6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் புச்சி பாபு தொடர் - அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

அபாரமாக ஆடிய மத்திய பிரதேச அணி 250 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வரலாற்று சிறப்புமிக்க இந்த புச்சி பாபு தொடர் வரும் வருடங்களிலும் நடக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Update: 2023-10-09 18:30 GMT
Click the Play button to listen to article

இந்தியாவில் பல விளையாட்டுக்கள் விளையாடப்பட்டாலும் கிரிக்கெட்டிற்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சர்வதேசப் போட்டிகளை எந்த அளவிற்கு இந்திய ரசிகர்கள் கொண்டாடுகிறார்களோ அதேபோல உள்ளூர் தொடர்களையும் கொண்டாடி தீர்ப்பார்கள். ரஞ்சி, துலீப், தியோதர், இராணி மற்றும் சையது முஸ்தாக் அலி தொடர் என்று பல தொடர்கள் இருந்தாலும் 114 வருடம் பழமையான புச்சி பாபு தொடருக்கென்று தனி ரசிகர்கள் உள்ளனர். புச்சி பாபு தொடர் எப்படி ஆரம்பித்தது? அதன் வரலாறு என்ன? என்பதை பற்றியெல்லாம் இக்கட்டுரையில் காணலாம்.

புச்சி பாபு நாயுடுவின் வரலாறு

மொத்தவரபு வெங்கட மஹிபதி நாயுடு என்பது இவருடைய இயற்பெயர். இருப்பினும் புச்சி பாபு என்ற இவரது புனைப்பெயரே மக்கள் மத்தியில் பரிச்சயம். இந்தியாவில் இந்தியர்களுக்கென்று முதன்முதலில் கிரிக்கெட் கிளப் அமைத்தவர் புச்சி பாபு . அதனாலேயே ‘தென்னிந்திய கிரிக்கெட்டின் தந்தை’ என அழைக்கப்படுகிறார். 1868 ஆம் ஆண்டு மதராசப்பட்டினத்தில் பிறந்த இவர் தெலுங்கு பலிஜா குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது குடும்பம் துபாஸ் (அதாவது வணிகர்களுக்கும் மக்களுக்கும் இடையே இடைத்தரகர் போன்று செயல்படுபவர்கள்) தொழில் செய்து வந்தனர். பணக்கார குடும்பத்தில் பிறந்த இவர் மெட்ராஸில் உள்ள ப்ரெசிடென்ஸி கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். பின் கிரிக்கெட்டை தனது கனவாகக் கொண்டு விளையாட ஆரம்பித்தார்.


மொத்தவரபு வெங்கட மஹிபதி நாயுடு

புச்சி பாபு நாயுடுவின் கிரிக்கெட் தொடக்கம்

புச்சி பாபுவிற்கு சிறுவயதிலிருந்தே கிரிக்கெட்டின் மீது அலாதி பிரியம். ஆரம்பக்காலத்தில் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பில் ஆங்கிலேயர்கள் மட்டுமே ஆடி வந்தனர். இது புச்சி பாபுவிற்கு சுத்தமாக புடிக்கவில்லை. பின்பு இவரே 1888 ஆம் ஆண்டு மெட்ராஸ் யுனைடெட் கிளப் என்கிற கிளப்பை ஆரம்பித்தார். இது முழுக்க முழுக்க இந்தியர்களுக்கென்று பிரேத்யேகமாக ஆரம்பிக்கப்பட்ட கிளப்பாகும். எஸ்ப்ளானடே அருகில் ஒரு மிகப்பெரிய மைதானத்தை வாங்கினார். அங்கு மைதானத்தை சமப்படுத்தி இந்தியர்கள் பயிற்சி செய்வதற்காக 6 பிட்ச்களை அமைத்தார். பின்னர் இந்த மைதானத்தில் அதிகப்படியான இந்திய வீரர்கள் விளையாட ஆரம்பித்தனர். தினமும் அங்கு இந்தியர்களுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார் புச்சி பாபு. அதுமட்டுமில்லாமல் வீரர்களுக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் இலவசமாக வாங்கி கொடுத்தார். பின்னர் ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் போட்டிக்கு தயாரானது மெட்ராஸ் யுனைடெட் கிளப்.


மெட்ராஸ் யுனைடெட் கிளப்

முதல் ப்ரெசிடென்ஸி மேட்ச்

புச்சி பாபு நாயுடு முதன்முதலில் தனது கனவு அணியான மெட்ராஸ் யுனைடெட் கிளப்பை ஆங்கிலேயர்களுக்கு எதிராக விளையாட வைத்தார். முதல் ஆட்டத்தில் மெட்ராஸ் யுனைடெட் கிளப் தோற்றது. பின்னர் தொடர்ச்சியாக விளையாடிய அந்த கிளப், தொடர் தோல்வியைத்தான் சந்தித்து. இருப்பினும் அயராத முயற்சி மற்றும் தொடர் உழைப்பால் 1900 களில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான தனது முதல் வெற்றியை சுவைத்தது மெட்ராஸ் யுனைடெட் கிளப். இதை அடிப்படையாகக் கொண்டுதான் அமீர் கான் நடித்த ‘லகான்’ திரைப்படம் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 1902 - க்குப்பின் புச்சி பாபுவின் வயது முதிர்ச்சியால் மெட்ராஸ் யுனைடெட் கிளப் செயல்படாமல் இருந்தது. பின்னர் 1908 ஆம் ஆண்டு புச்சி பாபு காலமானார். அவரது மறைவிற்குப்பின் அவரது மகன்களான வெங்கட்ராமனுஜுலு, எம். பாலையா நாயுடு மற்றும் கோட்டா ராமசுவாமி ஆகியோர் 1909 ஆம் ஆண்டு ‘புச்சி பாபு தொடர்’ என்று தனிப் போட்டியை ஆரம்பித்தனர். மிகப்பழமையான தொடரான ‘புச்சி பாபு தொடர்’ மெல்ல மெல்ல இந்தியா முழுவதும் பிரபலமடைய ஆரம்பித்தது.


முதல் ப்ரெசிடென்ஸி மேட்ச் குழு

இந்திய அளவில் பிரபலமடைந்த புச்சி பாபு தொடர்

1909இல் இருந்து விளையாடப்பட்டு வரும் இந்தத் தொடர் இந்தியா முழுக்க பிரபலமாக ஆரம்பித்தது என்னவோ 1960- களுக்கு பின்னர்தான். 1960க்குப்பின் தமிழ்நாடு கிரிக்கெட் அசோஸியேஷன், புச்சி பாபு தொடரை பெரிய அளவில் நடத்தியது. ஆரம்பத்தில் பொங்கல் நேரத்தில் விளையாடப்பட்ட இத்தொடர் மெல்ல மெல்ல பின்தங்கி ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடக்க ஆரம்பித்தது. 1930 கால கட்டத்திலிருந்தே பொங்கல் நேரத்தில்தான் புச்சி பாபு தொடர் நடந்துகொண்டிருந்தது. ஆனால் 2000-திற்கு பிறகு மார்ச், ஏப்ரல் என்று நடந்து, தற்போது ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடக்கிறது. 1930 களில் பொங்கல் நேரத்தில் இந்தியாவிற்கும் ஆங்கிலேயருக்கும் நடக்கும் போட்டியைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக சேப்பாக்க மைதானத்திற்கு வந்தனர். ஆனால் தற்போது இந்த போட்டிக்கான ரசிகர் கூட்டம் அப்படியே குறைந்துவிட்டது. ரஞ்சிக் கோப்பை வருவதற்கு முன்னர் உள்ளூர்ப் போட்டிகளில் சிறந்த விளங்கியது புச்சி பாபு தொடர். இந்தியாவிற்காக விளையாடிய பல முன்னணி வீரர்கள் இந்த அணிக்காக விளையாடியுள்ளனர்.


புச்சி பாபு தொடர் 

புச்சி பாபு தொடரில் விளையாடிய முன்னணி வீரர்கள்

புச்சி பாபு தொடரில் விளையாடிய பல வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடி சாதனை படைத்துள்ளனர். 1970, 80 களில் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், மொஹிந்தர் அமர்நாத் மற்றும் பிஷன் சிங் பேடி உள்ளிட்டோரும், 1990 காலகட்டங்களில் ராகுல் டிராவிட் மற்றும் விவிஎஸ். லட்சுமண் உள்ளிட்ட வீரர்களும், 2000 - களில் எம்.எஸ்.தோனி, சுரேஷ் ரெய்னா, ஸ்ரீசாந்த், அஸ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட பல முன்னணி வீரர்களும் புச்சி பாபு தொடரில் விளையாடி இந்திய அணிக்குச் சென்றுள்ளனர்.


2023- 24 ஆம் ஆண்டு நடக்கவுள்ள புச்சி பாபு தொடர்

6 வருடங்கள் கழித்து மீண்டும் புச்சி பாபு தொடர்

கடைசியாக 2017 ஆம் ஆண்டு புச்சி பாபு தொடர் நடந்தது. இரண்டு வருடங்கள் கொரோனா, அதுமட்டுமில்லாமல் தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் அறிமுகத்தால் புச்சி பாபு தொடர் நடக்கவில்லை. இந்நிலையில் 6 வருடங்கள் கழித்து தற்பொழுது மீண்டும் இத்தொடர் நடக்கவுள்ளது. இதில் TNCA 11, TNCA ப்ரெஸிடென்சி, இந்தியன் ரயில்வேஸ், திரிபுரா, பரோடா, ஹரியானா, மும்பை, டெல்லி, ஜம்மு காஷ்மீர், கேரளா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 அணிகள் தற்போது பங்கேற்று விளையாடவுள்ளன. தற்போது நடந்து முடிந்த இத்தொடரின் இறுதி ஆட்டத்தில் மத்திய பிரதேசமும் டெல்லியும் மோதின. அபாரமாக ஆடிய மத்திய பிரதேச அணி 250 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வரலாற்று சிறப்புமிக்க இந்த புச்சி பாபு தொடர் வரும் வருடங்களிலும் நடக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags:    

மேலும் செய்திகள்