நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகியுள்ள ரியான் பராக்! - "ரியான் பராக் 2.0"

ஜெய்பூரில் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2024 தொடரின் 9-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுத்து ஒரு அபாரமான இன்னிங்ஸை தனி ஆளாக ஆடிய ரியான் பராக், தன் மீது பிறருக்கு இருந்த வெறுப்புகளையும் ரசிகர்களின் தூற்றுதல்களையும் கரகோஷங்களாக மாற்றி இருக்கிறார். அதுவும் கடும் ஃப்ளூ காய்ச்சலில் உடல்வலியினால் 3 நாட்கள் அவதிப்பட்ட ரியான் பராக் வலிநிவாரணி மருந்துகளையும் காய்ச்சல் எதிர்ப்பு மருந்துகளையும் எடுத்துக் கொண்டு களமிறங்கி வருகிறார். டெல்லிக்கு எதிராக தனி ஆளாக நின்று அணியைக் காப்பாற்றியிருக்கிறார். 45 பந்துகளில் 84 ரன்களை அடித்திருக்கிறார். ஸ்ட்ரைக் ரேட் 186. அசத்தலான இன்னிங்ஸ். ஆட்டநாயகனும் இவர்தான். கடந்த போட்டியிலும் நன்றாகவே ஆடியிருக்கிறார்.

Update: 2024-04-08 18:30 GMT
Click the Play button to listen to article

ஜெய்பூரில் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2024 தொடரின் 9-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுத்து ஒரு அபாரமான இன்னிங்ஸை தனி ஆளாக ஆடிய ரியான் பராக், தன் மீது பிறருக்கு இருந்த வெறுப்புகளையும் ரசிகர்களின் தூற்றுதல்களையும் கரகோஷங்களாக மாற்றி இருக்கிறார். அதுவும் கடும் ஃப்ளூ காய்ச்சலில் உடல்வலியினால் 3 நாட்கள் அவதிப்பட்ட ரியான் பராக் வலிநிவாரணி மருந்துகளையும் காய்ச்சல் எதிர்ப்பு மருந்துகளையும் எடுத்துக் கொண்டு களமிறங்கி வருகிறார். டெல்லிக்கு எதிராக தனி ஆளாக நின்று அணியைக் காப்பாற்றியிருக்கிறார். 45 பந்துகளில் 84 ரன்களை அடித்திருக்கிறார். ஸ்ட்ரைக் ரேட் 186. அசத்தலான இன்னிங்ஸ். ஆட்டநாயகனும் இவர்தான். கடந்த போட்டியிலும் நன்றாகவே ஆடியிருக்கிறார். இந்த சீசனின் புதிய நம்பிக்கையாக உருவெடுத்திருக்கிறார். ஆனால், இந்த இடத்தை அவர் அவ்வளவு எளிதில் எட்டவில்லை. எக்கச்சக்க விமர்சனங்களையும் கேலிகளையும் கடந்து வந்திருக்கிறார். ஒவ்வொரு போட்டியிலும் அசத்தும் ரியானை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

முன்கோபத்தால் வெறுப்பை வாங்கிக் கொண்ட ரியான் :

ரியான் பராக் வடகிழக்கு மாநிலமான அசாமைச் சேர்ந்தவர். ஐபில் 2019 சீசனுக்காக ராஜஸ்தான் அணி அவரை அடிப்படை விலையான 20 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. திறமையான ஆட்டக்காரர். பேட்டிங்கில் வல்லவர். பௌலிங்கும் செய்வார். ராஜஸ்தான் அணிக்குமே சில நம்பிக்கையளிக்கும் இன்னிங்ஸ்களை ஆடி வளரும் நட்சத்திரம் என்கிற பெயரை எடுத்தார். அதேநேரத்தில் களத்தில் இவரின் செயல்பாடுகள் விவாதத்துக்குள்ளாகின. அசட்டைத்தனத்துடன் கேட்ச் பிடிக்க முயன்று கோட்டைவிடுவார். எதிரணி வீரர்களை முறைப்பார். தன் சகவீரர்களுடனே கூட முறுக்கிக்கொண்டு நிற்பார். தன்னைப் பற்றி தானே புகழ்ந்து பேசிக்கொள்வார். நன்றாக விளையாடினால் ஆடிப்பாடி கொண்டாடுவார். இவையெல்லாம் அவரின் தனிப்பட்ட குணாதிசயங்கள். அதில் ஓர் எல்லைக்கு மேல் வெளிநபர்கள் விமர்சனம் செய்ய முடியாது. 


ஐபிஎல் போட்டிகளில் ரியானின் நடவடிக்கைகள் 

ஆனால், பராக் விஷயத்தில் சமூகவலைதளங்கள் கொஞ்சம் இறங்கி அடித்தன. தனிப்பட்ட முறையில் கிரிக்கெட்டில் அவரின் ஃபார்மும் இறங்கியிருந்தது. களத்தில் அவரின் அதீதமான ஆக்ரோஷத்தையும் மோசமான ஆட்டத்தையும் வைத்து வரைமுறையில்லாமல் விமர்சித்தார்கள். அதுமட்டுமில்லாமல் 2021 சீசனில் 11 இன்னிங்ஸ்களில் 93 ரன்களை அடித்திருந்தார். 2022 சீசனில் 17 இன்னிங்ஸ்களில் 183 ரன்களை அடித்திருந்தார். 2023 சீசனில் 7 இன்னிங்ஸ்களில் 78 ரன்களை அடித்திருந்தார். கடந்த சீசனிலெல்லாம் ரியான் பராக்தான் சமூகவலைதளங்களுக்கான பெரிய தீனி. சமூகவலைதளங்களின் ட்ரோல்களுக்கு இரையாகி வெளிச்சத்தை இழக்கப்போகும் ஈசலைப் போன்றுதான் ரியான் பராக்கும் காட்சியளித்தார். ஆனால் இந்த விமர்சனங்களையும் கேலிகளையும் தாண்டி அவருக்குள் பற்றி எரியும் நெருப்பு ஒன்று சூடு தணியாமல் எரிந்துகொண்டே இருந்தது.

ரியான் பராகின் எழுச்சி :

உள்ளூர் தொடர்களில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டே வந்தார். 50 ஓவர் வடிவில் நடக்கும் தியோதர் டிராபி தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரராக முதல் இடத்தைப் பிடித்தார். அந்தத் தொடரில் அதிக சிக்சர்களை அடித்த வீரரும் அவர்தான். 23 சிக்சர்களை அடித்திருந்தார். 20 ஓவர் வடிவில் நடக்கும் சையத் முஷ்தாக் அலி தொடரில் 500+ ரன்களை அடித்திருந்தார். கூடுதலாக 7 போட்டிகளில் தொடர்ச்சியாக அரை சதங்களை அடித்திருந்தார். ரஞ்சி தொடரிலும் சதங்களை அடித்திருந்தார். கடந்த உள்ளூர் சீசன் முழுவதுமே சிறப்பாக ஆடியிருந்தார். இந்த உள்ளூர் சீசன்களிலுமே அவரின் கொண்டாட்டங்களும் துடியாக நிற்கும் குணமும் கேலியாகியிருந்தது. ஆனாலும் அவர் கவலைப்படவில்லை. என்னுடைய ஆட்டம் இதுதான். என்னுடைய குணாதிசயம் இதுதான். யாருக்காகவும் எதற்காகவும் எதையும் மாற்றிக்கொள்ளமாட்டேன் என உறுதியாக நின்றார். ஆட்டத்தை மகிழ்வாக ஆட வேண்டும் என்பதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவந்தார் ரியான். 


உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து அசத்திய ரியான் பராக் 

"ரியான் பராக்கை தேசிய கிரிக்கெட் அகாடமியில் சந்தித்தேன். சிறு காயங்களுடன் வந்திருந்தார். அதிலிருந்து குணமடைய தீவிரமாக உழைத்தார். தனது திறன்களை வளர்த்துக் கொள்வதில் மட்டும்தான் முழு கவனத்தையும் செலுத்தினார். நான் அப்போதே அங்கிருந்த ஒரு பயிற்சியாளரிடம் 'இவர் முழுமையாக மாறிவிட்டார்' எனச் சொன்னேன். அது உண்மைதான். நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது ரியான் பராக் 2.0" என டெல்லிக்கு எதிராக பராக் அந்தச் சிறப்பான இன்னிங்ஸை ஆடிக்கொண்டிருந்த போதே, சூர்யகுமார் யாதவ் இந்த கருத்துக்களை ட்வீட் செய்தார்.

"நாங்கள் எல்லாம் அவருக்கு ஆதரவாக நிற்கிறோம்" - சங்கக்காரா

ரியான் பராக் தன்னுடைய குணாதிசயங்களை மாற்றிக் கொள்ளவில்லை. ஆனால், தன்னைக் கொஞ்சம் ஒழுங்குப்படுத்திக் கொண்டார். கவனச்சிதறல்களை உண்டாக்கும் செயல்களைக் குறைத்துக் கொண்டார். கொஞ்சம் பக்குவப்பட்டிருக்கிறார். ஜெய்ஸ்வால், ஜூரேல் போன்றோரெல்லாம் இந்திய அணிக்கு ஆடும் காட்சிகள் அவரை மனரீதியாக ஒருநிலைப்படுத்தியிருக்கிறது. எல்லாவற்றையும் விட முதலில் நம் ஆட்டத்தில் கவனம் செலுத்துவோம் என்கிற மனநிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறார் என ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளரான சங்ககராவும் பராக்கைப் பற்றி கூறியிருக்கிறார்.


ரியான் பராக்கும், பயிற்சியாளர் சங்கக்காராவும் 

"இது ஓர் உணர்ச்சிமிகு தருணம், நான் இதற்காக கடினமாக உழைத்திருக்கிறேன்" - ரியான் பராக்

இந்நிலையில் தனது ஆட்டம் குறித்து மனம் திறந்துள்ள ரியான் பராக், "நான் அசாமிலிருந்து வருகிறேன். கிரிக்கெட் பெரிதும் பரவலாக இல்லாத இடம் அது. நான் மற்ற பெரிய மாநிலத்திலிருந்து வரும் வீரர்களுடன் மோத வேண்டுமெனில் அவர்களை விட இரண்டு, மூன்று மடங்கு அதிகமாக பெர்ஃபார்ம் செய்ய வேண்டும். அவர்கள் ஒரு சதம் அடித்தால் நான் மூன்று சதங்களை அடிக்க வேண்டும். இந்திய அணியில் என்றாவது ஆடிவிடுவேன் எனும் நம்பிக்கை உறுதியாக இருக்கிறது. அதை யாராலும் குலைக்க முடியாது. ஆனால், அதற்காக ஒவ்வொரு போட்டியையும் அணித்தேர்வையும் மனதில் வைத்து ஆட விரும்பவில்லை. ஆடும் போட்டிகளை அனுபவித்து மகிழ்ந்து ஆடப்போகிறேன்" என்று கூறியுள்ளார். சமூகவலைதள ட்ரோல்கள் நம்மை இயங்கவிடாமல் செய்யும் சக்தியுடையவை. அதிலிருந்து ஒருவர் மீண்டு வந்து எழுந்து நிற்பதே பெரிய விஷயம். பராக் எழுந்து நிற்பதோடு சாதிக்கவும் செய்கிறார். ஒவ்வொரு சீசனிலும் ஒரு இளம் வீரர் அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்த்து உச்சத்தைத் தொடுவார். ரியான் பராக் இந்த ஐபில் சீசனுக்கு அப்படிப்பட்ட வீரராக இருக்க அதிக வாய்ப்புள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்