ஆண்களுக்கு நீரிழிவு இருந்தால் தாம்பத்தியத்தில் இந்த பிரச்சினை ஏற்படுமா? - விளக்குகிறார் நீரிழிவு மருத்துவர்

Immature cataract என்று சொல்லக்கூடிய கண்புரையானது இளம்வயதினருக்கே வரக்கூடியது. இதுபோல் கண்களில் பிரச்சினை ஏற்பட்டால் கண்மருத்துவர் அதற்கான சிகிச்சை அளிப்பார். வேண்டுமானால் கண்புரை அறுவை சிகிச்சைகூட மேற்கொள்ளப்படும்.

Update:2024-03-05 00:00 IST
Click the Play button to listen to article

நீரிழிவு நோய் என்பது உலகளவில் நிறையப்பேருக்கு இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதுதான். இதனால் தலையிலிருந்து கால்வரை பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. நீரிழிவு நோயால் கண்களில் எப்படி பாதிப்பு ஏற்படுகிறது? சர்க்கரை அளவு குறைந்தாலோ அல்லது அதிகமானாலோ என்னவாகும்? இன்சுலின் குறித்து என்ன தெரிந்துகொள்ள வேண்டும் என பல கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார் நீரிழிவு மருத்துவர் ஏ. சீனிவாசன்.

கணவன் அல்லது மனைவிக்கு நீரிழிவு நோய் இருந்தால் அது தாம்பத்திய உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா?

கண்டிப்பாக. உதாரணமாக கணவனுக்கு நீரிழிவு இருந்தால் தாம்பத்திய உறவில் சரியாக செயல்பட முடியாத நிலை ஏற்படும். இதனால் ஏற்படும் விறைப்புத்தன்மை குறைபாடு குறித்து மருத்துவரிடம் வெளிப்படையாக கூறவேண்டும். இதனை சரிசெய்ய தனிப்பட்ட மருந்துகளும் ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. பெண்களுக்கு நீரிழிவால் தாம்பத்திய உறவில் பெரிதாக பாதிப்பு இருக்காது. சிலர் மருத்துவரிடம் வெளிப்படையாக சொல்வதற்கு வெட்கப்பட்டால் அதை ஓ.பி ஷீட்டிலேயே எழுதி கொடுத்துவிடலாம்.


பி.பி பரிசோதனை - தாம்பத்தியத்தில் சிக்கல்

கண்களில் ஏற்படக்கூடிய மையோப்பியா, கண்புரை போன்ற நோய்கள் நீரிழிவின் வெளிப்பாடு என்கிறார்களே? உண்மையா?

நீரிழிவு நோயாளிகள் ஆண்டுதோறும் கண் மருத்துவரை அணுகி பரிசோதிப்பது அவசியம். Immature cataract என்று சொல்லக்கூடிய கண்புரையானது இளம்வயதினருக்கே வரக்கூடியது. இதுபோல் கண்களில் பிரச்சினை ஏற்பட்டால் கண்மருத்துவர் அதற்கான சிகிச்சை அளிப்பார். வேண்டுமானால் கண்புரை அறுவை சிகிச்சைகூட மேற்கொள்ளப்படும்.

சர்க்கரை அதிகமாக இருப்பவர்கள் மற்றும் குறைவாக இருப்பவர்களுக்கு கூறும் அறிவுரை என்ன?

சர்க்கரை குறைவாக இருப்பவர்கள் உணவை முறையாக சாப்பிடவேண்டும். விரதமும் இருக்கக்கூடாது. கொண்டாட்ட உணவுகளும் கூடாது. காலை 8 மணிக்கு சாப்பிட்டுவிட்டு மதியம் 3 மணிக்கு அடுத்த வேளை உணவை சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறைந்து படபடப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். எனவே உணவை 4 மணிநேரத்திற்கு ஒருமுறை என பிரித்து சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறையாது. சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்கள் வாழ்க்கை முறையை கட்டாயம் மாற்றியமைக்க வேண்டும். தினமும் குறைந்தது 30 நிமிட உடற்பயிற்சி அவசியம். எடையை குறைத்து BMI அளவை 25-26க்குள் வைத்திருக்க வேண்டும். வயிறை சுற்றி எடை அதிகரிப்பு இருக்கக்கூடாது.


நீரிழிவு நோயாளிகள் சாப்பிடவேண்டிய உணவுகள் - தவிர்க்கவேண்டிய உணவுகள்

நோயாளிகள் முதலில் இந்த நோய் குறித்து புரிந்துகொள்ள வேண்டும். ஒரு ஃபுல் மீல்ஸ் சாப்பிடுவதில் இருக்கும் கலோரியானது ஒரு மைசூர்பாக்கில் இருக்கிறது. எனவே ஸ்வீட் சாப்பிட்டால் ரைஸ் சாப்பிடக்கூடாது. இதுபோல் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.

நீரிழிவு நோய் ஒரு தொற்றுவியாதியா?

சிறுநீர்மூலம் நீரிழிவு பரவாது. உடலுக்குள் சுரக்கும் இன்சுலினும் சாப்பிடும் உணவும் ஒத்துப்போகாததால்தான் நீரிழிவு வருகிறது.

நாள்பட்ட நீரிழிவு நோயாளிக்கு மாரடைப்பு வர வாய்ப்புள்ளதா?

கட்டாயம் வரும். சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால் தலையிலிருந்து கால்வரை பலவிதமான நோய்கள் வரும். நீரிழிவு நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு வலி அதிகமாக இருக்காது. திடீரென மூச்சு பிரச்சினை மற்றும் வியர்வை அதிகமாக இருக்கும். ஈசிஜியில்தான் இதுகுறித்த மாற்றங்கள் தெரியவரும். நீரிழிவால் நரம்பு முனைகளில் உணர்ச்சிகள் குறைவதால் நீரிழிவு இல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில் அந்த அளவுக்கு வலியை அவர்களால் உணரமுடியாது.


ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை - மாரடைப்பு (உ.ம்)

நீரிழிவு நோயாளிகளுக்கு அடிக்கடி பசி ஏற்படுமா?

இதை Hypoglycemia awareness என்று சொல்வார்கள். சர்க்கரை குறைபாட்டுக்கான அறிகுறி. 4 மணிநேரத்துக்கு ஒருமுறை சாப்பிட்டு சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திராவிட்டால் படபடப்பு போன்ற பிரச்சினைகள் வரும். அப்படி சாப்பிடும்போது மோர், சுண்டல், சிறுதானியங்கள், பழங்கள், சாலட் என மாற்றி மாற்றி சாப்பிடவேண்டும். அரிசி சாதம், இட்லி, தோசை போன்ற கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது.

நீரிழிவு நோயாளிகள் இன்சுலின் அதிகம் எடுத்துக்கொண்டால் கணையம் பாதிக்கப்படுமா?

கணையம் பாதிப்படைவதால்தான் இன்சுலினே தேவைப்படுகிறது. ஒருவருக்கு நீரிழிவு நோய் கண்டறியப்படும்போதே பீட்டா செல்கள் 50 -60 சதவீதம் செயலிழந்திருக்கும். பீட்டா செல்கள் கணையத்தில் இருக்கின்றன. எனவே இன்சுலின் எடுப்பதால் பாதிப்பு இருக்காது.


கணையத்தின் செயல்பாடும் இன்சுலின் ஊசியும்

நீரிழிவு நோயாளிகள் அசைவம் சாப்பிடலாமா?

தாராளமாக சாப்பிடலாம். அதேசமயம் குறைவான அளவில் தரமான முறையில் எடுத்துக்கொள்ள வேண்டும். கொலஸ்ட்ரால், தைராய்டு போன்ற இணைநோய்கள் இருப்பின், முட்டை வெள்ளைக்கரு சாப்பிட மருத்துவர்கள் அறிவுறுத்துவர். சிவப்பிறைச்சி சாப்பிடக்கூடாது. மீன், சிக்கன் குழம்பு சாப்பிடலாம். பொரித்து சாப்பிடக்கூடாது. அசைவம் சாப்பிடும்போது அரிசி சாத அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு தேவையான புரோட்டீன் கிடைக்கும்.

நீரிழிவு வந்தும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்கு செலவழிக்க முடியாத ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் வீட்டிலேயே சில சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளலாமா?

சிகிச்சை எடுப்பதைவிட கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். லவங்கப்பட்டை, வெந்தயம், முருங்கைக்காய், கோவக்காய், பாகற்காய் போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொண்டு அரிசி சாதத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை பரிசோதித்து சர்க்கரை அளவை தெரிந்துகொள்ளவேண்டும். தேவைப்பட்டால் மட்டும் மாத்திரை சாப்பிடலாம்.


ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் உணவுகள்

நீரிழிவு நோயை முற்றிலும் நீக்க என்ன செய்யவேண்டும்?

0 கார்ப் டயட் முறையை பின்பற்ற வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகளில் நிறையப்பேர் இந்த டயட் முறையை பின்பற்றுகிறார்கள். அரிசி சாதத்திற்கு பதிலாக காய்கறிகளுடன் குழம்பு, சாம்பார் போன்றவற்றை சேர்த்து சாப்பிடுகிறார்கள். இப்படி கார்போஹைட்ரேட் எடுத்துக்கொள்ளாமலேயே இருந்தால் நீரிழிவு நோய் வராது. ஆனால் இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது கேள்விக்குறிதான். 

Tags:    

மேலும் செய்திகள்