அம்மாவால்தான் பாரதியார் கவிதைகள் மீது தாக்கம் ஏற்பட்டது - பாரதி பாஸ்கர்

2000ஆம் ஆண்டு தொடங்கியபோதுகூட தொடர்ந்து எல்லா பட்டிமன்றங்களிலும் பேசவில்லை. ஏற்கனவே அவர்களுக்கு மதுரையில் ஒரு குழு இருந்ததால் என்னை எல்லா பட்டிமன்றங்களிலும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். சென்னையில் நடக்கும்போது அவ்வப்போது கலந்துகொள்வேன்.

Update:2023-09-05 00:00 IST
Click the Play button to listen to article

தீபாவளி, பொங்கல் என எந்த பண்டிகையாக இருந்தாலும், டிவிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும். அதில் கண்டிப்பாக பட்டிமன்றமும் இடம்பெற்றிருக்கும். அதிலும் பட்டிமன்றம் என்றாலே சில பேச்சாளர்களை ரசிகர்கள் கட்டாயம் எதிர்பார்ப்பதுண்டு. அதில் பாரதி பாஸ்கர் முக்கியமான ஒருவர். தனது கணீர் குரல், தெளிவான கருத்துப்பதிவு மற்றும் நையாண்டிப் பேச்சுகளால் நன்கு அறிமுகமான பாரதி பாஸ்கரிடம் அவரது பட்டிமன்ற பயணம் குறித்து சிறு உரையாடல்...

பட்டிமன்றம் என்று சொன்னவுடனே உங்களுக்கு தோன்றும் முதல் விஷயம் என்ன?

பட்டிமன்றம் என்றாலே முதலில் எங்களுடைய நடுவர் சாலமன் பாப்பையாதான் எனக்கு நினைவுக்கு வருவார். பட்டிமன்றம் என்ற கலைவடிவம் தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறது. இதுகுறித்த குறிப்புகள் மணிமேகலையில்கூட இடம்பெற்றிருக்கின்றன. பட்டிமன்றங்கள் இலக்கிய மேடைகளுக்கானவையாக இருந்தன. கிவாஜா மற்றும் குன்றக்குடி அடிகளார் போன்ற பெரியோர் இதனை வளர்த்து வந்தனர். இந்த கலைவடிவத்தை இலக்கிய பயிற்சி இல்லாத சாதாரண மக்களிடமும் எடுத்துச்சென்றவர் சாலமன் பாப்பையா. அவருக்குப் பிறகுதான் பட்டிமன்றங்கள் பலரையும் சென்றடைந்தன.


நடுவர் சாலமன் பாப்பையா முன் பேசியபோது

பேங்கில் வேலை செய்துகொண்டிருந்த உங்களுக்கு பட்டிமன்ற பேச்சாளராகும் எண்ணம் எங்கிருந்து வந்தது?

நான் பட்டிமன்ற பேச்சாளராகவோ, தமிழ்நாட்டு மேடைகளில் அடையாளம் காணப்படும் ஒருவராகவோ இருப்பேன் என்றோ திட்டமிட்டு இந்த பாதை அமையவில்லை. நான் ஒரு என்ஜினீயர். எம்.பி.ஏ படித்துவிட்டு வங்கியில் வேலைக்குச் சேர்ந்தேன். அந்த வேலையில் முன்னேற வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவாக இருந்தது. குடும்பம், குழந்தைகள் என்றான பிறகு அவர்களையும் பார்த்துக்கொண்டு, வேலைக்கும் செல்வது பெரிய பொறுப்பாகவே இருந்தது. எனக்கு இலக்கியம் படிக்க மிகவும் பிடிக்கும். ஆனால் அதற்கு நேரமில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். பட்டிமன்றங்களில் பேசவேண்டும் என்றால் இலக்கியங்களை படிக்கவேண்டும் என்பது நிர்பந்தமாகிவிடும். அப்படித்தான் பட்டிமன்றங்களில் எனது பேச்சு ஆரம்பித்தது. 2000ஆம் ஆண்டு தொடங்கியபோதுகூட தொடர்ந்து எல்லா பட்டிமன்றங்களிலும் பேசவில்லை. ஏற்கனவே அவர்களுக்கு மதுரையில் ஒரு குழு இருந்ததால் என்னை எல்லா பட்டிமன்றங்களிலும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். சென்னையில் நடக்கும்போது அவ்வப்போது கலந்துகொள்வேன்.

2008-க்கு பிறகுதான் அந்த குழுவில் நான் நிரந்தரமாக பேச ஆரம்பித்தேன். அலுவலக வேலைப்பளு மற்றும் வீட்டை கவனித்துக்கொள்வதற்கு நடுவே பட்டிமன்ற பேச்சு மிகவும் சவாலானதாக இருந்தது. அதனாலேயே நடுவர் சாலமன் பாப்பையாவும், நண்பர் ராஜாவும் சென்னைக்கு அருகில் நடக்கும் பட்டிமன்றங்களில் மட்டும் என்னை சேர்த்துக்கொள்வார்கள். கிட்டத்தட்ட 10 வருடங்கள் கடும் சவால்தான்.


தோழியுடன் பாரதி பாஸ்கர்

முதல் பட்டிமன்ற மேடை ஏறிய அனுபவம் பற்றி கூறுங்கள்...

பள்ளி, கல்லூரி நாட்களிலிருந்தே நான் பேச்சாளர்தான். கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்படும் கம்பன் கழகத்தில் கலந்துகொண்டு முதல் பரிசு வாங்கினால், சென்னை கம்பன் விழாவில் பேசவைப்பார்கள். பிற போட்டிகளில் பரிசு வாங்கியதால் தொடர்ந்து 6 வருடங்கள் சென்னை கம்பன் விழாவில் பேசினேன். அப்போதே எனக்கு பட்டிமன்ற அனுபவம் இருந்தது. ஆனால் மிகவும் டென்ஷனாக இருந்தது. மகத்தான இலக்கிய ஆளுமைகள் பேசுவதை கேட்கும் வாய்ப்பும் கிடைத்தது.

நான் மிகவும் ரசித்து பேசிய மேடை என்றால், பாப்பையா சார் குழுவில் தோஹாவில் நடந்த பட்டிமன்றம். ’அடுத்தவருக்கு உதவுவதால் ஆபத்தா? ஆனந்தமா?’ என்ற தலைப்பில் இரவு 10 மணிக்குத்தான் அந்த பட்டிமன்றமே தொடங்கியது. ராஜாவுக்கு பிறகு நான் பேசும் வாய்ப்பு வந்தது. அவர் பேசியதற்கு மறுப்பு தெரிவித்து நான் பேசினேன். அதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.


பட்டிமன்றத்தில் பேசிய தருணம்

மாணவர்கள் மத்தியில் பேசுகிற அனுபவம் எப்படியிருக்கிறது?

மாணவர்களிடையே உரையாட நீண்ட பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். தமிழ்நாடு முழுக்கவுள்ள மாணவர்களை சந்திப்பதை குறிக்கோளாகவே வைத்திருக்கிறேன். மாணவர்களிடையே தன்னம்பிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. அதனால் அலட்சியத்தை போர்வையாக போர்த்திக்கொள்கின்றனர். அவர்களிடம் உரையாடும்போது, தன்னம்பிக்கை வளர்க்க அவர்களை ஊக்குவிக்க முடியும். இதனை எனது கடமையாக நினைக்கிறேன். நான் படித்தகாலத்தில் ஔவை நடராஜன், அ.ச. ஞான சம்பந்தன் போன்றோர் இருந்தனர். தமிழ் வளர்ச்சித்துறையில் இயக்குநராக இருந்த ஔவை நடராஜன், யாரென்றே தெரியாத கல்லூரி மாணவர்களான எங்களை வீட்டிற்குள் அழைத்து, உணவு கொடுத்து உபசரித்து நிறைய பேசுவார். அதுபோன்ற வழிகாட்டும் ஆளுமைகள் இப்போது இல்லை. தற்போது மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருப்போரை பார்த்தால் மிகவும் பயமாக இருக்கிறது. எனவே மாணவர்களுடன் பேசுவது எனது கடமையாக நினைக்கிறேன்.


பட்டிமன்றத்தில் பேசியபோது

பாரதியார் மேலுள்ள பற்று குறித்து கூறுங்கள்...

எனது தாயார்தான் இதற்கு காரணம் என்று நான் நினைக்கிறேன். அம்மாவுக்கு பாரதியாரை பிடிக்கும் என்பதால் அது எனக்கும் மடைமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம். 7, 8- ஆம் வகுப்புகளில் படிக்கும்போது பள்ளியில் நடக்கும் சிறுசிறு பேச்சுப்போட்டிகளுக்காக பாரதியார் கவிதைகளை அம்மா எழுதிக்கொடுப்பார். பாரதியாரின் கொள்ளுப்பேரனான ராஜ்குமார் பாரதி, பாரதியாரின் பாடல்களுக்கு இசையமைத்து கேசட் ஒன்றை வெளியிட்டார். அதனை பிறந்தநாள் பரிசாக அம்மா கொடுத்தார். கவிதைகளை இசையாக கேட்டபோது அது மனதில் நின்றது. அதன்பிறகு பாரதியார் கவிதைகளை தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். வாழ்க்கையில் எதற்கும் கவலைப்பட தேவையில்லை என்ற தைரியம் அந்த கவிதை வரிகளிலிருந்து எனக்கு கிடைத்தது. மேடையில் பேசவேண்டும் என்பதற்காக கவிதைகளை மனப்பாடம் செய்து பேசினால், அது தாக்கத்தை ஏற்படுத்தாது. எனக்காக படித்து, உள்வாங்கிய கவிதைகளை மேடையில் பேசியதால்தான் பார்வையாளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்