கட்டாய உடலுறவு ஆண்களின் உரிமையாகவும், பெண்களின் கடமையாகவும் பார்க்கப்படுகிறதா? - ஓர் அலசல்!
ஒரு ஆண் தனது சொந்த மனைவியுடன் பாலியல் செயல்களில் ஈடுபடுவதும், உடலுறவு வைத்துக்கொள்ளவும் அனுமதிக்கிறது. ஆனால் மனைவி 15 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கும்பட்சத்தில் அது பலாத்காரம் அல்ல
இல்லற வாழ்வில் இணைந்திருக்கும் தம்பதியரிடையே மிக முக்கியமானது உடலுறவு. கணவன் - மனைவி இருவரும் ஆரோக்கியமான தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது இருவருக்குமிடையேயான இணக்கம் அதிகரிப்பதுடன் புரிதலும் அதிகமாவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் அந்த உறவானது கட்டாயப்படுத்தியோ அல்லது பிறரின் தூண்டுதலின்பேரிலோ நிகழாமல் உணர்ச்சிகளின் வெளிப்பாடாக இருக்கும்போதுதான் அது தண்டனைக்கு உட்படாததாக கருதப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்கீழ் பெரும்பாலான சட்டங்கள் பெண்களின் உரிமை மற்றும் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவே இருந்தாலும் ஒருசில விதிகள் முரண்பட்டதாக இருக்கின்றன. பாலியல் தொல்லை, சீண்டல்கள் மற்றும் வன்கொடுமை போன்றவை மோசமான குற்றங்களாக கருதப்படும் நிலையில் திருமணத்திற்கு பிறகு கணவன் - மனைவி இடையேயான கட்டாய உடலுறவு குற்றமல்ல என தீர்ப்பளித்து ஒட்டுமொத்த நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றம். யாருடைய வழக்கில் இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது? இயற்கைக்கு மாறான அல்லது கட்டாய உடலுறவு சரியா? இந்திய அரசியலமைப்பு சட்டம் என்ன சொல்கிறது? என்பது குறித்து பார்க்கலாம்.
மத்தியப்பிரதேச வழக்கும், தீர்ப்பும்...
இயற்கைக்கு மாறான உடலுறவு குறித்து மே 1ஆம் தேதி மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இன்றுவரை பரவலாக பேசப்பட்டு வருகிறது. கணவனின் மனுப்படி, 2019ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் நடந்திருக்கிறது. ஆனால் மனைவி 2020ஆம் ஆண்டு பிப்ரவரிமுதல் கணவன் மற்றும் அவரது குடும்பத்தை பிரிந்து தனது அம்மா வீட்டில் வசித்து வந்துள்ளார். பிரிந்து சென்றபோதே தனது கணவன் மற்றும் மாமியார்மீது வரதட்சணை வழக்குத் தொடர்ந்தார்.
கணவன் தனது மனைவியிடம் கட்டாய உடலுறவு வைத்துக்கொண்டால் தவறா? - ம.பி உயர்நீதிமன்றம்
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே மீண்டும் கணவனுடன் சேர்ந்துவாழ திட்டமிட்டு அவருடைய வீட்டிற்கு சென்றபோது தனது கணவன் தன்னிடம் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டதாக குற்றஞ்சாட்டி, கோட்வாலி, ஜபல்பூர் காவல்நிலையத்தில் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் மற்றொரு எஃப்.ஐ.ஆரை பதிவுசெய்தார் அவருடைய மனைவி. அந்த நபர் தனது மனைவியின் புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்டிருக்கும் எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில் மே 1ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் நீதிபதி அலுவாலியா, “கணவன் - மனைவி சேர்ந்து வசிக்கும் திருமண வாழ்க்கையில் ஒரு கணவன் தனது மனைவியிடம் கட்டாய உடலுறவு வைத்துக்கொண்டால் அந்த நபரை குற்றவாளி என கூறமுடியுமா என கேள்வி எழுப்பினார். மேலும் ஐபிசி 375 பிரிவு 2-ஐயும் விலக்கினார். அந்த சட்டத்தின்படி, ஒரு ஆண் தனது சொந்த மனைவியுடன் பாலியல் செயல்களில் ஈடுபடுவதும், உடலுறவு வைத்துக்கொள்வதும் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் மனைவி 15 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கும்பட்சத்தில் அது பலாத்காரம் அல்ல” என்று கூறினார். அதுவே ஐபிசி பிரிவு 376 (பி) -இன் கீழ் சட்டப்படி கணவன் - மனைவி பிரிந்து வாழும்போது பாலியல் செயல் குற்றமாக கருதப்படும் என்று கூறினார். மனைவி சம்மதம் தெரிவித்தபிறகே, உடலுறவு மற்றும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டாலும் அப்பெண் 15 வயதுக்கு கீழ் இருக்கும்பட்சத்தில் அதுவும் கற்பழிப்பாகத்தான் கருதப்படும் என்றும் நீதிபதி விளக்கியுள்ளார்.
மனைவியுடன் கணவன் இயற்கைக்கு மாறான உறவில் ஈடுபடுவது குற்றமல்ல என்று ஐபிசி 377-வது பிரிவு கூறுகிறது
அதன்படி, ஐபிசி பிரிவு 375-இன் கீழ் ‘கற்பழிப்பு’ என்பதன் திருத்தப்பட்ட வரையறையை சுட்டிக்காட்டி, இயற்கைக்கு மாறான உறவுக்கு மனைவியின் ஒப்புதல் தேவையில்லை என்று கூறி கணவன்மீதான நடவடிக்கைகளை ரத்து செய்து வழக்கை முடித்துவைத்தார். மேலும் சட்டப்பூர்வமாக திருமணமான மனைவியுடன் கணவன் இயற்கைக்கு மாறான உறவில் ஈடுபடுவது குற்றமல்ல எனும் ஐபிசி 377-வது பிரிவையும் சுட்டிக்காட்டினார்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் என்ன சொல்கிறது?
இந்தியாவை பொருத்தவரை திருமணத்திற்கு பிறகான பாலியல் உறவுகள் குறித்தும், எப்போது கணவன் - மனைவி பிரிந்து செல்லலாம் என்பது குறித்தும் சட்டம் தெளிவாக கூறுகிறது. மேற்கூறியபடி, கட்டாய உடலுறவு அல்லது இயற்கைக்கு மாறான உறவு என்பதற்கு வரையறை வகுக்கப்பட்டிருப்பது போலவே, உடலுறவு கொள்ளாமல் இருக்கும்பட்சத்திலும் தனது இணைமீது நடவடிக்கை எடுக்க நமது சட்டத்தில் இடமிருக்கிறது. கணவன் அல்லது மனைவி இருவரில் ஒருவருக்கு இனப்பெருக்க திறனற்ற நிலை இருக்குமாயின் அதை காரணம்காட்டி, சட்டப்படி இருவரும் விவாகரத்து கோரலாம். இந்து திருமண சட்டம் அந்த திருமணத்தையே செல்லாது என அறிவிக்கலாம். அதேபோல், திருமணத்திற்கு பிறகு சிலகாலம் மட்டுமே கணவன் - மனைவியிடையே தாம்பத்திய உறவு இருந்து அதன்பின் இருவரும் சட்டப்படி பிரிந்து செல்லலாம். திருமணத்திற்கு பிறகு ஒரு பெண்ணின் கணவரோ அல்லது அவரது குடும்பத்தினரோ அப்பெண்ணை கொடுமைப்படுத்தினால் ஐபிசி 498 (ஏ)-இன் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவர். இதுபோக, பணம், நகை அல்லது சொத்து கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்தினாலும் அது சட்டப்படி குற்றமாகும்.
உடலுறவு குறித்த நீதிமன்றங்களின் கருத்து
2022ஆம் ஆண்டு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் இதேபோன்றதொரு வழக்கின் தீர்ப்பு நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டது. 2019ஆம் ஆண்டு டிசம்பரில் திருமணமான ஒரு இளம் ஜோடியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வெறும் 28 நாட்களில் அப்பெண் கணவனை பிரிந்து சென்றுவிட்டார். அந்த 28 நாட்களுமே அவர்களிடையே உடலுறவு இல்லை என்பதே அப்பெண்ணின் குற்றச்சாட்டாக இருந்தது.
கணவனோ, மனைவியோ நல்ல உடல்நலத்துடன் இருந்தும் நீண்ட நாட்கள் உடலுறவுக்கு இணங்க மறுத்தால் விவாகரத்து கோரலாம் - உச்சநீதிமன்றம்
இதுகுறித்து 2020 பிப்ரவரியில் அப்பெண் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவருடைய மனுவில் தனது கணவனுடனான திருமண பந்தத்தை முறிக்கக்கோரியும், அவரது குடும்பத்தினர்மீது துன்புறுத்தல் நடவடிக்கை எடுக்கக்கோரியும் கூறியிருந்தார். மேலும் ஃப்ரிட்ஜ், சோஃபா மற்றும் தொலைக்காட்சியை சீதனமாக கொண்டுவரும்வரை உடலுறவுக்கு வாய்ப்பில்லை எனவும் கணவர் கூறியதாக குறிப்பிட்டிருந்தார். இவ்வழக்கின் விசாரணை முடிந்து வழங்கப்பட்ட தீர்ப்பில், திருமண பந்தத்தில் உடலுறவு என்பது முக்கியமானது என்றும், ஒருவர் திருமண உறவை முறித்துக்கொள்ள இதை காரணமாக கூறலாம் என்றும் நீதிமன்றம் பெண்ணுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. மேலும் இல்லற வாழ்க்கையில் இணைக்கப்பட்டிருக்கும் தம்பதி தனது இணையுடன் நீண்ட நாட்களுக்கு உடலுறவு கொள்ளாமல் தவிர்ப்பது கொடுமையான விஷயமாக கருதப்படுமென்றும் கூறியது. இதேபோல் கடந்த ஆண்டு அலகாபாத் நீதிமன்றம் இதுபோன்றதொரு தீர்ப்பை வழங்கியது. மனைவி தன்னைவிட்டு பிரிந்துசென்றதால் தங்களுக்குள் பாலியல் உறவு இல்லை எனவும், அதனால் மணவாழ்க்கை முற்றிலும் முறிந்துவிட்டதாகவும் ஒரு ஆண் வழக்குத் தொடர்ந்தார். அந்த தீர்ப்பில், உடல்நல பிரச்சினைகள் இல்லாத பட்சத்தில் கணவன் அல்லது மனைவி நீண்ட நாட்கள் உடலுறவுக்கு இணங்க மறுத்தால் அது மனதளவில் துன்புறுத்துவதற்கு சமம். இதுபோன்ற சூழலில் விவாகரத்து கோருவது நியாயமானதாக கருதப்படும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டியது. 2007ஆம் ஆண்டு நடந்த ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியிருந்தது. கடந்த 2012ஆம் ஆண்டு முதலிரவின்போது மனைவி உடலுறவுக்கு இணங்க மறுத்தது கொடுமையானது என டெல்லி உயர் நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியிருந்தது.
கட்டாய உடலுறவு பாலியல் வன்கொடுமைதான் - பெண்ணுரிமை ஆர்வலர்கள்
இயற்கைக்கு மாறான உறவு பாலியல் வன்கொடுமையா?
இப்படி பெரும்பாலான தீர்ப்புகள் அனைத்துமே உடலுறவுக்கு இணங்கவேண்டும் என்பதையே வலியுறுத்தினாலும் திருமணத்திற்கு பிறகு கட்டாய உடலுறவு வைத்துக்கொள்வது குற்றமாகாது என்பது இந்த தீர்ப்புகளிலிருந்து சற்று முரண்பட்டதாகவே பார்க்கப்படுகிறது என்கின்றனர் வல்லுநர்கள். மேலும் திருமணத்திற்கு பிறகு உடலுறவில் ஈடுபடாமல் தவிர்ப்பது எந்த அளவிற்கு மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்துமோ, கட்டாயப்படுத்தி உறவில் ஈடுபடுவதும் அதே அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர். இதுபோன்றதொரு வழக்கில் 2021ஆம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது. அதில், ஒரு ஆண் தனது மனைவியின் அனுமதியின்றி அவருடன் உடலுறவு வைத்துக்கொண்டால் அது அவரை மனம் மற்றும் உடல் அளவில் துன்புறுத்தியதற்கு சமம் என்று கூறியது. அதேசமயம் சட்டப்படி திருமணம் ஆனபிறகு, ஒரு பெண்ணின் அனுமதியின்றி அவருடைய கணவர் அவருடன் உடலுறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்கொடுமை ஆகாது எனவும் இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறுவதையும் சுட்டிக்காட்டியது. இதுபோன்ற வழக்குகள் குறித்து சட்ட நிபுணர்கள் கூறும்போது, கணவன் - மனைவி இடையேயான உடலுறவு என்பது ஒரு கடமை என்பதை இருவரும் கருத்தில்கொள்ள வேண்டும் என்கின்றனர். குறிப்பாக, தாம்பத்திய வாழ்க்கையில் தனது இணையை உடலளவிலும் மனதளவிலும் திருப்திப்படுத்துவது முக்கியமான ஒன்றாகும் எனவும் கூறுகின்றனர்.
பெண்களுக்கு சாதகமாக எத்தனையோ தீர்ப்புகள் வழங்கப்பட்டாலும் இந்திய அரசியலமைப்பின் இந்த சட்டத்தை இன்றுவரை பெண்ணுரிமை ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்துவருகின்றனர். இந்தியாவை பொருத்தவரை உடலுறவு என்பது கணவனின் உரிமையாகவும், மனைவியின் கடமையாகவும் பார்க்கப்படுகிறது. இதுவே கட்டாய மற்றும் இயற்கைக்கு மாறான உடலுறவை ஊக்குவிக்கிறது என்கின்றனர். இதுபோன்ற வழக்குகளில் பெண்களுக்கு சாதகமாக தீர்ப்புவழங்க நீதிமன்றங்கள் தயங்குவது ஏன்? என்றும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.