T20 உலகக்கோப்பை போட்டிக்கான வீரர்கள் தேர்வில் சொதப்பல்? கோப்பையை வெல்லுமா இந்தியா?

அடுத்த மாதம் டி20 உலகக்கோப்பை அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவிலும் தொடங்கவிருக்கிருக்கிறது. அதற்காக ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களை அறிவித்து வருகிறது . சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வாரியமும் 15 பேர் கொண்ட இந்திய அணியை வெளியிட்டது. இதில் பல ஆச்சரியங்களும் பல குழப்பங்களும் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. அதுமட்டுமில்லாமல் பல நல்ல வீரர்கள் அணியில் இடம்பெறாதது பெரும் சர்ச்சையை உருவாகியுள்ளது. இந்த கட்டுரையில் இந்திய அணி தேர்வை பற்றியும், உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றியை பற்றியையும் விரிவாக காணலாம்.

Update:2024-05-14 00:00 IST
Click the Play button to listen to article

கிரிக்கெட் T20 உலகக்கோப்பை போட்டி அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது. அதற்காக ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களை அறிவித்து வருகின்றன. சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வாரியமும் 15 பேர் கொண்ட இந்திய குழுவை அறிவித்தது. இதில் பல ஆச்சரியங்களும் பல குழப்பங்களும் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பல நல்ல வீரர்கள் அணியில் இடம்பெறாதது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. T20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி வீரர்களின் தேர்வை பற்றியும், இந்திய அணிக்ககான வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

15 பேர் கொண்ட இந்திய அணி

ரோஹித் சர்மா (C), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த்,  ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், மொஹம்மது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் 15 பேர் கொண்ட இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ரிசெர்வ் பிளேயர்கள்

சுப்மன் கில், ரிங்கு சிங், ஆவேஷ் கான், கலீல் அஹமத் ஆகியோர் ரிசெர்வ் பிளேயர்களாக வைக்கப்பட்டுள்ளனர்.


T20 உலகக்கோப்பை போட்டிக்கு 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு 

ருதுராஜிற்கு இடமில்லை

இந்திய அணியின் தொடக்க வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான ருதுராஜ் கைக்வாட், T20 உலகக்கோப்பை இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இவர் தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக ஆடி வருகிறார். 12 போட்டிகளில் 541 ரன்கள் குவித்துள்ளார். சதம், அரைசதங்கள் என்று அடித்து அசத்தியிருக்கிறார். இதனாலேயே இவர் டி20 உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்படுவார் என்று மக்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் ரிசெர்வ் வீரர்களில் கூட ருதுராஜ் பெயர் இடம் பெறாதது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஐபிஎல் தொடர் மட்டுமன்றி சர்வதேச தொடரிலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சமீபத்தில் ருதுராஜ் சதமடித்தார். இப்படி பேட்டிங்கில் அசத்தி வரும் ருதுராஜ் அணியில் இடம்பெறாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.


தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் மற்றும் ஃபினிஷெர் ரிங்கு சிங்கிற்கு அணியில் இடமில்லை 

ஃபினிஷெர் ரிங்கு சிங்குக்கும் 15 பேர் கொண்ட அணியில் இடமில்லை

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங்கும் 15 பேர் கொண்ட அணியில் இடம்பிடிக்கவில்லை. ரிசெர்வ் பிளேயரில் மட்டும்தான் இடம்பிடித்துள்ளார். தொடர்ந்து இந்திய அணிக்காக இவர் இறுதி கட்டத்தில் சிறப்பாக ஆடி வந்தார். அதுமட்டுமில்லாமல் பல ஆட்டங்களில் இந்திய அணியை தனது ஃபினிஷிங் திறன் மூலம் வெற்றி பெற வைத்திருக்கிறார். இப்படி இந்திய அணிக்காக தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த ரிங்குவையும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஓரங்கட்டியுள்ளது. சுமார் 180 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியிருக்கும் ரிங்கு சிங், அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தை சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் நிபுணர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரிங்கு சிங்கை எடுப்பதில் பல வாக்குவாதங்கள் நடந்து, இறுதியில் கனத்த முடிவுடன்தான் ரிசெர்வ் வீரர்களில் அறிவித்தோம் என்று பிசிசிஐ-ன் சேர்மேன் அஜித் அகர்க்கர் கூறியுள்ளார்.

டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்ட நடராஜனுக்கும் இடமில்லை

தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இருப்பினும் ஒரு சில பந்துவீச்சாளர்கள் நல்ல எகனாமியில் பந்துவீசி வருகின்றனர். அதில் மிக சிறப்பாக செயல்பட்டு டெத் ஓவர்களில் மிரட்டி வருபவர் தமிழகத்தை சேர்ந்த டி.நடராஜன். 15-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்து 8.09 எகனாமியில் பந்து வீசி வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஹைதராபாத் அணியில் தற்போது அதிக விக்கெட் எடுத்தவருபவரும் இவர்தான். அணிக்கு தேவைப்படும் போதெல்லாம் பவர்பிளேயில் ஒரு ஓவர், ஸ்லாக் ஓவரில் ஒரு ஓவர், டெத் ஓவர்களில் இரண்டு ஓவர் என்று பந்துவீசி வருகிறார். இப்படி சிறப்பாக பந்துவீசி வரும் நடராஜனை ஏன் இந்திய அணியில் எடுக்கவில்லை என்று ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். இந்த ஐபிஎல்லில் பும்ராவிற்கு பிறகு சிறப்பாக பந்து வீசியவர் என்றால் அது நடராஜன்தான். அவருக்கே அணியில் இடம் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.


நன்கு விளையாடியும் அணியில் தேர்வு செய்யப்படாத நடராஜன் - வேகப்பந்து வீச்சில் சொதப்பிவரும் அர்ஷிதீப், ஆவேஷ் கான்

பலவீனமாக காணப்படும் இந்திய அணியின் வேக பந்துவீச்சு

இந்திய அணி பேட்டிங் எந்த அளவிற்கு பலமாக இருக்கிறதோ அதற்கு எதிர்மறையாக இருக்கிறது இந்திய அணியின் வேக பந்துவீச்சு. தற்போது இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் சிராஜ், அர்ஷிதீப் ஆகியோர் தொடர்ந்து சொதப்பி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஆவேஷ் கான், கலீல் அஹமது ஆகியோர் ரிசெர்வ் பிளேயர்களாக தேர்வு செய்யப்பட்டிருப்பது ஆச்சரியப்படுத்துகிறது. இதுவரை நடந்த போட்டிகளில் சிராஜ் 8 விக்கெட்டுகளும், அர்ஷிதீப் 10 விக்கெட்டுகளும் மட்டுமே எடுத்துள்ளனர். எனவே பந்துவீச்சில் பும்ரா சொதப்பினார் என்றால், அணியின் நிலைமை தலைகீழாக மாறிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

நான்கு ஸ்பின்னர்கள் அவசியமா?

தற்போது இந்திய அணி சாஹல், அக்சர், குல்தீப், ஜடேஜா ஆகிய 4 ஸ்பின்னர்களுடன் உலககோப்பைக்கு செல்கிறது. பொதுவாகவே மேற்கிந்திய தீவுகளில் வேகபந்து வீச்சுக்கு ஏற்றவாறுதான் ஆடுகளங்கள் இருக்கும். பின்பு எதற்கு 4 ஸ்பின்னர்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜடேஜா இருக்கும்போது எதற்கு அக்சர் படேல் என கேள்வி எழுகிறது. சாஹல் மற்றும் குல்தீப்பில் யார் 11 பேர் கொண்ட அணியில் விளையாட போகிறார் என்று தெரியாத நிலையில் சம்மந்தமே இல்லாமல் அக்சரை தேர்வு செய்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜடேஜா கண்டிப்பாக பிளேயிங் லெவனில் இருப்பார். ஆனால் மற்ற 3 ஸ்பின்னர்களில் யார் பிளேயிங் லெவனில் இருப்பார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


இந்திய அணி இறுதியாக 2007 டி20 உலகக்கோப்பையை வென்றபொழுது 

டி20 உலகக்கோப்பையை வெல்லுமா இந்திய அணி?

இந்திய அணி 2007ஆம் ஆண்டு கோப்பையை வென்றதற்கு பின்பு இன்னும் எட்டாக்கனியாகவே டி20 உலகக்கோப்பை இருந்து வருகிறது. 2014ஆம் ஆண்டு இறுதி போட்டிவரை சென்று கோப்பையை தவறவிட்டது. இம்முறை கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற நோக்கில் களமிறங்க இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தற்போது இந்திய அணிக்கு ஓர் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இந்திய அணியில் தேர்வான வீரர்கள் அனைவரும் ஐபில் தொடரில் படுபயங்கரமாக சொதப்பி வருகின்றனர். சிறப்பாக ஆடி வந்த சாம்சன் தீடீரென்று மோசமாக ஆடி வருகிறார். அவர் மட்டுமில்லாமல் சாஹல், துபே போன்ற வீரர்களும் மோசமாக ஆடி வருகின்றனர். இதனால் தற்போது இந்திய அணி கோப்பையை வெல்லுமா என்கிற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஐபிஎல்லில் சொதப்பினாலும், உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி வீரர்கள் கோப்பையை வெல்லுவார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags:    

மேலும் செய்திகள்