சென்னையின் மூத்த பெண் போட்டோகிராபர்!
புகைப்படக் கலையில் எனது பயணம் 1992-ஆம் ஆண்டு தொடங்கியது.
இன்றைய டிஜிட்டல் உலகில், கைபேசி வைத்திருப்போர் எல்லோருமே ஆர்வக்கோளாறு காரணமாக, கண்களில் படுவதையெல்லாம் புகைப்படம் எடுப்பதைப் பார்க்கிறோம். ஆனால், புகைப்படம் எடுப்பதற்கு என்று ஒரு நுட்பமும் திட்பமும் இருக்கிறது. அந்த வகையில் புகைப்படக் கலைஞர்களாக புகழ் பெற்றவர்கள் பலர் இருக்கின்றனர். மற்ற துறைகளைப் போன்று இத்துறையிலும் ஆண்கள்தான் அதிகம் கோலோச்சி வருகின்றனர். இன்றைய காலகட்டத்திலேயே நிலைமை இப்படியிருக்க, தொண்ணூறுகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பெண் புகைபடக்கலைஞர்கள் இருந்தார்கள்.
சென்னையின் புகைப்படக்கலைஞராக தொண்ணூறுகளில் தொடங்கிய பயணத்தை இன்றுவரை சிறப்பாகச் செய்து வரும் பெண்மணிதான் நவநீதம். இவருக்கு தற்போது 67 வயதாகிறது. புகைப்படத் துறையில் முப்பது ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த இவர், சென்னையிலுள்ள பெரம்பூரில் ‘ரெயின் போ’ என்ற பெயரில் புகைப்படக்கூடம் ஒன்றை நடத்தி வருகிறார். புகைப்படத் துறையில் அவருடைய பயணம் மற்றும் அனுபவங்கள் குறித்து `ராணி’ டிஜிட்டல் நேயர்களுக்காக நவநீதம் அளித்த பிரத்யேக பேட்டி…
1. புகைப்படக் கலைஞராக உங்கள் பயணம் எப்போது தொடங்கியது? அதில் உங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் யார்?
புகைப்படக் கலையில் எனது பயணம் 1992-ஆம் ஆண்டு தொடங்கியது. என்னுடைய கணவரின் மறைவுக்குப் பிறகு குடும்பத்தை ஒற்றை ஆளாக நின்று அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டிய சூழ்நிலை உண்டானது. இரு மகன்கள் மற்றும் ஒரு மகளை யாருடைய உதவியுமின்றி சமூகத்தில் ஒரு நல்ல நிலைமைக்கு உயர்த்த வேண்டும் என்பதை மட்டுமே லட்சியமாகக் கொண்டு எடுத்து வைத்த அடிதான் என்னை இந்த புகைப்படத் துறைக்குள் இட்டுச் சென்றது. ஆரம்பத்தில் இதில் எனக்கு உறுதுணையாக இருந்தது என்னுடைய மூத்த மகன்தான். அவன்தான் புகைப்படக் கலை குறித்த பல்வேறு நுணுக்கங்கள் மற்றும் அதைப் புதுப்பித்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து எனக்கு கற்றுத் தந்தான். அவன் கற்றுத் தருவதை நான் எளிதாக உள்வாங்கி புரிந்துகொண்டு பயன்படுத்தினேன். ஆனால் அதுவும் சில காலம்தான் நீடித்தது. ஆம், ஒரு விபத்தில் எனது மூத்த மகனை நான் இழந்துவிட்டேன். மகன் இறந்த செய்தி கேட்டு நான் மனதளவில் மிகவும் நொறுங்கிப் போய்விட்டேன். என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு கையறு நிலைக்குத் தள்ளப்பட்டேன். இருந்தாலும் என்னுள் இருந்த தன்னம்பிக்கையை நான் இழக்கவில்லை. தனி மனுஷியாக நின்று தொடர்ந்து ஸ்டுடியோவை நடத்த என்னை நானே தயார்படுத்திக் கொண்டேன்.
புகைப்படக் கலைஞர் நவநீதம்
2. நீங்கள் இந்தத் துறையை தேர்வு செய்ததன் காரணம் என்ன?
புகைப்படத் துறையில்தான் எனது தம்பி பணியாற்றிக் கொண்டிருந்தான். அதனை அருகில் இருந்து பார்த்ததாலோ என்னவோ அதுவே எனக்கு ஒரு பழக்கப்பட்ட மற்றும் பணியாற்ற ஏதுவான துறையாகத் தெரிந்தது. ஆனால் ஆரம்பத்திலும் சரி இப்பொழுதும் சரி, புதிதாக கடைக்கு வருபவர்கள், `பெண் புகைப்படக்காரரா? நீங்க போட்டோ நல்லா எடுப்பிங்களா? பொதுவாக ஆண்கள்தானே புகைப்படம் எடுப்பார்கள்?’ என அடுக்கடுக்காக கேள்விக் கணைகளை என் மீது வீசுவார்கள். போட்டோ எடுத்து, அதனை திருத்தம் செய்து காட்டிய பிறகே வியப்போடு பாராட்டுவார்கள். ஆனால் புகைப்படத் துறை என்பது பெண்கள் பணியாற்றுவதற்கான சிறந்த துறைதான்.
புகைப்படம் எடுக்கும் நவநீதம்
3. இத்தொழிலில் உங்களுக்கு போதிய வருமானம் கிடைக்கிறதா? நிறைய வாடிக்கையாளர்கள் வருகிறார்களா?
போதுமான அளவுக்கு என்றில்லாமல் தினந்தோறும் நிறைய வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். ஸ்டூடியோவுக்குள் மட்டுமில்லாமல் திருமணம் போன்ற பல்வேறு சுபநிகழ்சிகளுக்கும் சென்று புகைப்படங்கள் எடுத்துத் தருகிறேன். அதுமட்டுமின்றி புது புது வாடிக்கையாளர்கள் வந்தாலும் ‘ரெயின்போ’வுக்கு என்ற வழக்கமான வாடிக்கையாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். வருமானத்தைப் பொறுத்தவரை 1992-இல் தொடங்கி இன்றுவரை போதுமான அளவில் கிடைத்து வருகிறது. இதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டுதான் எனது மகள் மற்றும் மகனின் கல்விச் செலவிலிருந்து திருமணச் செலவு வரையில் அனைத்தையும் செய்து முடித்தேன். இன்றும் இந்த ஸ்டூடியோ மூலமாகவே எனது குடும்பத்திற்கென்று ஒரு வருமானத்தை சம்பாதித்துத் தர முடிகிறது. இதையெல்லாம் பார்த்து உணர்ந்த எனது இரண்டாவது மகனும் இப்பொழுது எனக்கு உறுதுணையாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
நவநீதம்
4. இந்த வயதிலும் தளராது ஒரு புகைப்படக் கலைஞராக உங்களை நீங்கள் எப்படி புதுப்பித்துக் கொள்கிறீர்கள்?
என்னுடைய ஆர்வம்தான் தினமும் புதிதாக எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று என்னைத் தூண்டுகிறது. ரோல் கேமராவிலிருந்து இன்றைய டிஜிட்டல் கேமரா வரை அனைத்தையும் நான் கற்றது எனது ஆர்வத்தினால்தான். கேமரா குறித்து மட்டுமின்றி போட்டோ எடிட்டிங், வீடியோ எடிட்டிங், கலர் கரெக்ஷன் போன்ற அனைத்து வேலைகளைப் பற்றிய தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும் என்று எண்ணினேன். அதனை நான் இப்போதும் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறேன். இந்த வயதில் என்றில்லை இன்னும் எவ்வளவு வயதானாலும் சரி என்னால் முடிந்த வரையில் எனக்குப் பிடித்தமான இந்த வேலையை நான் தொடர்ந்து செய்துகொண்டுதான் இருப்பேன்.
தனது ஸ்டூடியோவில்
தொழில் மீது இருக்கும் ஆர்வம்தான் தளராத உழைப்பின் ஊற்றுக்கண் என்பதை நிரூபித்து வரும் நவநீதத்தின் வாழ்க்கை இன்றைய தலைமுறையினருக்கான தன்னம்பிக்கை பாடம் என்றால் அது மிகையல்ல.