டி20 உலகக்கோப்பை - பலம் வாய்ந்த அணிகளை திணறடிக்கும் அமெரிக்க கிரிக்கெட் அணி!

தற்போது டி20 உலகக்கோப்பை கோலாகலமாக அமெரிக்கா மற்றும் புளோரிடா நாடுகளில் நடந்து வருகிறது. .குரூப் போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், பல சிறிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அதுமட்டுமில்லாமல் பல முக்கியமான அணியும் ககுரூப் சுற்றோடு வெளியேறியிருக்கிறது. இப்படி விறுவிறுப்பாக நடந்து வரும் டி20 உலகக்கோப்பையில் அனைவரது கவனத்தையும் ஓர் அணி வெகுவாக கவர்ந்தது. அது தான் யுஎஸ்எ கிரிக்கெட் அணி. பல பெரிய அணிகளை மிரட்டி எடுத்தது.

Update: 2024-06-17 18:30 GMT
Click the Play button to listen to article

தற்போது டி20 உலகக்கோப்பை கோலாகலமாக அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய நாடுகளில் நடந்து வருகிறது. குரூப் போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், பல சிறிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அதுமட்டுமில்லாமல் சில முக்கியமான அணிகள் இந்த சுற்றிலிருந்து வெளியேறி இருக்கின்றன. இப்படி விறுவிறுப்பாக நடந்துவரும் டி20 உலகக்கோப்பையில் அனைவரது கவனத்தையும் ஓர் அணி வெகுவாக கவர்ந்துள்ளது. அதுதான் யுஎஸ்ஏ கிரிக்கெட் அணி. பல பெரிய அணிகளை அமெரிக்க அணி மிரட்டி எடுத்தது. உலகக்கோப்பையில் 11வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி அமெரிக்காவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் யாரும் எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது அமெரிக்கா. இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க கிரிக்கெட் அணி தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. முன்னதாக கனடா அணியை அமெரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இப்படி அசத்தி வரும் அமெரிக்க அணி கடந்து வந்த பாதை குறித்து இக்கட்டுரையில் காண்போம். 

அமெரிக்க கிரிக்கெட் அணி கடந்து வந்த பாதை:

அமெரிக்கா தனது முதல் கிரிக்கெட் அணியை 1844ஆம் ஆண்டு கனடாவுக்கு எதிரான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் களமிறக்கியது. இந்த போட்டி நியூயார்க்கில் உள்ள ப்ளூமிங்டேல் பூங்காவில் நடைப்பெற்றது. இப்போட்டியில் 20,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கு பெற்றனர். அடுத்த 150 வருடங்களுக்கு அமெரிக்க தேசிய அணி மற்ற சர்வதேச அணிகளுக்கு எதிராக ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தது. குறிப்பாக கனடாவுக்கு எதிராக வருடாந்திர ஆர்ட்டிக் கோப்பை அல்லது அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் வரும் வெளிநாட்டு அணிகளுக்கு எதிராக மட்டும் விளையாடி வந்தது. இருப்பினும் அமெரிக்கர்கள் பெரிதாக கிரிக்கெட் விளையாட்டை விரும்பவில்லை. அதனாலேயே அங்கு கிரிக்கெட் விளையாட்டிற்கான மவுசும் இல்லாமல் போனது. அங்கிருக்கும் பெரும்பாலான மக்கள் கூடை பந்தையும், பேஸ் பாலையும்தான் விரும்பினர். அதனால் அங்கு பெரிதாக கிரிக்கெட்டிற்கான மார்க்கெட் இல்லாமல் போனது.


முதல் சர்வதேச போட்டியில் விளையாடிய அமெரிக்க அணி 

ஐசிசி அந்தஸ்து பெற்ற அமெரிக்க அணி:

பின்னர் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணி, யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா கிரிக்கெட் அசோசியேஷனால் (யுஎஸ்ஏசிஏ) நிர்வகிக்கப்பட்டு வந்தது. இது1965 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐசிசி) அசோசியேட் உறுப்பினராக அங்கீகாரம் பெற்றது. இருப்பினும் ஜுன் 2017-ல், நிர்வாகம் மற்றும் நிதியளிப்பில் ஏற்பட்ட சிக்கல்களின் காரணமாக யுஎஸ்ஏ அணியை ஐசிசி வெளியேற்றியது. இதன் காரணமாக யுஎஸ்ஏ கிரிக்கெட்டுக்கு இணை உறுப்பினர் பதவி வழங்கப்படும் வரை ஐசிசி அமெரிக்காஸ் அமைப்பு, அமெரிக்க அணியை தற்காலிகமாக மேற்பார்வையிட்டது. பின்னர் ஜனவரி 2019-ல், ஐசிசியின் அசோசியேட் உறுப்பினராக அதிகாரப்பூர்வமாக யுனைடெட் ஸ்டேட்ஸ் கிரிக்கெட் அணிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

முதல் சர்வதேச தொடரில் அசத்திய அமெரிக்கா:

1979ல், இப்போது உலகக் கோப்பை தகுதிச் சுற்று என அழைக்கப்படும் இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி டிராபியில் அமெரிக்க அணி தனது முதல் சர்வதேசப் போட்டியில் அறிமுகமானது. அதன்பிறகு இரண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 2004 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் ஏப்ரல் 2018-ல், ஐசிசி அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் டி20 போட்டிகளில் பங்கேற்கும் சர்வதேச அந்தஸ்தை வழங்க முடிவு செய்தது. எனவே, ஜனவரி 1, 2019-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவிற்கும், மற்ற ஐசிசி உறுப்பினர்களுக்கும் இடையே நடைபெறும் அனைத்து டி20 போட்டிகளும் சர்வதேச டி20 அந்தஸ்தை பெற்றன. இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிராக மார்ச் 2019-ல் அமெரிக்க அணி தனது முதல் டி20யை விளையாடியது.


அமெரிக்க அணியில் விளையாடி கொண்டிருக்கும் வெளிநாட்டு வீரர்கள் 

அமெரிக்க அணியில் பல வெளிநாட்டு வீரர்கள்:

அமெரிக்கர்களுக்கு பெரிதும் கிரிக்கெட் நாட்டம் இல்லாததால் அங்கு வாழும் பல வெளிநாட்டு வீரர்களையே அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் தேர்வு செய்ய நினைத்தது. அதனால் இந்தியாவின் மோனங் படேல் மற்றும் 2010-ம் ஆண்டு U-19 இந்திய சூப்பர்ஸ்டார் சவுரப் நெட்ரவால்கர், நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன் மற்றும் மேற்கு இந்திய தீவின் ஆரோன் ஜோன்ஸ் போன்ற முக்கியமான வீரர்களை எடுத்து பலமான அணியாக உருவெடுத்தது. 

அமெரிக்க கிரிக்கெட் அணியின் எழுச்சி:

அதன்பிறகு கோவிட் பிரச்சினையால் பெரும்பாலும் போட்டிகள் நடக்காத நிலையில், 2024ல் மே மாதம் வங்கதேச கிரிக்கெட் அணி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அவர்களுக்கு எதிராக முதல் முறையாக மூன்று டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் பெரும் அதிர்ச்சி கொடுத்த அமெரிக்க அணி, தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இதன் மூலம் ஐசிசியின் முழு உறுப்பினரான அணியை தோற்கடித்த பெருமையை அமெரிக்கா  பெற்றது. இவ்வாறான தொடர் வெற்றிகளை பெற்று, தற்போது டி20 உலகக்கோப்பை தொடருக்கான லீக் சுற்றில் அமெரிக்க அணி விளையாடி வருகிறது.


அமெரிக்க அணியிடம் தோற்ற பாகிஸ்தான் அணி 

பலம் வாய்ந்த பாகிஸ்தானை வீழ்த்தி சாதனை :

நடப்பு டி20 உலகக்கோப்பையில், டெக்சாஸ் நகரில் நடைபெற்ற 11வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி அமெரிக்க அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற அமெரிக்கா, பவுலிங்கை தேர்வு செய்தது. அதிரடியாக சிக்ஸ் அடித்து ஆட்டத்தை தொடங்கிய ரிஸ்வான், 9 ரன்களில் நேத்ரவல்கர் பந்தில் டெய்லரின் சூப்பரான கேட்சில் அவுட்டானார். அடுத்து வந்த ஃபகர் சமான் 11 ரன்களுக்கு அவுட்டாக, 26 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து பாகிஸ்தான் திணறியது. அடுத்து களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம், ஷதாப் கான் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஆனால் பாபர் அசாம், ஜெஸ்ஸி சிங் பந்தில் 44 ரன்களுக்கு அவுட்டானார். கடைசி இரண்டு ஓவர்களில் ஷாகின் அஃப்ரிதி இரண்டு சிக்சர்கள் அடிக்க பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 159 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய அமெரிக்க அணிக்கு கேப்டன் மோனாங் படேல் நல்ல தொடக்கத்தை அளித்தார். ஆனால் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டெய்லர் 12 ரன்களில் அவுட்டானார். அடுத்து படேல், கவுஸ் ஆகியோர் இணைந்து சிக்சர், பவுண்டரிகளாக அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அந்த நேரத்தில் ஹரிஸ் ராஃப் வீசிய பந்தில் கவுஸ் 35 ரன்களுக்கு போல்டானார். பொறுப்புடன் விளையாடிய கேப்டன் மோனாங் படேல் 50 ரன்களுக்கு, முகமது ஆமீர் பந்தில் பவுண்டரி அடிக்க ஆசைப்பட்டு அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ஆரோன் ஜோன்ஸ், நிதீஷ் குமார் இணை அதிரடியாக விளையாடி அமெரிக்க அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றது. கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், நிதீஷ் குமார் பவுண்டரி அடிக்க, ஆட்டம் டை ஆனது. இரு அணிகளும் 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்கள் எடுக்க, போட்டி முடிவு சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய அமெரிக்க அணி 18 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் வீரர்கள் ஃபில்டிங்கில் அலட்சியம் காட்டியதால் ஓவர் த்ரோ, பவுண்டரி என அமெரிக்க அணிக்கு அதிக ரன்கள் கிடைத்தன. பாகிஸ்தான் அதிரடியாக விளையாடி வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில், அமெரிக்கா அபாரமாக பந்து வீசியது.

சூப்பர் ஓவரில் கடைசி பந்தில் பாகிஸ்தான் அணிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஒரு ரன் மட்டுமே எடுக்க அமெரிக்க அணி சர்வதேச கிரிக்கெட்டில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. முன்னதாக முதல் போட்டியில் அமெரிக்கா, கனடாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. அத்துடன் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணிக்கு அமெரிக்கா அதிர்ச்சி அளித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்