தமிழக வீரர்களே இல்லாத உலகக்கோப்பை... பெரும் ஏமாற்றத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்!

ஏன் இந்தமுறை எந்த தமிழக வீரரும் இடம் பெறவில்லை? 2021-2022 `சையது முஸ்தாக் அலி’ சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றிபெற்ற மற்றும் `விஜய் ஹசாரே’ தொடரில் இரண்டாம் இடம்பிடித்த தமிழக அணிகளில்கூட ஒரு திறமையான வீரர் இல்லையா? இதுபற்றி இக்கட்டுரையில் காணலாம்.

Update:2023-09-19 00:00 IST
Click the Play button to listen to article

பல நாட்கள் காத்துக்கொண்டிருந்த உலகக்கோப்பைக்கான இந்திய அணி, சமீபத்தில் பிசிசிஐ தரப்பில் வெளியிடப்பட்டது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யுசுவேந்திர சாஹலுக்கு இடம் கிடைக்கவில்லை. குறிப்பாக, 20 வருடங்களுக்குப் பிறகு ஒரு தமிழக வீரர் கூட இடம்பெறாதது தமிழ்நாடு ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் முன்னணி வீரரான தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திர அஷ்வினும் இடம்பெறாதது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏன் இந்தமுறை எந்த தமிழக வீரரும் இடம் பெறவில்லை? 2021-2022 `சையது முஸ்தாக் அலி’ சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றிபெற்ற மற்றும் `விஜய் ஹசாரே’ தொடரில் இரண்டாம் இடம்பிடித்த தமிழக அணிகளில்கூட ஒரு திறமையான வீரர் இல்லையா? இதுபற்றி இக்கட்டுரையில் காணலாம்.


கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தும் உலகக்கோப்பையும் 

1983 உலகக்கோப்பையில் தமிழக வீரர்களின் பங்களிப்பு

1983 ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி பெரும் சர்ச்சைக்கு மத்தியில் இங்கிலாந்து சென்றது. ஏனெனில் அந்த அணியில் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், மொஹிந்தர் அமர்நாத் மட்டுமே முன்னணி வீரர்களாவர். மற்ற எல்லாருமே இளம் வீரர்கள். அந்த இளம் இந்திய அணியில் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இடம்பெற்றிருந்தார். அதிரடிக்கு பெயர் போன கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், முதல் பந்தையே பௌண்டரிக்குத்தான் விளாசினார். தொடரின் ஆரம்பத்தில் சற்று தடுமாறிய ஸ்ரீகாந்த், இறுதி ஆட்டத்தில் இரண்டு முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸின் பந்துவீச்சை நொறுக்கி எடுத்தார். அதில் மைகேல் ஹோல்டிங் பந்தை மடக்கி ஆஃப் சைடு அடித்தார். அதை அன்றைய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் விவிலியன் ரிச்சர்ட்ஸ் வெகுவாகப் பாராட்டினார். இன்றளவும் இவர் ஆடிய ஆட்டம் சிறப்பாக பேசப்படுகிறது. பின்னாட்களில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இந்தியா அணி கேப்டனாகவும்,1987 மற்றும் 1992 உலகக்கோப்பைகளில் இந்திய அணியின் முக்கிய வீரராகவும் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றுவரை கபில்தேவ் ஸ்ரீகாந்தை பற்றி சொல்லும்போது, "அவருக்கு டிபென்ஸ் எப்படி ஆடுவது என்றே தெரியாது" என்று புகழுவார்.


லக்‌ஷ்மன் சிவராம கிருஷ்ணன்

1987 உலகக்கோப்பையில் உதயமான சுழல் நாயகன்

1983ஆம் ஆண்டு வெற்றிக்குப் பிறகு 1987 உலகக்கோப்பையை நடத்தும் உரிமையை இந்தியா பெற்றது. இந்த இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த இரு வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். ஒருவர் இந்தியாவின் முன்னணி தொடக்க ஆட்டக்காரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், மற்றொருவர் இந்தியாவின் அன்றைய ஆஸ்தான லெக் ஸ்பின்னரான லக்‌ஷ்மன் சிவராமகிருஷ்ணன். உள்ளூர்ப் போட்டிகளில் கலக்கிய சிவராமகிருஷ்ணன் உலகக்கோப்பையிலும் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சரியாக சோபிக்காமால் போய்விட்டார். ஒருசில ஆட்டங்களில் விளையாட வாய்ப்பு கிடைத்தாலும் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளத் தவறினார். சுமாராக (Economy rate) பந்து வீசிய இவர் விக்கெட்டுகளை எடுக்கத் தவறினார்.


சடகோபன் ரமேஷ் மற்றும் ராபின் சிங்

1999 உலகக்கோப்பையில் ஆஸ்தான இடம்பெற்ற இரு தமிழக வீரர்கள்

1987 ஆம் ஆண்டுக்கு பிறகு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மட்டுமே உலகக்கோப்பை அணியில் நிரந்தர இடம்பிடித்து வந்தார். அவருக்குப்பின் எந்த தமிழக வீரரும் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்கமுடியாமல் திணறினர். 1992 ஆம் ஆண்டுக்குப் பிறகு சுமார் 7 வருடங்கள் கழித்து இந்திய அணியில் இரண்டு வீரர்கள் இடம்பிடித்தனர். அதில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தைப்போல அதிரடி இடது கை பேட்ஸ்மேனான சடகோபன் ரமேஷ் மற்றும் இந்தியாவின் அடுத்த கபில் தேவ் என்று அப்பொழுது புகழப்பட்ட ராபின் சிங் இருவரும் விளையாடினர். சடகோபன் ரமேஷ் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் ராபின் சிங் அவ்வப்போது பேட்டிங்கிலும் பௌலிங்கிலும் பங்களிப்பு கொடுத்தார். இந்திய அணிக்காக 136 ஓடிஐ போட்டிகளிலும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடியுள்ளார் ராபின்சிங். ஒருசில ஆட்டங்களில் ஆடிய சடகோபன் ரமேஷ் தொடர்ந்து சோபிக்கத் தவறினார்.


தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்

மீண்டும் 2007 உலகக்கோப்பையில் தமிழக வீரர்

பல ஆண்டுகளுக்குப் பிறகு 2007 உலகக்கோப்பையில் ஒரு தமிழக வீரர் இடம்பெற்றார். சையது கிர்மானி, கிரண் மொரேவிற்குப் பிறகு இந்திய அணியில் சிறந்த விக்கெட் கீப்பர்கள் என எவரும் இல்லை. அவ்வப்பொழுது விக்கெட் கீப்பர்கள் மாறிக்கொண்டே இருந்தனர். ராகுல் டிராவிட்டும் சில நேரங்களில் விக்கெட் கீப்பிங் செய்வார். இப்படி விக்கெட் கீப்பர் இல்லாமல் தவித்த இந்திய அணிக்கு 2007 உலகக்கோப்பை போட்டிக்கு தினேஷ் கார்த்திக் கிடைத்தார். இவர் இந்திய U-19 தொடரில் சிறப்பாக செயல்பட்டவர். அந்தப் போட்டியில் தினேஷ் கார்த்திக்கிற்கும் ரயில்வேஸ் அணியில் விளையாடி வந்த மகேந்திர சிங் தோனிக்கும் கடும் போட்டி நிலவியது. அந்தத் தொடரில் அபாரமாக ஆடி நிரந்தர இடத்தை மகேந்திர சிங் தோனி தட்டிச் சென்றார். பெரிதாக சோபிக்கத் தவறிய தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் உள்ளேயும் வெளியேயுமாக இருந்தார்.


அஸ்வின், ஸ்ரீஷாந்த் மற்றும் சுரேஷ் ரெய்னா

2011 உலகக்கோப்பையில் அஸ்வினின் வருகை

2010 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் எதிரொலியாக உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பிடித்தார் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திர அஸ்வின். ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ரவிச்சந்திர அஸ்வின் பவர் பிளே ஓவர்களில் சிறப்பாக பந்து வீசினார். கட்டுக்கோப்பாக பந்து வீசுவது மட்டுமில்லாமல் தேவையான நேரத்தில் விக்கெட்டும் எடுத்தார். இதனால் இந்திய கேப்டன் தோனி இவரை உலகக்கோப்பை இந்திய அணிக்கு தேர்வு செய்தார். ஆரம்பப் போட்டிகளில் விளையாட வாய்ப்புக் கிடைக்காத அஸ்வின், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் களம் கண்டு ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஷேன் வாட்சன் மற்றும் விக்கெட் கீப்பர் பிராட் ஹாட்டினையும் தோற்கடித்தார். ஆஸ்திரேலியாவின் இரு அதிரடி வீரர்களையும் தூக்கியதால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் சற்று சரிந்தது. அந்த ஆட்டத்தில் அஸ்வின் சிறப்பாக செயல்பட்டடிருந்தாலும், வேகபந்துவீச்சாளர் ஸ்ரீஷாந்தின் வருகையால் அஸ்வினின் இடம் அந்த தொடரில் கேள்விக்குறியானது.


முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்

2015 உலகக்கோப்பை தொடரில் முன்னணி சுழற்பந்துவீச்சாளர்

2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்குப் பிறகு இந்திய அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் ஆனார் ரவிச்சந்திரன் அஸ்வின். டெஸ்ட், டி20, ஓடிஐ போட்டிகளிலும் நம்பர் ஒன் பந்து வீச்சாளராக வலம் வந்தார். உலக அரங்கில் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக வலம் வந்தார். அதனால் இந்த உலகக்கோப்பையில் அஸ்வின் விக்கெட் வேட்டை நடத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதுபோலவே அந்தத் தொடரில் ஜடேஜாவுடன் இணைந்து விக்கெட்டுகளை எடுத்தார். அதுமட்டுமில்லாமல் இந்திய அணிக்கு தேவைப்படும் நேரம் எல்லாம் பேட்டிங்கிலும் கைக்கொடுப்பார். துரதிர்ஷ்டவசமாக அந்த உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதி சுற்றோடு வெளியேறியது. பின் யுசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் வருகையால் அவரது இடம் ஓடிஐ போட்டிகளில் கேள்விக்குறியானது.


அம்பத்தி ராயுடுவின் ட்வீட் 

2019 உலகக்கோப்பையில் சர்ச்சையான தமிழக வீரர்

யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னாவிற்குப் பிறகு இந்திய அணியில் நான்காவது இடம் வெற்றிடமானது. அப்பொழுதுதான் அம்பத்தி ராயுடு சிறப்பாக செயல்பட்டார். ஆசியத் தொடரில் சதம் விளாசி நல்ல ஆவரேஜ் வைத்திருந்தார். அப்பொழுது பேட்டிங்கிலும் பந்துவீச்சில் நன்றாக செயல்பட்ட விஜய் ஷங்கர், அம்பதி ராயுடுவிற்கு பதில் உலகக்கோப்பைக்கு தேர்வானார். இதனால் அம்பதி ராயுடு மட்டுமில்லாமல் இந்தியா அணி ரசிகர்களும் அதிர்ச்சியில் இருந்தனர். பிசிசிஐ, ``விஜய் ஷங்கர் எங்களுக்கு 3d பிளேயராக தெரிகிறார்” என்று கூறியது. அதற்கு, ”நானும் 3d கிளாஸ் அணிந்து விளையாடுகிறேன்” என்று அவர் சொன்னது பெரும் சர்ச்சையானது. அதுமட்டுமில்லாமல் காயம் காரணமாக தொடரின் பாதியிலேயே வெளியேறினார் விஜய் ஷங்கர். இந்த உலகக்கோப்பையில் தினேஷ் கார்த்திக்கும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


2023 உலகக்கோப்பை இந்திய அணி பெயர்ப் பட்டியல்

 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக வீரர்கள் இல்லாத உலகக்கோப்பை

2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டு, ஒரு தமிழக வீரர்கூட இந்திய அணியில் இடம்பெறாததால் தமிழ்நாடு ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சமீபத்திய டெஸ்ட் அரங்கில் சிறப்பாக செயல்பட்ட ரவிச்சந்திர அஸ்வின் இடம்பிடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரை தேர்வுக்குழு தேர்வு செய்யவில்லை. அதுமட்டுமில்லாமல் இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் ஸ்டான்ட் பிளேயராகவாவது தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் இடம்பிடிக்கவில்லை. இந்தியா வென்ற இரு உலகக்கோப்பைகளிலும் தமிழக வீரர்களின் பங்களிப்பு மகத்தானது. இம்முறை தமிழக வீரரர்கள் இல்லாத இந்திய அணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்