உலகை திரும்பிப் பார்க்க வைத்த பிரக்ஞானந்தா - யார் இவர்?

பல வெற்றிகளுக்கு பின்னர் இவருக்கு `பிடே மாஸ்டர்’ என்கிற பட்டமும் கிடைத்தது. இதன் தொடர்ச்சியாக 2016-ஆம் ஆண்டு இன்டர்நேஷனல் மாஸ்டர் என்கிற பட்டமும் இவருக்கு கிடைத்தது.

Update: 2023-09-04 18:30 GMT
Click the Play button to listen to article

இந்தியாவில் பல விளையாட்டுகள் விளையாடப்பட்டாலும் செஸ் விளையாட்டிற்கென்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. குறிப்பாக கடந்த சில வருடங்களில் செஸ் விளையாட்டின் மீதான மோகம் அதிகரித்துள்ளது. விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு ஏன் தற்போது செஸ் விளையாட்டை இந்தளவிற்கு கொண்டாடுகிறார்கள்? என்று உற்று நோக்கினால் அதற்கு ஒரே ஒரு ஒருவர்தான் காரணம். இந்திய செஸ்ஸின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா. வெறும் 18 வயதேயான பிரக்ஞானந்தா பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். யார் இந்த பிரக்ஞானந்தா? இளம் வயதில் எப்படி இவ்வளவு சாதனை? ஏன் பிரக்ஞானந்தாவை இந்திய மக்கள் இந்தளவிற்கு கொண்டாடுகிறார்கள்? என்பதை இக்கட்டுரையில் காணலாம்.


உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனுடன் பிரக்ஞானந்தா

யார் இந்த பிரக்ஞானந்தா?

2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி சென்னையில் உள்ள பாடியில் பிறந்தார் பிரக்ஞானந்தா. தற்போது சென்னையிலுள்ள வேலம்மாள் பள்ளியில்தான் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயதிலிருந்தே இவருக்கு செஸ் விளையாடுவதற்கு உதவியவர் இவரது தந்தை ரமேஷ் பாபு. இவர் தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் மேனேஜர் பதவியில் உள்ளார். எந்த செஸ் போட்டி நடந்தாலும் அவரை கைபிடித்து அழைத்துச் செல்பவர் அவரது அம்மா நாகலட்சுமி. இவரது அக்கா வைஷாலி. இவரும் பல சர்வதேச போட்டிகளில் விளையாடி, வுமன் இன்டர்நேஷனல் மாஸ்டராக உள்ளார்.


பிரக்ஞானந்தா குடும்பம்

செஸ்ஸை கரியராக எடுத்துக்கொண்ட பிறகு...

பிரக்ஞானந்தாவின் அக்கா வைஷாலி அதிக நேரம் டிவி பார்ப்பாராம். அதனாலேயே அவருடைய அம்மா, வீட்டிற்கு பக்கத்திலிருந்த செஸ் கிளாஸில் இருவரையும் சேர்த்துவிட்டிருக்கிறார். அப்போது பெற்றோருக்கு தெரிந்திருக்கவில்லை தங்களுடைய பிள்ளைகள் உலக சாதனை படைப்பார்கள் என்று. சிறுவயதிலிருந்தே செஸ்ஸின்மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த பிரக்ஞானந்தா, 5 வயதிலிருந்து செஸ் விளையாட்டை விளையாடி வருகிறார். உள்ளூர் போட்டிகளில் விளையாடிக்கொண்டிருந்த பிரக்ஞானந்தா தனது 7 வயதில் சர்வதேச போட்டியில் காலடி எடுத்து வைத்தார். 2013 ஆம் ஆண்டு துபாய் நாட்டிலுள்ள அல்-அமீன் நகரத்தில் உலக இளைஞர் சாம்பியன்ஷிப் போட்டி 8 வயதிற்குக்கீழ் உள்ளவர்களுக்கு நடைபெற்றது. அதில் இந்தியா சார்பில் பங்கேற்ற பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.

தனது முதல் சர்வதேச தொடரில் சாம்பியன் பட்டம் அடித்தது உலக செஸ் ஜாம்பவான்களின் கவனத்தை ஈர்த்தது. இதுவே பிரக்ஞானந்தாவின் அடுத்தடுத்த சாதனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது. பிறகு இரண்டு வருடங்கள் கழித்து 10 வயதிற்குப்பட்டோருக்கான போட்டியில் பங்கேற்றார். அங்கு வந்திருந்த அனைத்து வீரர்களையும் சாமர்த்தியமாக கையாண்டு 9 வயதில் மீண்டும் சாம்பியனானார். பல வெற்றிகளுக்கு பின்னர் இவருக்கு `பிடே மாஸ்டர்’ என்கிற பட்டமும் கிடைத்தது. இதன் தொடர்ச்சியாக 2016-ஆம் ஆண்டு இன்டர்நேஷனல் மாஸ்டர் என்கிற பட்டமும் இவருக்கு கிடைத்தது.


`கிராண்ட் மாஸ்டர்’ பிரக்ஞானந்தா

"உங்களது ஆர்வமும் விடாமுயற்சியும் இன்றைய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது" - நரேந்திர மோடி

2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடந்த உலக செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் `கிராண்ட்மாஸ்ட’ என்கிற உயரிய பட்டத்தை பெற்றார். தனது இளையவயதில் கிராண்ட்மாஸ்டர் என்கிற பட்டம் பெற்ற ஐந்தாவது வீரர் இவர். 2018 ஆண்டு ஏப்ரல்-17 ஆம் தேதி ஹெராக்ளின் பிஸிச்சேர் தொடரிலும் சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவை பெருமைப்பட வைத்தார்.

தனது 12 வயதில் பல சாதனைகள் படைத்துள்ள பிரக்ஞானந்தா, தொடர்ச்சியாக பல சர்வதேச போட்டிகளில் வென்று, இந்திய மக்களின் மனதில் மெல்ல மெல்ல இடம்பிடிக்க ஆரம்பித்தார். 2018 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் நடந்த 12வது மாஜிஸ்ட்ரால் டே லியோன் (magistral de leon) மாஸ்டர்ஸ் தொடரில் பங்கேற்க பிரக்ஞானந்தாவிற்கு அழைப்பிதழ் விடுக்கப்பட்டது. அழைப்பினை ஏற்று ஸ்பெயின் நாட்டிற்குச் சென்று அந்தத் தொடரில் கலந்துகொண்டார். இளம் கிராண்ட்மாஸ்டர் என்கிற பெருமையோடு அந்தத் தொடரில் கலந்துகொண்டு 1-1 என்கிற கணக்கில் போட்டியை ட்ரா செய்தார்.


மேக்னஸ் கார்ல்சனுடன் பிரக்ஞானந்தா

ஆட்டம் அடுத்த நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின் அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த வெஸ்லி 2-1 என்கிற கணக்கில் பிரக்ஞானந்தாவை தோற்கடித்தார். இதற்கு பின்புதான் பிரக்ஞானந்தா கொஞ்சம் தடுமாற ஆரம்பித்தார். ஒரு சில ஆட்டங்களில் தோல்வியையும் சந்தித்தார். சில விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்பட்டார். பின் 2019 ஆம் மீண்டும் தனது பழைய ஃபார்மிற்கு திரும்பினார்.

"தமிழ்நாட்டின் பெருமிதம் இவர்" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

டென்மார்க் நாட்டில் நடந்த உலக செஸ் போட்டியில் சாம்பியனானார். இத்தொடரை வென்றதால் இளம் கிராண்ட் மாஸ்டர் என்கிற பட்டம் மீண்டும் இவரிடம் வந்தது. 2021 ஆம் ஆண்டு பெரிதாக சோபிக்காத பிரக்ஞானந்தா, 2022 ஆம் ஆண்டு மீண்டும் விஸ்வரூபம் எடுத்தார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். 15+10 என்கிற நேர கட்டுப்பாட்டில் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்தார். அதன்பின் தொடர்ச்சியாக FTX செஸ் தொடரிலும் மூன்று முறை மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து உலக மக்களின் கவனத்தை ஈர்த்தார். கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு கார்ல்சனை தோற்கடித்த பெருமை பிரக்ஞானந்தாவையே சேரும். தொடர்ந்து சென்னையில் நடந்த 2022 செஸ் ஒலிம்பியாட் தொடரின் இறுதி ஆட்டத்தில் மேக்னஸ் கார்ல்சனிடம் தோற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். அதுமட்டுமில்லாமல் 2023 ஆம் ஆண்டு உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கும் தகுதிபெற்றார்.


பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன்...

"உங்கள் கனவுகளை துரத்தி இந்தியாவை பெருமைப்படுத்துங்கள் " - சச்சின் டெண்டுல்கர்

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2023 உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்றார். இதில் நில்ஸ் கிராண்டேலிஸ், ஆண்ட்ரே எஸ்பிங்கோ ஆகியோரை தோற்கடித்து இறுதி ஆட்டத்திற்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா. இறுதி ஆட்டத்தில் 3 முறை தோற்கடித்த மேக்னஸ் கார்ல்சனை சந்தித்தார். முதல்நாளில் நடந்த இரண்டு போட்டியும் ட்ராவில் முடிந்தது. ஒட்டுமொத்த இந்தியாவும் அடுத்த நாள் பிரக்ஞானந்தாவின் வெற்றியை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தது. இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆரம்பத்தில் சற்று தடுமாறிய கார்ல்சன் பின் சுதாரித்துக்கொண்டு பிரக்ஞானந்தாவை தோற்கடித்தார். நூலிழையில் தனது ஆட்டத்தை இழந்தார் பிரக்ஞானந்தா. இதில் இந்தியாவின் ஒட்டுமொத்த கனவும் கலைந்தது. இருந்தாலும் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை இந்த அளவிற்கு ஆட்டம் காட்டியவர் எவருமில்லை.


பிரக்ஞானந்தா குறித்து மேக்னஸ் கார்ல்சன்

"இந்தியாவின் எதிர்காலம் பிரக்ஞானந்தா" - மேக்னஸ் கார்ல்சன்

தனது 18 வயதில் உலக மக்களை தன் பக்கம் ஈர்த்த பிரக்ஞானந்தாவிற்கு பாராட்டு மழைகள் பொழிந்துவருகிறது. இனிவரும் ஒவ்வொரு செஸ் ஆட்டத்தையும் இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். பிரக்ஞானந்தா வருங்கால சாம்பியன்ஷிப் போட்டிகளில் சிறந்த போட்டியாளராக இருப்பார் என்றும், அவர்தான் இந்தியாவின் எதிர்காலம் என்றும் கார்ல்சனே புகழ்ந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்