காதலிக்காக ரசிகரைக் கொன்ற கன்னட சூப்பர் ஸ்டார் தர்ஷன் - வழக்கின் முழு விவரம்

சித்ரதுர்கா டூ பெங்களூரு இடையே இருக்கும் சுங்கச்சாவடிகள், கார் ஷெட் போன்றவற்றின் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றியிருக்கின்றனர். இதுபோக கார் ஷெட்டில் கிடந்த பவித்ராவின் காலணி, உடைகள் மற்றும் மின்சாரம் பாய்ச்ச பயன்படுத்திய கருவி, ரத்தக்கறைகளின் மாதிரிகள் போன்றவற்றையும் போலீசார் கைப்பற்றியிருக்கின்றனர்.

Update: 2024-07-08 18:30 GMT
Click the Play button to listen to article

பெங்களூருவையே தற்போது உலுக்கிக் கொண்டிருக்கும் சம்பவங்களில் ஒன்று ரேணுகா சாமி கொலைவழக்கு. கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கும் இந்த நபரின் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்தான் பார்ப்போரை கண்கலங்க செய்திருக்கிறது. இந்த கொலை வழக்கில் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் அதிரடியாக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். யார் இந்த ரேணுகா சாமி? இவருடைய கொலைக்கும் நடிகர் தர்ஷனுக்கும் சம்பந்தம் என்ன? அப்படி என்னதான் பிரச்சினை இருந்தாலும் சாதாரண நபர் ஒருவரை கடத்தி கொலை செய்யும் அளவிற்கு ஒரு சூப்பர் ஹீரோ இறங்குவாரா? இந்த வழக்கில் காவல்துறை தீவிரம் காட்டுவது ஏன்? என்பது குறித்தெல்லாம் சற்று விரிவாக அலசலாம்.

யார் இந்த ரேணுகா சாமி? 

கர்நாடக மாநிலம் சித்திரதுர்காவிலுள்ள லட்சுமி வெங்கடேஸ்வரா என்னும் லேஅவுட்டில் வசித்துவந்தவர் ரேணுகா சாமி. 33 வயதான இவர் தனது பகுதியிலிருக்கும் ஒரு மருந்துக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். சமீபத்தில் திருமணமான இவருடைய மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் அப்பா, அம்மா மற்றும் மனைவி என குடும்பமாக வசித்துவந்த ரேணுகா சாமி, ஜூன் 8ஆம் தேதி வேலைக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பவில்லை. இதனையடுத்து பயந்துபோன அவருடைய குடும்பத்தார் ஜூன் 9ஆம் தேதி காவல்நிலையத்தில் புகாரளித்தனர். இதே சமயத்தில் சித்திரதுர்காவிலிருந்து 3 மணிநேரம் பயண தூரத்திலிருக்கும் காமாக்ஷிபுரம் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அது ரேணுகா சாமியின் உடல் என்பதை கண்டுபிடிப்பதற்கு முன்பே மூன்றுபேர் அவருடைய விவரங்களைக் கூறி, பணத்தகராறு காரணமாக அவரை தாங்கள்தான் கொலைசெய்ததாக ஒப்புக்கொண்டு காவல்நிலையத்தில் சரணடைந்தனர். இந்த வழக்கு இத்தனை சுலபமாக முடிந்துவிட்டதா? என போலீசாருக்கு சந்தேகம் எழுந்த நிலையில் சரணடைந்த மூவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். மூவரும் முன்னுக்குப் பின் முரணாக பேசியதில் சந்தேகமடைந்த போலீசார் தீவிர விசாரணையை முடுக்கினர். அதில், மூவருடைய செல்போன் அழைப்புகளின் விவரங்களை எடுத்து பார்த்தபோது அதில் நடிகர் தர்ஷனின் எண்ணிலிருந்தும் பலமுறை அழைப்புகள் வந்திருக்கவே, போலீசார் இந்த கொலைக்கு பின்னால் வேறு காரணம் இருப்பதை புரிந்துகொண்டு விசாரணையை துரிதப்படுத்தினர். இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி போலீசாரை மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியாவையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது. இதற்கு முக்கிய காரணம், ரேணுகா சாமியின் பிரேத பரிசோதனையில் அவருடைய அந்தரங்க உறுப்பில் மின்சாரம் செலுத்தப்பட்டு சேதப்படுத்தப்பட்டது தெரியவந்திருக்கிறது. மேலும் அவருடைய ஒரு காதை காணவில்லை எனவும், கல்லீரல் சேதமடைந்திருப்பதாகவும், தொடர்ச்சியாக மரக்கட்டை, இரும்புக்கம்பி போன்ற பல்வேறு கடுமையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.


நடிகர் தர்ஷனால் கடத்தி கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ரேணுகா சாமி (வெள்ளை உடையில் இருப்பவர்)

சரி இந்த கொலைக்கும் நடிகர் தர்ஷனுக்கும் என்ன சம்பந்தம்?

சாண்டில்வுட்டின் challenging star என்று அழைக்கப்படும் தர்ஷனுக்கு, 2003ஆம் ஆண்டே தனது உறவினரான விஜயலட்சுமி என்பவருடன் திருமணமாகி இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் கன்னட நடிகையான பவித்ரா கௌடா என்பவருடன் தர்ஷனுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பவித்ரா கௌடாவிற்கும் ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த உறவுக்கு தர்ஷனின் மனைவி ஏற்கனவே பலமுறை எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனிடையே கடந்த ஜனவரி மாதம் தனது கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் போட்டோ ஒன்றை சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்த விஜயலட்சுமி, ‘இதுதான் நாங்கள், இது மட்டும்தான் எங்களுடைய குடும்பம்’ என்று குறிப்பிட்டிருந்தார். அவர் பதிவிட்ட சிலமணிநேரங்களிலேயே தர்ஷனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த நடிகை பவித்ரா கௌடா, ‘ஒரு தசாப்தம் கடந்துவிட்டது, இறுதிவரை இது தொடரும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த போஸ்ட்டிற்கு கமெண்ட் செய்த விஜயலட்சுமி, இதுதொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் கூறியிருந்தார். இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்ட நிலையில், தர்ஷனின் தீவிர ரசிகரான ரேணுகா சாமி, தனக்கு மிகவும் பிடித்த நடிகரின் மனைவி கஷ்டப்படுவதற்கு நீதான் காரணம் என்று கூறி, பவித்ரா கௌடாவின் சமூக வலைதள கணக்குகளுக்கு மோசமான மற்றும் ஆபாச வார்த்தைகளால் திட்டி மெசேஜ் அனுப்பியிருக்கிறார். இதனை தாங்கிக்கொள்ள முடியாத பவித்ரா இதுகுறித்து தர்ஷனிடம் தெரிவித்திருக்கிறார்.


மனைவி விஜயலட்சுமியுடன் தர்ஷன் - நடிகை பவித்ரா கௌடா

தனது காதலியை அவமரியாதை செய்த ரேணுகா சாமிக்கு பாடம் கற்பிக்க எண்ணிய தர்ஷன், சினிமாவை மிஞ்சும் அளவிற்கு திட்டம் ஒன்றை தீட்டியிருக்கிறார். அதன்படி, சித்திரதுர்காவிலிருக்கும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளைத் தொடர்புகொண்ட அவர், ரேணுகா சாமியை பெங்களூரு அழைத்துவருமாறு கூறியிருக்கிறார். அதன்படி, ஜூன் 8ஆம் தேதி வேலைமுடிந்துவந்த ரேணுகா சாமியிடம் தர்ஷனை நேரில் பார்க்க ஏற்பாடு செய்திருப்பதாக ஆசைவார்த்தை கூறி காரில் கடத்தி வந்திருக்கின்றனர். பெங்களூருவுக்கு அழைத்துவரப்பட்ட ரேணுகா சாமியை, ஒரு கார் ஷெட்டுக்கு அழைத்துச் சென்று அங்குவைத்து இரும்பு கம்பி மற்றும் மரக்கட்டையால் கடுமையாக தாக்கியிருக்கின்றனர். மேலும் எலக்ட்ரிக் டார்ச் கொண்டு ரேணுகா சாமி உடலில் மின்சாரம் பாய்ச்சியதை கொலையாளிகள் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளனர். அங்கு வந்த தர்ஷனும் ரேணுகா சாமியை மரக்கட்டை, பெல்ட்டால் கடுமையாக அடித்து தாக்கியிருக்கிறார். பவித்ராவும் தனது காலணியால் அவரை அடித்து துன்புறுத்தியிருக்கிறார். கடைசியாக ரேணுகா சாமியை சுவற்றில் தூக்கி அடித்ததாகவும், அதனால் தலையில் பலத்த அடிப்பட்டு அவர் இறந்துவிட்டதாகவும் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் கொலையை மறைக்க, தனது அடுக்குமாடி குடியிருப்பின் அருகிலிருக்கும் சாக்கடை ஒன்றில் ரேணுகா சாமியின் உடலை தூக்கி வீசிவிடும்படி தர்ஷன் கூறியதாகவும் குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர்.


நடிகை பவித்ராவுக்காக ரசிகர் ரேணுகா சாமி கொல்லப்பட்ட பகுதியில் சிசிடிவி கேமராவில் சிக்கிய நடிகர் தர்ஷனின் கார்

இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்ததில், ரேணுகா சாமி கடத்தி வரப்பட்ட 3 மணிநேரம் கழித்து தர்ஷனின் கார் அந்த ஷெட்டுக்குள் செல்வது கேமராவில் பதிவாகியிருக்கிறது. ரேணுகா சாமியை கொலைசெய்தபிறகு மனைவி வீட்டிற்கு சென்ற தர்ஷன், போட்டிருந்த துணிகளை துவைத்து காயப்போட்டுவிட்டு, கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டுவிட்டு, பார்ட்டிக்கும் சென்றிருக்கிறார். இவை அனைத்தும் சிசிடிவி ஆதாரங்கள்மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் சித்திரதுர்கா டூ பெங்களூரு இடையே இருக்கும் சுங்கச்சாவடிகள், கார் ஷெட் போன்றவற்றின் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றியிருக்கின்றனர். இதுபோக கார் ஷெட்டில் கிடந்த பவித்ராவின் காலணி, உடைகள் மற்றும் மின்சாரம் பாய்ச்ச பயன்படுத்திய கருவி, ரத்தக்கறைகளின் மாதிரிகள் போன்றவற்றையும் போலீசார் கைப்பற்றியிருக்கின்றனர். இந்த கொலையை மறைக்க குற்றவாளிகளுக்கு தர்ஷன் ரூ. 30 லட்சம் கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.


ரசிகரை கொலைசெய்த வழக்கில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருக்கும் நடிகர் தர்ஷன்

தர்ஷன் சிக்கியது எப்படி?

தாமாக முன்வந்து சரணடைந்த குற்றவாளிகளின் வீடுகளில் சோதனை நடத்தியபோது அவர்களின் வீடுகளில் லட்சக்கணக்கில் பணம் இருப்பது தெரியவந்தது. சாதாரண வேலைக்குச் செல்லும் அவர்களிடம் எப்படி அவ்வளவு பணம் வந்தது? என்ற அடிப்படையில்தான் போலீசார் முதலில் தங்களுடைய விசாரணையை தொடங்கியிருக்கின்றனர். அப்படி விசாரிக்க விசாரிக்கத்தான் உண்மை ஒவ்வொன்றாக வெளிவந்திருக்கிறது. கொலையை மறைக்க ரூ.30 லட்சம் கொடுத்ததைப் போலவே, குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைய மூவரின் குடும்பத்துக்கும் தலா ரூ. 5 லட்சத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறார் தர்ஷன். இப்படி ரூ. 70 லட்சம் வரை கையில் பணமாக அவர்கள் வைத்திருந்தது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. குற்றம் உறுதியானதையடுத்து தர்ஷன், பவித்ரா கௌடா, கொலைநடந்த இடத்திலிருந்த 8 பேர் உட்பட மொத்தம் 17 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.


தர்ஷன் வழக்கு குறித்து வருத்தம் தெரிவித்துள்ள நடிகர் சிவ்ராஜ்குமார்

ஜெயிலிலும் சொகுசு வாழ்க்கை

ஜூலை 18ஆம் தேதிவரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ள நடிகர் தர்ஷனும், நடிகை பவித்ரா கௌடாவும் அங்கும் சொகுசு வாழ்க்கைதான் வாழ்ந்து வருவதாக ஊடகங்கள் குற்றஞ்சாட்டி வருகின்றன. அங்கு தர்ஷனுக்கு களியுடன் சிக்கன் அளிக்கப்படுவதாகவும், ஏர் கூலர், டிவி போன்ற வசதிகள் செய்துதரப்பட்டிருப்பதாகவும் கூறுகின்றன. மேலும் கடந்த சில நாட்களாக வயிற்று வலி, தலைவலி எனக்கூறி தர்ஷன் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்றுவிடுவதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் ஒருபுறம் போலீசார் தீவிரம் காட்டிவந்தாலும் மறுபுறம் தர்ஷனின் ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நடிகர் சிவ்ராஜ்குமார் பேசுகையில், “இதுபோன்ற சம்பவங்கள் வருத்தமளிக்கின்றன. அனைத்தையும் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும், எல்லாம் விதி” என்று கூறியிருக்கிறார். இதனிடையே தன்னை காணவந்த அம்மா, மகன் மற்றும் மனைவியை பார்த்து தர்ஷன் கதறியழுததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ரேணுகா சாமியின் பெற்றோரும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை நேரில் சந்தித்து மனு வழங்கியிருக்கின்றனர். அந்த மனுவில் கர்ப்பிணியாக இருக்கும் தங்களுடைய மருமகளுக்கு அரசு வேலை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருக்கின்றனர். சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் இந்த வழக்கில் சட்டம் தன் கடமையை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்