அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடூரம்! இரவு என்ன நடந்தது? முழு விவரம்!
மாணவி கெஞ்சி கதறியபோதும் அந்த நபர் விடாமல் மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதுடன், வன்கொடுமை செய்து அதை வீடியோவாகவும் எடுத்துள்ளார். இதுகுறித்து வெளியே தெரிவித்தால் அந்த வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியதாகவும் தெரிகிறது.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து பல்வேறு விதங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்தபாடில்லை. சொல்லப்போனால் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றன. அதிலும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை உலகளவில் கணிசமாக உயர்ந்திருக்கிறது. சமீபத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடூரம் இதற்கு மிகப்பெரிய சான்று. பல்கலைக்கழக வளாகத்தில் வைத்தே வெளிநபர் ஒருவர் மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் உறையவைத்திருக்கிறது. அதிலும் காதலனுடன் இருந்த மாணவியை மிரட்டி, இதுபோன்று வன்கொடுமை செய்ததுடன், அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டிய காமக்கொடூரனை போலீசார் கைது செய்திருக்கின்றனர். போலீசாரின் விசாரணையில் அந்த நபர் குறித்த பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இதனிடையே இந்த குற்றத்தில் பதிவுசெய்யப்பட்ட FIR கசிந்துவிட்டதாக எழுந்த விவகாரத்திற்கு சென்னை போலீஸ் கமிஷ்னர் அருண் விளக்கமளித்திருக்கிறார். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தின் முழு விவரத்தையும் விரிவாக காணலாம்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன?
தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான பல்கலைக்கழகங்களில் ஒன்று அண்ணா பல்கலைக்கழகம். இங்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே மாணவ, மாணவிகளின் விடுதியும் அமைந்திருக்கிறது. இங்கு விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்துவரும் ஒரு மாணவியும், அதே துறையில் மூன்றாம் ஆண்டு படித்துவரும் மாணவனும் காதலித்து வந்துள்ளனர். அவர்கள் இருவரும் அவ்வப்போது கல்லூரி வளாகத்திற்குள்ளேயே தனியாக சந்தித்து பேசுவதும் பழகுவதுமாக இருந்துவந்துள்ளனர். ஒரே வளாகத்திற்குள் இருந்ததால் இரவு நேரங்களிலும் தனிமையில் சந்தித்து பேசிவந்துள்ளனர். அப்படி கடந்த 23ஆம் தேதி இரவு 8 மணியளவில் இவர்கள் இருவரும் மரங்கள் வெட்டி போடப்பட்டிருக்கும் பகுதியில் தனியாக சந்தித்துள்ளனர். அந்த சமயத்தில் அங்கு திடீரென வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், இருவரும் தனிமையில் நெருக்கமாக இருப்பதை வீடியோ எடுத்திருப்பதாகவும், அதை கல்லூரி டீனிற்கு அனுப்பிவிடுவேன் என்றும் மிரட்டியிருக்கிறார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை
மேலும் தன்னை காவல்துறை அதிகாரி என்றும், மப்டியில் வந்திருப்பதாகவும் கூறிய அவர், அந்த மாணவனை, ‘இங்கிருந்து ஓடிவிடு... இல்லையென்றால் நடப்பதே வேறு..’ என்று கூறி அடித்து உதைத்து விரட்டியுள்ளார். அந்த மாணவனும் பயந்துஓட, மாணவியிடமிருந்து ஐடி கார்டை பிடுங்கிய அந்த நபர், அவருடைய அவசர தொடர்பு எண்ணை எடுத்து, பெற்றோரிடம் கூறிவிடுவேன் என்று மிரட்டி, தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட வற்புறுத்தியுள்ளார். அந்த மாணவி கெஞ்சி கதறியபோதும் அந்த நபர் விடாமல் மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதுடன், வன்கொடுமை செய்து அதை வீடியோவாகவும் எடுத்துள்ளார். இதுகுறித்து வெளியே தெரிவித்தால் அந்த வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியதாகவும் தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் புகாரளிக்கவே, மகளிர் போலீசார் இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கினர். விசாரணையில் குற்றவாளி குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
குற்றவாளியின் பின்னணி!
பல்கலைக்கழக வளாகத்திலிருக்கும் சிசிடிவி காட்சிகளை வைத்தும், மாணவி புகாரில் தெரிவித்திருந்த அடையாளங்களை வைத்தும் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர். ஞானசேகரனுக்கு மொத்தம் 4 மனைவிகள் எனவும், முதல் மனைவிக்கு 11 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், இந்த நபரின் பாலியல் துன்புறுத்தல்கள் தாங்காமல் அந்த பெண் குழந்தையுடன் பிரிந்துவாழ்கிறார் எனவும் கூறப்படுகிறது. இரண்டாம் மனைவிக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், அவரையும் விட்டுவிட்டு மூன்றாவது ஒரு பெண்ணை திருமணம் செய்திருக்கிறான். அந்த பெண்ணுக்கு குழந்தைகள் ஏதும் இல்லை. அவரும் இவனுடன் இல்லாததால் நான்காவது ஒரு பெண்ணை திருமணம் செய்து அவருக்கு ஒரு ஆண் குழந்தை இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஞானசேகரன் கோட்டூர்புரம் பகுதியில் தள்ளுவண்டி பிரியாணிக்கடை வைத்திருப்பதகாவும், அந்த கடையின்மூலம் தினசரி ரூ.2000 வரை லாபம் கிடைப்பதால் இரவு நேரங்களில் உல்லாசமாக சுற்றுவதுடன், விலையுயர்ந்த ஜீப்பில் வலம்வருவதாகவும் சொல்லப்படுகிறது.
அரசியல்வாதிகளுடன் ஞானசேகரன் இருப்பதாக வெளியான புகைப்படங்கள்
சம்பவம் நடந்த தினத்தன்றும் பிரியாணிக்கடையில் வியாபாரத்தை முடித்துவிட்டு, கடையை மூடிய ஞானசேகரன், பல்கலைக்கழக வளாக சுவரின்மீது ஏறி உள்ளே குதித்துச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இவ்வாறு ஞானசேகரன் செய்வது இது முதன்முறை இல்லை எனவும், அடிக்கடி இவ்வாறு உள்ளே செல்லும் இந்த நபர், அங்கு தனிமையில் இருக்கும் மாணவ மாணவிகளை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து மிரட்டுவதையும், போலீஸ் எனக்கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதையும், பணம் பறிப்பதையும் வழக்கமாகவே கொண்டிருந்திருக்கிறார். மேலும் இந்த நபர் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் பரவிவருகிறது. இந்த நபர் கட்சிபிரமுகர்களுடன் தொடர்பில் இருப்பதால் அந்த செல்வாக்கை பயன்படுத்தி அரசியல் தலைவர்களிடம் நெருக்கமாக புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
கசிந்த FIR.. கமிஷ்னர் விளக்கம்
ஞானசேகரனை கைதுசெய்தபோது தப்பியோட முயற்சித்ததில் கீழே விழுந்து இடது கால் மற்றும் கையில் முறிவு ஏற்பட்டு, மாவுக்கட்டு போடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அந்த நபரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்திருக்கின்றனர். இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவியின் சுய விவரங்கள் அடங்கிய FIR கசிந்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவியின் தனிப்பட்ட உரிமைக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி பல்வேறு தரப்புகளிலிருந்தும் அழுத்தங்கள் வலுத்த நிலையில், எதிர்க்கட்சிகளை சேர்ந்த பலர் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்திருக்கிறார் சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் அருண். “பாதிக்கப்பட்டவர்கள் என்ன கூறுகிறார்களோ அதை அப்படியே பதிவு செய்வதுதான் FIR. இந்த வழக்கிலும் அப்படித்தான் FIR பதிவுசெய்யப்பட்டிருந்தாலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது கசிந்திருக்கிறது. இதுதொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கை விசாரிக்க கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவர்களுக்கான பணிகள் கொடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. முதலில் சந்தேகித்த நபர்கள் சிலரை கொண்டுவந்து விசாரித்து, அதன்பின் அறிவியல்பூர்வமான ஆதாரங்களை சேகரித்து, செல்போன் டவர் லொகேஷன், சிடிஆர் போன்ற அனைத்தின் அடிப்படையிலும்தான் ஞானசேகரனை 25ஆம் தேதி கைதுசெய்தோம்.
குற்றவாளி ஞானசேகரனுக்கு கை மற்றும் காலில் எலும்பு முறிவு
அந்த நபரிடமும் விசாரணை நடத்தி, குற்றவாளி என்பதை உறுதிப்படுத்திய பின்னர்தான் கைதுசெய்து ரிமாண்ட் செய்திருக்கிறோம்” என்று கூறினார். மேலும் தொழில்நுட்பக் கோளாறு குறித்து விளக்கமளித்த அவர், “போக்சோ மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்மீது FIR பதிவுசெய்யும்போது, Crime and Criminal Tracking Network and Systems என்னும் ஆன்லைன் போர்ட்டல் தானாக லாக் ஆகிவிடும். ஆனால் அதில் ஏற்பட்ட தாமதத்தால் அதை ஒருசிலர் டவுன்லோடு செய்துவிட்டனர். அப்படி வெளிவந்திருக்கலாம். இல்லாவிட்டால், இதுபோன்ற வழக்குகளில் புகாரளித்தவர்களுக்கு FIR நகலின் பிரதி ஒன்று கொடுக்கப்படும். அப்படியும் வெளிவந்திருக்கலாம். எப்படியாயினும், FIR பதிவை வெளியிடுவதும், அதுகுறித்து விவாதிப்பதும் சட்டப்படி குற்றமாகும். யார் கசியவிட்டார்கள் என்பது கண்டறியப்பட்டு அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கில் இதுவரை நடத்தப்பட்ட புலன் விசாரணையில் ஞானசேகரன் ஒருவர்தான் குற்றவாளி என கண்டறியப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டிலிருந்து இதுவரை அந்த நபர்மீது 20 வழக்குகள் பதியப்பட்ட நிலையில் அவற்றில் 6க்குத்தான் தண்டனை கிடைத்திருக்கிறது. மற்ற வழக்குகள் விசாரணையில் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை திருட்டு, ரவுடிசம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்தான். இந்த வழக்கில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் மொத்தம் 70 சிசிடிவி கேமராக்களில், வேலை செய்யும் 56 கேமராக்களை வைத்து ஞானசேகரன்தான் குற்றவாளி என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன” என்று கூறினார். இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து கையிலெடுத்திருக்கிறது. வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டுமென கோரிக்கைகள் எழுந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து உள்துறை செயலாளர், டிஜிபி, மாநகர போலீஸ் கமிஷ்னர், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஆகியோர் பதிலளிக்கவேண்டுமெனவும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டுமெனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.