ஞானப்பல்லை எடுக்காவிட்டால் இத்தனை பிரச்சினைகளா? - விளக்குகிறார் பல் மருத்துவர்

பால் கிடைக்காதபட்சத்தில் பல்லை கழுவி மீண்டும் வாயில் போட்டு உமிழ்நீரிலேயே இருக்கும் பல்லை மருத்துவரிடம் கொடுக்கவேண்டும். உடனே மருத்துவர் அதை விழுந்த இடத்திலேயே மீண்டும் பொருத்திவிடுவார். ஆனால் உடைந்துவிட்டால் அந்த பல்லை எதுவுமே செய்யமுடியாது.

Update: 2024-09-02 18:30 GMT
Click the Play button to listen to article

வாய் சுத்தம் உடற்சுத்தம் என்பார்கள். உள்ளேயும் வெளியேயும் அழகாக இருக்க பற்களை பராமரிப்பது அவசியம். பற்களை சுத்தமாக வைத்திருந்தாலே பெரும்பாலான வியாதிகளிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள். அப்படிப்பட்ட பற்களை எப்படி முறையாக பராமரிப்பது? பற்களில் பிரச்சினை இருந்தால் அதை கண்டறிந்து சரிசெய்வது எப்படி? எந்தெந்த பற்களால் பிரச்சினைகள் வரும்? என்பது குறித்தெல்லாம் விளக்குகிறார் பல் மருத்துவர் மணிகண்ட பிரபு.

பல் துலக்க என்ன மாதிரியான பேஸ்ட்டை பயன்படுத்தலாம்?

‘நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை’ என்று சொல்வார்கள். பல் துலக்க வேப்பங்குச்சி, சாம்பல் போன்றவற்றை பயன்படுத்துவது நல்லதுதான். ஆனால் இப்போது அவை எப்படி இருக்கிறது என்று பார்க்கவேண்டும். அதனால் காலத்திற்கு ஏற்றாற்போல் நாம் மாறிக்கொண்டே இருக்கவேண்டும். அதேபோல் உணவு பழக்கவழக்கங்களும் மாறிவிட்டன. நம் முன்னோர்கள் சாப்பிட்ட களி, கூழ், கறி போன்றவையெல்லாம் சற்று கடினமானவை. அந்த உணவுகள் பற்களிடையே சிக்கிக்கொள்ளாது. எனவே சாம்பல், வேப்பங்குச்சி போன்றவற்றை பயன்படுத்தி பல் துலக்கி வாய் கொப்பளித்தாலே போதுமானது. இப்போதுள்ள இட்லி, தோசை, பீட்சா, பர்கர் போன்றவை சாப்பிட்ட உடனே கரைந்து பல் இடுக்குகளில் சென்று ஒட்டிக்கொள்ளும். அதை ப்ரஷ் வைத்து துலக்கினால்தான் வெளியே வரும். வேப்பங்குச்சியில் பல் துலக்க விரும்புபவர்கள் வாரத்திற்கு ஒருமுறை வேண்டுமானால் அதனை பயன்படுத்தலாம்.


இன்றைய உணவு பழக்கவழக்கங்களுக்கு வேப்பங்குச்சியை பல் துலக்க பயன்படுத்துவது சரியாகாது

எண்ணெய் சருமம், வறண்ட சருமம் போன்றவற்றிற்கு எப்படி வித்தியாசமான சோப்புகளை பயன்படுத்துகிறோமோ அதேபோல் குழந்தைகள், பெரியவர்கள், மஞ்சள் பற்கள் கொண்டவர்கள், சென்சிட்டிவ் பற்கள் கொண்டவர்கள் என ஒவ்வொருவருக்கும் ஏற்றவகையில் பேஸ்ட்டுகளும் தனித்தனியாக இருக்கிறது. நிறையப்பேர் செய்யும் தவறே பெரியவர்கள் பயன்படுத்தும் பேஸ்ட்டை குழந்தைகளுக்கும் கொடுப்பதுதான். பெரியவர்களுக்கு தயாரிக்கப்படும் பேஸ்ட்டில் புளோரைடு குறைவாக இருக்கும். அதுவே குழந்தைகள் பேஸ்ட்டில் புளோரைடு கொஞ்சம் அதிகமாகவே இருக்கவேண்டும். சொத்தை ஏற்படுத்தும் கிருமிகளிடமிருந்து புளோரைடு பற்களை காப்பாற்றும் என்பதால்தான் குழந்தைகள், அவர்களுக்குரிய பேஸ்ட்டை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

வாயில் துர்நாற்றம் வந்தாலே வயிற்றுப்புண் என்று சொல்கிறார்கள். ஆனால் பற்களில் இருக்கும் பிரச்சினையாலும் துர்நாற்றம் வருமா?

வயிற்று பிரச்சினையின் பிரதிபலிப்பாக வாயில் துர்நாற்றம் கண்டிப்பாக வரும். டான்சில் அறுவை சிகிச்சை செய்த குழந்தைகள் வாயை திறந்து வைத்துக்கொண்டே தூங்குவதால் கொஞ்ச நாட்கள் வாய் துர்நாற்றம் இருக்கும். அப்படி வாயில் பிரச்சினை இல்லாதபோது உடனடியாக மருத்துவரை சென்று பார்ப்பது நல்லது.


ஒரு வயதிற்குள்ளேயே குழந்தைகளுக்கு முதல் பல் முளைக்க ஆரம்பித்துவிடும் - மருத்துவர்

குழந்தைகளுக்கு எப்போது பால் பற்கள் உருவாகும்? அது எந்த வயதில் விழுந்து முளைக்கும்?

ஒரு வயதிற்குள்ளேயே முதலில் பல் முளைக்க ஆரம்பித்துவிடும். இதில் ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளுக்கு சற்று வேகமாக வளரும். இந்த பற்கள் முளைக்க ஆரம்பித்துவிட்டாலே பெற்றோர்கள் விரலில் மாட்டும் பிரஷ்ஷை பயன்படுத்தி அதை சுத்தப்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளுக்கு மெதுவாகத்தான் பால் பற்கள் விழுந்து முளைக்கும். சில சிறுவர்களுக்கு 15 வயது வரைக்கும்கூட பால் பற்கள் இருக்கும். அதுவே சிறுமிகளுக்கு 12 வயதிற்குள்ளாகவே அனைத்து பால் பற்களும் விழுந்துவிடும்.

பெரியவர்களுக்கு திடீரென பல் விழுந்துவிட்டால் அதே பல்லை மீண்டும் பொருத்தமுடியுமா?

ஒரு பல் உடையாமல் திடீரென முழுமையாக விழுந்துவிட்டால், அதை உடனடியாக எடுத்து சுத்தமான தண்ணீரில் கழுவி, அறை வெப்பநிலையில் இருக்கும் பாலில் போட்டுவிட வேண்டும். உடனே அதை ஒரு பல் மருத்துவரிடம் கொண்டுசென்று கொடுக்கவேண்டும். அப்படி பால் கிடைக்காதபட்சத்தில் பல்லை கழுவி மீண்டும் வாயில் போட்டு உமிழ்நீரிலேயே இருக்கும் பல்லை மருத்துவரிடம் கொடுக்கவேண்டும். உடனே மருத்துவர் அதை விழுந்த இடத்திலேயே மீண்டும் பொருத்திவிடுவார். ஆனால் உடைந்துவிட்டால் அந்த பல்லை எதுவுமே செய்யமுடியாது. பெரும்பாலும் ஈறு பிரச்சினைகளால் பற்கள் திடீரென விழலாம். அப்படி விழும்போது அதை பொருத்த முடியாது. ஏனென்றால் அப்படி பிரச்சினையில் அந்த பகுதி எலும்பு முழுக்க சேதமடைந்திருக்கும். அந்த பகுதியில் செயற்கை பற்களை பொருத்துவதுகூட கடினமானது. தொற்று ஏற்பட்ட இடத்தில் செயற்கை பல்லை வைத்தாலும் அதிலும் தொற்று பரவும்.


சொத்தை அல்லது விபத்தால் இழந்த பற்களுக்கு பதிலாக செயற்கை பற்களை பொருத்துதல்

அப்படி பரவினால் அதையும் நீக்கவேண்டி இருக்கும். எனவேதான் ஈறுகளில் ரத்தக்கசிவு இருந்தால் உடனடியாக பல் மருத்துவரைச் சென்று பார்க்கவேண்டும். இல்லாவிட்டாலும் 6 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரிடம் சென்று சுத்தம் செய்யவேண்டும். சிறு சிறு அழுக்குகளில் தொடங்கும் ஈறு பிரச்சினை பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அழுக்குகளை முதலிலேயே எடுத்துவிட்டால் ஈறு பிரச்சினைகளே இருக்காது. அடிக்கடி பல்லை சுத்தம் செய்தால் பற்கள் சேதமடைந்துவிடும் அல்லது உடைந்துவிடும் என நிறையபேர் நினைக்கிறார்கள். ஆனால் உடலிலேயே மிகவும் கடினமான பகுதியான பற்கள் அவ்வளவு எளிதில் உடைந்துவிடாது. பற்களை அல்ட்ராசோனிக் முறையில் சுத்தம் செய்யும்போது, பற்களில் படிந்திருக்கும் அழுக்கானது சுரண்டி எடுக்கப்படுகிறது. அதனால்தான் குத்துவது போன்றோ அல்லது வலிப்பது போன்றோ இருக்குமே தவிர பல் உடையாது.

எல்லாருக்குமே 32 பற்கள் முளைக்காது. ஒருசிலருக்குத்தான் ஞானப்பற்கள் முளைக்கும். அதனால் பிரச்சினைகள் வருமா?

சிலருக்கு 30 வயது ஆகும்வரைக்கும் ஞானப்பற்கள் வளராது. அடைவுற்ற பல்லாக இருக்கும்போது அருகிலிருக்கும் பல்லை இடித்துக்கொண்டே இருக்கும். பற்கள் வளரும்போது அதை சுற்றி ஆஸ்டியோக்ளாஸ்ட் என்று சொல்லக்கூடிய செல்கள் இருக்கும். உள் எலும்பிலிருந்து பற்கள் வளரும்போது எலும்புகளை அரிப்பது இந்த செல்கள்தான். ஆஸ்டியோக்ளாஸ்ட் என்பது எலும்புகளை ஒன்றாக சேர்ப்பது. பல் வளரும்போது ஆஸ்டியோக்ளாஸ்ட் எலும்புகளை அரித்துக்கொண்டே பல்லை மேலே கொண்டுவந்துவிடும். அப்படி ஞானப்பல் வளரும்போது அருகிலிருக்கும் பல்லையும் ஆஸ்டியோக்ளாஸ்ட் ஒரு எலும்பாக நினைத்து அரிக்க ஆரம்பிக்கும். அதனால் அந்த பகுதியிலிருக்கும் எனாமல் அனைத்தும் போய்விடும். இதனால் ஆரம்பத்தில் பயங்கரமான வலி இருக்கும். அப்போதே ஞானப்பல்லை எடுத்துவிட வேண்டும்.


வலி தொடங்கும்போதே ஞானப்பல்லை எடுத்துவிட வேண்டும் - மருத்துவர்

அப்போது எடுக்காவிட்டால், அடுத்து பல் சென்சிட்டிவாக இருக்கும். அந்த சமயத்தில் ஞானப்பல்லை எடுத்துவிட்டு, அருகிலிருக்கும் பல்லுக்கு ரூட் கேனால் செய்துவிட்டால் சரியாகிவிடும். அதுவே பற்கள் தொடங்கி ஒரு பக்கமே வலிக்கும் நிலை ஏற்பட்டால், ஞானப்பல்லுடன் அருகிலிருக்கும் பல்லையும் சேர்த்து பிடுங்கவேண்டும். வாய்க்குள் கடைசியில் இருக்கும் 4 பற்களைத்தவிர மற்ற எல்லா பற்களுக்குமே பயன் இருக்கிறது. ஆனால் நிறையபேர் வலிக்கு பயந்து அந்த பற்களை எடுப்பதில்லை. இப்போது டெக்னாலஜி வளர, வளர அனஸ்தீசியா வீரியமிக்கதாக இருப்பதால், ஊசி போடும் வலி தவிர, வேறு வலி இருக்காது. இரண்டு எலும்புகள் சேருமிடம் என்பதால் அந்த இடத்திலிருந்து பல்லை பிடுங்கும்போது அந்த எலும்பானது சிறிது விரிசல் விட 90% வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் வீக்கம் மற்றும் வலி ஏற்படும். அதற்கு ஐஸ் ஒத்தடம் கொடுத்தால் ஓரிரு நாட்களில் சரியாகிவிடும்.

விபத்தில் தாடையில் அடிபட்டு வருபவர்கள் சந்திக்கும் சிரமங்கள் என்னென்ன? அவர்களுக்கு என்னென்ன மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன?

விபத்துகளில் அடிபட்டு வருபவர்களுக்கு முதலில் எக்ஸ்-ரே எடுத்து பரிசோதிக்கப்படும். 99% எத்தனை பற்களை காப்பாற்றமுடியும் என்பதைத்தான் முதலில் பார்ப்போம். அப்படி காப்பாற்ற முடியாத பட்சத்தில்தான் பற்கள் நீக்கப்படும். அனைத்து பற்களையுமே நீக்கவேண்டிய சூழல் ஏற்பட்டால் அவற்றை எடுத்துவிட்டு புதிதாக செயற்கை பற்களை வைத்து கட்டவேண்டும். செயற்கை பற்களை பொருத்த முன்பைவிட இப்போது செலவு குறைவாகி இருக்கிறது. பற்களை பொருத்த பயன்படுத்தும் டெக்னாலஜிக்கு ஏற்ப செலவும் இருக்கும். தாடை எலும்பு நன்றாக இருந்தால் அனைத்து பற்களையும்கூட கட்டமுடியும்.


மவுத் வாஷை பயன்படுத்தும் முறைகள்

 மவுத் வாஷ் தினமும் பயன்படுத்தலாமா?

மவுத்வாஷில் இருக்கும் க்ளோர்ஹெக்சிடின் (chlorhexidine) என்ற கெமிக்கல்தான் வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்துதல், சொத்தை வராமல் தடுத்தல் போன்ற பாசிட்டிவான விஷயங்களை செய்கிறது. அதுவே தினசரி மவுத் வாஷ் பயன்படுத்தும்போது க்ளோர்ஹெக்சிடின் பற்களை மஞ்சளாக்கிவிடும். எனவே 30 நாட்கள் தொடர்ந்து மவுத் வாஷ் பயன்படுத்தினால் அடுத்த 30 நாட்கள் பயன்படுத்த வேண்டாம். மவுத் வாஷுக்கு பதிலாக உப்புத் தண்ணீரை வேண்டுமானால் பயன்படுத்தலாம். ADS மவுத்வாஷ் என்பதை சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். ADS என்றால் Anti discoloration system என்று அர்த்தம். இதை பயன்படுத்தினால் பற்கள் மஞ்சளாவது மிகவும் குறையும்.

Tags:    

மேலும் செய்திகள்