ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்கப்படு்மா கோ-கோ? கோ-கோவின் வரலாறு என்ன?

இந்தியாவில் மிகவும் பழமையான விளையாட்டுகளில் கோ - கோவும் ஒன்று. அதுமட்டுமில்லாமல் கோ கோ இந்தியாவில் விளையாடப்படும் ஒரு பாரம்பரிய விளையாட்டாகும். இந்த விளையாட்டின் தோற்றம் மிகவும் பழமையானது, உத்திகள் மற்றும் தந்திரங்கள் காவியமான 'மகாபாரதத்திலிருந்து' பெறப்பட்டிருக்கலாம் என்று ஒரு சில மக்களால் நம்பப்படுகிறது . போரின் 13 வது நாளில் , கௌரவர் குரு துரோணாச்சாரியார் 'சக்ரவ்யூஹா' ஒரு சிறப்பு இராணுவ தற்காப்பு வட்டத்தை உருவாக்கினார், இது இறுதியில் புகழ்பெற்ற போர்வீரன் அபிமன்யுவால் ஊடுருவப்பட்டது.

Update:2024-10-15 00:00 IST
Click the Play button to listen to article

இந்தியாவில் மிகவும் பழமையான விளையாட்டுகளில் கோ-கோவும் ஒன்று. அதுமட்டுமில்லாமல் கோ-கோ இந்தியாவில் விளையாடப்படும் ஒரு பாரம்பரிய விளையாட்டாகும். இந்த விளையாட்டின் தோற்றம் மிகவும் பழமையானது. உத்திகள் மற்றும் தந்திரங்கள் 'மகாபாரத' இதிகாசத்திலிருந்து பெறப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. போரின் 13-வது நாளில், கௌரவர் குரு துரோணாச்சாரியார், 'சக்கரவியூகா' என்ற ஒரு சிறப்பு தற்காப்பு வட்டத்தை உருவாக்கினார். இது இறுதியில் புகழ்பெற்ற போர்வீரன் அபிமன்யுவால் ஊடுருவப்பட்டது. சக்கரவியூகத்துக்குள் நுழையத் தெரிந்த அபிமன்யுக்கு அதிலிருந்து வெளிவரத் தெரியவில்லை என்பதால் இறுதியில் கொல்லப்பட்டார். ஆனால் அவர் எதிரிகள் தரப்பில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தினார். அவரது சண்டைப் பாணி கோ-கோவில் ஒரு தற்காப்பு தந்திரமான 'ரிங் பிளே' என்ற விதிமுறையை பிரதிபலிக்கிறது. இப்படி பல வரலாற்று சிறப்புடைய கோ-கோ விளையாட்டை பற்றி விரிவாக பார்ப்போம்.


இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கோ-கோ

கோ-கோ விளையாட்டின் தோற்றம் 

கோ-கோ என்பது இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாகும். இது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. கோ-கோ விளையாட்டின் தோற்றம் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் இருந்து வந்ததாக நம்பப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இது "ரத்னகிரி கோ-கோ" என்று அழைக்கப்பட்ட பழைய விளையாட்டிலிருந்து உருவானது என்றும் கூறப்படுகிறது. கோ-கோ விளையாட்டானது, விலங்குகளை வேட்டையாடும் பயிற்சியாக இருந்தது, காலப்போக்கில் தனி விளையாட்டாக மாறியதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு 1914-ஆம் ஆண்டில், திரு. பிரிண்டாபன் டி. பட்வர்தன் என்பவரால் கோ-கோ விளையாட்டிற்கென்று முறையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.


முதல் முறையாக  இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கோ-கோ விளையாட்டு

கோ-கோ விளையாட்டிற்கு அங்கீகாரம்

1935-ஆம் ஆண்டு முதல் முறையாக கோ-கோ விளையாட்டு இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது. அதன்பிறகு1959-ஆம் ஆண்டில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் முதல் தேசிய கோ-கோ சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டது. அப்பொழுது மக்களிடத்தில் பெரிதாக இவ்விளையாட்டிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. பிறகு 1960-ஆம் ஆண்டு கோ-கோ ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா உருவாக்கப்பட்டது. இந்திய அரசின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு கோ-கோ விளையாட்டிற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது. முதன்முறையாக 1996-ஆம் ஆண்டில், ஆசிய கோ-கோ கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதன்பிறகு 2018-ஆம் ஆண்டு கோ-கோ விளையாட்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சேர்க்கப்பட்டது.


கோ-கோ விளையாட்டின் விதிமுறைகள் - கட்டங்களில் அமர்ந்துள்ள வீரர்கள்

கோ-கோ விளையாட்டின் அமைப்பு மற்றும் விதிமுறைகள் 

கோ-கோ விளையாட்டின் மைதானம் 29 மீட்டர் நீளமும், 16 மீட்டர் அகலமமும் கொண்ட செவ்வக வடிவ மைதானம். இரு குழுக்களாக விளையாடும் இந்த விளையாட்டில், ஒவ்வொரு அணியிலும் 12 வீரர்கள் இருப்பார்கள். ஆனால் 9 பேர் மட்டுமே களத்தில் இருப்பார்கள். 3 வீரர்கள் சப்ஸ்டிடியூட்டாக இருப்பார்கள். இவ்விளையாட்டிற்கு கால அவகாசம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொறு அணிக்கும் 9 நிமிடங்கள் கொடுக்கப்படும். ஒரு அணியின் 9 வீரர்களில், 8 பேர் மைதானத்தில் அமர்ந்திருப்பார்கள். மீதமுள்ள ஒருவர் எதிரணி வீரர்களை பிடிக்க ஓடுவார். எதிரணியில் ஓடுபவர்கள், ஒரு நேரத்தில் 3 பேர் என்ற கணக்கில் ஓடுவார்கள். எப்படி இந்த மூன்று வீரர்கள், அவுட் ஆகாமல் தப்பிகிறார்கள் என்பதே கோ-கோ விளையாட்டின் சுவாரஸ்ய முறை. இரு அணிகளுக்கும் எப்படி மதிப்பெண்கள் கொடுக்கப்படும் என்றால், துரத்தும் வீரர் ஓடுபவரை தொட்டால் ஒரு புள்ளி கிடைக்கும். முக்கியமாக விளையாட்டின் விதிமுறைகள் என்னவென்றால் முதலில் துரத்துபவர்கள் தங்கள் வரிசையில் மட்டுமே ஓட முடியும் ஆனால் ஓடுபவர்கள் மைதானத்தின் எந்த பகுதியிலும் ஓடலாம். அதன்பிறகு துரத்துபவர்கள் தங்கள் முகத்தை எந்த திசையிலும் திருப்பலாம், ஆனால் அவர்களின் உடல் அதே திசையில் தான் இருக்க வேண்டும்.


பல பண்புகளை வளர்க்கும் கோ-கோ விளையாட்டு

கோ-கோ விளையாட்டின் திறன்கள் மற்றும் பயன்கள் 

கோ-கோ விளையாட்டிற்கு முதலில் தேவைப்படுவது வேகம். எப்படியென்றால் களத்தில் விரைவாக ஓடுதல் மற்றும் தங்களின் திசையை மாற்றுதல்தான். இதுதான் ஒரு கோ-கோ வீரருக்கு முதலில் தேவை. அதன்பிறகு உடல் வலிமை தேவை. நீண்ட நேரம் களத்தில் ஓட வேண்டும். அதன்பிறகு எதிரணியின் நகர்வுகளை கணித்து அதற்கேற்ப செயல்பட வேண்டும். கடைசியாக சிறந்த குழு ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும். இத்தனை திறன்கள் இருந்தால் மட்டுமே உங்களால் கோ-கோ விளையாட்டை சரியாக விளையாட முடியும். கோ-கோ விளையாடுவதால் என்ன பயன்கள் என்றால், நமது உடலில் வலிமை மற்றும் அதனை தாங்கும் திறனை மேம்படுத்துகிறது. மன ஆரோக்கியதையும், விரைவாக முடிவெடுக்கும் திறனையும் வளர்க்கிறது. மிகமுக்கியமாக சமூக திறன்களை கோ-கோ விளையாட்டு மேம்படுத்துகிறது. குழு உணர்வு மற்றும் தலைமைத்துவ பண்புகளை வளர்க்கிறது.


உலகளவில் பிரபலமாகும் கோ-கோ விளையாட்டில் அசத்தும் பெண்கள்

உலகளவில் கோ-கோ!

கோ-கோ முதலில் இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டாக தொடங்கி, இப்போது உலகின் பல பகுதிகளில் அறியப்படுகிறது. இதன் எளிமையான விதிகள் மற்றும் சுவாரசியமான விளையாட்டு முறை காரணமாக இது பல நாடுகளில் கவனம் பெற்று வருகிறது. முதன் முதலாக ஆசியாவில்தான் இந்த விளையாட்டு பிரபலமடைந்தது. இந்தியாதான் கோ-கோவின் பிறப்பிடம். இங்கு மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் கோ-கோவும் ஒன்று. இந்தியாவுக்கு அடுத்தபடியாக நேபாளத்தில் கோ-கோ விளையாட்டு பிரபலமாக இருக்கின்றது. தற்போது பாகிஸ்தானிலும் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு, கோ-கோ பிரபலம் அடைந்து வருகிறது. ஆசியாவிற்கு அடுத்து ஐரோப்பாவில் கோ-கோ அதீத வளர்ச்சி அடைந்தது. இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியினர் மூலம் அறிமுகமாகி, பள்ளிகளில் பரவலாக விளையாடப்பட்டு வருகிறது. இப்பொழுதுதான் ஜெர்மனியில் கோ-கோ விளையாட்டு அறிமுகமாகியுள்ளது. அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் மூலம் விளையாடப்பட்டு வருகிறது.


உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுவரும் கோ-கோ

கோ-கோ விளையாட்டின் எதிர்காலம்

கோ-கோ விளையாட்டு, இந்தியாவின் எல்லைகளைத் தாண்டி உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்று வருகிறது. இதன் எளிமை மற்றும் சுவாரஸ்யம் காரணமாக, எதிர்காலத்தில் மேலும் பல நாடுகளில் பிரபலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதில் நிறைய சவால்கள் இருக்கின்றன. முதலில் சர்வதேச அளவில் கோ-கோ விளையாட்டை மேம்படுத்த போதிய நிதி இல்லை. அதன்பிறகு பல நாடுகளில் திறமையான பயிற்சியாளர்கள் இல்லை. குறிப்பாக சர்வதேச ஊடகங்களில் போதிய கவனம் இந்த விளையாட்டிற்கு இல்லை. இந்நிலையில்தான், கோ-கோ விளையாட்டை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. சமூக ஊடகங்கள் மூலம் உலகளவில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பல நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச லீக்குகள் திட்டமிடப்படுகின்றன. எனவே விரைவில் கோ-கோ விளையாட்டு ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்