முன்னுதாரணமாக திகழும் இளம் தொழிலதிபர்! - கேஷிகா மனோகர்

ஓவனில்தான் முதல் முறையாக பிரவுனி கேக் செய்து என் அக்காவை சுவைக்கச் சொன்னேன். அவளும் சுவைத்துவிட்டு `செம்ம டேஸ்ட்’ என்று கூறினாள்.

Update:2023-09-05 00:00 IST
Click the Play button to listen to article

கடந்த 2020 முதல் 2022 வரை அதாவது இரண்டு ஆண்டுகள் கொரோனா தொற்று ஏற்பட்டு லாக்டவுனில் உலகமே வீட்டுக்குள் முடங்கி இருந்த காலகட்டங்களில் யார் வேண்டுமானாலும் தொழிலதிபர் ஆகலாம் என்பதை நிரூபிக்கும் விதமாக நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை வயது வித்யாசம் இன்றி ஒவ்வொருவரின் திறமையையும் வெளிக்கொண்டு வந்து இந்த உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட மிகப்பெரும் பங்காற்றியது என்றால் அது யூடியூப் போன்ற சமூக ஊடகங்கள்தான். அந்த வகையில் இன்றைய சமூக ஊடகங்களின் உதவியால் பல இளம் தொழிலதிபர்கள் உருவாக்கியுள்ளனர். அதற்கு உதாரணமானவர்தான் 15 வயது இளம் தொழிலதிபராக வலம் வந்து கொண்டிருக்கும் கேஷிகா மனோகர். மிகச்சிறிய வயதிலேயே பேச்சாளர், விலங்குகள் நல ஆர்வலர், யூடியூபர் என பன்முகங்களோடு பலருக்கும் ரோல் மாடலாக, இன்ஸ்பிரேஷனாக இருக்கும் இவருடைய வாழ்க்கைப்பயணம் குறித்த சிறு உரையாடலை இங்கே பார்க்கலாம்.

இளம் தொழிலதிபர், பேக்கர், விலங்கு ஆர்வலர், பொதுப் பேச்சாளராக விளங்கும் நீங்கள் எப்படி இந்த சிறிய வயதில் அனைத்து பொறுப்புகளையும் சமாளிக்கிறீர்கள்?

பொதுவாக பேசுவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால்தான் நான் ஒரு பேச்சாளராக மாறினேன். சிறுவயது முதலே நாய்க்குட்டிகள் மிகவும் பிடிக்கும் என்பதால் விலங்கு நல ஆர்வலரானேன். தொழிலதிபராக வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததே இல்லை. ஆனால் இன்று அதுதான் எனது வாழ்வில் முழுநேரப் பயணமாக இருக்கிறது.


கேஷிகாவின் பன்முகங்கள்

15 வயதான நீங்கள் தற்போது என்ன படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

நான் இப்போது 10 ஆம் வகுப்புதான் படிக்க வேண்டும். ஆனால் 11 ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறேன். காரணம் நான் தற்போது தேசிய திறந்தவெளி பள்ளிக் கல்வி நிறுவனத்தில் வீட்டில் இருந்தபடியே படித்துக்கொண்டிருப்பதால் 9 ஆம் வகுப்பு படித்தபோதே 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடித்து 11 ஆம் வகுப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

பேக்கிங்கில் உங்களுக்கு ஈடுபாடு வந்தது எப்படி? நீங்கள் எப்போது பேக் செய்யத் தொடங்கினீர்கள்?

எனது 12-வது வயதில் இருந்துதான் நான் பேக்கிங் செய்யத் தொடங்கினேன். அதற்கு முன்னர் கொரோனா காலத்தில் குக்கிங் செய்யத் தொடங்கினேன். ஊரடங்கு காலக்காலத்தில் குக்கரில் கேக் செய்து பல கிலோ மைதா மாவை வீணடித்து இருக்கிறேன். அப்படி என்னுடைய முதல் முயற்சி சொதப்பலில் முடிந்தாலும் பின்னர் நாட்கள் செல்ல செல்ல நான் நன்றாக சமைக்க ஆரம்பித்துவிட்டேன். எனது சமையலை பார்த்து ஆச்சரியப்பட்டுப்போன என் பெற்றோர், என்னை ஊக்கப்படுத்தும் விதமாக என்னுடைய 12 வது பிறந்த நாள் பரிசாக ஓவன் வாங்கிக் கொடுத்தார்கள். அந்த ஓவனில்தான் முதல் முறையாக பிரவுனி கேக் செய்து என் அக்காவை சுவைக்கச் சொன்னேன். அவளும் சுவைத்துவிட்டு `செம்ம டேஸ்ட்’ என்று கூறினாள். பிறகு இரண்டாவது முறையும் கேக் செய்து, அதுவும் சிறப்பாக வந்ததால் அப்போதே கே.எஸ் கிச்சன் என்று பெயரிட்டு விற்க தொடங்கிவிட்டோம். இப்படித்தான் எனது பேக்கிங் முயற்சி தொடங்கியது.


தனது அனுபவத்தை பகிர்ந்த கேஷிகா

திறந்தவெளி பள்ளியில் படிக்க வேண்டும் என்ற கடுமையான முடிவை எப்படி எடுத்தீர்கள்?

இது எனக்கு கடுமையான முடிவாக தெரியவில்லை. நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதுதான் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியது. பிறகு ஆஃப்லைன் வகுப்புகள் ஆரம்பமாகி தினமும் பள்ளிக்கு சென்று வரவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பியபிறகு டியூஷன், வீட்டு பாடம் ஆகியற்றை முடித்துவிட்டு இரவு நேரங்களில் கண் விழித்து பேக் செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டதால் எனது பேக்கிங் தொழிலில் முழு கவனம் செலுத்த முடியவில்லை. மேலும் பேக் செய்வதை நிறுத்தினால் மட்டுமே ஆண்டு தேர்வில் 60 சதவீதமாவது எடுக்க முடியும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டேன். இந்த நிலையில் படிப்பா அல்லது பேக்கிங்கா என்ற சூழல் வந்தபோது எனக்கு பேக்கிங்தான் முக்கியமாகத் தோன்றியது. அப்போது என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் மனக் குழப்பத்தில் இருந்தேன்.

அதனால் எனது குடும்பத்தினரிடம் என் நிலையை விளக்கினேன். அவர்களும் எனது எதிர்காலம் பற்றி சிந்திக்க ஆரம்பித்தார்கள். அப்போது எனது சித்திதான் படிப்பும் முக்கியம், அதே வேளையில் அவளது எதிர்கால கனவும் முக்கியம். பேசாமல் அவளை திறந்தவெளி பள்ளியில் படிக்க வைத்துவிடலாம். படிப்போடு சேர்த்து அவள் விரும்பிய பேக்கிங் தொழிலும் வளர்ச்சி அடையும் என்று யோசனை கூறினார். சித்தியின் இந்த யோசனைக்கு அம்மா முதலில் மறுப்பு தெரிவித்தாலும் இறுதியில் என்மேல் இருக்கும் நம்பிக்கையினாலும், பேக்கிங்கில் எனக்கு இருந்த ஆர்வத்தைக் கண்டும் திறந்தவெளி பள்ளியில் படிக்க ஒப்புக்கொண்டனர். இப்போதுவரை படிப்பும் சரி, பேக்கிங்கும் நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது.


பேச்சாளர் கேஷிகா

`பேக்கிங்தான் என் தொழில், திறந்தவெளி பள்ளியில் படிக்கப்போகிறேன்’ என்ற தங்களின் முடிவுக்கு உங்கள் பெற்றோரின் எதிர்வினை என்னவாக இருந்தது?

என் விஷயத்திலும் சரி, அக்காவின் விஷயத்திலும் சரி எங்களுடைய பெற்றோர் நாங்கள் கேட்கும் எதையும் வேண்டாம் என்று நிராகரிக்க மாட்டார்கள். எப்போதும் எங்கள் இருவரின் ஆசைகளை நிறைவேற்றும், ஊக்குவிக்கும் பெற்றோராகத்தான் இருக்கிறார்கள். என் அக்காவும் இளம் வயது சாதனையாளர்தான். அவளும் கட்டட வடிவமைப்பாளர், சமூக ஊடக செல்வாக்காளர், நிகழ்வு திட்டமிட்டாளர், நல்ல நடனம் ஆடுபவள், நல்ல நடிகையும் கூட. 15 வயதிலேயே அவளும் நடனத்தில் டைட்டில் வின்னர். இன்றுவரை எனக்கும், என் அக்காவுக்கும் பெற்றோர் பல வழிகளில் உறுதுணையாக இருக்கின்றனர். அதனால்தான் எங்களின் இலக்குகளில் நாங்கள் எப்போது முன்னேறிக்கொண்டே இருக்கிறோம். அவர்களின் ஒத்துழைப்பு இல்லை என்றால் நிச்சயம் நாங்கள் இன்று இந்த நிலையில் இருக்க முடியாது.

உங்களைப்போல இளம் வயதில் தொழில் தொடங்க வேண்டும் அல்லது பேக்கிங் செய்யவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

பேக்கிங் தொடங்குவதற்கு 10,000 முதல் 15,000 ரூபாய் முதலீட்டுக்கு போதுமானது. இதை வைத்து வீட்டிலேயே பேக்கிங் தொழில் தொடங்கலாம். இளம் வயதில்தான் பேக்கிங் தொழில் தொடங்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. எந்த வயதிலும் அதை கற்றுக்கொண்டு செய்யலாம் . ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோ ஒன்றை கற்றுக்கொள்ளத்தான் போகிறோம். நான் இளம் வயதில் தொடங்கியதால் இன்னும் அதிகமாக கற்றுகொண்டேன் அவ்வளவுதான்.


கேஷிகா சமைக்கும் உணவு வகைகள்

கப் கேக், பிறந்தநாள் கேக்குகள் தவிர்த்து வேறு என்னவெல்லாம் செய்வீர்கள்?

இத்தாலியன், சைனீஸ் என்று எல்லா வகையான உணவுகளையும் சமைப்பேன். பேக்கிங் பொறுத்தவரை வெட்டிங் கேக்ஸ், பர்த்டே கேக்ஸ். இதை தவிர ஊறுகாய், ஜாம், பன்ஸ், பிரெட்ஸ் என்று அனைத்தும் செய்து கொண்டிருக்கிறேன்.

உங்களுக்கு பிடித்த கப் கேக் அல்லது பேஸ்ட்ரி எது?

உண்மையில் சொல்லப்போனால் எனக்கு கேக் அவ்வளவு பிடிக்காது. நான் செய்வதில் எனக்கு பிடித்தது ரசமலாய் டிரபில்தான்.

நீங்கள் பேக் செய்யும்போது ஏதாவது ஒரு டிஷ் சொதப்பியது உண்டா?

சமீபத்தில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியின் பிறந்தநாளுக்கு கேக் செய்து கொடுத்தேன். அந்த கேக்கை வெற்றிகரமாக ஃப்ராஸ்டிங் செய்து பிரிட்ஜில் வைத்தேன். ஆனால் எதிர்பாராத விதமாக கரண்ட் ஃப்ளக்சுவேட் ஆகி பிரிட்ஜ் செயல்படாமல் போனதால் ஃப்ராஸ்டிங் எல்லாம் கரைந்து போனது. 15 நிமிடத்தில் விழாவுக்கு கிளம்ப இருந்த நிலையில் இப்படி நடந்ததும், நான் அழ ஆரம்பித்துவிட்டேன். செய்வதறியாது நின்ற நிலையில் கடைசியாக அந்த கேக்கை எப்படியோ சரி செய்துவிட்டேன். இதை சொதப்பல் என்று சொல்லாமல் ஒரு சவால் என்று சொல்லலாம்.


ஆளுநர் ஆர்.என் ரவியுடன்...

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு பிறந்தநாள் கேக் செய்த தருணம் எப்படி இருந்தது?

கவர்னர் ஐயாவுக்கு கேக் செய்யப்போகிறேன் என்று பார்த்து பார்த்து செய்தேன். அந்த கேக்கை செய்யும்போது கிடைக்காத ஒரு சந்தோஷம், அதை கவர்னரும், அவரது மனைவியும் எடுத்து ஒருவருக்கு ஒருவர் ஊட்டிவிட்டு சாப்பிடும்போது எனக்குக் கிடைத்தது. நான் செய்த கேக்கை கவர்னருக்கு ஊட்டிவிடச் சொல்லி அருகில் இருந்தவர்கள் அனைவரும் கூறியபோது, `இது எப்படி சாத்தியம், நாம் ஊட்டிவிட்டால் கவர்னர் ஏற்றுக்கொள்வாரா?’ என்ற தயக்கம் இருந்தது. ஆனால் நான் கேக்கை எடுத்து ஊட்டியவுடன், கவர்னர் சிரித்த முகத்தோடு அதனை பெற்றுக் கொண்டார். பின்னர் அவரும், அவரது மனைவியும் கேக் மிகவும் அருமையாக இருக்கிறது என்று கூறினார்கள். `உன்னோட இந்த பேக்கிங் குறித்து நிச்சயம் நான் கற்றுக்கொள்கிறேன்’ என்று கவர்னரின் மனைவி கூறியது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. இதை எனது வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாது.

ஹெவன் ஃபார் அனிமல்ஸ் என்ற அரசு சாரா அமைப்பில் உள்ளீர்கள், இதுபற்றி உங்களுடைய கருத்து என்ன?

லாப நோக்கமற்ற அமைப்பு எங்களுடையது. இந்த அமைப்பின் மூலம் தினசரி 4,000 நாய்களுக்கு மேல் உணவளித்து வருகிறோம். தெரு நாய்களுக்காக தென்னிந்தியாவின் முதல் கிளவுட் கிச்சன் ஒன்றையும் நடத்திவருகிறோம். கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தில் இருந்து இந்த நாய்களை பாதுகாக்க அவற்றிற்கு தேவையான தண்ணீரை வழங்கி வருகிறோம். 2100 நாய்களுக்கு இலவச தடுப்பூசிகளை செலுத்தியுள்ளோம். நாங்கள் தத்தெடுக்கும் நாய்களுக்கும் தடுப்பூசிகள் இலவசமாக போடுகிறோம்.


கேஷிகா மனோகர் 

பிரபல பத்திரிகை மூலமாக மற்றவர்களுக்கும் 55-க்கும் மேற்பட்ட நாய்கள் தத்து கொடுக்கப்படுகின்றன. அவற்றிற்கு முடிந்த அளவு தடுப்பூசிகளை நாங்களே போடுகிறோம். அப்படி போடாமல் இருந்தால் எங்கு இருந்து தத்து கொடுக்கப்பட்டதோ அங்கேயே நாம் தடுப்பூசிகளை போட்டு அழைத்துச் செல்லலாம். அதே போன்று மிருகவதை தொடர்பான பிரச்சினைகளுக்கும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தேவைப்படுபவர்களுக்கு நாங்கள் அது தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறோம்.

ஒரு இளம் தொழிலதிபரான உங்களது எதிர்காலத் திட்டங்கள் என்ன?

இப்போதைக்கு பெரிதாக எந்த திட்டமும் இல்லை. ஏற்கனவே செய்துகொண்டிருக்கும் பணிகளை இன்னும் சிறப்பாக அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும். அந்த பணியில் எந்தவித தொய்வும் ஏற்பட்டுவிடக்கூடாது. எதிர்காலத்தில் உங்களைபோன்றவர்கள் வந்து உணவருந்திச் செல்லும் வகையில் ஒரு கஃபே ஷோரூம் திறக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கிறது. நிச்சயம் அதை செய்வேன்.

Tags:    

மேலும் செய்திகள்