தைராய்டு பிரச்சினை உள்ளவர்களுக்கு கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் ஏற்படுமா? விளக்குகிறார் மருத்துவர் நிர்மலா சதாசிவம்

இசைஞானியின் மகளான பவதாரிணி யாரும் எதிர்பாராத வகையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

Update:2024-04-02 00:00 IST
Click the Play button to listen to article

சமூக - பொருளாதார பிரச்சினையில் ஏற்படும் மாற்றங்கள் நம் அன்றாட வாழ்க்கையில் உடல்நலம் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை கொண்டு வந்து சேர்க்கிறது. குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள்வரை பலரும் பலவிதமான உடல் உபாதைகளுக்கு ஆளாக நேர்கின்றது. அதிலும் குறிப்பாக, மருத்துவத்துறை இன்று அதீத வளர்ச்சி கண்டிருந்தாலும் ஒருவருக்கு எந்த ஒரு நோயின் அறிகுறியும் காட்டாமல், அது நம் உடலுக்குள் இருப்பது தெரியாமலேயே அவர் இறந்து போகும் சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. அண்மையில் கூட இசைஞானியின் மகளான பவதாரிணி யாரும் எதிர்பாராத வகையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இப்படியான நிலையில், புற்றுநோய் உட்பட அன்றாடம் நம்மை ஏதோ ஒரு வகையில் தாக்கி வரும் தைராய்டு, மூட்டு பிரச்சினை போன்ற நோய்களுக்கான சிகிச்சை முறைகள் என்ன? எப்படி அவற்றை கண்டறிவது என பல கேள்விகளுக்கு பதில் அளித்து பேசியிருக்கிறார் மருத்துவர் நிர்மலா சதாசிவம். 

புற்றுநோய் என்பது பரம்பரையாகவும் வரலாம் என இருக்கும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் எப்படிப்பட்ட பரிசோதனைகளை துவக்கத்திலேயே எடுத்துக்கொள்ளவது நல்லது?

மார்பக புற்றுநோயை பொறுத்தவரை பெண்கள் மேமோகிராம் பரிசோதனையை செய்து கொண்டாலே அவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்பது தெரிந்துவிடும். இது தவிர பெருங்குடல் புற்றுநோய், இரைப்பை புற்றுநோய் போன்றவைகளுக்கும் துவக்க காலத்திலேயே தெரிந்துக் கொள்வதற்கான பல்வேறு பரிசோதனை முறைகள் உள்ளன. இருப்பினும் இன்றும் பல நபர்கள் இத்தகைய விஷயங்களில் பெரிதாக கவனம் செலுத்துவதில்லை. இதை தடுக்க நமது பள்ளி பருவத்திலிருந்தே நமக்கு கற்பிக்கப்படும் பாடங்களில் பிறருக்கு உதவி செய்ய வேண்டும், பிறரின் நலனில் அக்கறை மிக்கவர்களாக இருக்க வேண்டும் என சொல்லித்தரப்படும் அதேவேளையில், நம்முடைய உடலை எப்படி பேணி காப்பது என்பது குறித்த விஷயங்களும் அதிகமாக கற்பிக்கப்பட வேண்டும். மேலும் சுய ஒழுக்கம் என்பதை சிறுவயதிலிருந்தே நம்முடைய பழக்கமாக வைத்துக் கொள்வது நல்லது. நாம் சாப்பிடும் உணவில் எந்த அளவுக்கு சத்தான பழங்கள், காய்கறிகள், தானியங்களை உட்கொள்கிறோம், தினந்தோறும் முறையான உடற்பயிற்சிகளை செய்கிறோமா என்பதையெல்லாம் கூர்ந்து கவனித்து அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் ஆன்டி ஆக்சிஜன், ஃப்ரீ ரேடிக்கல் போன்ற அணுக்கள் அதிகமாக உற்பத்தியாகி புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கப்படுகிறது. புற்றுநோயை முன்கூட்டியே பரிசோதனைகள் மூலம் அறிந்து முன்பே தடுப்பது ஒருவழி என்றால், சரியான வாழ்க்கை முறையை பின்பற்றி ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலமாகவும் புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.


புற்றுநோய் செல்கள் உருவாவது தொடர்பான மாதிரி புகைப்படம் 

நாம் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் சரியானதாக இல்லையென்றால் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதா?

சில அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் காரணமாக நமக்கு தோல் புற்றுநோய் ஏற்படலாம். இது குறித்த தெளிவான தகவல் என்னிடம் இல்லை என்றாலும், இயற்கையாகவே நமது தோலின் பளபளப்பு தன்மையை மேம்படுத்திக்கொள்ள பல வழிகள் இருக்கிறது. நாம் தினந்தோறும் பப்பாளி, திராட்சை, நாகப்பழம், மாதுளை போன்ற பழங்களை எடுத்துக்கொண்டால் தோலின் அழகு மேம்படுவதோடு, ஆன்டி ஆக்சிஜன் அதிகமாக உற்பத்தியாகி புற்று நோயையும் தடுக்க முடியும்.

புற்றுநோயை தடுக்க உடற்பயிற்சிகள் எந்த அளவுக்கு உதவும்?

எந்த அளவுக்கு ஆரோக்கியமான உணவு உட்கொள்ளும் பழக்கம் நமக்கு முக்கியமோ, அதே அளவுக்கு உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தையும் நாம் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் ஹேப்பி ஹார்மோன்ஸ் என சொல்லப்படக்கூடிய எண்டோபின், டோபோமைன், ஆக்சிடாஸின் போன்ற சுரப்பிகள் சரியாக வெளிவர யோகா, தியானம், உடற்பயிற்சி போன்ற பழக்கங்கள் பெரியளவில் உதவி புரிகின்றன. இதன் மூலம் உடல் மட்டுமல்ல நமது மூளையும் புத்துணர்வு அடைந்து நாள் முழுவதும் உத்வேகத்துடன் இயங்கி மகிழ்ச்சியை தருகிறது.


சில அழகு சாதன பொருட்களால் தோல் புற்றுநோய் வரலாம் - உடல் ஆரோக்கியத்திற்கு பழங்கள் தேவை

எந்தவகை புற்றுநோயை எளிதில் நம்மால் கண்டறிய முடியாது?

மார்பக புற்று நோயை ஓரளவு துவக்கத்திலேயே கண்டுபிடித்துவிடலாம். மற்றபடி நமது உள் உறுப்புகளில் வரக்கூடிய குடல் புற்றுநோய், இரைப்பை புற்றுநோய் போன்றவைகளை கண்டறிய தாமதம் ஏற்படலாம். குறிப்பாக மூளையில் வரக்கூடிய புற்று நோய்களை கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமம்தான். எப்போதுமே ஒரு சின்ன அறிகுறி இருந்தாலும் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துக்கொள்வதே இதற்கெல்லம் நல்ல தீர்வாகவும்.

தற்போது நாம் கண்டுள்ள பல அறிவியல் வளர்ச்சிக்கு பிறகு, புற்றுநோய் சிகிச்சைக்கான செலவு குறைந்துள்ளதா?

செலவு குறைவது என்பது என்றுமே சாத்தியம் கிடையாது. காரணம் நாம் புற்றுநோய் சிகிச்சைக்கான பல மருந்துகளை, உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறோம். அந்தந்த காலசூழ்நிலைகளுக்கு ஏற்ப அதன் விலையும் தொடர்ந்து அதிகரித்துதான் வருகிறது. இருப்பினும் நமது அரசாங்கம் தனிப்பட்ட முறையில் சில சலுகைகளை வழங்கி குறிப்பிட்ட சிலவற்றிற்கு விலை குறைப்பு செய்கிறார்கள். அது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். குறிப்பாக சென்னையில் இயங்கும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனைகளில் உலக தரம் வாய்ந்த புற்றுநோய்க்கான சிகிச்சைகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. அதற்கு தேவையான அத்தனை உபகரணங்களும் அங்கே இருக்கின்றன. இதனால் தற்போது இருக்கும் சூழலில் புற்றுநோயினால் பாதிக்கப்படுவோரில் 10 சதவீதம் முழுமையாக குணமடைந்து காப்பற்றப்படுகின்றனர். மீதமுள்ள 90 சதவீத நபர்களும்கூட தங்களது வாழ்நாளை முன்பைவிட ஓரளவு அதிகப்படுத்திக் கொள்கின்றனர். இதுவே இன்றைய அறிவியல் வளர்ச்சி நமக்கு தந்துள்ள நல்ல விஷயமாக பார்க்கிறேன்.


 மூளையில் வரக்கூடிய புற்றுநோய்களை ஆரம்ப நிலையில் கண்டறிவது கடினம் 

தைராய்டு பிரச்சினை பெண்களை ஏன் அதிமாக பாதிக்கிறது? ஹைப்போ தைராய்டு, ஹைப்பர் தைராய்டு இரண்டுக்குமான வித்தியாசம் என்ன?

நம் இந்தியாவை பொறுத்தவரை தைராய்டு பிரச்சினையை உருவாக்கும் ஆண்டிபாடிஸ் பெண்களிடம் அதிகமாக உள்ளது. காரணம் ஆட்டோ இம்யூன் டிஸ்ஸார்டர் என சொல்லப்படக்கூடிய நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலமே தவறாக நம் உடலை தாக்குவதால் ஏற்படும் நோய் பாதிப்புகள் இங்கு நம் பெண்களிடம் அதிகமாக இருக்கிறது. இதற்கான அறிகுறிகள் என்று பார்த்தால் மாதவிடாய் பிரச்சினை, உடல் எடை அதிகரிப்பு போன்றவைகளே ஆகும். இதில் ஹைப்பர் தைராய்டு என்பது சுரக்கின்ற ஹார்மோன் கூடுதலாக இருப்பது, இத்தகைய பாதிப்புடன் இருப்பவர்கள் மிகவும் ஒல்லியாக மாறிவிடுவார்கள், அவர்களின் இதயத்துடிப்பும் அதிகமாகிவிடும். அதிக கோபம், அதிக எரிச்சல் அவர்களுக்கு ஏற்படும். அதேபோல் ஹைப்போ தைராய்டு என்றால் முந்தைய பாதிப்பிற்கு நேரெதிராக ஹார்மோன்கள் குறைவாக சுரக்கின்ற நிகழ்வே ஆகும். இவர்களுக்கு அதிக உடல் எடை, மனச்சோர்வு போன்ற நிகழ்வுகள் ஏற்படும். இந்த இரண்டு பிரச்சினைகளுக்குமே மிக எளிதான மருத்துவ தீர்வு உள்ளது. எனினும் மாத்திரை உட்கொள்வதில் கவனம் செலுத்தி மருத்துவரின் ஆலோசனையோடு செயல்படுவது மிக மிக அவசியம்.

தைராய்டு பிரச்சினை உள்ளவர்களுக்கு கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் சிக்கல் ஏற்படுமா? சிகிச்சையின் போது கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?


கர்ப்பகாலம் மற்றும் தைராய்டு பரிசோதனை 

சிலபாதிப்புகள் ஏற்படலாம், காரணம் கர்ப்ப காலத்தில் தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரந்தால் டிஎஸ்எச்-ன் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அது கருவில் இருக்கும் குழந்தைக்கு வேறு சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம். ஆனால் முறையான தைராய்டு மருந்துகளை அந்த சமயம் மருத்துவர் ஆலோசனையோடு எடுத்துக்கொண்டால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் வராது. அப்படி கொடுக்கப்படும் மாத்திரை, மருந்துகளாலும் எந்த ஒரு பக்கவிளைவும் குழந்தைகளுக்கு ஏற்படாது. தாய்க்கு ஒரு பாதிப்பும் வராதபோது சேய்க்கும் நிச்சயமாக எந்த பிரச்சினையும் வராது. இருப்பினும் ஒருசில மருந்துகளை மருத்துவர் ஆலோசனையோடு தவிர்த்துக் கொள்வது நல்லது.

Tags:    

மேலும் செய்திகள்