மாலத்தீவு : அழகிய சுற்றுலா தலம்

மாலத்தீவில் சுற்றுலாப்பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் வசிக்கின்றனர். ஹெரிடன்ஸ் ஆராவில், மக்களின் கலாச்சாரத்தை ஆராய ஒரு பாரம்பரிய மாலத்தீவு கிராமம் உள்ளது. இங்கு, மீனவர்களின் அன்றாட துயரங்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறை குறித்து அறிந்து கொள்ளலாம்.

Update:2024-02-20 00:00 IST
Click the Play button to listen to article

சினிமா பிரபலங்கள் முதல் விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், வசதி படைத்தவர்கள் என பலரின் பொழுதுபோக்குத் தலங்களின் பட்டியலில் முதல் நாடாக மாலத்தீவு இருக்கும். ஒருமுறையாவது இங்கு சென்றுவிடமாட்டோமா என்ற சாமானியனின் சுற்றுலா ஏக்கத்திற்குப் பின்னாலும் இந்த நாடு இருக்கும். அப்படி, மாலத்தீவில் என்னதான் இருக்கிறது? இதன் வரலாறு என்ன? ஏன் அனைவரும் மாலத்தீவிற்கு செல்ல ஆசைப்படுகின்றனர்? என்பதை பற்றியெல்லாம் இக்கட்டுரையில் காணலாம்.

சுற்றுலா தலங்களின் சொர்க்கம்

கன்னியாகுமரியிலிருந்து 700 கி.மீ. தூரத்தில் உள்ள மிகவும் குட்டி நாடான மாலத்தீவு முழுக்க முழுக்க சுற்றுலாவையே நம்பி இருக்கிறது. மாலத்தீவின் அழகில் மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. திரும்பிய திசையெல்லாம் அழகான கடல், மனதை கவரும் இயற்கைக் காட்சிகள், ஆழ்கடல் நீச்சல், கடலுக்கு அடியில் உணவு என வித்தியாசத்தை தேடி வருபவரின் மனங்களை சந்தோஷப்படுத்தும் விதமாக அனைத்தையும் கொண்டதுதான் மாலத்தீவு. மேலும், இந்தியப் பெருங்கடலில் 20க்கும் மேற்பட்ட பவளத்தீவுகளையும், ஆயிரத்திற்கும் அதிகமான சிறிய தீவுகளையும் உள்ளடக்கியது. மாலத்தீவுகள் பெரும்பாலும் காதல் ஜோடிகளுக்கான இடம் என்றாலும், கடல், மணல் ஆகியவற்றை தாண்டி இன்னும் இங்கு நிறைய இருக்கிறது. மாலத்தீவில் சுற்றுலாப்பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் வசிக்கின்றனர். ஹெரிடன்ஸ் ஆராவில், மக்களின் கலாச்சாரத்தை ஆராய ஒரு பாரம்பரிய மாலத்தீவு கிராமம் உள்ளது. இங்கு, மீனவர்களின் அன்றாட துயரங்கள்  மற்றும் அவர்களின் வாழ்க்கை முறை குறித்து அறிந்து கொள்ளலாம். 


சுதந்திரத்திற்கு முன்பு மாலத்தீவு

மாலத்தீவின் வரலாறு 

மாலத்தீவு சிறிய நாடாக இருந்தாலும் இந்த நாட்டுக்கு என்று தனி சிறப்பம்சம் இருக்கிறது. மாலத்தீவை முந்தைய காலங்களில் கிராவரு என்கிற தமிழர்கள் ஆட்சி செய்து வந்ததாக ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பின்னர் சோழர்கள் மாலத்தீவை ஆட்சி செய்து வந்துள்ளனர். அதன் பிறகு சிங்களவர்கள் மாலத்தீவை கைப்பற்றி ஆட்சி செய்துள்ளனர். அப்பொழுதுதான் அங்கு புத்த மதம் பரவலாக பின்பற்றப்பட்டுள்ளது. கிழக்குப் பகுதிகளுக்கு செல்லும் அரேபிய வணிகர்கள் மற்றும் முதலாளிகள், தங்களின் பயணத்தின் நடுவே மாலத்தீவில் தங்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். அவர்கள் வாழ்ந்த தடயத்தையும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். அதன்பிறகு அரேபியர்கள் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தி மாலத்தீவை ஆட்சி செய்து வந்தனர். 1153-ம் ஆண்டு சுல்தான் ஆட்சி நடைமுறைக்கு வந்தது. அங்குள்ள மக்கள் அனைவரும் இஸ்லாமியர்களாக மாறத் தொடங்கியிருக்கின்றனர்.

அதன்பிறகு போர்ச்சுகீசியர்கள் 16 ஆம் நூற்றாண்டில் படையெடுத்து ஆட்சியை பிடித்தனர். ஏற்கெனவே மேற்கிந்தியாவில் இருந்த கோவாவில் காலூன்றியிருந்த போர்ச்சுக்கீசியர்கள், இந்தியப் பெருங்கடலில் லாபத்தை தரும் வணிக வழித்தடங்களில் தங்களுக்கு நிச்சயம் பங்கிருக்க வேண்டும் என்கிற தீர்மானத்துக்கு வந்திருந்தார்கள். அப்பொழுதுதான் அவர்களுக்கு மாலத்தீவின் மீது ஆசை வந்துள்ளது. அப்போது போர்ச்சுகீசியர்கள் சின்னதாக ஒரு கோட்டையையும், தொழிற்சாலையையும் கட்டிக் கொள்ளலாம்' என்று அனுமதி அளித்தார் அப்போதைய மாலத்தீவு அரேபிய மன்னர். இதையடுத்து போர்ச்சுக்கீசியர்களின் கப்பல் மாலத்தீவில் நுழைந்தது. பின்னர் 1558 ஆம் ஆண்டு போர்ச்சுக்கீசியர்கள் மாலத்தீவு தேசத்தை கைப்பற்றினார்கள்.


சுதந்திரத்திற்கு பிறகு மாலத்தீவு

சுதந்திரம் அடைந்த மாலத்தீவு

முகமது தகுருஃபானு அல் ஆஜம் என்பவர் தனது சகோதரர்களையும், நண்பர்களையும் சேர்த்துக் கொண்டு மாலே நகரில் ஆட்சி செய்த போர்ச்சுக்கீசியர்கள் மீது கொரில்லாத் தாக்குதல் நடத்தினார். இதில் அத்தனை போர்ச்சுக்கீசிய ஆட்சியாளர்களும் கொலை செய்யப்பட்டனர். இந்த வெற்றியை, தேசிய தினமாக இன்றளவும் மக்கள் மாலத்தீவில் கொண்டாடி வருகின்றனர். முகமது தகுருஃபானுவுக்கு ஓர் நினைவகமும் கட்டப்பட்டது. இவர்தான் அடுத்த சுல்தான் சாம்ராஜ்யத்தை நிறுவினார். உதீமு என்ற பெயர் கொண்ட அந்த சாம்ராஜ்யம் அடுத்த 120 வருடங்களுக்கு மாலத்தீவை ஆட்சி செய்தது. அதன்பிறகு மாலத்தீவை, 1654 முதல் டச்சுக்காரர்களும், 1887 முதல் பிரிட்டனும் ஆண்டு வந்தன. இறுதியாக 1965 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றது மாலத்தீவு. 1968-ம் ஆண்டு சுல்தான் ஆட்சியிலிருந்து குடியரசு நாடக மாறியது. அதன்பின் மாலத்தீவுகளின் முதல் குடியரசுத் தலைவராக இப்ராஹிம் நசீர் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 1978-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மவ்மூன் அப்துல் கையூம் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டு 30 ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் இருந்தார். 2008 பொதுத் தேர்தலில் கையூமை தோற்கடித்து முகம்மது நஷீத் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஒரு கடல்வாழ் உயிரின விஞ்ஞானி. சுற்றுச்சூழல் தொடர்பான செயல்பாடுகளில் நிறைய ஆர்வமுள்ளவர். மாலத்தீவில் சுறா வேட்டைக்குத் தடை விதித்தார். அதுமட்டுமில்லாமல் அரசு நிறுவனங்கள் தனியார் ஆக்கப்பட்டன. உயர்ந்து கொண்டிருக்கும் கடல் மட்டத்தில் அழியும் முதல் பகுதியாக மாலத்தீவு இருக்கலாம் என்று ஆய்வுகள் சொன்னதால் தடுப்பு நடவடிக்கைக்கு நிதி திரட்டினார்.


இந்தியா பரிசளித்த போர்க்கப்பல் மற்றும் மாலத்தீவு பாதுகாப்புப் படைகள்

இந்தியாவிற்கும் மாலத்தீவிற்குமான உறவு

மாலத்தீவு தனி நாடாக இருந்தாலும் இந்தியக் கலாசாரத்தோடு ஒன்றிணைந்த நாடாகும். குறிப்பாக, தமிழ் மற்றும் மலையாள மொழிதான் அங்கு அதிகமாக பேசப்படுகிறது. அங்கு மலையாளம் மிகமுக்கிய மொழியாகவும் இருக்கிறது. மாலத்தீவு இந்தியாவிற்கு மட்டுமில்லாமல் இலங்கைக்கும் நல்ல உறவு நாடாக இருக்கிறது. 1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையிலிருந்து ஆயுதங்களுடன் ஒரு போராளிப்படை மாலத்தீவிற்குள் நுழைந்தது. அவர்கள், மாலே நகரிலுள்ள விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்கள். பின்னர் அவர்களது மற்றொரு நோக்கம் அதிபர் மவ்மூன் அப்துல் கையூமைக் கைது செய்வது. ஆனால் அதை அவர்களால் செய்ய முடியவில்லை. ஏனென்றால் மவ்மூன் அப்துல் கையூம் இந்தியாவில் தஞ்சம் புகுந்துவிட்டார். அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, மாலத்தீவு அரசுக்கு ஆதரவாக ராணுவ வீரர்களை அனுப்பி வைத்தார். அடுத்த சில மணி நேரங்களிலேயே மாலத்தீவு அரசைப் பற்றியிருந்த ஆபத்து நீங்கியது. போராளிகளை இந்திய ராணுவம் கூண்டோடு அடக்கியது. இந்தியாவுக்கு பாராட்டுகள் குவிந்தன. அப்போதைய அமெரிக்க அதிபர் ரீகன், “இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைதி நிலவ இந்தியா மதிக்கத்தக்க பங்களிப்பைச் செய்திருக்கிறது’’ என்றார். அதன்பிறகு தலைநகர் மாலேவில் இந்திரா காந்தி நினைவு மருத்துவமனை எழுப்பப்பட்டது. ஏப்ரல் 2006 ஆம் ஆண்டு இந்தியக் கடற்படை ஒரு மிகச்சிறந்த போர்க் கப்பலை மாலத்தீவுக்குப் பரிசளித்தது. மாலத்தீவு அரசின் வேண்டுகோள் காரணமாக இந்தியா தனது 2 ஹெலிகாப்டர்களை அந்த நாட்டில் பாதுகாப்புக்கு நிரந்தரமாக நிறுத்தி வைத்திருக்கிறது.


மாலத்தீவில் கட்டாயம் போகவேண்டிய குட்டித்தீவுகள்

மாலத்தீவில் கட்டாயம் பார்க்க வேண்டிய சுற்றுலா இடங்கள்:

1. மாலத்தீவின் தலைநகரமாக மாலே ஐலேண்ட் விளங்குகிறது. இங்குதான் நாட்டின் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. மாலே நகரில், சுவையான உணவுகள் கிடைக்கும் பலவிதமான உணவகங்கள் மற்றும் பார்கள் உள்ளன. செயற்கை கடற்கரை, சுனாமி நினைவுச்சின்னம், ஆண் தேசிய அருங்காட்சியகம் ஆகிய இடங்களும் உள்ளன. 

2. கொமோ கோகா தீவு, மாலத்தீவில் பார்க்க மிகவும் அழகான மற்றும் சிறந்த இடங்களில் ஒன்றாகும். அற்புதமான ரிசார்ட்டுகள் மற்றும் அழகான ரம்மியமான வாட்டர் வில்லாக்கள் இங்கு உள்ளன.

3. எம்பூது ஃபினோல்ஹு தீவு சுற்றூலா பயணிகள் தவிர்க்க கூடாத இடமாக விளங்குகிறது. அழகிய வில்லாக்களை, பூக்கும் பூவை போல் கடற்பரப்பில் வடிவமைத்துள்ளனர். இதனை விமானத்தில் இருந்து பார்க்கும் போது ஒரு அழகிய மலர் மொட்டைக் காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


மாலத்தீவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்கள்

 4. மாலத்தீவில் உள்ள மிகவும் பிரபலமான தீவுகளில் ஒன்றாக பரோஸ் தீவு விளங்குகிறது. மெல்லிய மணல் மற்றும் சிறிய ஓடுகள் மற்றும் கற்களைக் கொண்டு செல்லும் மென்மையான அலைகள் நிறைந்த கடற்கரைகள் இங்கு உள்ளன. அத்துடன், பவளப்பாறைகளுக்கும், நீர் விளையாட்டுக்களுக்கும் பரோஸ் தீவு புகழ்பெற்றது.

5. அனைத்து நீர் விளையாட்டுகள் மற்றும் கடற்கரை துள்ளல்களுக்குப் பிறகு, சில சுவையான உணவுகளை உண்ண, உணவுப்பிரியர்களின் சொர்கமாக மாலே விளங்குகிறது. 

6. 2004 இல் ஏற்பட்ட சுனாமியில் இறந்தவர்களின் நினைவாக கட்டப்பட்ட சுனாமி நினைவுச்சின்னம் மாலேவில் தவிர்க்க முடியாத சுற்றுலா தளமாகும்.

7. மாலேவில் உள்ள மஜிதி மாகு தெரு, ஷாப்பிங் செய்ய சிறந்த இடமாகும். இந்த பிரபலமான ஷாப்பிங் தெருவில், நாம் விரும்பும் அனைத்து பொருட்களையும் காணலாம் எனக் கூறப்படுகிறது. ஆடைகள் முதல் கைக்கடிகாரங்கள், கைப்பைகள், அழகுசாதனப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் போன்ற பல பொருட்கள் கிடைக்குமாம்.

Tags:    

மேலும் செய்திகள்