செயற்கை முறையில் கருத்தரித்தாலும் சுகப்பிரசவத்தில் குழந்தை பெற முடியும் - கர்ப்பகால யோகா பயிற்றுநர் விளக்கம்

யோகா ஆசன பயிற்சிகளைப் கர்ப்ப காலத்தில் பின்பற்றும்போது, பெண்களுக்கு கர்ப்பத்துடன் வரும் பலவிதமான மன அழுத்தங்களை சமாளிப்பதற்கும், தாயின் வயிற்றில் குழந்தையின் சிறந்த வளர்ச்சிக்கும் உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Update:2024-09-24 00:00 IST
Click the Play button to listen to article

யோகா பயிற்சி உங்கள் மனதையும், உடலையும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள மட்டுமின்றி ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் வழி வகுக்கிறது. அப்படிப்பட்ட இந்த யோகா ஆசன பயிற்சிகளைப் கர்ப்ப காலத்தில் பின்பற்றும்போது, பெண்களுக்கு கர்ப்பத்துடன் வரும் பலவிதமான மன அழுத்தங்களை சமாளிப்பதற்கு உதவுவது மட்டுமின்றி, தாயின் வயிற்றில் குழந்தையின் சிறந்த வளர்ச்சிக்கும் உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு ஆய்வின்படி, யோகா செய்யும் கர்ப்பிணிகளுக்கு குறைப்பிரசவம் அல்லது குறைந்த எடை கொண்ட குழந்தை பிறக்கும் வாய்ப்பு குறைவு என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும் கர்ப்ப காலத்தில், பெண்கள் வெவ்வேறு நிலைகளில் ​​சோர்வு மற்றும் நோய், கால்தசை பிடிப்புகள் மற்றும் சுவாசக்கோளாறுகள் போன்ற பிரச்சினைகளில் இருந்து அவர்களை ரீலிஃப் செய்து எளிய முறையில் பிரசவம் நடைபெற பேருதவியாக இருக்கிறது. இந்த யோகா பயிற்சிகளை சரியான வழிகாட்டுதல்களுடன் தொடர்ந்து எப்படி செய்வது? யாரை அணுகுவது? இதனால் என்னென்ன மாதிரியான பலன்கள் கிடைக்கின்றன? போன்ற கர்ப்பகால யோகா பயிற்சி தொடர்பான பல கேள்விகளுக்கு விளக்கமளித்து பேசியுள்ளார் கர்ப்பகால யோகா பயிற்றுநர் திருமதி. புவனா செல்வராஜ். அந்த நேர்காணலின் தொகுப்பை இங்கே காணலாம்.

கர்ப்ப காலத்தில் யோகா பயிற்சி எவ்வாறு கொடுக்கப்படுகிறது? உங்களுடைய பங்களிப்பு பற்றி கூறுங்கள்?

பொதுவாக கருத்தரித்த பிறகு மிகவும் கவனமாக இருக்க வேண்டும், சட்டென எந்த மாதிரியான அசைவுகளையும் செய்யக்கூடாது. இப்படி உட்கார கூடாது, அப்படி உட்காரக்கூடாது என நமது பெரியவர்கள் கூறுவார்கள். அதை கேட்டு பழகிய நம் பெண்களும் கர்ப்ப காலத்தில் நாம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எண்ணி பல கட்டுப்பாடுகளை விதித்து தங்களை தாங்களே பல விஷயங்களில் ஈடுபடுத்திக் கொள்ளாமல், முறையான உடற்பயிற்சிகள் செய்யாமல் பின்னர் சிரமப்படுவார்கள். ஆனால், இப்போது அதை மாற்றும் படியாகத்தான் எங்களுடைய யோகா பயிற்சி முறைகள் இருக்கிறது. இயற்கை முறையில் நாம் கருத்தரித்திருந்தால் அப்படியான எந்த கட்டுப்பாடுகளையும் நாம் பெரியளவில் பின்பற்ற தேவையில்லை. எப்போதும் நாம் செய்கின்ற வேலைகளை முறையான வழிகாட்டுதல்களுடன் செய்யலாம் என்பதையே நாங்கள் இங்கு பயிற்றுவிக்கிறோம்.


கர்ப்ப காலத்தில் யோகா பயிற்சி செய்வதன் மூலம் மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறைகிறது

முன்பெல்லாம், நம் வீடுகளில் அன்றாடம் செய்யப்படும் வேலைகளை தொடர்ந்து செய்தாலே சுகப்பிரசவம் நடந்துவிடும் என்பார்கள். ஆனால் இப்போது அப்படி கிடையாது, நாகரிக வளர்ச்சி காரணமாக நமது வீடுகளில் அன்றாடம் செய்யப்படும் வேலைகளை தொடர்ந்து செய்தாலே சுகப்பிரசவம் நடந்துவிடும். வேலைகளை எளிதாக்கும் வகையில் பல மின்சாதன பொருட்கள் வந்துவிட்டன. அன்று இருந்த அம்மிக்கல், ஆட்டுக்கல் காணாமல் போய் துவைப்பதற்கு, கழுவுவதற்கு, அரைப்பதற்கு என அனைத்தையுமே எளிதாக்க இங்கு பல பொருட்கள் வந்துவிட்டன. இது தவிர வேலைக்கும் ஆட்களை அமர்த்தி வீட்டு வேலையின் வாயிலாக செய்யப்படும் உடற்பயிற்சி முறையிலிருந்து முற்றிலுமாக நாம் விலகி வருகிறோம். சொல்லப்போனால் இன்றைய பெண்கள் கீழே உட்கார்ந்து எழுவதுகூட கிடையாது. கர்ப்ப காலத்தில் இத்தகைய அசைவுகள் இருந்தால்தான் நம்முடைய இடுப்பின் அடிப்பகுதித் தசைநார்கள் (pelvic muscles) குழந்தை பிறக்கும் போது சரியாக விரிவடைந்து, சுகப்பிரசவம் நிகழ வழிவகுக்கும். ஆனால் அதை யாருமே இப்போது பின்பற்றுவது கிடையாது. இப்படி மறந்துபோன மற்றும் விலகிவந்த பல விஷயங்களை எங்களது யோகா பயிற்சியின் மூலமாக நாங்கள் மீண்டும் மீட்டெடுத்து வருகிறோம்.

நீங்கள் எந்தெந்த மாதிரியான யோகா பயிற்சிகளை கற்று தருகிறீர்கள்?


கர்ப்பகால யோகா செய்யும்போது தாய், சேய் இருவருக்கும் அமைதியான சூழல் உண்டாகும்

எங்கள் பயிற்சியில் மூன்று விதமான நிலைகள் இருக்கின்றன. அதில் கர்ப்பத்தின் துவக்கத்தில் வாந்தி, மயக்கம், சோர்வான உடல்நிலை இருக்கும் தருணங்களில் எந்த பயிற்சியும் கொடுப்பது கிடையாது. மூன்று மாதங்களுக்கு பிறகும், கடைசி மூன்று மாதங்களிலும் இரு நிலைகளில் வெவ்வேறு விதமான யோகா பயிற்சிகளை பயிற்றுவிக்கிறோம். குறிப்பாக 16வது வாரத்திற்கு பிறகுதான் யோகா பயிற்சி செய்வதற்கான முதல் கட்டத்தை ஆரம்பிப்போம். இதில் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதமான உடல் வாகை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதனால் பொதுவான யோகா பயிற்சி போல ஒரேநேரத்தில் எல்லோருக்குமே ஒரே பயிற்சிமுறையை நாங்கள் சொல்லி தருவது கிடையாது. அவரவர் உடல் வாகுக்கு, கர்ப்ப சூழலுக்கு ஏற்றார் போன்று தனித்தனியே பயிற்சிகள் தரப்படுகின்றன. இங்கு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் சுவாச பயிற்சி. கர்ப்ப காலத்தில் எப்படியான சுவாச பயிற்சிகளை மேற்கொண்டால் குழந்தை வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டங்களையும் நாம் எளிதாக கடந்து செல்ல முடியும் என்பதை சொல்லி கொடுக்கிறோம். இதில் 32 வாரங்களுக்கு பிறகு குழந்தை முழு வளர்ச்சி அடைந்திருக்கும்போது நாம் மூச்சு விடுவதில் பல சிரமங்களை சந்திக்க நேரலாம். ஆனால் முறையான சுவாச பயிற்சி துவக்கத்திலிருந்தே நாம் செய்துவந்தால், நமக்கு பெரியளவில் சிரமம் இருக்காது. மேலும் செரிமான சிக்கலும் வராமல் பார்த்துக்கொள்ளலாம்.

இயற்கை வழியில் கருத்தரிக்காமல், ஐவிஎஃப் முறையில் கருத்தரித்தவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்களே? அவர்களும் இந்த யோகா பயிற்சிகளை செய்ய முடியுமா?


தொடர் யோகா செய்வதன் மூலம் கர்ப்பகால அசவுகரியத்தை போக்க முடியும்

உண்மைதான், ஐவிஎஃப் முறையில் கருத்தரித்தவர்களை பாதுகாப்பது என்பது மிக அவசியமான மற்றும் கடினமான ஒன்றுதான். அவர்கள் உட்காருவது துவங்கி கழிவறைகளை பயன்படுத்தும் முறை வரை பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இருப்பினும் அவர்களுக்கும் நாங்கள் யோகா பயிற்சி கொடுக்கத்தான் செய்கிறோம். பொதுவாகவே ஐவிஎஃப் முறையில் கருத்தரித்தவர்கள் சிசேரியன் செய்துதான் குழந்தை பெற்றுக் கொள்வார்கள். ஆனால் எங்களிடம் பயிற்சிக்கு வந்த சிலர் முறையான யோகா பயிற்சிகளை மேற்கொண்டதன் மூலம் சுகப்பிரசவம் மூலமாகவே பிள்ளை பெற்றிருக்கிறார்கள். 

ஐவிஎஃப் முறையில் கருத்தரிக்கும் சிலருக்கு முறையாக குழந்தை வளர்ச்சியடையாமல் பாதியிலேயே கருகலைந்து விடுகிறது. இத்தகைய சிக்கல்களை யோகா பயிற்சி மூலம் தடுக்க முடியுமா?

ஐவிஎஃப் சிகிச்சைக்கு செல்வதற்கு முன்பாகவே முறையான யோகா பயிற்சிகளை மேற்கொண்டு, உணவு கட்டுப்பாட்டையும் பின்பற்றினால் இயற்கை முறையிலேயே கருத்தரிக்கும் சூழலை நம்மால் நிச்சயம் உருவாக்க முடியும். வெளி உணவுகளை தவிர்த்து, வீட்டிலேயே ஆரோக்கியமான உணவுகளை தயாரித்து உட்கொள்வதோடு, சரியான நேரத்தில் தூங்கி எழுவதை வழக்கமாக கொண்டாலே 50 சதவீதம் நம்முடைய பிரச்சினை தீர்ந்துவிடும். இதோடு முறையான யோகா பயிற்சிகளை மேற்கொண்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதன் மூலம் நிச்சயமாக இயற்கை முறையிலேயே கருத்தரிக்க முடியும். இது ஆண், பெண் என அனைவருக்குமே பொருந்தும்.


முறையான யோகா பயிற்சிகளை மேற்கொண்டால் செயற்கை முறையில் கருத்தரிப்பவர்களும் நார்மல் டெலிவரி செய்யமுடியும்

PCOD, PCOS பிரச்சினை இருக்கும் பெண்களுக்கும் கருத்தரிப்பதில் சில சிக்கல் இருக்கிறது. இதற்கும் யோகா பயிற்சியில் தீர்வு இருக்கிறதா?

இத்தகைய பிரச்சினைகள் இருக்கும் பெண்கள் முதலில் நடைப்பயிற்சியை முறையாக மேற்கொள்ள வேண்டும். பிறகு சின்ன சின்ன தியான பயிற்சிகள் மேற்கொண்டு மன அமைதியை பெறுவதன் மூலம், உடலில் நடக்கும் மோசமான ரசாயன மாற்றங்களை நம்மால் தடுக்க முடியும். குறிப்பாக PCOD, PCOS பிரச்சினைகளை தீர்ப்பதற்கென்றே சில யோகா பயிற்சிகள் இருக்கின்றன. அந்த முத்திரைகளை முறையாக விடாமல் பின்பற்றினாலே இத்தகைய பிரச்சினைகள் வராமல் நம்மால் தடுக்க முடியும். சொல்ல போனால் இன்றைய பல பெண்கள் எந்த ஒரு விஷயத்தையும் தொடர்ந்து பின்பற்றுவது கிடையாது. சில நாட்கள் மட்டுமே எங்களுடைய பயிற்சி வகுப்பிற்கு வந்துவிட்டு, நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் வருகிறார்கள். இந்த செயல் தவறான ஒன்று. எந்த ஒரு விஷயத்தையும் நேரம் தாழ்த்தாமல், நேரம் பார்க்காமல் சரியான பயிற்சி எடுத்துக் கொண்டாலே நிச்சயம் நம்மால் தீர்வு காண முடியும்.

இவற்றை எல்லாம் தாண்டி சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் இருக்கும் பெண்கள் கருத்தரிக்கும்போது பல சிக்கல்களை சந்திக்கிறார்கள். இவற்றிற்கும் உங்களிடம் முறையான பயிற்சிகள் உள்ளனவா?


யோகாவால், கர்ப்ப கால சர்க்கரை நோய் பிரச்சினை தடுக்கப்படும் - புவனா செல்வராஜ்

உண்மைதான். இன்று பல பெண்களுக்கு சாதாரண சர்க்கரை நோய் என்று இல்லாமல், கர்ப்ப கால சர்க்கரை நோய் என சொல்லப்படக்கூடிய GDM பிரச்சினை பலருக்கு வருகிறது. ஏன், நானே இரண்டு முறை கருத்தரித்தபோது அந்த பிரச்சிசனையை சந்தித்துள்ளேன். இதற்கும் முறையான யோகா பயிற்சிகள் இருக்கின்றன. குறிப்பாக நாம் உண்ணும் உணவின் மூலமாகவே இதனை சரி செய்ய முடியும். அதேபோல் கர்ப்ப கால சர்க்கரை நோய் ஏற்படும் நேரத்தில் சிலருக்கு தைராய்டு பிரச்சினை வருவதற்கும் வாய்ப்புள்ளது. இதனை முறையான சுவாச பயிற்சிகளின் மூலமாகவே நிவர்த்தி செய்துவிடலாம். 

கர்ப்ப காலத்தில் முதுகு வலி, கழுத்து வலி அதிகமாக இருக்கும். இதனை சரி செய்ய யோகா பயிற்சிகள் இருக்கின்றனவா?

கண்டிப்பாக இருக்கிறது. அந்த சமயத்தில் பல நபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை என்னவென்றால் முதுகு வலி, கழுத்து வலி, கால் வீக்கம் போன்றவைகள்தான். இதனை சரி செய்வதற்கும் பல ஆசனங்கள் இருக்கின்றன. முன்பெல்லாம் நாம் துணி காய போடுவதற்கும், மேலே இருக்கின்ற ஒரு பொருளை எடுப்பதற்கும் காலை உயர்த்தி கால் நுனிவிரல்களில் நம்மை நிலைநிறுத்தி, உயரப்படுத்தி அந்த செயல்களை செய்வோம். அதுவே ஒரு ஆசனம்தான். அந்த பயிற்சியை நாம் எடுத்துக்கொண்டாலே இத்தகைய வலிகளில் இருந்து விடுபட்டுவிடலாம்.

Tags:    

மேலும் செய்திகள்