கர்ப்பப்பை இல்லாத பெண்களும் குழந்தை பெற முடியும்! - கருவுறுதல் அறுவை சிகிச்சை நிபுணர்

சமீபத்தில் கர்ப்பப்பை மாற்று அறுவைசிகிச்சைமுறைகூட நடைமுறைக்கு வந்துவிட்டது. உலகம் முழுவதும் சிலருக்கு இந்த சிகிச்சை சாத்தியமாக்கப்பட்டிருக்கிறது. தாய் அல்லது சகோதரியிடமிருந்து கர்ப்பப்பை தானமாக பெறப்பட்டு, கருத்தரித்து, குழந்தை பிறக்கும்போது, கர்ப்பப்பையும் வெளியே எடுக்கப்படும். சிலர் எந்த சிகிச்சைமுறைக்கும் ஒத்துப்போக மாட்டார்கள். அவர்களுக்கு தத்தெடுத்தல்தான் தீர்வாக இருக்கும்.

Update:2024-10-08 00:00 IST
Click the Play button to listen to article

இன்றைய உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களால் குழந்தையின்மை பிரச்சினை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இயற்கை முறை கருத்தரித்தலில் சிக்கல்கள் ஏற்படும்போது பலரும் அடுத்து தேடிப்போவது செயற்கைமுறை கருத்தரித்தலுக்குத்தான். ஆனால் இதில் சிகிச்சை பெறுபவர்களைவிட சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்தான் அதிகம் பயனடைவதாக பலரும் வருத்தம் தெரிவிக்கும் நிலையில், செயற்கை முறை கருத்தரித்தல் என்று சொல்லப்படுகிற IVF சிகிச்சைமுறையை எப்போது தேர்ந்தெடுப்பது? அதிலிருக்கும் சிக்கல்கள் என்னென்ன? என்பது குறித்தெல்லாம் விளக்குகிறார் கருவுறுதல் அறுவை சிகிச்சை நிபுணர் அப்துல் பாசித்.

கருவுறுதல் சிகிச்சை மருத்துவத்தில் நீங்கள் சந்தித்த மிகப்பெரிய சவால் எது?

இரண்டு வருடங்களுக்கு முன்பு என்னிடம் சிகிச்சை எடுத்து குழந்தை பெற்ற பெண் ஒருவர், குழந்தையை என்னிடம் காட்ட வந்தபோது அவருடைய அம்மாவையும் கூட்டிவந்தார். அவருடைய அம்மா பார்ப்பதற்கு மிகவும் சோர்வாகவும், ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதுபோன்றும் தெரிந்தார். அவரிடம் இதுகுறித்து கேட்டபோது, தன்னுடைய அம்மாவிற்கு அதிகப்படியான உதிரப்போக்கு இருப்பதாகவும், மருத்துவரிடம் காண்பிக்க அம்மா பயப்படுவதாகவும் அந்த பெண் கூறினார். ஒருவழியாக அவரை சமாதானப்படுத்தி அம்மாவின் வயிற்றை தொட்டு பார்த்தபோது 8 மாத கர்ப்பம்போல தெரிந்தது. ஆனால் அவர் மிகவும் வயதானவர் என்பதால் கர்ப்பந்தரிக்க வாய்ப்பில்லை. எனவே உடனே ஸ்கேன் செய்து பார்த்தபோது, 8 மாத குழந்தை அளவிற்கு கர்ப்பப்பையில் கேன்சர் அல்லாத கட்டி (benign tumor) இருந்தது தெரியவந்தது. மேலும் சாதாரணமாக 10.5க்கும் மேல் இருக்கவேண்டிய ஹீமோகுளோபின் அளவு 6 தான் இருந்தது. அதிகப்படியான ரத்தப்போக்கு மற்றும் வலி இருந்தும் சிகிச்சைக்கு பயந்து அம்மா அதுகுறித்து வாய்திறக்காமல் இருந்திருக்கிறார். அவருக்கு அறுவைசிகிச்சை செய்யலாம் என்று பேசியபோது அவர் மிகவும் பயந்ததால் கடைசியாக லேப்ராஸ்கோபி மூலம் கட்டியை அகற்ற முடிவு செய்தோம். 8 மாத குழந்தை அளவிற்கு இருந்த கட்டியை சிறிய துளைகள்மூலம் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி வெளியே எடுத்தது மிகவும் சவாலாக இருந்தது. ஒருவழியாக சிகிச்சை முடிந்து இப்போது அவர் நல்ல நிலைமையில் இருக்கிறார்.


லேப்ராஸ்கோபி மூலம் கருப்பையில் இருக்கும் கட்டியை அகற்றுதல்

தாமதமாக திருமணம் செய்பவர்கள் எந்த வயதுவரை குழந்தைக்கு முயற்சிக்கலாம்? அது எந்த அளவிற்கு சாத்தியம்?

நமக்கு வயதாவதைப் போலவே கருப்பைக்கும் வயதாகும். கருப்பையில் இருக்கும் செல் உடலில் இருக்கும் மற்ற செல்களைப் போன்று இருக்காது. அதை germ cell என்று சொல்கின்றனர். இந்த செல்கள் பின்னாளில் ஒரு குழந்தையாக உருவாகலாம். இது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் கருப்பையில் இருக்கும். உதாரணத்திற்கு, பருவமடைந்து மாதவிடாய் ஏற்பட தொடங்கும்போது 1000 கருமுட்டைகள் உற்பத்தி ஆகிறதென்றால், 30 வயதை நெருங்கும்போது இந்த உற்பத்தியானது 750ஆக குறைந்துவிடும். அதுவே 37, 38 வயதாகும்போது இந்த எண்ணிக்கை 400ஆக குறையும், பிறகு 42, 43 வயதில் முட்டை உற்பத்தியின் எண்ணிக்கை 100ஆக குறைந்து கடைசியில் மாதவிடாய் நின்றுவிடும். எனவே IVF சிகிச்சை மூலம் கருத்தரித்தலின் சாத்தியக்கூறுகள் என்பது பெண்களின் வயதுடன் தொடர்புடையது. வயது ஆக ஆக கருமுட்டையின் எண்ணிக்கை குறைவது மட்டுமல்லாமல் அதன் தரமும் குறைந்துகொண்டே போகும். ஏனென்றால் 25 வயதில் ஒரு பெண் கருத்தரித்தால், அந்த குழந்தைக்கு மரபணு குறைபாடு வருவதற்கான சாத்தியக்கூறானது 750 - 1000இல் ஒருவருக்குத்தான். அதுவே 40 வயதில் கருத்தரித்தால் இந்த பிரச்சினை 100 - 200இல் ஒருவருக்கு ஏற்படும். ஒரு குழந்தைக்கு மரபணு குறைபாடு ஏற்படுவதற்கான முழுக்காரணமும் கருமுட்டையின் பிரச்சினையாகத்தான் இருக்கும். எனவே 25 முதல் 34 வயதுக்குள் முதல் குழந்தையை திட்டமிடுவது நல்லது.

அதுவே ஆணுக்கு இதுபோல் பெண்கள் அளவிற்கு தாக்கம் இருக்காது என்றாலும், 45 - 50 தொடும்போது விந்தணுக்களின் எண்ணிக்கையும், தரமும் குறையத்தான் செய்யும். குழந்தைக்கு மரபணு குறைபாடு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகமாகும். இந்தியாவை பொருத்தவரை 2022ஆம் ஆண்டு ART law என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைமுறையை பெறுவதற்கு பெண்களுக்கு 50 வயதுவரையும், ஆண்களுக்கு 55 வயது வரையும் சிகிச்சை அளிக்கலாம் என்று அதில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் மருத்துவரீதியாக முன்கூட்டியே கர்ப்பந்தரிப்பது நல்லது. அப்படி கர்ப்பந்தரிக்க முடியாத பட்சத்தில் ஆரோக்கியமான கருமுட்டைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி சேமித்து வைத்துக்கொண்டு அதை சில வருடங்கள் கழித்து பயன்படுத்தி கருத்தரிக்கலாம்.


தாமதமாக கருத்தரிப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் மரபணு குறைபாடுகள்

குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு உங்களுடைய அட்வைஸ் என்ன?

குழந்தை பெற்றுக்கொள்ளவே முடியாது என்று சொல்லப்படுபவர்கள் மிகவும் குறைவுதான். கருவுருதலில் எல்லாவிதமான பிரச்சினைக்கும் சிகிச்சைமுறைகள் இருக்கின்றன. பெண்ணுக்கு இதயம் மற்றும் கர்ப்பப்பை சார்ந்த தீவிர பிரச்சினை இருந்தால்தான் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும். விந்தணு அல்லது கருமுட்டை உற்பத்தியே சுத்தமாக இல்லை என்பவர்களுக்கு, டோனர்கள் மூலம் கருமுட்டை மற்றும் விந்தணுக்கள் பெறமுடியும். இவர்கள்தவிர, பிறவியிலேயே சில பெண்களுக்கு கர்ப்பப்பை இருக்காது. ஆனால் கருமுட்டை உருவாகும். இவர்கள் வாடகைத்தாய் முறையை பின்பற்றலாம். சமீபத்தில் கர்ப்பப்பை மாற்று அறுவைசிகிச்சைமுறைகூட நடைமுறைக்கு வந்துவிட்டது. உலகம் முழுவதும் சிலருக்கு இந்த சிகிச்சை சாத்தியமாக்கப்பட்டிருக்கிறது. தாய் அல்லது சகோதரியிடமிருந்து கர்ப்பப்பை தானமாக பெறப்பட்டு, கருத்தரித்து, குழந்தை பிறக்கும்போது, கர்ப்பப்பையும் வெளியே எடுக்கப்படும். சிலர் எந்த சிகிச்சைமுறைக்கும் ஒத்துப்போக மாட்டார்கள். அவர்களுக்கு தத்தெடுத்தல்தான் தீர்வாக இருக்கும்.

புதிதாக திருமணமானவர்களுக்கு உங்களுடைய அட்வைஸ் என்ன?

திருமணம் உறுதியான உடனே, Pre Marital Check up கட்டாயம் செய்யவேண்டும். ஆண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு, சர்க்கரை அளவு, விறைப்புத்தன்மை மற்றும் விந்தணு வெளியேறுவதில் பிரச்சினைகள் இருக்கிறதா என பரிசோதிக்கப்படும். அதுபோக, உடலுறவில் ஆர்வம் குறைவாக இருக்கிறதா? விந்தணுவின் தன்மை எப்படி இருக்கிறது? பாலுறவு நோய்கள் ஏதேனும் இருக்கிறதா? என்பன போன்றவை பரிசோதிக்கப்படும். இந்த பிரச்சினைகளை திருமணத்திற்கு முன்பே தங்களது பார்ட்னரிடம் பேசி, தெரியப்படுத்தி, உடலுறவு குறித்த தெளிவான முடிவை எடுத்துக்கொள்ளலாம்.


திருமணத்திற்கு முன்பு செய்யவேண்டிய Pre Marital Check up

மலட்டுத்தன்மையை சரிசெய்ய முடியுமா?

மலட்டுத்தன்மை எதனால் ஏற்பட்டது என்பதற்கான காரணத்தை முதலில் கண்டறியவேண்டும். ஆண்களுக்கு முதலில் விந்தணு பரிசோதனை செய்துபார்க்கப்படும். எண்ணிக்கை, இயக்கம் போன்றவற்றில் எது குறைவாக இருக்கிறது என்பது கண்டறியப்பட்டு, மேற்கொண்டு ரத்த பரிசோதனை அல்லது ஸ்கேன் செய்து பார்த்து, மருந்து மாத்திரைகள்மூலம் சரிசெய்ய முடியுமா என்பதை மருத்துவர்கள் தீர்மானிப்பர். அதேபோல் பெண்களுக்கும் ஸ்கேன், கருக்குழாய் அடைப்பு, தைராய்டு மற்றும் ரத்த பரிசோதனை போன்றவை செய்துபார்க்கப்பட்டு என்ன பிரச்சினையால் கர்ப்பம் உருவாகவில்லை என்பதை கண்டறிந்து அதற்கான சிகிச்சையை அளிப்பர். இப்படி முடியாத பட்சத்தில் IUI அல்லது IVF சிகிச்சைமுறையை மருத்துவர் பரிந்துரைப்பார்.

Azoospermia குறைபாட்டை சரிசெய்ய முடியுமா?

விந்துப்பையில் சுத்தமாக விந்தணுக்களே இல்லை என்பதற்கு Azoospermia என்று அர்த்தம். இதை non obstructive மற்றும் obstructive என இரண்டு வகையாக பிரித்துக்கொள்ளலாம். Non obstructive என்றால் விந்தணு உற்பத்தி ஆகவே இல்லை அல்லது மிகவும் குறைவான விந்தணுக்களே உற்பத்தி ஆகின்றது என்று அர்த்தம். Obstructive என்பது உற்பத்தியாகும் விந்தணுக்கள் ஏதேனும் ஒரு அடைப்பால் வெளியே வராமல் தடுக்கப்படுவது. Obstructive என்றால் அறுவைகிச்சைமூலம் சிலருக்கு சரிசெய்ய முடியும். அப்படி முடியாதவர்களுக்கு IVF முறை பரிந்துரை செய்யப்படும். பொதுவாக Obstructive பிரச்சினை இருப்பவர்களுக்கு IVF முறை குழந்தைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகம். அதுவே, Non obstructive பிரச்சினை இருப்பவர்களுக்கு பயாப்ஸி செய்தாலும் விந்தணு கிடைப்பதற்கான சாத்தியம் மிகக்குறைவு. அப்படியே கிடைத்தாலும், அதைவைத்து கருத்தரித்து குழந்தை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளும் குறைவு. 

Tags:    

மேலும் செய்திகள்