3 வயது சிறுவன் கொலை! - எனக்கில்லாத குழந்தை உனக்கும் இருக்கக்கூடாது என எதிர்வீட்டு பெண் செய்த கொடூரம்!

காலை 9.30 மணியளவில் காணாமல்போன சிறுவனை மதியம் 1.30 மணியளவில்தான் கண்டுபிடித்துள்ளனர். இதனால் இந்த கொலையில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா? கொலைக்கான காரணம் வேறு ஏதேனும் இருக்கிறதா? என்பது போன்ற கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Update: 2024-09-16 18:30 GMT
Click the Play button to listen to article

கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் என குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசு தரப்பில் கூறப்பட்டாலும், தமிழ்நாட்டில் ஒருநாளைக்கு சராசரியாக 4 கொலைகள் வெளிச்சத்திற்கு வருவதாக புள்ளிவிவர அறிக்கைகள் கூறுகின்றன. சொத்து பிரச்சினை, பழிக்கு பழி, ஆணவக் கொலை என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் அடுத்த உயிரை பறிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்நிலையில், திருநெல்வேலியில் தனது மகனை இழந்த துக்கத்தை மறக்க, மூன்று வயது சிறுவனை படுகொலை செய்த எதிர்வீட்டுப் பெண் போலீசாரால் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குற்றத்தை அப்பெண் ஒத்துக்கொண்டாலும் குழந்தையை இழந்த பெற்றோர் சாலையில் உருண்டு அழுத காட்சிகள் காண்போரை கண்கலங்க வைத்திருக்கின்றன. இந்த சம்பவத்தின் பின்னணி என்ன? இதுபோன்ற கொலைகளுக்கு தூண்டுதலாக இருக்கும் மனநிலை என்ன? என்பது குறித்து பார்க்கலாம். 

சிறுவனை கொலை செய்தது ஏன்?

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள ஆத்தூர் குறிச்சி என்ற பகுதியை சேர்ந்தவர்கள் விக்னேஷ் - ரம்யா தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் பள்ளிக்கு சென்றபிறகு, 3 வயதான இளைய மகன் சஞ்சயை தினந்தோறும் அருகிலிருக்கும் அங்கன்வாடி மையத்திற்கு கொண்டுசென்று விடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். வழக்கம்போல் செப்டம்பர் 9ஆம் தேதி காலை வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த சஞ்சயை 9.30 மணியளவில் அங்கன்வாடிக்கு அழைத்துச்செல்ல தாய் ரம்யா தேடியிருக்கிறார். ஆனால் குழந்தை வீட்டில் எங்கும் இல்லாததால் உறவுக்காரர்கள் மற்றும் பக்கத்துவீடுகளுக்குச் சென்று தேடியிருக்கிறார்.


வாஷிங்மெஷினுக்குள் மறைத்து வைக்கப்பட்ட சிறுவனின் சடலம்

சிறுவனை எங்கும் காணாததால் இதுகுறித்து ராதாபுரம் போலீசில் புகாரளித்தார் தந்தை விக்னேஷ். புகாரின்பேரில், அந்த பகுதிக்குச் சென்ற போலீசார் அங்குள்ள வீடுகள் மற்றும் நீர்நிலைகள் என பல இடங்களில் தேடியிருக்கின்றனர். இதற்கிடையே விக்னேஷின் எதிர்வீடு பூட்டியிருந்ததை பார்த்து அதுகுறித்து கேட்க, அந்த வீட்டில் வசித்துவரும் தங்கம்மாள் என்பவருக்கும், விக்னேஷ் குடும்பத்திற்கும் முன்பகை இருப்பது தெரியவந்திருக்கிறது. அதனாலேயே காலையில் இருந்தே அந்த வீட்டில் மட்டும் குழந்தையை தேடவில்லை என்பதும் தெரியவந்திருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், தங்கம்மாள் வீட்டிற்கு சோதனையிட சென்றபோது, அவர் பதற்றத்தில் அங்கிருந்து தப்பியோடி பக்கத்து கிராமத்திலிருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. தங்கம்மாள் வீட்டை சோதனையிட்டதில் அந்த வீட்டு வாஷிங்மெஷினுக்குள் ரத்தக்கறை படிந்த ஒரு சாக்குப்பை இருப்பதை பார்த்து அதனை திறந்த பார்த்தபோது உள்ளே சிறுவன் கொலைசெய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. குழந்தையின் சடலத்தை பார்த்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் தரையில் புரண்டு கதறி கதறி அழுத சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

தப்பிச்செல்ல முற்பட்ட தங்கம்மாளை தேடிப்பிடித்த போலீசாரிடம், தெரியாமல் செய்துவிட்டதாக கைக்கூப்பி அழுதார். ஆனால் அவரை அடிக்க ஊர்மக்கள் ஒன்றுதிரண்டு வர, அவர்களிடமிருந்து தங்கம்மாளை மீட்ட போலீசார், ராதாபுரம் காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் மகனை இழந்த சோகத்தில் தான் இருக்கும்போது பக்கத்துவீட்டில் பகையாளியின் குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை என கூறியதை கேட்டு போலீசாரே அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடையே நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்திருக்கின்றன.


குற்றவாளி தங்கம்மாள் மற்றும் குழந்தையை பறிகொடுத்த தாய் ரம்யா

ஏற்கனவே விக்னேஷ் - ரம்யா தம்பதிக்கும் தங்கம்மாளுக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்ததால் இரு குடும்பத்தினருக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதுடன், பேசாமலும் இருந்து வந்துள்ளனர். இதனிடையே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தங்கம்மாளின் மகன் ஒரு விபத்தில் இறந்துவிட்டான். அந்த ஈமச்சடங்கிற்குக்கூட விக்னேஷ் குடும்பம் வராததால் அவர்கள்மீது தங்கம்மாள் கடும் அதிருப்தியில் இருந்துள்ளார். மேலும் யாரிடமும் பேசாமல் சற்று மனநலம் பாதிக்கப்பட்டதைப்போன்று நடந்துகொண்டது தெரியவந்திருக்கிறது. அதனால்தான் எதிர்வீட்டில் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருந்த இந்த தம்பதியை பார்த்து தனியாக வாழ்ந்துவந்த தங்கம்மாள் பொறாமைகொண்டு, 3 வயது சிறுவனை தனது வீட்டிற்குள் அழைத்துச் சென்று கொலை செய்திருக்கிறார் என்பதும் தெரியவந்திருக்கிறது. காலை 9.30 மணியளவில் காணாமல்போன சிறுவனை மதியம் 1.30 மணியளவில்தான் கண்டுபிடித்துள்ளனர். இதனால் இந்த கொலையில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா? கொலைக்கான காரணம் வேறு ஏதேனும் இருக்கிறதா? என்பது போன்ற கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அன்று காரைக்காலில் நடந்ததும் இதேதான்!

திருநெல்வேலி சம்பவத்தைப் போன்றே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலிலும் பொறாமை காரணமாக ஒரு கொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதை இந்நேரத்தில் நினைவுகூரவேண்டும். காரைக்காலிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்துவந்த பாலமணிகண்டன் என்ற சிறுவன் எப்போதும் முதல் ரேங்க் எடுப்பது, விளையாட்டு மற்றும் இதர கலை நிகழ்ச்சிகளிலும் ஆர்வத்துடன் கலந்துகொள்வது என இருந்துவந்துள்ளான். அந்த சிறுவனின் வகுப்பில் படித்த மற்றொரு சிறுமிக்கு பால மணிகண்டன் பெரும் போட்டியாக இருப்பதை தாங்கிக்கொள்ள முடியாத சிறுமியின் தாய், சிறுவனுக்கு கூல்ட்ரிங்க்கில் விஷம் கலந்துகொடுத்த சம்பவத்தை யாராலும் மறக்கமுடியாது.


காரைக்கால் சிறுவன் பால மணிகண்டன் மற்றும் கூல்ட்ரிங்கில் விஷம் கலந்துகொடுத்த சகாயமேரி 

பள்ளி ஆண்டுவிழா கலை நிகழ்ச்சியின்போது, தன்னை சிறுவனின் உறவுக்கார பெண் எனக்கூறி, கூல்ட்ரிங்க்கில் எலி மருந்து கலந்து எடுத்துவந்து, செக்யூரிட்டியிடம் கொடுத்து சிறுவனிடம் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். அதனை வாங்கிக்குடித்த சிறுவனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட, அவனை காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தும் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில் அங்கு கூல்ட்ரிங்க் கொடுக்கவந்த பெண், அதே பள்ளியில் பயிலும் ஒரு மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா என்பது தெரியவர, அவரிடம் விசாரணை நடத்தியதில், தனது மகளைவிட அந்த சிறுவன் எப்போதும் முதல் மதிப்பெண் வாங்குவதையும், அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெறுவதையும் தன்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்பதால், சிறுவன் போட்டியில் கலந்துகொள்வதை தடுக்கவே இவ்வாறு செய்ததாகவும் கூறி அனைவரையும் அதிர்ச்சியில் உறையசெய்தார். இந்த கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்டு குற்றவாளியாக இன்று சிறையில் இருக்கிறார் சகாயராணி.

போட்டி மனப்பான்மை கொலைவரை கொண்டுசெல்லுமா?

போட்டி மனப்பான்மையும் பொறாமையும் ஒன்றையொன்று சார்ந்தே இருக்கின்றன. தான் ஆசைப்பட்டு, தன்னால் அடையமுடியாத ஒன்றை அல்லது தங்களுக்கு கிடைக்காத ஒன்றை மற்றொருவர் அடையும்போது அல்லது மற்றவருக்கு கிடைக்கும்போது உருவாகும் குணம்தான் பொறாமை. ‘பொறாமை ஒரு கொலையாளி’ என வரையறுக்கின்றனர் உளவியல் நிபுணர்கள். ஒருவருடைய இயலாமையே பிறர்மீது பொறாமையாக உருவெடுக்கிறது என்கின்றனர். ஒருவர் இயல்பாக செய்யும் சில விஷயங்கள் எதிரில் இருந்து பார்ப்பவருக்கு தொந்தரவாக, எரிச்சலாக அல்லது பயமுறுத்தும் வகையில் அமையும்போது அல்லது அந்த நபர் சிறப்பாக செயல்படுவதை கண்டு தங்களால் முடியவில்லையே என தன்மீது கோபம்கொள்ளும்போது உள்ளிருக்கும் பொறாமைகுணம் வெறுப்பாக, அந்த நபர்மீது கொட்டப்படுகிறது. பிறரிடம் தனது கோபத்தையும் வெறுப்பையும் காட்டமுடியாத சமயங்களில் அது தன்மீதே திரும்பி, சிலர் தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளும் நிலைமைக்குக்கூட செல்கின்றனர்.


தனக்கு கிடைக்காத ஒன்று பிறருக்கு கிடைக்கும்போது உருவாகும் பொறாமை குணம் (உ.ம்: அம்மாவின் அன்பு)

பொதுவாகவே பிறருடன் தன்னை ஒப்பிடும் பழக்கம் கொண்டவருக்கு கட்டாயம் பொறாமை குணம் நிறைந்திருக்கும் என வரையறுக்கின்றன உளவியல் நூல்கள். இப்படி எதிர்வீட்டில் வசிக்கும் குடும்பம், அதுவும் ஏற்கனவே தன்னுடன் பகையில் இருக்கும் ஒரு குடும்பம் தனது குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து பார்த்து ஒருவித எரிச்சலும், கசப்பும் உண்டாகி, அதன் அதீத வெளிப்பாடாகத்தான் தங்கம்மாள், குழந்தை என்றும் பார்க்காமல் கொலை செய்யும் அளவிற்கு துணிந்திருக்கிறார். அதேபோலத்தான் காரைக்கால் சம்பவமும். பொறாமை, கோபம், எரிச்சல், வெறுப்பு, மனச்சோர்வு போன்ற உணர்ச்சிகளை கட்டுப்படுத்தாவிட்டால் அது கட்டாயம் ஒருவரின் வளர்ச்சியை தடுக்கும் என்கின்றனர் நிபுணர்கள். இதுபோன்ற போட்டி, பொறாமை உணர்வை விட்டுவிட, சில வழிகளை பின்பற்ற அறிவுறுத்துகின்றனர். ஒருவருடைய வளர்ச்சியை அல்லது வெற்றியை உத்வேகத்திற்காக எடுத்துக்கொள்ளலாமே தவிர, அவரைப்போலவே இருக்க முயற்சிக்கக்கூடாது. மேலும் சுய மரியாதை மற்றும் சுய மதிப்பீட்டை மேம்படுத்தும் வழிகளை கற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் பிறரை ஏற்றுகொள்ளும் மனநிலையை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்கின்றனர். ஒருவருடைய இயலாமை பொறாமை அல்லது போட்டியாக உருவெடுக்கும்போதே, உடனடியாக நல்ல ஆலோசகரை அணுகி, அதிலிருந்து விடுபட என்ன செய்வது என வழிகளை கேட்டறிந்து பின்பற்றுவது சிறந்தது என்கின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்