சங்கரன்கோவிலில் களை கட்டிய "ஆடி தபசு" - ஊசி முனையில் தவமிருந்த "கோமதி அம்மனுக்கு" விழா!

சிவபெருமான் தன் உடம்பில் ஒருபாதியை சங்கரனாகவும், மறுபாதியை நாராயணனாகவும் ஒரு சேரக் காட்சியளித்தது சங்கரன்கோவிலில்தான்.

Update: 2024-07-20 12:03 GMT

ஆடி மாதம் என்றாலே விழாக்களுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் நாளை ஆடி தபசு கொண்டாடப்படுகிறது. ஆடி தபசு என்றாலே, நம் நினைவுக்கு வரும் திருத்தலம்தான் சங்கரன்கோவில். இந்த ஆலயத்தில் பல்வேறு விழாக்கள் சீரும் சிறப்புமாக நடத்தப்பட்டாலும், ஆடி தபசு விழா வெகு விமரிசையாக நடைபெறும்.

அரியும் சிவனும் ஒன்னு

"அரியும் சிவனும் ஒன்னு; அறியாதவன் வாயில மண்ணு" என்று கூறப்பட்டாலும், சைவம் பெரியதா? வைணவம் பெரியதா? என்ற பிரச்சினை காலம் காலமாக இருந்து வருகிறது. அதற்கு பதில் சொல்லும் விதமாக, சிவபெருமான் தன் உடம்பில் ஒருபாதியை சங்கரனாகவும், மறுபாதியை நாராயணனாகவும் ஒரு சேரக் காட்சியளித்து, சைவமும், வைணவமும் ஒன்றுதான் என்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பக்தர்களுக்கு உணர்த்திய இடம்தான் சங்கரன்கோவில்.

ஆடி தபசு குறித்து விளக்கும் புராண கதை

அந்த காலத்தில், சங்கன், பதுமன் என்ற நாக வம்சத்து அரசர்களுக்கு இடையே ஒரு போட்டி இருந்ததாம். சங்கன் சிவனை வணங்குபவர். பதுமன் நாராயணனை வணங்குபவர். எனவே சிவன்தான் பெரியவர் என்று சங்கன் சொல்ல, நாராயணன்தான் பெரியவர் என்று பதுமன் சொல்ல இருவருக்குமே சண்டை வந்தது. நாம் ஏன் சண்டை போட வேண்டும்? பார்வதி தேவியிடமே இதுகுறித்து கேட்டு விடுவோம் என்று இருவரும் அன்னை பார்வதியிடம் சென்று சந்தேகத்தை எழுப்பினர். அன்னைக்கு தெரியும், இருவரும் ஒன்றுதான் என்று. இருந்தபோதும் இதனை மக்களுக்கு உணர்த்துங்கள் என்று சிவனிடம் போய் அன்னை கோமதி அம்மன் சொல்ல, அவ்வளவு சீக்கிரம் நான் காட்சி அளித்து விடுவேனா? என்று கேள்வி எழுப்பிய சிவனோ, அன்னையை தவமிருக்க சொன்னாராம்.

இதையடுத்து, புன்னையடி என்று அழைக்கப்படும் சங்கரன்கோவிலில் தனது ஒரு காலில் ஊசி முனையில் தவமிருந்தாராம் கோமதி அம்மன். தவத்தை மெச்சிய சிவபெருமான், சங்கரனாகவும், நாராயணனாகவும் ஒருசேர அன்னைக்கு அரிய காட்சியை தந்தருளினாராம். ஆடி மாத பௌர்ணமியுடன் கூடிய உத்திராட நட்சத்திரத்தில் அந்தக்காட்சி கிடைத்த நன்னாளே ஆடி தபசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. தபசு என்றால் தவம். ஆடி மாதத்தில் அம்பாள் தவமிருந்ததால் ஆடி தபசு என்று பெயர் பெற்றது. அத்துடன், சங்கரன்கோவிலில் சுவாமிக்கும், கோமதி அம்மனுக்கும் ஆலயமும் உருவாக்கப்பட்டதாம். 

விமரிசையாக நடைபெறும் ஆடி தபசு தேரோட்டம்

சங்கரன்கோவில் கோமதி அம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி தபசு விழா 12 நாட்களுக்கு கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த ஆண்டிற்கான விழா கடந்த 11ஆம் தேதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை கோமதி அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் 9ம் நாளை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆடி தபசு திருநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சங்கரன்கோவில் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

அன்னையின் பாரத்தை ஏற்றுக்கொள்ள ஆடிச்சுற்று

ஊசி முனையில் தவமிருந்த அன்னைக்காக இங்கு பக்தர்கள் ஆடிச்சுற்று சுற்றுகின்றனர். ஆடி தபசு கொடியேறிய பின் 'ஆடிச்சுற்று' என்ற பெயரில், பக்தர்கள் கோவிலை 101, 501, 1001 என்ற எண்ணிக்கையில் சுற்றுகிறார்கள். ஆடிச்சுற்று சுற்றுவதால், ஒரு காலில் நின்று தபசு காட்சி காணும் அம்பாளின் கால் வலியை தாங்கள் ஏற்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். மேலும் தவக்காலத்தில் கோமதி அம்மனை சுற்றினால் தங்களது வேண்டுதல் உடனடியாக நிறைவேறும் என்றும் பக்தர்கள் திடமாக நம்புகின்றனர். 

ஆடி தபசில் வழிபட்டால் நன்மை

சங்கரன்கோவிலில் அன்னை கோமதி தேவியை பிரதானப்படுத்தி நடக்கும் ஆடி தபசு விழா நாளில், அம்பிகையையும் சங்கரர் நாராயணரையும் வழிபட நன்மைகள் கிட்டுமாம். பாம்புகளான சங்கனும், பதுமனும் வழிபட்ட கோவில் இது என்பதால் இங்கு புற்று இருக்கிறது. எனவே சங்கரன்கோவிலில் புற்று மண்தான் பிரதான பிரசாதம். நோயுள்ளவர்கள் இந்த மண்ணை நீரில் கரைத்து உட்கொள்வதுடன், உடலிலும் பூசிக்கொள்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்