பொழுதுபோக்காக ஆரம்பித்தது வாழ்க்கையாகிப் போனது! ராதிகா ராமசாமி
இந்தியாவின் முதல் பெண் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ராதிகா ராமசாமி
புகைப்படத் துறையை பொறுத்த வரையில் தற்போது ஆண், பெண் இருவருமே சரிசமமாக வளர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவின் முதல் பெண் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரராக வலம் வருகிறார் ராதிகா ராமசாமி. தேனியில் பிறந்த ராதிகாவுக்கு இயற்கையின் மீதிருந்த தீராத காதல் அவரை இயற்கையை புகைப்படம் எடுக்கும் பயணத்திற்கு அழைத்துச் சென்றது என்று கூட சொல்லலாம். வனவிலங்கு புகைப்படத் துறையில் இருபது வருட அனுபவம் கொண்ட இவர் கடந்து வந்த சவால்களும் சாதனைகளும் ஏராளம். மேலும் இது குறித்து ராணி நேயர்களுக்கு அவர் அளித்த பேட்டியை இங்கே காணலாம்.
உங்களின் இந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் என்கிற பயணத்தின் துவக்கம் எவ்வாறு அமைந்தது, மேலும் உங்களின் இந்த பயணத்திற்கு வழிகாட்டியாகவும், முன்மாதிரியாகவும் இருந்தது யார் ?
வனவிலங்கு புகைப்படத் துறையை பொறுத்த வரையில் எனக்கு பள்ளிப் பருவத்திலிருந்தே அதன் மீது அதீத ஆர்வம் இருந்தது என்றே சொல்லலாம். நான் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது எனது தந்தை எனக்கு கேமரா ஒன்றை பரிசளித்தார். அந்த கேமரா மூலம் வீட்டில் உள்ள செடிகள் மற்றும் பூக்களை படம் எடுக்க தொடங்கினேன். அதன்பிறகு கல்லூரிக் காலங்களில் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பொழுதெல்லாம் புகைப்படம் எடுக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. அதன் மூலம் தொடர்ந்து புகைப்படம் எடுப்பது ஒரு சிறந்த பொழுதுபோக்காகவே எனக்கு மாறியது. 2003ஆம் ஆண்டு திருமணத்திற்கு பிறகு இங்கிருந்து டெல்லிக்கு குடிபெயர்ந்த காலங்களில் டிஜிட்டல் கேமராக்கள் அறிமுகமானது. டிஜிட்டல் கேமராக்களைப் பொறுத்தவரையில் உடனடியாக எடுத்தப் புகைப்படத்தை காணக்கூடிய வசதி அதில் இருக்கும். நான் டெல்லியில் உள்ள பரத்பூர் பறவைகள் சரணாலயத்திற்கு சென்றபோது அங்கிருந்த பறவைகளை அதன் மூலம் புகைப்படம் எடுத்தேன். அதுவே எனது ஆரம்ப நிலை வனவிலங்கு புகைப்பட அனுபவமாக மாறியது. ஒரு பொழுதுபோக்காக தொடங்கிய இத்துறையின் அனுபவம், இன்று இருபது வருட பயணமாக சென்று கொண்டிருக்கிறது. இதில் எனக்கு முன்மாதிரி என்று சொன்னால் அது புகைப்பட இதழ்கள் தான். அதில் வெளியாகும் வனவிலங்கு புகைப்படங்களை கண்டு வியந்து அதனைப் போலவே நானும் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று நினைத்த நாட்கள் உண்டு.
வன உயிரி புகைப்படங்கள்
இந்த வனவிலங்கு புகைப்படத்துறையை தேர்வு செய்யும் பொழுது உங்கள் குடும்பத்தினரின் பதில் என்னவாக இருந்தது ?
நான் இந்த துறையை தேர்வு செய்யவில்லை. இந்த துறைதான் என்னைத் தேர்வு செய்தது என்றே சொல்லலாம். என்னுடைய ஊர் தேனி மாவட்டத்தில் உள்ள வெங்கடாசலபுரம். நான் ஒரு பொறியியல் பட்டதாரி, அதன்பிறகு எம்.பி.ஏவும் முடித்தேன். முந்தைய நாட்களிலெல்லாம், விஸ்வல் கம்யூனிகேசன் துறை என்பது பலருக்கும் அதிகம் தெரியாத ஒரு துறையாகவே இருந்தது. பொழுதுபோக்காக தொடங்கிய ஒன்றை எதிர்காலமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் வந்தபொழுது குடும்பத்தினரின் ஆதரவு எனக்கு கிடைத்தது. அந்த விதத்தில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி தான்.
இந்தியாவின் முதல் பெண் வனவிலங்கு புகைப்படக் கலைஞர். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
பொதுவாகவே எனக்கு இயற்கையை புகைப்படம் எடுப்பது மிகவும் பிடித்தமானது. அதுவும் காட்டுக்குள் சென்று விலங்குகளையும், பறவைகளையும் நேரில் புகைப்படம் எடுப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த வாய்ப்பு எல்லோருக்கும் எளிதில் கிடைத்து விடுவதில்லை. காட்டுக்குள் சென்று எடுத்த புகைப்படங்களை பிறரிடம் காட்டும்பொழுதும், அதை கண்டு அவர்கள் வியக்கும் போது அது எனக்கு அதிக ஆனந்தத்தை கொடுக்கும். அந்த வகையில், அதே துறையில் முதலாவதாக இருப்பது கூடுதல் மகிழ்ச்சி.
பறவைகள் சரணாலயத்தில் மயில்
வனவிலங்கு புகைப்படத்திற்காக முதல் முறை காட்டிற்குள் சென்ற அனுபவம் உங்களுக்கு எப்படி இருந்தது ?
அனுபவம் குறித்து கேட்டால், பறவைகள் சரணாலயத்திற்கு செல்லும் நாம் அங்கு நடந்தே கூட செல்லலாம். பயப்படத் தேவையே இல்லை. அங்கு சின்னச் சின்ன பூச்சிகள், புழுக்கள் மட்டுமே இருக்கும். ஆனால் நான் முதன் முதலில் 2005ல் ‘ஜிம்கார்பெட் நேஷனல் பார்க்’ என்ற காட்டுக்குள் உரிய அனுமதிகளை பெற்று சென்ற போது, அங்கு சினிமாவிலோ அல்லது ஒரு கதையிலோ வருவது போல எனக்கு காட்சிகள் இருந்தது. அதாவது அடர்ந்த மரங்கள், நதிநீரின் அழகு, பறவைகளின் சத்தம், மான்கள், யானைகள் பிளிர்வது போன்ற சத்தம் இவை அனைத்தும் என்னை ஒரு காந்தம் போல ஈர்த்தது. இதுவே எனது முதல் அனுபவம். மேலும் என்னை அதிகம் கவர்ந்ததும் இதுதான்.
மனிதர்கள் மிருகங்களை கண்டு அஞ்சுவது இயல்பே, உங்களுக்கு அதுபோன்ற பயம் என்பது இருந்திருக்கிறதா ?
கண்டிப்பாக மிருகங்கள் என்றால் பயம் இருக்கும் தான். ஆனால் பெரிய காடுகளுக்குச் செல்லும் போதெல்லாம் வண்டியில் தான் செல்ல வேண்டும். அதுமட்டுமில்லாமல் தூரத்தில் இருந்து படம் பிடிப்பதற்கு கேமரா லென்ஸ்கள் இருக்கிறது என்பதால் அதனை பயன்படுத்தி தூரத்தில் இருந்து எளிதில் புகைப்படம் எடுக்கலாம். அந்த சமயங்களில் மிருகங்களை துன்புறுத்தாமல், பக்கத்தில் செல்லாமல் தூரத்தில் இருந்தே புகைப்படம் எடுக்க வேண்டும் என்கிற சில கட்டுபாடுகளும் இருக்கிறது. பயம் ஒருபுறம் இருந்தாலும் நாம் மிகவும் பாதுகாப்பாக செயல்படுதல் வேண்டும்.
கேமராவுடன் ராதிகா ராமசாமி
காட்டுக்குள் புகைப்படம் எடுக்கும்போது மிருகங்கள் மூலம் உங்களுக்கு தாக்குதல் ஏற்பட்டு இருக்கிறதா?
தாக்குதல் நடந்திருக்கிறது. யானைகள் அதன் குட்டிகளோடு செல்லும் போது பக்கத்தில் செல்லுதல் கூடாது. அவ்வாறு சென்றோமேயானால் அது நம்மைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
உங்களுக்கான முதல் அங்கீகாரம் எங்கிருந்து கிடைத்தது? அது கிடைத்த போது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?
2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் புகைப்படதிற்கு என்றே தனி போரம்கள் இருந்தது. அதில் நான் புகைப்படங்களை பகிர்ந்து வருவது என்னுடைய வழக்கம். வாரந்தோறும் “போட்டோ ஆப் தி வீக்” என்று ஒரு புகைப்படம் அந்த போரமின் கீழ் தேர்வு செய்யப்படும். அந்த வரிசையில் என்னுடைய புகைப்படமும் “போட்டோ ஆப் தி வீக்” என்ற பெயரில் ஒருமுறை வந்திருந்தது. அதுவே எனக்கு கிடைத்த முதல் அங்கீகாரம். அந்த தருணம் எனக்கு மிகுந்த ஆனந்தத்தை அளித்தது. அதன் பிறகு என்னுடைய புகைப்படங்களை இணையதளங்கள் மூலம் பார்த்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தினர் என்னை அழைத்து பல்கலைக்கழக வளாகத்தை புகைப்படம் எடுத்து தருமாறு கேட்டனர். அதுவும் எனக்கு ஒரு பெரிய பிராஜெக்ட் மற்றும் வணிகம் சார்ந்த பணியாக இருந்தது.
சிறுத்தை மற்றும் புள்ளிமான்
இதுவரை நீங்கள் எடுத்த புகைப்படத்தில் உங்கள் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு புகைப்படம் எது?
'பாம்புத் தாரா' என்று சொல்லகூடிய நீர்நிலைகளில் வாழும் பறவை ஒன்று இருக்கிறது. அது இயல்பாகவே அமைதியாக இருக்கும் தன்மையுடையது. ஆனால் அந்த சமயத்தில் இரண்டு பறவைகள் ஒன்றை ஒன்று மோதி சண்டையிட்டுக் கொண்டனர். எனது பார்வைக்கு இரண்டும் நடனம் ஆடுவது போல காட்சியளித்ததுடன், அந்த தருணத்தை நான் போட்டோவாகவும், வீடியோவாகவும் பதிவு செய்துள்ளேன். அது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும்.
பொதுவாக வனவிலங்குகளை படம்பிடிக்க சென்றால் சுமார் எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டி இருக்கும்?
குறிப்பிட்டு சொல்வது மிகவும் கடினம். முழுவதுமாக நாம் புகைப்படம் எடுக்கப்போகும் பறவையையோ, விலங்கையோ பொறுத்தது. பறவைகளும் சரி, மிருகங்களும் சரி, எப்பொழுது வரும், போகும் என்று குறிப்பிட்டு கணிக்க இயலாது. சில நேரங்களில் உடனே வரவும் வாய்ப்பு உள்ளது. ஒரு வாரமும் கூட ஆகலாம். அதற்கு அதிக காலம் எடுக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் நாம் முன்னதாக நம்மை தயார் நிலையில் வைத்துக் கொள்ளலாம். இனப்பெருக்கக் காலங்களில் பறவைகள் கூடு கட்ட சுறுசுறுப்பாக இயங்கும். அதனைப்போலவே காலையும், மாலையும் உணவு நேரம் என்பதால் சுறுசுறுப்பாக இயங்கும். காத்திருந்து அதுவும் வரும் நேரங்களையும், பருவ மாற்றங்களையும் முன்னதாகவே அறிந்து தயார் நிலையில் செயல்படுதல் வேண்டும்.
நீங்கள் நீண்ட நாட்கள் காத்திருந்து எடுத்த புகைப்படம் என்றால் அது எந்த புகைப்படம்?
'சாரஸ் கொக்கு' என்ற பறவை ஒன்று உள்ளது. அதன் நடனம் மிகவும் அழகாக இருக்கும். அதனை படம் பிடிக்க சுமார் ஆறு மாத காலம் காத்திருந்துதான் புகைப்படம் எடுத்தேன். நாம் நினைப்பது போல சரிவர ஒரு புகைப்படம் வர வேண்டும் என்றால், அதற்காக இரண்டு வருடங்கள் அளவிற்கு கூட காத்திருக்க கூடும்.
சாரஸ் கொக்கு
நீண்ட நாட்கள் காட்டில் தங்க வேண்டும் என்றால், உங்களுக்கான அடிப்படைத் தேவைகள் எவ்வாறு கிடைக்கும்?
இந்தியாவை பொறுத்தவரை காடுகளுக்குள் தங்க இயலாது. 'ஜிம் கார்பெட்' என்று சொல்லக்கூடிய காட்டில் மட்டுமே தங்குமிடம் இருக்கிறது. மற்ற காடுகளில் எல்லாம் வெளியில் மட்டுமே ஹோட்டல்கள் இருக்கிறது. பல நேரங்களில் காலையும், மாலையும் மட்டுமே காடுகளுக்குள் அனுமதியுண்டு. ஆனால் சில நேரங்களில் சிறப்பு அனுமதி பெற்று முழுநேரமும் புகைப்படம் எடுக்கலாம்.
இந்தியாவில் உள்ள காடுகளுக்கும், வெளிநாட்டு காடுகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன?
இந்திய காடுகள் என்பது ஒரு அடர்ந்த காட்டுப் பகுதியாக இருக்கும், அதுமட்டுமில்லாமல் பிளாஷ் பயன்படுத்த அனுமதி இல்லை. மேலும் அதிக கட்டுப்பாடுகள் இங்கு விதிக்கப்பட்டுள்ளன. இருந்தும் நமது காடுகள் மிகவும் அழகான ஏரி, குளங்கள் நிறைந்த இடமாகும். ஆனால் வெளிநாட்டு காடுகள் என்பது அதிக கட்டுபாடுகள் இல்லாத பகுதியாகவும், அதோடு மிருகங்கள் அதிகம் உலாவும் இடங்களாகவும் இருக்கும்.