மட்டும் ப்ளாக் செய்யமுடியும். இது நிரந்தர தீர்வு அளிக்காது என்றாலும், பாதிக்கப்பட்ட நபரை, உயிர் வாழும்வரை வலி இல்லாமல் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும். பாதிப்பை சரிசெய்ய முடியாது என்றாலும் வலியை குறைத்து நோயாளியை சிரமமின்றி வாழவைக்க உதவும் சிகிச்சைமுறைதான் Palliative care.

நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், நோய்கள் வராமல் இருக்க எப்படிப்பட்ட வாழ்க்கைமுறையை பின்பற்ற வேண்டும்?

முதலில் கவனிக்கவேண்டியது உடல் எடை. எப்போதும் உயரத்திற்கு ஏற்ற எடையை பராமரித்து BMI-யை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். பள்ளிக்காலத்தில் உடல்வாகு எப்படி இருந்ததோ (posture) அதை மாற்றவே கூடாது. உதாரணத்திற்கு 20 வயதில் 55 கிலோ எடை கொண்ட ஒரு நபர் 23 வயதில் 75 கிலோவாக அதிகரித்துவிட்டால் அந்த எடையை தசைகள் மற்றும் முதுகெலும்பால் ஏற்றுக்கொள்ளமுடியாது. முதுகெலும்பின் வலிமைக்கு ஏற்றவாறு இருக்கவேண்டும், அதற்கேற்ற வேலைகளை செய்யவேண்டும். இல்லாவிட்டால் செய்யும் வேலைக்கு ஏற்றவாறு முதுகெலும்பின் வலிமையை மாற்றிக்கொள்ள வேண்டும்.


கழுத்து மற்றும் இடுப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் சில உடல்வாகுகள்

கழுத்து மற்றும் இடுப்பு பாதிப்படையாமல் இருக்க சில டிப்ஸ்:

  • இரவு தூங்கும்போது, இரண்டு தலையணையை வைத்துக்கொண்டு டிவி பார்த்துக்கொண்டே தூங்கினால் கண்டிப்பாக கழுத்துவலி ஏற்படும். தூங்கும்போது தலையணை இல்லாமலோ அல்லது ஒரு இன்ச் அளவான தலையணையையோ வைத்துதான் தூங்க வேண்டும். கழுத்து எப்போதும் நேராக இருக்கவேண்டும்.
  • செல்போன் பயன்படுத்தும்போது கண்களின் பார்வை அளவிற்கு ஏற்ப வைக்கவேண்டும். அதேபோல் கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவற்றையும் கண்களின் அளவிற்கு ஏற்ப வைத்து பயன்படுத்த வேண்டும்.
  • கண்ணாடி முன்பு நின்று பார்க்கும்போது தோள்பட்டையும், காதின் பின்பகுதியும் ஒரே சீராக இருக்கவேண்டும். அப்போதுதான் கழுத்து நேராக இருக்கிறது என அர்த்தம். இல்லாவிட்டால் Spondylosis பிரச்சினை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம். எப்போதுமே கழுத்தைவிட தலையின் எடை அதிகம். எனவே தலை முன்பாக வரும்போது அது கழுத்தையும் இழுக்கும்.
  • அதேபோல், குனிந்து எடையை தூக்குவதற்கு பதிலாக முட்டியை மடக்கி உட்கார்ந்து தொடையை பயன்படுத்தி தூக்கவேண்டும். அதிக அழுத்தத்தை முதுகின்மீது செலுத்தக்கூடாது.
  • பயன்படுத்தும் மேட்ரஸ் ஓரளவிற்கு கடினமாக இருக்கவேண்டும். மிகவும் இலகுவாக சாஃப்டாக இருந்தாலும் அது உடல்வலியை ஏற்படுத்தும்.
  • உடற்பயிற்சி கட்டாயம் தேவை. திடீரென என்றாவது ஒருநாள் அதிக படி ஏறி இறங்கினால் இடுப்பு வலி, கழுத்து வலி மற்றும் சயாட்டிகா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
  • எனவே தினசரி 20 நிமிட நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.
Tags:    

மேலும் செய்திகள்