உயிரைப் பறிக்கும் உணவாக மாறிய ஷவர்மா! இதன் பின்னணி தெரியுமா?

இன்று மக்களிடையே அதிகம் விரும்பப்படும் உணவு என்றால் அது இந்த ஷவர்மா தான்.

Update:2023-09-26 00:00 IST
Click the Play button to listen to article

நமது உணவு முறை என்பது காலத்திற்கேற்றவாறு மாற்றம் அடைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் இன்று மக்களிடையே அதிகம் விரும்பப்படும் உணவு என்றால் அது இந்த ஷவர்மா தான். அதன் ருசிக்கு ஈடாக, இந்த உணவு குறித்த சர்ச்சைகளும் அதிக அளவில் பரவி வருகிறது. ஷவர்மாவின் பின்னணி என்ன? இது சர்ச்சைகளுக்குரிய ஆபத்தான உணவா? என்பது குறித்த தெளிவான விளக்கம் பின்வருமாறு.

ருசிமிக்க ஷவர்மாவின் வரலாற்று பயணம்

ஷவர்மா லெபனான் நாட்டில் தோன்றிய, பதினெட்டாம் நூற்றாண்டு காலத்து பழமையான உணவாக கூறப்படுகிறது. சிக்கன் கபாப்பின் உருமாறிய வடிவமான இந்த ஷவர்மா துருக்கி, பாலஸ்தீனம், லெபனான், சிரியா முதலிய நாடுகளில் ஆரம்பத்தில் வேறுமாதிரியாக தயாரிக்கப்பட்டு வந்தது. அதாவது இரண்டாம் உலகப்போருக்கு பிறகு துருக்கியில் இருந்த மக்கள் மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு இடம்பெயர்ந்து செல்லத் தொடங்கினர. அதே நேரத்தில் அவர்களுடன் இணைந்து துருக்கி மக்களுக்கு மிகவும் பிடித்தமான உணவாக இருந்த ஷவர்மாவும் நாடு விட்டு நாடு இடம் பெயரத் தொடங்கியது. 1960 ஆம் ஆண்டில் லண்டனில் ஷவர்மா கடை முதன் முதலில் துவங்கப்பட்டு அந்நாட்டு மக்களின் ஆதரவையும், வரவேற்பையும் பெற்றது. 1980 களில் ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த ஷவர்மா ஒரு பிரபலமான உணவாக கருதப்பட்டது. ஏன் நமது இந்தியாவிலும் கூட ஆரம்ப காலத்தில் ஹைத்திராபாத் மற்றும் கேரளாவில் உள்ள பல்வேறு இடங்களில் பலவித பிளேவர்களில் தயாரிக்கப்பட்டது.


ஷவர்மா செய்யப்படும் முறை 

 ஷவர்மா செய்யப்படும் முறை

மேரினேட்டிங் என்று சொல்லக்கூடிய முறைப்படி நன்கு கழுவி சுத்தப்படுத்திய இறைச்சியை மசாலைகளைத் சேர்த்து நன்கு ஊறவைத்தப் பிறகு நீளவாக்கில் உள்ள கம்பியில் சுற்றிவர இறைச்சியை அடுக்கிக்கொள்வர். சமமாக அடுக்கிய பிறகு அடுப்பில் நெருப்பை மூட்ட இறைச்சி சுற்றிக்கொண்டே வேகும். பின்னர் சுற்றப்பட்டிருக்கும் கம்பியில் இருந்து 120 டிகிரி அளவுக்கு தடிமனான இறைச்சித் துண்டுகள் வெட்டப்படுகின்றன. இவ்வாறு வெட்டப்பட்ட துண்டுகளை பிட் பிரட் அல்லது பிளாட் பிரட் என்று சொல்லப்படுகின்ற ரொட்டியில் மயோனைஸ் தடவி, முட்டைக்கோஸ், கேரட், தக்காளி உள்ளிட்ட பொருட்களை சேர்த்து ரோல் போன்ற வடிவத்தில் சுற்றப்பட்டு பரிமாறப்படுகிறது.

உயிர்க்கொல்லியாக மாறுவதற்கான காரணம்

ஷவர்மா உணவு பிரியர்களுக்கு சிறந்ததொரு மாலை நேரத்து நொறுக்குத் தீனியாகவே இன்றளவும் கருதப்படுகிறது. ஆனால் இன்றைக்கு மக்களிடையே பிரபலமாக வலம் வரும் இந்த ஷவர்மா தொடக்க காலத்தில் தயாரிக்கப்பட்ட வடிவத்திலேயே இருக்கிறதா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காலங்கள் மாற மாற கொஞ்சம் கொஞ்சமாக உணவுப்பொருட்களின் வடிவமும் சுவையும் மாறத்தொடங்கியது. வணிக நோக்கத்தில் செயல்படும் சில வியாபாரிகள் செய்த தவறால் இன்று ஷவர்மா மக்களிடையே ஒரு உயிர்க்கொல்லியாக மாறி இருக்கிறது என்று கூட சொல்லலாம். ஆம் உணவில் பயன்படுத்தப்படும் இறைச்சி அதிக நாள்பட்ட இறைச்சியாக இருந்தாலும் சரி, அது சரியான தட்பவெப்பத்தில் பராமரிக்கப்படாமல் இருந்தாலும் சரி அதை உட்கொள்பவர்களுக்கு உயிர்க்கொல்லியாக மாறும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.


ஷவர்மாவை வெட்டி எடுக்கும் முறை 

உணவங்களில் அதிகாரிகள் ரைடு

நாமக்கல் மாவட்டம், ஐவின்ஸ் என்ற உணவகத்தில் சில நாட்களுக்கு முன்பு ஷவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த நிலையில், அதே மாவட்டத்தில் மிஸ்டர் பர்கர் என்ற உணவகத்தில் பர்கர் சாப்பிட்ட இளைஞருக்கும் உடல் நிலை சரியில்லாமல் உயிரிழந்துள்ளார். இவரைத் தொடர்ந்து மேலும் 8 பேர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்புத்துறையினர் சோதனை நடத்தியதில் கெட்டுப்போன இறைச்சிகளை பயன்படுத்தியது தெரியவந்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இதன் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் உள்ள உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதன் அடிப்படையில் சென்னையில் 365 கிலோ கெட்டுப்போன இறைச்சியும், நாமக்கல் மாவட்டத்தில் 250 கிலோ, திருச்சியில் 200 கிலோ, சேலம் 180 கிலோ, சிவகங்கை 100 கிலோ கெட்டுப்போன இறைச்சியும் கைப்பற்றப்பட்டன. அதுமட்டுமின்றி சோதனையின் போது உணவாக உரிமையாளர்களுக்கு பல்வேறு வழிமுறைகள் அறிவுறுத்தப்பட்டன.


சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை 

 உணவுப் பாதுகாப்புத் துறைக் கூறும் வழிமுறைகள்

ஷவர்மாவால் ஏன் உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படுகிறது என்பது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் கூறுகையில், “ஷவர்மா பாதுகாப்பான உணவா என்றால் நிச்சயம் அது மிகவும் பாதுகாப்பான நூறாண்டு பழமையான உணவு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஷவர்மாவில் இவ்வளவு சிக்கல்கள் வருவதற்கான காரணமே அதனை சமைத்து பரிமாறும் விதத்தில் தான் இருக்கிறது. பொதுவாகவே நமது உணவை இரண்டு விதமாக பிரிக்கலாம். ஒன்று ‘ஹை ரிஸ்க்’ மற்றொன்று ‘லோ ரிஸ்க்’. அதாவது எளிதில் கெட்டுப் போகக் கூடிய உணவான பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், இறைச்சி வகை போன்றவற்றைக் கூறலாம். ‘லோ ரிஸ்க்’ என்பது காய்கறி மற்றும் பழங்களின் அடிப்படையில் வரும். இயல்பாகவே இறைச்சி என்பது எளிதில் கெட்டுப் போகக்கூடிய வகையை சார்ந்தது. ஷவர்மாவைப் பொறுத்த வரையில் அதனை தயார் செய்வதற்கான நேரம் என்பது மிக முக்கியமானதாகும். ஆனால் அதற்காக பயன்படுத்தும் இறைச்சியை சரிவர கையாளுதல் அவசியம். இல்லை என்றால் அதன் மூலம் நமக்கு நோய்த் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.


ஷவர்மா தயாரிக்கும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு முறை 

இரண்டாவதாக, ஷவர்மாவை தயாரிக்கும் போது, அதனை செய்பவரின் கைகளில் இருக்கும் கிருமிகள், விரலில் கத்தி வெட்டுகள், எச்சில் போன்றவை மூலமாகவும் அதனை வாங்கி உண்பவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அடுத்ததாக சரிவர வேகவைத்து உண்ணுதல் வேண்டும். ஏனென்றால் உணவில் கிருமிகள் இருந்தால், அது நெருப்பில் பட்டவுடனேயே அழிந்து, நல்ல பாதுகாப்பான உணவாக மாறும். கடைகளில் அதிக கூட்டம் காரணமாக அவசரமாக சமைத்த ஷவர்மாவை பரிமாறுவர். இதனால் வயிற்றுக்கோளாறு, உடலுக்கு தீங்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அடுத்தப்படியாக ஷவர்மாவில் அதிகம் பயன்படுத்தப்படும் மையோனிஸ். இது முழுவதுமாக பச்சை முட்டை மற்றும் எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படுவது என்பதால் குறிப்பிட்ட கால அளவுக்குள் பயன்படுத்தி முடித்தால் நல்லது. இல்லையேல் இதுவும் கூட ஷவர்மாவை ஒரு ஆபத்தான உணவாக மாற்றிவிடும்.

கெட்டுப்போன இறைச்சி கலந்த உணவை எளிதில் கண்டறிவதற்கான வழிமுறைகள்

அது இயல்பாகவே உணவின் வாசனையையும், சுவையையும் வைத்தே கண்டுபிடிக்க இயலும். இறைச்சிகளில் சிக்கனை பொறுத்தவரையில் அடர் பிரவுன் நிறத்தில் இருப்பது நல்லதல்ல. பிங்க் நிறத்தில் இருப்பது நல்லது. அதைப்போலவே அதிக ஜூசியாக இருந்தாலும், திரிதிரியாக பிரிந்து வந்தாலும் அது நல்ல சிக்கன்களுக்கான அறிகுறிகள் இல்லை. இவையெல்லாம் கெட்டுப்போன இறைச்சிகளை எளிதில் கண்டறிவதற்கான சில டிப்ஸ்.


ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன இறைச்சிகள் 

மக்களிடம் விழிப்புணர்வு

தொடர்ந்து ஷவர்மா குறித்த செய்திகள் பரவி வர மக்கள் பாதுகாப்புடன் இருக்கத் துவங்கிவிட்டனர் என்றே சொல்லலாம். அதுமட்டுமின்றி உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு வீடியோக்கள் மூலமாகவும், செய்தித்தாள்களில் அளிக்கப்படும் விளம்பரங்கள் மூலமாகவும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முடிந்தவரை மக்கள் நிறங்கள் கலக்காத உணவை உட்கொள்ளுதல் நல்லது. மேலும் இன்றைய தலைமுறையினருக்கு உணவு சார்ந்த விஷயங்களில் அதீத கவனம் அவசியமாகும்.


Tags:    

மேலும் செய்திகள்