விராட் கோலி அடித்த 50-வது சதம்! கடந்து வந்த பாதை...

Update:2023-11-16 17:56 IST

கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி. இதற்கு முன் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் 101* ரன்கள் அடித்து சச்சினின் சாதனையை சமன் செய்திருந்த நிலையில், நேற்றைய போட்டியில் சதமடித்து தனது 50-வது சதத்தை பூர்த்தி செய்து உலக சாதனை படைத்தார் கோலி. இதுவரை 50 ஓவர் போட்டி வரலாற்றில் ஒரு வீரர் 50 சதங்கள் அடிப்பது இதுவே முதல் முறையாகும். எப்படி விராட் கோலி தனது 50 சதங்களை அடித்தார்? அவர் கடந்து வந்த பாதைகளையும், அவரின் சாதனைகளையும்,அவர் சந்தித்த சறுக்கலையும் இக்கட்டுரையில் காணலாம்.

விராட் கோலியின் அறிமுகமும், முதல் சதமும்

U-19 உலகக்கோப்பையை வென்றதற்கு பின் இலங்கைக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் சச்சினின் காயம் காரணமாக மாற்று வீரராக அணியில் இடம்பிடித்தார் கோலி. அன்றைய நேரத்தில் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஏனென்றால் உள்ளூர் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வந்த சுப்ரமணியம் பத்திரிநாத் தேர்வு செய்யப்படாமல் கோலி தேர்வானதுதான்.


விராட் கோலியின் முதல் ஒருநாள் போட்டி மற்றும் முதல் சதம்

இந்திய அணியின் அப்போதைய கேப்டன் மகேந்திர சிங் தோனியும் பத்திரிநாத்தையே எடுக்க விரும்பினார். ஆனால் அப்போதைய தேர்வு குழு தலைவர் திலிப் வெங்சர்க்கர் விராட் கோலியின் ஆட்டத்தால் ஈர்க்கப்பட்டு அவரை தேர்வு செய்தார். தனது 19 ஆவது வயதில் சர்வதேச போட்டியில் அறிமுகமான விராட் கோலி அந்த தொடரில் பெரிதாக சோபிக்கவில்லை. அதன்பின் இந்திய அணியில் உள்ளே வெளியே என்று இருந்த விராட்கோலி 2009 ஆம் ஆண்டிற்கு பின்பு தான் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்தார். 2009 ஆம் ஆண்டில் சொந்த மண்ணில் நடந்த இலங்கைக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 2 ஆட்டங்களில் சோபிக்க தவறிய கோலியை மூன்றாவது ஆட்டத்தில் பெஞ்சில் உட்காரவைத்தனர். பின் நான்காவது ஆட்டத்தில் யுவராஜ் சிங்கின் காயம் காரணமாக கோலிக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. இம்முறை வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்டார் விராட் கோலி. 4 ஆவது ஆளாக களமிறங்கிய விராட் கோலி 114 பந்தில் 107 ரன்கள் அடித்து அசத்தினார். இந்த போட்டிக்கு பிறகு தான் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்தார் கோலி.


2011  உலகக் கோப்பை மற்றும் 2012 காமன்வெல்த் போட்டிகளில்...

விராட் கோலியின் எழுச்சி

2011 ஆம் ஆண்டு உலககோப்பையில் சிறப்பாக விளையாடிய கோலி 282 ரன்கள் குவித்து பங்களாதேஷ் அணிக்கு எதிராக சதமும் அடித்தார். இங்கிருந்து தான் விராட் கோலியின் எழுச்சி ஆரம்பித்தது. அதன்பின் 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் பேங்க் தொடரின் இறுதி போட்டியில் இலங்கைக்கு எதிராக 133 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதும் வென்றார். இந்த தொடரில் 373 ரன்கள் குவித்து இந்திய அணி கோப்பையை வெல்லவும் உதவினார். இந்த தொடருக்கு பின்பு தான் இந்திய அணியின் துணை கேப்டன் ஆனார் கோலி. அதன்பின் தொடர்ச்சியாக ஒரு நாள் போட்டிகளில் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தார்.


கோலியின் வீழ்ச்சியும் எழுச்சியும்

சறுக்கலை சந்தித்த கோலி

2013-2018 வரை 70 சதங்களை அடித்திருந்த விராட் கோலி 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு மிக பெரிய சறுக்கலை சந்திக்க ஆரம்பித்தார். 2019 முதல் 2022 வரை ஒரு சர்வதேச சதமும் அடிக்காமல் கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றினார். 2020 டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2021 T-20 உலகக்கோப்பை மற்றும் பல ஓடிஐ தொடர்களில் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வந்த விராட் கோலி, 2022 ஆம் ஆண்டு T-20 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானிற்கு எதிராக சதமடித்து பழைய பார்மிற்கு திரும்பினார்.


விராட் கோலியின் 50வது சதம்

சச்சினின் சாதனையை முறியடித்த கிங் கோலி

சச்சினின் சாதனையை முறியடிக்கவே முடியாது என்கிற நிலைமையை நேற்றைய ஆட்டத்தில் மொத்தமாக மாற்றினார் விராட் கோலி. 2023 உலகக்கோப்பையின் முதல் அரையிறுதி போட்டி இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையே நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணி. தொடக்கத்திலிருந்து அதிரடி காட்டிய ரோஹித் 47 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.அதன்பின் களமிறங்கிய விராட் கோலி ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும் 50 ரன்கள் அடித்த பிறகு ரன் வேகத்தை அதிகரித்தார். 43 ஆவது ஓவரின் 3 ஆவது பந்தில் தனது 50 ஆவது சதத்தை அடித்தார் விராட் கோலி.இதன்மூலம் சச்சினின் 10 வருடகால சாதனையை கோலி முறியடித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்