கேன்சர் நோயாளியை இப்படி ட்ரீட் பண்ணுங்க! - வழிகாட்டுகிறார் புற்றுநோயியல் நிபுணர்

புற்றுநோய் குறித்த பயம் இருப்பவர்கள் பரிசோதனை செய்வதையே தவிர்த்துவிடுகின்றனர். ஒருவேளை கேன்சர் உறுதியாகிவிட்டாலும் குடும்பத்தினரின் அரவணைப்பும் ஆதரவும் நோயாளிக்கு மிகவும் தேவை.

Update: 2024-03-25 18:30 GMT
Click the Play button to listen to article

எத்தனையோ நோய்கள் இருந்தாலும் சில நோய்கள்தான் உயிர்பயத்தை கொடுக்கும். அதில் ஒன்றுதான் கேன்சர். நிறையப் பேருக்கு கேன்சர் வந்து அவர்கள் குணமடைந்திருந்தாலும்கூட, நமக்கும் கேன்சர் இருக்கிறதா என்பதை பரிசோதித்து பார்க்கவே பலரும் பயப்படுவார்கள். காரணம், இதிலிருக்கும் வகைகள். கேன்சரில் பல வகைகள் இருக்கின்றன. பெரும்பாலான கேன்சர்களுக்கு ஆரம்பநிலைகளில் அறிகுறிகள் பெரிதளவில் தெரியாது என்பதால் நிறையப்பேர் அதனை கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிடுகிறார்கள். அதுவே நிலைமை மோசமாகும்போது சிகிச்சைக்கான பலன்களும் குறைந்துவிடுகின்றன. கேன்சர் என்னென்ன காரணிகளால் வருகிறது? கேன்சர் வராமல் தடுக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? என்பது குறித்தெல்லாம் விளக்குகிறார் புற்றுநோயியல் நிபுணர் ஓவேஷ் முகமது.

முதல் கேன்சர் செல் எங்கிருந்து உருவாகிறது? எதனால் உருவாகிறது?

எந்த வியாதிக்கும் தனிப்பட்ட ஒரு காரணி மட்டுமே காரணமாக இருக்கமுடியாது. குறிப்பாக, கேன்சரை பொருத்தவரை பல காரணி நோய் (multi factorial disease) என்றுதான் சொல்லவேண்டும். கேன்சர் ஏன் தொடங்கியது? என்று ஆராய்வதைவிட எப்படி தொடங்கியது? என்றுதான் பார்க்கவேண்டும். இதற்கு பல காரணிகள் இருந்தாலும் முதல் காரணி வயது. வயதாக வயதாக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. இரண்டாவது பாலினம். சிலவகை புற்றுநோய்கள் ஆண்களுக்கும், சில வகை புற்றுநோய்கள் பெண்களுக்கும் அதிகமாக இருக்கும். மூன்றாவது மரபணு. இது முக்கிய காரணி என்றாலும், இதனை கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு அதிக செலவாகும் என்பதால் இன்றுவரை இதற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்பது சற்று குறைவாகவே பார்க்கப்படுகிறது. 


புற்றுநோய் செல் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை (உ.ம்)

எனவே 10 சதவீதத்திற்கும் குறைவாகவே மரபணு காரணிகளால் கேன்சர் வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நான்காவது உணவு பழக்கம். ஆல்கஹால், புகைப்பழக்கம் மற்றும் புகையிலை பயன்பாட்டினால் அதிகளவில் கேன்சர் உருவாகிறது. கடைசியாக, சுற்றுச்சூழல் காரணிகள். நம்மை சுற்றியிருக்கும் மாசு, கெமிக்கல் கம்பெனிகளில் வேலைசெய்தல், பெயிண்ட் சார்ந்த வேலைகள், குளிர் சுரங்கங்களில் வேலைசெய்தல், கல் உடைத்தல் போன்ற காரணிகளும் புற்றுநோய்களுக்கு காரணமாகின்றன. இந்த காரணிகளை கண்டறிந்து அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் கேன்சர் வருவதை தடுக்கலாம். கேன்சரை பொருத்தவரை prevention is cure என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

என்னென்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?

முதலில் வயதிலிருந்தே ஆரம்பிக்கலாம். ஒரு நபர் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு வீட்டில் அதிக நேரம் செலவிடுவார். வெளியே சென்று சாப்பிடுதல் மற்றும் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுதல் என ஒரு மந்தமான வாழ்க்கைமுறையை உருவாக்கிவிடுவார். சிலர் வேலையிலிருக்கும்போதே சரியாக சாப்பிட மாட்டார்கள். உணவை தவிர்ப்பார்கள். கூடவே எண்ணெய் உணவுகளை சாப்பிடுதல் போன்ற ஆரோக்கியமற்ற முறைகளையும் பின்பற்றுவார்கள். இதனால் ஒபிசிட்டி பிரச்சினை ஏற்பட்டு அவதிப்படுவார்கள். பர்கர், பீட்சா போன்ற மேற்கத்திய உணவுகளை முடிந்தவரை தவிர்க்கவேண்டும். மாதம் ஓரிரு முறை சாப்பிடலாமே தவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள் கட்டாயம் குறைக்கப்பட வேண்டும்.


ஆரோக்கியமான உணவுகள் vs ஆரோக்கியமற்ற உணவுகள்

இரண்டாவது வாழ்க்கைமுறையை மாற்றியமைக்க வேண்டும். உடற்பயிற்சி செய்வதுடன், நிறைய பழங்களை சாப்பிடவேண்டும். ஒரு நாளில் மூன்று பகுதி, மூன்று வேளை, மூன்று பழங்கள் / காய்கறிகள் சாப்பிடவேண்டும் என்கிறது உலகளாவிய உணவு வழிகாட்டு நெறிமுறைகள். இதுபோன்ற உணவு முறையை பின்பற்றுகிறவர்களுக்கு கேன்சர், ஒபிசிட்டி, இதய நோய்கள், பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் வருவது குறைந்திருப்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டிருக்கிறது.

மூன்றாவது உடற்பயிற்சி. அமெரிக்க புற்றுநோய் சமூக வழிகாட்டுதலின்படி, ஒரு வாரத்திற்கு 175 நிமிட மிதமான தீவிர உடற்பயிற்சி (moderate intensity exercise) செய்யவேண்டும். இதுபோன்ற உடற்பயிற்சி கட்டாயம் செய்யவேண்டும். நான்காவது ஸ்கிரீனிங். இது மிக முக்கியமானது என்றாலும் நிறையப்பேருக்கு இதுகுறித்த விழிப்புணர்வு இல்லை. ஸ்கிரீனிங் என்பது புற்றுநோய் வருவதற்கு முன்பே ஆராய்ந்து, அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, அதை கண்டறிந்து, ஆரம்ப கட்டத்திலேயே முறையான சிகிச்சை எடுப்பதாகும். ஸ்கிரீனிங் முறையால் நோயாளியை ஸ்டேஜ் 1-க்கு முன்பே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதால் வாழ்நாளை அதிகரிக்க முடியும். இந்தியாவில் நேஷனல் கேன்சர் ஸ்கிரீனிங் ப்ரோகிராம் என்பதை அறிமுகம் செய்திருக்கிறார்கள். இதில், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் வாய் புற்றுநோயால்தான் அதிகம்பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த வகை புற்றுநோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும்.


உடற்பயிற்சி தேவை மற்றும் மரபணு பரிசோதனை மேற்கொள்வது அவசியம்

கடைசியாக மரபணு காரணிகள். நமது முன்னோர்களுக்கு கேன்சர் இருந்திருந்தால் நாமும் பரிசோதனை செய்வது அவசியம். நமது பரம்பரையில் யார் யாருக்கு கேன்சர் இருந்திருக்கிறது? அவர்கள்மூலம் நமக்கு கேன்சர் வர எத்தனை சதவீதம் வாய்ப்புகள் இருக்கிறது? என்பதை புற்றுநோய் நிபுணர் பரிந்துரையின்பேரில் ஆங்காலஜிஸ்ட் கவுன்சிலர் கணித்து, அதற்கேற்ப ரத்த பரிசோதனை எடுப்பார். அதன்பிறகு என்னென்ன பரிசோதனைகள் எடுக்கவேண்டும் என்பதை புற்றுநோய் நிபுணர் பரிந்துரைப்பார். ஆனால் புற்றுநோய் குறித்த பயம் இருப்பவர்கள் பரிசோதனை செய்வதையே தவிர்த்துவிடுகின்றனர். ஒருவேளை கேன்சர் உறுதியாகிவிட்டாலும் குடும்பத்தினரின் அரவணைப்பும் ஆதரவும் நோயாளிக்கு மிகவும் தேவை.

கேன்சர் நோயாளியை குடும்பத்தினர் மிகவும் அக்கறையுடன் கவனித்துக் கொள்வதால், நோயாளி என்பதால்தான் கவனிக்கிறார்கள் என்று நினைத்து மன உளைச்சலுக்கு ஆளாகிறார்களே!

இதில் இரண்டு நிலைகளை கருத்தில்கொள்ள வேண்டும். ஒன்று, கேன்சரால் பாதிக்கப்பட்டவரை சொந்த குடும்பத்தினரே பார்த்துக்கொள்ளாமல் நோயாளி என ஒதுக்கி வைப்போரும் உண்டு. நோயாளி என்பதால் அக்கறையுடன் கவனித்துக்கொள்வோரும் உண்டு. இந்த இடத்தில்தான் மருத்துவரை அணுகுதல் அவசியமாகிறது. வாழ்க்கையில் ஒருமுறை கேன்சர் வந்துவிட்டால் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.


கேன்சர் நோயாளிக்கு குடும்பத்தினரிடமிருந்து கிடைக்கும் அரவணைப்பு

புற்றுநோய் நிபுணரிடம் செல்லும்போது, நோயாளி மற்றும் அவரது குடும்பத்தினரை தனித்தனியாக அழைத்து ஆலோசனைகள் வழங்குவார். நோயாளி எப்படி உணவு சாப்பிடுகிறார்? நன்றாக தூங்குகிறாரா? நடத்தையில் மாற்றங்கள் இருக்கிறதா? என்பது குறித்து நோயாளியிடமும், குடும்பத்தினரிடமும் தனித்தனியாக கேட்டு தெரிந்துகொண்டு ஆலோசகர்களிடம் அனுப்புவார்கள். இதனால்தான் கேன்சர் சிகிச்சையை Multimodality treatment என்கிறார்கள்.

பொதுவாக ஒரு புற்றுநோய் நிபுணரை அணுகும்போது, நோயாளியின் நிலை எப்படி இருக்கிறது? அடுத்த 10 - 15 வருடங்களுக்கு அவருடைய வாழ்க்கை எப்படியிருக்கும்? என்பது குறித்து கணித்துதான் சிகிச்சை வழங்கப்படும். குறிப்பாக, சர்ஜரி ஆங்காலஜிஸ்ட்களை அணுகும்போது, 90% நோயாளிகள் குணமடைந்துவிடுவார்கள். அதிலும் ஆரம்பகட்ட நிலை என்றால் குணமாவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகம். ஸ்டேஜ் ஒன்றில் சர்ஜரி மேற்கொண்ட 90% நோயாளிகள் 20 வருடங்கள்வரை நன்றாக வாழமுடியும். அதுவே ஸ்டேஜ் நான்கில் சர்ஜரி செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. ஒன்றிரண்டு பேருக்கு சர்ஜரி மேற்கொண்டாலும் உயிர்வாழ்வதற்கான வாய்ப்பு என்பது 20% தான்.

Tags:    

மேலும் செய்திகள்