படிக்கட்டுகள் இல்லா "காற்றின் அரண்மனை"! ஹவா மஹால்!

இளஞ்சிவப்பு நகரமான ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அதன் சமஸ்தான அரண்மனைகள் மற்றும் அழகிய கோட்டைகளால் உலகெங்கிலும் உள்ள மக்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது. அவற்றில் ஒன்று கட்டிடக்கலை. அந்த வகையில் ஜெய்ப்பூர் என்றதும், அங்கு சென்று வந்த பலரின் நினைவுக்கு வருவது ஹவா மஹால் தான்!

Update:2025-03-04 00:00 IST
Click the Play button to listen to article

இளஞ்சிவப்பு நகரமான ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அதன் சமஸ்தான அரண்மனைகள் மற்றும் அழகிய கோட்டைகளால் உலகெங்கிலும் உள்ள மக்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது. அவற்றில் ஒன்று கட்டிடக்கலை. அந்த வகையில் ஜெய்ப்பூர் என்றதும், அங்கு சென்று வந்த பலரின் நினைவுக்கு வருவது ஹவா மஹால் தான்! இது அரண்மனையா? அல்லது கோட்டையா? என்று கூட தெரியாமல் நாம் இந்த மஹாலின் படத்தை பல இடங்களில் பார்த்து இருப்போம். அப்படிப்பட்ட  ஹவா மஹால், மிகவும் நுட்பமான முறையில் கட்டப்பட்டுள்ளது. இந்த அரண்மனையில் படிக்கட்டுகளே இல்லையாம். அத்துடன் 1000 ஜன்னல்களுக்கு மேல் உள்ளதாம். மேலும் 5 மாடி அரண்மனையை எழுப்ப அடித்தளமே போடவில்லையாம்! ஜெய்ப்பூரின் தனித்துவமான அடையாளமான இது, பேலஸ் ஆஃப் தி விண்ட்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. 


 சவாய் பிரதாப் சிங் கட்டிய ஹவா மஹால் 

ஹவா மஹாலின் வரலாறு

ஜெய்ப்பூரை உருவாக்கிய மகாராஜா சவாய் ஜெய் சிங்கின் பேரனான கச்வாஹா ராஜபுத்திர ஆட்சியாளரான சவாய் பிரதாப் சிங், ராயல் சிட்டி பேலஸ்க்கு பிறகு ஹவா மஹாலை 1799-ல் கட்டினார். ராஜஸ்தானின் ஜுன்ஜுனுவில் உள்ள கேத்ரி மஹாலின் அமைப்பைப் பார்த்து வியந்த மகாராஜா அதனைப் போலவே ஒரு மாதிரியை கட்ட முடிவு செய்து இந்த ஹவா மஹாலை உருவாக்கினார்.


ஹவா மஹாலின் உட்புறம் 

பெண்களுக்காக கட்டப்பட்ட அரண்மனை

அந்த நாட்களில் ராஜபுத்திரர்கள் பர்தா முறையைப் பின்பற்றினர், அரச பெண்கள் பொதுமக்கள் முன் தோன்றுவதில்லை. அவர்கள் அன்றாட நிகழ்வுகளைப் பின்பற்ற விரும்பியதால், பெண்களிடையே சுதந்திர உணர்வை வழங்குவதற்காக ஹவா மஹால் 953 சிறிய ஜன்னல்களோடு திரையிடப்பட்ட பால்கனிகளுடன் கட்டப்பட்டது. ஐந்து மாடிகள் கொண்ட இந்த அழகிய அரண்மனை அடித்தளம் போட்டு கட்டப்படவில்லையாம். அதே போல இதில் படிக்கட்டுகளும் இல்லையாம். சறுகலான பாதைகள் மட்டுமே மஹாலுக்குள் இருக்கிறது. அவையே, மேலே செல்லவும், கீழே இறங்கவும் படிக்கட்டுகளுக்கு பதிலாக பயன்படுகின்றன.


 பெண்களுக்காக கட்டப்பட்ட ஹவா மஹால்

ஹவா மஹாலின் அழகிய கட்டிடக்கலை

மகாராஜா சவாய் பிரதாப் சிங் கிருஷ்ணர் மீது மிகுந்த பற்றுள்ளவராக இருந்ததால், கிருஷ்ணரின் கிரீடத்தின் வடிவில் ஐந்து மாடி கொண்ட பிரமிடு வடிவ கட்டிடமாக ஹவா மஹால் உள்ளது. இந்த கட்டிடத்தின் கட்டிடக்கலை இந்து ராஜபுத்திரர்கள் மற்றும் முகலாயர்களின் கலப்பு கலாச்சாரத்தையும், தேனீக்களின் அழகான தேன்கூடு போன்ற தோற்றத்தையும் நமக்கு உணர்த்துகிறது. அரண்மனையின் முதல் தளம் ஷரத் மந்திர் என்று அழைக்கப்படுகிறது. அங்கு அரண்மனையின் இலையுதிர் கால கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இரண்டாவது தளம் ரத்தன் மந்திர். அங்கு நாம் ஆடம்பரமான கண்ணாடி வேலைப்பாடுகளைக் காணலாம். முதல் மூன்று தளங்கள் விசித்திர மந்திர், ஹவா மந்திர் மற்றும் பிரகாஷ் மந்திர் என்று பிரிக்கப்பட்டுள்ளன. பிரகாஷ் மந்திர் இருபுறமும் மொட்டை மாடியின் திறப்புகளுக்கு வழிவகுக்கிறது, அதே நேரத்தில் விசித்திர மந்திர் மகாராஜாவால் கிருஷ்ணரை வழிபடும் இடமாகும். முதல் இரண்டு தளங்கள் முற்றங்கள். ஏனெனில் முதல் மூன்று தளங்கள் ஒற்றை அறை வடிவமைப்பைக் கொண்டுள்ளன. 


கிருஷ்ணரின் கிரீடத்தின் வடிவில் காட்சியளிக்கும் ஹவா மஹால் 

கோடையிலும் குளிர்!

ராஜஸ்தான் என்றாலே அனைவருக்கும் சூடான வானிலைதான் நினைவுக்கு வரும். மாறாக இந்த ஹவா மஹாலில் மட்டும் கோடையிலும் கூட மிதமான குளிர் இருப்பதாக அந்த ஊர் மக்கள் கூறுகின்றனர். இதற்குக் காரணம், 953 சிறிய ஜன்னல்கள் வழியாக குளிர்ந்த காற்று உள்ளே வந்து அந்த இடத்தை குளிர்ச்சியாக்குகிறது. ஹவா மஹால் தங்குவதற்காக உருவாக்கப்படவில்லை.. மாறாக அரச குடும்பப் பெண்கள், சில விசேஷ சமயங்களில் மட்டும் இங்கு வந்து ஜன்னல்களில் இருந்து வேடிக்கைப் பார்ப்பதற்காக கட்டப்பட்டுள்ளது. ஹவா மஹாலுக்கு அருகில் உள்ள சிட்டி பேலஸிலிருந்து அரச பெண்கள் தங்கள் பெண் வேலையாட்களுடன் இங்கு வருவது வழக்கம்.


ராஜஸ்தானின் பெருமை ஹவா மஹால் 

ஹவா மஹாலுக்கு எப்படி செல்வது?

ஹவா மஹால், ஜெய்ப்பூர் விமான நிலையத்திலிருந்து 10 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. ஜெய்ப்பூருக்கு வருகை தரும் உள்நாடு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இந்த மஹாலுக்கு செல்ல விமான சேவைகளும், ரயில் சேவைகளும், பேருந்து சேவைகளும் உள்ளன. எனவே அவரவர் வசதிக்கு மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப ஏதாவது ஒரு போக்குவரத்தை தேர்வு செய்து கொள்ளலாம். ராஜஸ்தானில் கோடை காலம் மிகவும் வெப்பமாக இருக்கும் என்பதால், அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலம் இங்கு சுற்றுலாவுக்கு ஏற்றதாக இருக்கிறது. மேலும் ஆண்டின் எல்லா நாட்களிலும் காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை ஹவா மஹாலை பார்வையிடலாம்.

Tags:    

மேலும் செய்திகள்